வாழ்க்கையின் பெரும பகுதியின் நிலைமையை தீர்மானிப்பது நாம் முற்காலத்தில் விதைத்த செயல்களே. நல்லதை செய்தால் அமைதியான வாழ்க்கையும், நிறைய தவறுகளை செய்திருந்தால் வருத்தபடுகிற சூழ்நிலையும் பின் காலத்தில் அறுவடை செய்யவேண்டி வரும். அகத்திய பெருமான் நாடியில் வந்து சொல்லும் பொது "உன் வாழ்க்கையை உன் நற் செயல்களால் தீர்மானிக்கிறாய்" என்று பலமுறை கூறியுள்ளார். உதாரணமாக ஒரு திருமணத்தை நல்ல வாழ்க்கையாக்கி தருவது, நேரம் பார்த்து சரியான முறையில் சில விஷயங்களை செய்தால் மட்டுமே, அமைதியான வாழ்க்கையேனும் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் ஏதோ ஒரு ஆத்மாவை திருப்திப் படுத்துகிற ஒரு தன்மை இருந்தால், அல்லது இது ஏதேனும் ஒரு உயிரை சென்று சேர்ந்து நல்லதை செய்யும் என்கிற எண்ணத்துடன் செய்தால், கண்டிப்பாக அதன் நல்ல பலன் என்றேனும் திரும்பி வந்து நம்மை அரணாக சுற்றி நின்று காக்கும். இதை அனுபவத்தால் தான் உணரமுடியும். சேர்த்து வைத்த சொத்து, பணம், புகழ் இவை நல்ல முறையில் சேர்ந்திருந்தால்தான் நாமும், நம் சந்ததிகளும் நல்ல மன நிலையில் நிம்மதியாக வாழ முடியும். தவறான முறையில் சேர்த்து வைத்த சொத்து எத்தனை கோடியாக இருந்தாலும், பின் வரும் தலை முறை, நடக்கின்ற கெடுதல், ஏன் என்று தெரியாமல் தவிக்கும். அப்படி தவிக்கும் போது, தவறு செய்தவர்கள் என்று தெரிந்தும், அவர்களும் மனம் திருந்தி வாழட்டுமே, என்று கருணையுடன் அகத்திய பெருமான் பரிகாரங்களை செய்ய சொல்லி, அவர்களை கரை ஏற்றி விட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.
ஒரு நாள் நாடி பார்க்க ஒரு தாயும், மகளும் வந்தனர். அவர்கள் தோற்றத்திலே பணத்தின் வீர்யம் கொடிகட்டிப் பறந்தது.
"எங்களுக்கு இருக்கிற ஒரே பெண் இவள் தான். நிறைய சொத்து இருக்கிறது. சகல பொருத்தமும் பார்த்துதான் திருமணம் செய்தோம். ஆனால் இருவரும் தம்பதிகளாக வாழவே இல்லை. இவளுக்கு திருமண வாழ்க்கை இருக்கிறதா, இல்லையா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டாள் அந்த பெண்மணி.
"திருமணமாகி அவர்கள் குடித்தனம் நடத்தவே இல்லையா?" என்று வினாவினேன்.
"நடத்தினார்கள். மூன்று மாத காலம்" என்றாள்..
"பிறகு" என்றேன்.
"பெங்களூரில் தனியாக ஒரு தொழில் நடத்தப் போவதாகவும், அதற்குப் பிறகு தனிக்குடித்தனம் ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லி விட்டுச் சென்றவன் தான். மூன்றாண்டு காலமாக பெண்ணை எட்டிக் கூட பார்க்கவில்லை". என்றாள்.
"ஏன் வரவே இல்லை?"
"தொழில் சரியாக அமையவில்லை. அதற்கேற்ற மாதிரி இடமும் கிடைக்கவில்லை. அப்படி இடம் கிடைத்து தொழில் ஆரம்பித்துவிட்டால் உடனே தனிக்குடித்தனம் ஆரம்பித்து விடலாம் என்று பையனின் பெறோர்கள் சொல்கிறார்கள்."
"பையனை நேரில் கண்டு பேசினீர்களா?"
"அவன்தான் கண்ணிலே தென்படவே மாட்டேங்கிறானே. அவன் பெற்றோரிடம் கேட்டால் வெளியூர் போயிருக்கிறான், வெளிநாடு போயிருக்கிறான் என்று தான் பதில் வருகிறது" என்று வருத்தப்பட்டாள் அந்தப் பெண்ணின் தாயார்.
சற்று நேரம் பொறுமையாக இருந்து விட்டு எதற்கும் அகத்தியரையே "நாடியில்" கேட்டு விடலாம் என்ற எண்ணத்தில் நாடியைப் புரட்டினேன்.
"ஜாதகத்தை அலசி அலசிப் பார்த்து திருமணம் செய்ததாக கூறுகிறார். ஜாதக குறிப்பு சரியாக இருந்தால் எல்லாமே நன்றாக நடந்திருக்கும். ஆனால் வந்த ஜாதகமும் சரி, இவளுடைய பெண்ணின் ஜாதகமும் சரியாகக் குறிக்கப்படவில்லை.
விதியை மனிதன் நிர்ணயிக்க முடியாது. விதிதான் மனிதனை நிர்ணயிக்கிறது. ஜாதகக் குறிப்பை வைத்து ஓரளவு தான் பொருத்தம் பார்க்க முடியும். இதை யாரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. மனிதன் யாரும் சரி, குரு, செவ்வாய், ராகு - கேதுவைப் பார்த்திருக்கிறானா? அவற்றோடு கை குலுக்கி இருக்கிறானா? பின் எப்படி தோஷம் என்று கிரகங்களைப் பார்த்து சொல்ல முடியும்? பிரார்த்தனைகள், பூர்வ புண்ணியம் இந்த இரண்டும் தான் ஒருவனுக்கு நல்லது செய்ய முடியும்.
எப்போதைக்கு எப்போது "கரு" உருவாகிறதோ அப்பொழுது அந்த கருவுக்கு ஜாதகம் கணித்தாயிற்று. இதை பிரம்மாவும் சித்த தன்மை பெற்றவர்களும் தான் அறிவர். மற்ற குறிப்புகள் எல்லாம் வித்யாசமானதாகத்தான் இருக்கும். அதனால் தான் பலன்கள் தாமதமாகவோ அல்லது வேறு விதமாகவோ காணப்படும். ஜாதகத்திலே ஏராளமான விஷயங்கள் உண்டு. அதை எல்லாம் சட்டென்று சொல்ல முடியாது. இந்த திருமணம் நடந்த பொழுது என்னென்ன தவறுகள் நடந்தது என்பதை யாம் பட்டியலிட்டுத் தருகிறோம்" என்றார் அகத்தியர்.
"வீட்டிற்கு பொற்கொல்லரை அழைத்து வந்து, ஒரு அருமையான நன்னாளில், சந்திராஷ்டமம் இல்லாத நாளில், அஷ்டமி, நவமியைத் தவிர்த்து விடியற்காலை வேளையில் பிரம்ம முகூர்த்தத்தில் தங்கத்தை உருக்கி இதற்குப் பிறகே திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.
ஆனால்.........
உன் மகளுக்கு கடையில் தாலியை வாங்கி இருக்கிறாய். வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்று வாங்கி இருக்கிறாயே தவிர அந்த நாள் உன் பெண்ணுக்கு ஏற்ற நாளா? என்று கூர்ந்து பார்க்கவில்லை. அதோடு யாராவது ஒரு ஜோதிடரை முழுமையாக நம்பவேண்டும். அதையும் செய்யவில்லை.
நிதானமாக செயல்படாதது, அடிக்கடி ஜோதிடர்களை மாற்றிக் கொண்டிருப்பது, எல்லாம் தெரியும் என்று தனக்குத்தானே தன்னிச்சையாக முடிவெடுப்பது போன்ற நடவடிக்கையால் உன் மகளுக்குத் திருமாங்கல்யம் வாங்கும் நாள் சரியில்லாமல் போயிற்று.
சரி! அப்படித்தான் வாங்கினதும் வாங்கினாய், அதை பூஜை அறையில் வைத்து பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். அல்லது கோவிலில் வைத்து அர்ச்சனை செய்திருந்தால் அந்த சந்திராஷ்டம தோஷம் விலகியிருக்கும். அதையும் செய்யாமல் இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைத்து விட்டாய்.
இதையும் தாண்டி இன்னொரு தவறும் உன்னை அறியாமல் நடந்திருக்கிறது. திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுக்கும் அந்தணர் அதைப் புனிதப் பொருளாக எண்ணி, கையில் வைத்து கிழக்கு நோக்கி அமர்ந்து பிரார்த்தனை சொல்லிய பின்பு மணமகனிடம் கொடுக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யவில்லை. "தாலி" தொலைந்து விடக்கூடாது என்பதற்காக அதை தன இடுப்பில் சொருகிக் கொண்டார். புனிதமான பொருள்களை மார்புக்கு கீழ் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது விதி. இதனையும் மீறி இடுப்பில் அந்த புனிதமான தாலியை சொருகிக் கொண்டதால், அவரது உடலில் வழிந்த "வியர்வை" ஒளிக்கற்றையால் அந்த புனிதம் கெட்டுவிட்டது.
இத்தனையும் மீறி நல்லோர்களது பிரார்த்தனையால் உனது மகளது திருமணம் நடைபெற்றது என்பதுதான் உண்மை. இது அவசரகால உலகம். அகத்தியர் சொற்படி உங்களால் நடக்க இயலாது தான். ஆனாலும் ஓரிரு முறைகளாவது கடைபிடித்தால் இப்படிக் கண்கலங்கி வந்திருக்க வேண்டாமே" என்று நீண்ட விளக்கம் அளித்தார்.
"சரி, எல்லாமே நடந்து விட்டது. இப்போது இதற்கு ஏதேனும் பிரார்த்தனையோ பரிகாரமோ செய்து விட்டால் போதுமா? அதற்கு அகத்தியர் ஏதேனும் வழி காட்ட வேண்டும்" என்றார் வந்த பெண்மணி.
"மூன்று மாதம் கழித்து வா. பின்பு இதற்கு ஒரு வழி பிறக்கும். அது வரை சில பிரார்த்தனைகளை செய்தால் நல்ல பலன் கிட்டும்" என்றார் அகத்தியர்.
அகத்தியர் சொன்ன பதிலால் அந்த பெண்மணி திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை.
"பணம்" இருக்கிறது, செல்வாக்கு, புகழ் இருக்கிறது என்ற தைரியத்தில் "அலட்ச்சியமாக" எழுந்து போனாள்.
"விதி" இன்னும் அவளுக்கு நல்ல வாழ்க்கையைத் தரவில்லை என்று எண்ணிக்கொண்டேன்.
இரண்டு மாதம் கழிந்தது.
திடீரென்று அந்த பெண்மணி என்னைத் தேடி வந்தாள்.
"அகத்தியர் சொன்ன பரிகாரங்களை எல்லாம் செய்து விட்டேன். இதுவரை எந்த பலனும் ஏற்படவில்லை. இன்னமும் மாப்பிளைக்கு தொழில் அமையவில்லை. என் மகளுடைய எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கிறது. அவன் வருவானா, மாட்டானா?, "விவாக ரத்து" பண்ணி விடலாமா? என்று பார்க்கிறோம்" என்று வெறுப்போடு பேசினாள்.
எனக்கு இது தர்ம சங்கடமாக இருந்தது.
"மூன்று மாதம் கழித்துதானே வரச் சொன்னார் அகத்தியர். அதற்குள் யார் இவர்களை வரச் சொன்னது" என எண்ணிக் கொண்டேன்.
மவுனமாக நாடியைப் பிரித்தேன்.
"பொறுமை இல்லாதவர்களுக்கு அகத்தியன் நல்வழியைக் காட்டமாட்டான். அகத்தியன் தெய்வமல்ல. தலையாயச் சித்தன். வழியொன்றைக் காட்டுவான். அவ்வளவுதான். எப்பொழுது அகத்தியன் வாக்கு பலிக்கவில்லை என்று சொல்கிறாளோ இனிமேல் அகத்தியன் எந்த வித வழியையும் காட்டமாட்டான். அருள் வாக்கும் தரமாட்டான். மூன்று மாத காலம் முறைப்படி பிரார்த்தனையைச் செய்யாமல் அகத்தியனைப் பழிப்பதில் என்ன லாபம்?" என்று சொல்லி விட்டு மறைந்து விட்டார்.
எதிர்பாராத இந்த வார்த்தையால் அந்த பெண்மணி மிகப் பெரிய அதிர்ச்சி அடைந்தாள். கண் கலங்கியது. தொண்டையிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. நொந்து போனாள். சற்று நேரம் அமைதியாக இருந்து விட்டு, ஏதோ உணர்ந்து அவளே பேசினாள்.
"நான் அவசரப்பட்டு வந்தது தப்புதான். என் பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவில்லையே என்ற கவலைதான். பரிகாரங்களையும், நான் முறைப்படி செய்யவில்லை என்பது உண்மைதான். என்னை மன்னித்து விடுங்கள். அகத்தியரிடம் நல்ல வாக்கு வாங்கிக் கொடுங்கள்" என்று வேண்டினாள்.
அகத்தியர் சில சமயம் இப்படி கோபப்பட்டு பேசுவதுண்டு. அதே சமயம், சற்றே நேரத்தில் மிகவும் இரக்கப்பட்டு பலருக்கும் நல்வழியைக் காட்டியதும் உண்டு. அந்த பெண்மணியை சிறிது நேரம் அமைதியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து அகத்தியரை மனதார வேண்டி மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்யச் சொன்னேன்.
நானும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்துவிட்டு வேறு சிலருக்கு நாடி படிக்க தொடங்கினேன்.
இரண்டு மணி நேரம் கழித்து பின்பு அந்த பெண்மணிக்காக நாடியைப் புரட்டினேன். அந்த பெண்மணியின் ஆத்மார்த்தமான பிரார்த்தனையால்
"அகத்தியனை அலட்ச்சியப்படுத்தினாள். அரை குறை நம்பிக்கையோடு பரிகாரம் செய்தாள். அதுவும் தன கையால் செய்யாமல் பாதிக்கப்பட்ட இவளது மகள் மூலமும் செய்யாமல் வேலைக்காரி மூலம் பிரார்த்தனை செய்தாள். எனவே அந்த புண்ணியமெல்லாம் வேலைக்காரிக்கே போயிற்று. அவள் வீட்டில் பிரிந்திருந்த தம்பதிகள் இப்போது ஒன்று சேர்ந்து விட்டனர். அந்த ஆத்திரத்தில்தான் இவள் அகத்தியனைத் தேடி ஓடி வந்திருக்கிறாள். இப்படிப்பட்டவளுக்கு பணத் திமிர் இருக்கும் வரை அகத்தியன் அருள்வாக்கு தரமாட்டான். ஆறுமாதம் அவகாசம் தருகிறேன். தன கையாலேயே நான் சொன்ன பிரார்த்தனைகளை செய்து விட்டு, நம்பிக்கை இருந்தால் அகத்தியனை தேடி வரட்டும். அல்லது வேறு இடம் செல்லட்டும்", என்று அகத்தியர் தீர்மானமாக சொல்லிவிட்டார்
காலில் விழுந்து கொஞ்சாத குறைதான். துக்கம் தொண்டையை அடைக்க "அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை" என ஒத்துக்கொண்டு, "இனி நல்லபடியாக என் கையாலேயே அத்தனை பிரார்த்தனைகளையும் செய்கிறேன். சீக்கிரமே என் மகளுக்கு வாழ்க்கை அமைய அருளாசி கூறுங்கள்" என்று வேண்டிக்கொண்டாள் அந்தப் பெண்மணி.
ஆறுமாத காலம் கழிந்தது.
ஒருநாள், முக மலர்ச்சியோடு அந்த பெண்மணி, தனது மகள், மப்பிளையோடு என்னைப் பார்க்க வந்தாள்.
"பரவயில்லையே, பிரிந்த மணமக்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார்களே" என்று சந்தோஷப்பட்டேன்.
"இவர்தான் என் மாப்பிள்ளை" என்று அறிமுகப்படுத்தினாள் அந்த அம்மணி.
அவனை வாழ்த்தி விட்டு "என்னப்பா? என்ன நடந்தது?" என்று விளையாட்டாகக் கேட்டேன்
"எல்லாமே அகத்தியருக்கு தெரியாதா" என்று ஒரே ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டு அமைதியானான்.
நாடியை லேசாகப் புரட்டினேன்.
"படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்த இவனுக்கு ஒரு பணக்கார வீட்டில் சம்பந்தம் கொள்ள வேண்டும், அவர்களது உதவியோடு சொந்தமாக ஒரு புதிய தொழில் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.
தான் பெரிய கம்பனியில் வேலை பார்ப்பதாக பொய் சொல்லி இந்த வீட்டில் திருமணம் செய்து கொண்டான். மூன்று மாதம் போராடிப் பார்த்தான். மாமியார் வீட்டில் இவனுக்கு பண உதவி செய்வதாக தெரியவில்லை. அதோடு 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கி தொழில் ஆரம்பிக்க முயற்சி செய்தான். தொழில் நன்றாக அமையவில்லை.
பண உதவி செய்யாததினால் கட்டிய மனைவியை வேண்டாமென்று ஒதுக்கினான். அவர்களுக்கு முதலில் விஷயம் புரியவில்லை பின்னர்தான் பணம் கொடுத்தார்கள். அதையும் வாங்கிக்கொண்டு வாங்கிய கடனை அடைத்தான். இப்போதுதான் இவனுக்கு தொழில் அமைந்திருக்கிறது பிறகுதான் கட்டிய மனைவியோடு இணைந்திருக்கிறான். இப்படிப்பட்டவன் பிற்காலத்தில் இன்னும் இதுபோல பல விஷமங்களைச் செய்வான். இவர்களும் பணம் கொடுத்துதான் வாழவேண்டும்.
ஏன் இந்த சோதனை எனில் இவர்களிடம் இருப்பது எல்லாம் பெரும்பாலும் குறுக்கு வழியில் சம்பாதித்தது தானே. அது இவன் மூலம் செலவழிக்க வேண்டும் என்பது நியதி. எனினும் அகத்தியனை நோக்கி அவ்வப்போது வரட்டும். இவனையும் திருத்தி அவளது இல்லற வாழ்க்கையை தொடர்ந்து சந்தோஷமாக மாற்றுவோம்" என்று எனக்குச் சொன்னார்.
இன்னும் அந்த குடும்பத்தினர் என்னிடம் வந்து கொண்டிருக்கின்றனர் அகத்தியர் அந்த குடும்பத்தை வாழவைத்துக் கொண்டிருக்கிறார் நல்ல முறையில்.
சித்தன் அருள்............. தொடரும்!
குருவே சரணம்!
ReplyDeleteதிரு.கார்த்திகேயன் அவர்களுக்கு...உங்க ஈமெயில் முகவரி தாங்க...நன்றி சாமிராஜன்.
sgnkpk@gmail.com
DeleteOm Agatheesaya Namaha
ReplyDeleteOm Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
Om Agatheesaya Namaha
குருவே சரணம்,
ReplyDeleteதாலியின் புனிதத்தைப் பற்றித் தெளிவாக அறிந்துக் கொண்டேன். இன்றைய தலைமுறையினர் இவ் விளக்கத்தைப் புரிந்துக் கொண்டால் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
வாழ்க வள்முடன்
ஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமக
வணக்கம் அண்ணா...
ReplyDeleteநமக்கு நடப்பது எல்லாம் கர்மாவின் படிதான் என்று எல்லோருக்கும் தெரியும்...
இக்கலிகால வேகமான வாழ்க்கையில் நியாயமான முறையில் கர்மாவை தீர்க்க எளிய முறை பரிகாரங்கள் (பலருக்கு பணப்பிரச்சினை) ஏதாவது இருந்தால் தயை கூர்ந்து குருவிடம் கேட்டு பதிவிட்டால் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நல்லதாக இருக்கும்...
ஓம் அகத்தீசாய நமக...
ஓம் அகத்தீசாய நமக...
ஓம் அகத்தீசாய நமக...
ஓம் அகத்தீசாய நமக...
ஓம் அகத்தீசாய நமக...
good moral
ReplyDeletevanakam guru.arumaiyana padhivu. Om agathesaya namagaha
ReplyDelete