​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 13 January 2017

சித்தன் அருள் - 566 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எல்லா வகையான பிரச்சினைகளுக்கும், துன்பங்களுக்கும் ஒரு மனிதனின் விதிதான் காரணம். அதே சமயம் ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கும்,அவன் உயர்விற்கும், அவன் சுகத்திற்கும், அவன் வெற்றிக்கும், அவன் நிம்மதிக்கும் அதே விதிதான் காரணம். ஒரு மனிதன் வங்கியிலே சிறிது, சிறிதாக தனத்தை போட்டுக்கொண்டே வந்திருந்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சிறிய தொகை, பெரிய தொகையாக வளர்ந்து அவனுக்கு திருப்பித் தரப்படுகிறது. அதைப் பெறுகின்ற மனிதன் சந்தோஷம் அடைவான். அதே வங்கியில் கடனைப் பெற்ற மனிதன் அதே வங்கியிலிருந்து தனத்தைப் பெறுவதற்கு பதிலாக ஏற்கனவே வாங்கிய கடனுக்காக சிறிது, சிறிதாக இவன் அடைத்துக்கொண்டே வரவேண்டும். எப்படி அடைக்க வேண்டும் ? எத்தனை காலம் அடைக்க வேண்டும்? என்றால் இவன் வாங்கிய தொகை, அதற்குண்டான வட்டி விகிதம், இவன் எத்தனை விதமான பாணியில் திருப்பித் தருவதற்குண்டான ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருக்கிறான் என்பதை பொறுத்து இருக்கிறது. ஆனால் சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் செலுத்திவிட்டு ‘ நான் கடினப்பட்டு பெறுகின்ற தொகையாவையும் வங்கியே பிடுங்கிக் கொள்கிறது. இதிலிருந்து எனக்கு விடுதலை கிடையாதா?" என்றால், வங்கியில் உள்ள மனிதர்கள் என்ன கூறுவார்கள்?. ‘அப்பனே! நீ பெற்ற தொகை இந்த அளவு.  அதற்குண்டான வட்டி விகிதம் இந்தளவு. இதுவரை செலுத்தியது இந்தளவு. இனி செலுத்த வேண்டியது இந்தளவு‘ என்று கூறுவார்களே, அதைப்போல, ஒரு மனிதன் பாவத்திற்குண்டான சூழலை நுகர, நுகர அந்த பாவம் குறைந்து கொண்டே வருகிறது. இரண்டையும் நாங்கள் அனுபவம் என்றுதான் பார்க்கிறோம். மனிதன் வேண்டுமானால் சுகம் என்றும், துக்கம் என்றும், தண்டனை என்றும் பார்க்கலாம். பாவங்களால் ஒரு மனிதன் நுகரும் அந்த நிகழ்வுகளை ஒரு அனுபவமாக நாங்கள் பார்க்கிறோம். புண்ணியத்தால் ஒரு மனிதனுக்குக் கிடைக்கக்கூடிய சந்தோஷமான அனைத்து நிகழ்வுகளையும் வேறொரு அனுபவமாக நாங்கள் பார்க்கிறோம். இரண்டுமே ஒரு மனிதனால் நுகரப்பட்டு, நுகரப்பட்டு ஒரு நிலையில் சீர்நிலைக்கு வந்துவிடும். எனவே ஒரு மனிதன் உடலிலே நோய் வந்தாலும், ஒரு மனிதனால் இயல்பாக சிந்திக்க முடியாமல் தவறான சிந்தனையிலே தன்னை ஆழ்த்திக்கொண்டு தவறான பாதையில் சென்றாலும், அல்லது தோல்வி மேல் தோல்வி வந்தாலும் அல்லது வெற்றி மேல் வெற்றி வந்தாலும் அவையனைத்தும் அவன் என்றோ, எத்தனையோ பிறவிகளில் சேர்த்த பாவ, புண்ணியங்களின் எதிரொலிதான். 

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete