பஞ்சாயத்து கூட்டி வெளியூர்காரனான என்னைக் குற்றவாளியாக்கி அவர்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் தந்திருக்கலாம். குறைந்த பட்சம் நூறு தடவை பொதுமக்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யச் சொல்லியிருக்கலாம். அங்கு அதுதான் குறைந்த பட்சத் தண்டனை. அதிக பட்சமாக அந்த ஊர் நடுவிலுள்ள மரத்தில் கட்டிப் போட்டு, குடிக்க தண்ணீர் மட்டும் ஒரு வேலையாளை விட்டுக் கொடுக்க வைத்து இரண்டு நாட்கள் கழித்து, கட்டை அவிழ்த்து விடுவார்கள். இதே தவற்றை உள்ளூர்க்காரர்கள் யாராவது செய்திருந்தால் மேற்கூறிய தண்டனையைக் கொடுத்து விட்டு பின்னர் ஊரைவிட்டு ஒரு ஆண்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இப்படி ஊரை விட்டு ஓராண்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் என்ன காரணமாக இருந்தாலும் ஊருக்குள் நுழையவே முடியாது. நுழையவே கூடாது. அவர்கள் திருமணமாகி இருந்தாலும் அல்லது அவர்களுக்கு வேறு சொத்து நிலம் இருந்தாலும், குடும்பம் இருந்தாலும் அந்த ஓராண்டு காலம் தலைமறைவு வாழ்க்கை தான். இது எனக்குப் பின்னர் தான் தெரிந்தது.
ஒரு வேளை இந்தச் செய்தியை நான் முன்கூட்டியே அறிந்திருந்தால் நிச்சயம் அந்தப் பக்கம் தப்பித் தவறிக் கூட எட்டிப் பார்த்திருக்கவே மாட்டேன். என்னைப் பொறுத்த வரையில் அந்த மலையில் நள்ளிரவில் எனக்குக் கிடைத்த சித்தர்கள் வேதகோஷத்தை விட அந்த கிராமத்துப் பஞ்சாயத்துத் தண்டனை சட்டம், இருக்கிற சந்தோஷத்தை அடியோடு மாற்றி முகத்தில் மரண பயத்தை உண்டாக்கியது என்னவோ உண்மைதான்.
யார் செய்த புண்ணியமோ நல்லவேளை எந்தவித அவமரியாதையும் இல்லாமல் தப்பித்து விட்டேன். இதெல்லாம் எண்ணும் பொழுது எனக்கு இந்த அகஸ்தியர் தொடர்பு தேவையா? என்ற வெறுப்புணர்ச்சி தான் அடிக்கடி மேலோங்கும்.
தக்க சமயத்தில் ஏதோ சொல்லி எல்லோரையும் திகைக்க வைத்து என்னை இருண்ட சூழ்நிலையிலிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தாலும், சில சமயம் ஏற்படுகிற தாமதங்கள், சூழ்நிலைகள், மாட்டிக்கொண்டு விழிக்கும் பொழுது, அகஸ்தியரை நான் மனதிற்குள் திட்டி இயல்பான தைரியத்தை இழந்து இது எனக்கு தேவைதானா? என்ற எண்ணங்கள் ஏற்படும்.
"கர்ணம்" மட்டும் அப்பொழுது எனக்கு ஆதரவு தராமல் உண்மையைச் சொல்லித் தன்னை அவமானம் படுத்தி விட்டானே என்று நினைத்துக் கோபத்தில் தண்டனையை கொடுத்திருந்தால் என் கதி அதோ கதிதான்.
இல்லை, சொன்னபடி எட்டு மணி நேரத்தில் கரணத்தின் தம்பி அங்கு வராமல் இருந்தாலும் என்பாடு கேவலம்தான், இல்லை வேறுமாதிரியும் நினைக்கலாம். அதாவது கரணத்தின் தம்பியோடு நானும் சேர்ந்தது காரணத்தைப் பழிவாங்க ஏற்கனவே போட்ட திட்டம் தான் இது என்றெண்ணி இதற்குச் சில உள்ளூர்க்காரர்களும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று சினிமா பாணியில் என்னை சந்தேகத்திற்க்குரியவனாக்கி வாயில் வந்ததை தண்டனையாகத் தந்து சுக்கு நூறாக்கி கை அல்லது காலை முடக்கி அந்தக் கிராமத்தை விட்டே துரத்தியிருக்கலாம்.
இத்தனையும் செய்துவிட்டு அதே அகஸ்தியர் ஜீவநாடியை ஊர்மக்கள் முன்னிலையில் தீயில் இட்டு பொசுக்கியும் இருக்கலாம். அதோடு மட்டுமின்றி இந்த மலைக் கோவிலுக்கு யாரிடமும் சொல்லாமல் புறப்பட்டு வந்தேன். அங்கு எனக்கு என்ன நடந்தாலும் நிச்சயம் வெளியே தெரியவே தெரியாது. சொல்லவும் மாட்டார்கள். கண்டுபிடிக்கவும் முடியாது. அன்றே என் வாழ்க்கைக்கு ஓர் முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டிருக்கும்.
எப்படியோ, இத்தனை தடங்கல்களையும் தாண்டி வெற்றி பெற வைத்துவிட்ட அகஸ்தியரை நன்றியோடு வணங்குவதா? இல்லை கோபத்தில் அவரைத் திட்டி "போதுமடா சாமி" என்று ஒரு பெரிய கும்பிடு போட்டு அந்த ஜீவநாடிக் கட்டை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுவதா? என்று தெரியாமல், கர்ணம் என் கையைப் பிடித்துச் சொன்னதையும் முழுக்கவனத்தோடு கேட்டு ஆனந்தப் படாமல் பித்துப் பிடித்த நிலையில் தான் அப்போது இருந்தேன் என்பது மட்டும் உண்மை.
"அதான் கர்ணம் அய்யா சொல்லிட்டாங்க இல்ல, அப்புறம் என்ன அசுவாசமாகக் காப்பியை குடிச்சுட்டு அந்தத் திண்ணையிலே உட்காருங்க தம்பி. ஊர்லேர்ந்து வந்த தம்பிக்கு உங்களைப் பத்தித் தெரியாது. அவரை உட்கார வெச்சுட்டு கர்ணம் அய்யா வருவாரு. அதுவரைக்கும் உட்காருங்க தம்பி" என்று அந்த கிராமத்திலுள்ளவர்கள் ரொம்ப மரியாதையாக என்கிட்டே சொன்னார்கள்.
இதற்குள் யாரோ ஒருவர் அந்தத் திண்ணையைப் பெருக்கி, ஈரத்துணியைக் கொண்டு துடைத்து ஒரு பவானி ஜமுக்காளத்தை விரித்தார். என் கையிலிருந்த அகஸ்தியர் நாடி உள்ளடக்கிய அந்தப் பெட்டியைப் பயபக்தியுடன் வாங்கி, இடுப்பில் துண்டைக்கட்டிக் கொண்டு மரியாதையுடன் அந்த திண்ணையின் மீது விரித்த ஜமுக்காளத்தில் வைத்து பின்னர் எண் ஜாணும் கீழே படும்படியாக வணங்கி, நாடியைக் கண்ணில் தொட்டு ஒற்றிக்கொண்டார்.
இவரைத் தொடர்ந்து அந்த கிராமத்து ஜனங்கள் அத்தனை பேர்களும் இதே மாதிரியாகச் செய்தனர். காலையில் கிடந்த என் கதி என்ன! இப்பொழுது கிடைக்கும் மரியாதை என்ன? என்று இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். ஒ... இதுதான் வாழ்க்கையோ? என்று மனம் சிட்டாய்ப் பறந்தது.
ஊரிலிருந்து வந்த கர்ணத்தின் தம்பி, இந்தியா பாகிஸ்த்தான் போரில் காலில் குண்டடிப்பட்டு, ஐந்து நாட்கள் அனாதையாக ஸ்ரீநகர் மலைப் பிரதேசத்தில் தன் நினைவின்றிக் கிடந்திருக்கிறார். பிறகு மலை வாழ் மக்கள் சிலர் அவரைக் கண்டு ஆஸ்பத்திரியில் சேர்க்க, குண்டடிப்பட்டு கிடந்த ஒரு காலை வெட்டி எடுக்குப்படி ஆகிவிட்டது.
இந்தச் செய்தியை ஊருக்குச் சொன்னால் குடும்பத்தார் பதறி விடுவார்கள். கட்டின மனைவியும் தற்கொலை செய்துவிடுவாள் என்று பயந்து பல வருஷங்கள் யாரு கிட்டேயும் இந்தத் தகவலை அவர் தெரிவிக்கவே இல்லை. இருந்தாலும் அவருடைய சக நண்பர் ஒருவருக்கு மிகவும் காலம் கடந்து இந்தச் செய்தி தெரிந்து, அவருடைய அண்ணனான கர்ணத்திற்கு மேலோட்டமாக ஒரு கார்டு எழுதி போட்டிருக்கிறார்.
தம்பிக்கு கால் போய் விட்டது. ராணுவத்திலிருந்து அவனை விலக்கி விட்டார்கள். ஆனாலும் ஊருக்கு வராமல் ஸ்ரீநகர் பகுதியிலே சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு கிராமத்திற்குத் திரும்பும் உத்தேசம் இல்லை என்ற செய்தியப் போஸ்ட் கார்ட் மூலம் அறிந்த அந்த கர்ணம், இதனையே துருப்புக் கார்டாகப் பயன்படுத்தி தம்பி பெண்டாட்டியை ஏமாற்றித் தம்பி போரில் செத்துவிட்டான் என்று சொல்லி அவளையும் தன் வலைக்குள் இழுத்து அவனுக்குச் சொந்தமான நில புலன் தோட்டம் ஆகியவற்றையும் திட்டமிட்டுப் பிடுங்கி வைத்திருக்கிறார் என்ற விவரம் பரவலாகப் பேசப்பட்டது.
இப்பொழுது அவரிடம் பயம் இருந்தது. பதட்டம் இருந்தது. பணிவும் மரியாதையும் என் மீது அளவுக்கு அதிகமாகவே காணப்பட்டது. ஏதாவது விபரீதம் நடந்துவிட்டால் தன் தம்பி, தன்னை என்ன வேண்டுமானாலும் செய்து விடுவான் என்ற மரண ஓலமும் அவர் நெஞ்சிற்குள் ஊடுருவி இருப்பதை என்னால் காண முடிந்தது.
எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு அகஸ்தியர் ஜீவநாடியை எடுத்தேன்.
"இன்னவன் தம்பி இமயத்தின் ஓரத்தில் ஓர் விதவைப் பெண்ணை ஏற்கனவே மணந்தவன். தேநீர்க் கடை ஒன்றையும் வரும்படிக்காக நடத்தி வருகிறான். அதிக நாள் இங்கு தங்குவான் இல்லை. இவன் இங்கு ஏகியதே கைபிடித்த முதல் மனைவிக்கு கருமம் செய்யவே. அவளோ இன்னுமோர் இரு நாளே உயிர் வாழ்வாள். முன் ஜென்ம பாசமே இவனை இமயத்திலிருந்து ஈர்த்தது இங்கு" என்று சொன்னவர்...
"அன்னவன் இங்கு வந்த நோக்கமே முதல் மனைவியை அழைத்துச் செல்லலாம் என்ற நோக்கம். ஆயின் விதிமகள் செயலால் அந்த எண்ணம் ஈடேராது. அன்னவளைக் கரைஎற்றிவிட்டு அத்தனை சொத்துக்களையும் இவன் இந்த மலை கோவிலுக்கு எழுதி வைப்பான். அதனை ஏற்க! பழுதொன்றும் வாராது உன் உயிர்க்கு. காரணம் முன் ஜென்மத்தில் பல்லோர் உயிரை ஓடுகின்ற நீரிலிருந்து காப்பாற்றினாய்" என்று முடித்தார் அகஸ்தியர்.
இதைக் கேட்டதும் அப்படியே குலுங்கிக் குலுங்கி அழுதவர் அப்படியே அகஸ்தியர் நாடிக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார். தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறாரா இல்லை தம்பி தன்னைக் கொல்லாமல் விட்டு விடுவான் என்று அகஸ்தியர் சொன்னதைக் கேட்ட ஆனந்தத்தில் நீந்துகிறாரா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை.
எனக்கென்னவோ இப்படிப்பட்ட கர்ணத்திடமிருந்து நான் தப்பித்தேனே என்ற சந்தோஷம் தான் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஏனெனில் இன்னும் இரண்டு நாட்கள் அந்த மலைக் கோயிலில் இரவில் தங்கவேண்டுமே. திடீரென்று புத்திமாறி, ஏடாகூடமாக ஏதாவது கர்ணம் சொல்லிவிட்டால் என்ற பயமும் அவ்வப்போது வரத்தான் செய்தது.
மாலை நேரம் முடிய இன்னும் சிறிது நாழிகை இருந்தது.
கர்ணமும் அவரது தம்பியும் "நோயாளியைப்" பார்க்க பக்கத்து ஊருக்கு வில்வண்டியில் சென்று விட்டார்கள்.
போகும் போது "எனக்கு என்ன என்ன வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் கோயில் குருக்கள் செய்து தருவார்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
எனக்கு உண்மையில் அந்த கோயில் குருக்கள் செய்வாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் இருந்தது. இரண்டு பழமும் குடிக்கத் தண்ணீரும் இருந்தால் போதும், இன்றிரவைச் சமாளித்து விடலாம் என்று அதற்கு மட்டும் ஏற்ப்பாடு செய்யச் சொன்னேன்.
இருட்டு நெருங்கிய பொழுது அந்தக் கோயில் குருக்கள் இரண்டு பொட்டலங்களையும் ஒரு கூஜா நிறையத் தண்ணீர், ஒரு அரிக்கேன் லைட் சகிதம் என்னிடம் வந்தார்.
"இதில் ஒன்று சாம்பார் சாதம். மற்றொன்று தயிர் சாதம். குடிக்கிறதுக்கு இந்த கூஜா நிறைய ஜலம் இருக்கு. கூஜாகுள்ளேயும் டம்ளர் இருக்கு. . கோயில்ல விஷ ஜந்து நடமாட்டம் அதிகம் பார்த்துப் போங்கோ" என்று பவ்யமாகச் சொன்னார்.
"சாப்பாடு வேண்டாம். குடிக்க தண்ணீர் மட்டும் இருந்தால் போதும்" என்றேன்.
"என் மீது உங்களுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கு. அதான் நான் ஸ்ரமப்பட்டுப் பண்ணிக் கொண்டு வந்ததை வேண்டாம்னு சொல்றேள். எனக்குத் தெரிஞ்சு ராத்திரி மலைக்குப் போனவா யாரும் மறுநாள் உயிரோடு வந்ததாகக் கேள்விப்பட்டதே இல்லை. நீங்க ஊருக்குப் புதுசு. இந்த விஷயம் தெரிஞ்சிருக்க ஞாயம் இல்லை. அதான் தடுத்து நிறுத்தப் பார்த்தேன். முடியல்ல. பகவான் புண்ணியத்திலே நீங்களும் உயிர் தப்பிட்டேல். எதுக்கு சொல்றேன்னா அப்படி ஏதாவது எசகு பிசகுன்னு நடந்திருந்ததுன்ன கோயிலுக்கு தோஷம் வந்திடும். ஏற்கனவே நிறையப் பேர் அப்படி உயிர் விட்டதுக்கு இன்னிக்கு வரை எந்த சாந்தி ஹோமமும் பண்ணவில்லை. இதெல்லாம் நெனச்சுண்டு தான் சொன்னேன்" என்று ஒரு குறையைக் கொட்டி அழுதார் அந்த குருக்கள்.
"நேத்திக்கு தப்பிச்சிட்டேன், இன்னிக்கு" என்றேன் கிண்டலாக.
"சத்தியமா ஒன்று ஆகாது. சாப்பாடு எடுத்துண்டு போங்கோ. அரிக்கேன் லைட்டையும் பத்திரமா வெச்சுக்கோங்கோ. ராத்திரி ஏதாவது உதவி தேவைன்ன அங்கிருந்து இந்த அரிக்கேன் லைட்டை இப்படியும் அப்படியுமா ஆட்டுங்கோ".
"அரிக்கேன் லைட்டை ஆட்டினா?"
"நாங்க ஊர் ஜனங்க சகிதம் உங்களுக்கு தேவையான உதவியைச் செய்ய ஓடி வருவோம்"
அதெப்படி முடியும். யார் மலைக்குப் போனாலும், ராத்திரி தங்கக் கூடாது. அப்படி மீறித் தங்கினா உயிர் போய்விடும்னு நீங்கதானே சொன்னீர்கள். நானே உதவி கேட்டு லைட்டை ஆட்டினா யார் துணிஞ்சு மலைக்கு மேலே வருவா?"
"பாதி தூரம் வருவோம். நீங்களும் இறங்கி வரணும். ஏதாவது உதவி கேட்டக் கொடுப்போம். நீங்க அதை எடுத்துண்டு கோயிலுக்குப் போகலாம். நாங்க மேல வரமாட்டோம். அப்படியே கிராமத்துக்குத் திரும்பிவிடுவோம்" என்று சாமர்த்தியமாக விளக்கம் அளித்தார் அந்தக் கோவில் குருக்கள்.
"அது சரி. இந்த மாதிரி ராத்திரி தங்கி அவா அரிக்கேன் லைட்டால் உதவி கேட்டு நீங்களோ அல்லது உங்க கிராமத்தைச் சேர்ந்தவர்களோ யாராவது மலைக்கு வந்து உதவி செய்திருக்கீர்களா?"
"இதுவரை அப்படி நடந்ததே இல்லை. கர்ணம் அய்யா தான் இப்படியொரு யோசனையைச் சொல்லி, உங்களை நல்ல கவனிக்கச் சொல்லியிருக்காங்க. அதத் தான் ஒங்க கிட்டே சொன்னேன்" என்றார் தீர்க்கமாக.
"சரி" என்று அவரை அனுப்பிவிட்டு கூஜா நிறைய தண்ணீர் எடுத்துக் கொண்டேன். மற்றொரு கையில் அகஸ்தியர் நாடி, சாப்பாட்டு பொட்டலம், கூடவே அரிக்கேன் விளக்கை எடுத்துக் கொண்டு அந்த மலைக் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஏதோ எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி "டென்சிங்" போவது போல் சென்ற என்னை அந்த கிராம மக்கள் கை கூப்பி அனுப்பி வைத்தனர். அவர்கள் அப்போது என்னைப் பார்த்த பார்வைகளில் ஏகப்பட்ட அர்த்தங்கள் இருந்தன.
"நேத்திக்கு தப்பிச்சிட்டான். இன்னிக்குச் சரியா மாட்டிப்பான் பாரு" என்று சொல்வது போல் இருந்தது.
"இந்தக் கர்ணத்திற்கு விவரமே போதாதுங்க. எப்படி இருந்த கிராமத்துக் கட்டுப் பாட்டை அவரே மாத்திட்டாருங்களே..... இதுகெல்லாம் அந்த தெய்வம் சும்மா விடாதுங்க. பொறுத்துப் பாருங்க. இன்னிக்கு என்ன நடக்கப் போகுதுங்கன்னு பொழுது விடிஞ்சா தெரிஞ்சு போகுதுங்க" என்று மெல்லிய குரலில் யாரோ சொன்னது ஒலிக்கவும் செய்தது.
தைரியத்தை முன்னால் நிறுத்தி, அகத்தியர் துணையோட மலைக் கோயிலை அடைத்த போது எங்கிருந்தோ ஓநாய் ஒன்று ஊளையிட்டது. ஆந்தையும் அலறியது.
சித்தனருள்................ தொடரும்!
ஸ்ரீ அகஸ்திய குரு சமர்ப்பணம்
ReplyDeleteமிகவும் சுவாரசியம் அருமை
நன்றி
என்ன சார் கடைசியல் இப்படி சொல்லிவிட்டிர்கள் . எவளவு நம்பிக்கையோடு படித்து அகம் மகிழ்தோம் . அந்த அஞ்சநேய பிரபுவை தரிசிதித்த உங்கள் பாதங்களை தொட்டு வணங்கவேண்டும் என்று எண்ணினோம்.அது நான் இல்லை, நண்பர் சொன்னார் நான் எழுதினேன் என்று சொல்லி முடித்து விட்டீர்கள்வியாழகிலமைகளில் எழுத அவன் அருள், பிரம்ம முகூர்த்ததில் எழுத உத்தரவு என்று எழுதிய தாங்கல் கடைசியல் நான் அவர் இல்லை என்று எழுதி உள்ளது மனதிற்கு மிகவும் கஷ்டமா உள்ளது . உண்மையில் அந்த பாக்கிய சாலி யார் ? அந்த புனிதாத்மா யார் ? இவ்வளவு பெயருக்கு நல்வழி காட்டிய மகானை, எங்களுக்கும் காட்டுங்கள்
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஅது தான் உண்மை. அவருக்கு போய் சேர வேண்டிய mariyaathaiyai naan வாங்கிக்கொள்வது ஒரு பொது சரியில்லை என்பது என் கருத்து. இன்று அந்த நாடி வாசித்தவர் இல்லை. அவருக்கும், அகத்தியருக்கும் மரியாதை செய்யும் விதமாக இந்த தொடரை எழுதுகிறேன். இவை அனைத்தும் அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டது. நிறைய பேருக்கு சித்தர்களை அவர்களின் வித விதமான அருளல்களை தெரிவிக்கலாம் என்கிற எண்ணத்தில் மட்டும் இந்த தொடர் வெளி வருகிறது. யாரையும் ஏமாற்றும் எண்ணம் எனக்கு இல்லை.
வணக்கம்,
ReplyDeleteநான் தங்களைப்பற்றி தவறாக நினைக்கவில்லை. தங்களின் பனி தொடரட்டும். இதை படிக்கும் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். அந்த புண்னிய புருசனின் தெய்வீக அனுபவம் நமக்கு ஒரு நல்ல பாடமாக அமையட்டும். நான் தவறாக நினைக்கவில்லை என்றால் அந்த மகான் ஸ்ரீ ஹனுமந்தாசன் தானே ?!! தொடரட்டும் தங்கள் பணி. உங்கள் பணி மேலும் தொடர ஆண்டவனை வேண்டுகின்றோம். ஜெய் ஸ்ரீ ராம், நன்றி .
நன்றி அய்யா, அனைத்துப் பதிவுகளையும் (சித்தன் அருள் - 76) இன்று காலை தொடங்கி இரவு முடிய இன்றே படித்து முடித்தேன். இந்த நாடி சித்தரின் பெயர் மற்றும் முகவரியை எனது எ-மெயிலுக்கு அனுப்பினால்(kaycek2000@yahoo.com), நான் அடுத்த முறை தாயகம் வருகையில் சந்திக்க முயலுவேன். மனமார்ந்த நன்றிகளுடன்,கேசி
ReplyDelete