[ஒரு அகத்தியர் அடியவர், 22/12/2013 அகத்தியர் பிறந்த நாள் அன்று தனக்கு கிடைத்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். வாருங்கள்! எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.....]
வணக்கம்!
மஹா முனிவர் அகத்தியப் பெருமான், அவரது தொகுப்பான "சித்தன் அருளில்" சொல்கின்ற விஷயங்களை படித்து மனம் மகிழுகின்ற எனக்கு நிறைய அனுபவங்களை தந்துள்ளார். அவற்றை ஒவ்வொன்றாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில், மகிழ்ச்சி அடைகிறேன்.
22/12/2013, ஞாயிற்றுக் கிழமை அன்று அவரது பிறந்தநாள் என்று அறிந்தது முதல் எப்படியேனும் அவரது அருளை அன்று பெற வேண்டும் என்ற அவா என்னுள் உருவெடுத்தது. ஆனால் வருட முடிவானதால், வேலை பளு காரணமாக அன்று கல்லார் செல்வது இயலாது என்று அறிந்து, என்ன செய்யலாம் என்று யோசித்தோம். வீட்டில் 18 சித்தர்கள் படம் பூசை அறையில் இருக்கிறது. நடுவில் அகத்தியப் பெருமான் நிற்க, அவரை சுற்றி சித்தர்கள். அந்த படம் துறையூர் ஆஸ்ரமத்திலிருந்து வாங்கி வந்து எங்கள் வீட்டு பூசை அறையில் வைத்து வழிபட்டு வருகிறோம். சரி! வீட்டிலேயே விமரிசையாக பூசை செய்து கொண்டாடிவிடுவோம், என்று தீர்மானித்தேன்.
பின்னர் வந்த நாட்களில், சென்னை செல்ல வேண்டி வரும் என அறிந்து, சென்னை த்யாகராஜ நகரில் இருக்கும் அகத்தியர் கோவிலுக்கு செல்லலாம் என்று தீர்மானித்தோம். ஆனால், 22/12/2013 அன்று நாங்கள் பாண்டிச்சேரி செல்ல வேண்டி வந்தது. அங்கு சென்ற போது, அங்கேயே தங்க வேண்டிய நிலைமையில், பிடித்துப் போடப்பட்டோம்.
சரி! இங்கு வந்துவிட்டோம், சித்தானந்த சுவாமி சமாதி கோவிலுக்கு செல்வோம். அவரும் குரு ஸ்தானத்துக்கு உடையவர் தானே. அங்கு கண்டிப்பாக அகத்தியப் பெருமான் தன் அருளை வழங்கி உணர வைப்பார் என்று நினைத்து, அங்கு செல்ல தீர்மானித்தேன். ஆனால் என் மனைவியோ, அங்கேயே இருக்கும் அக்கா சுவாமிகள் சமாதிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினாள்.
நாங்கள் சென்ற தினத்தில் சமாதி கோவில் நன்றாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் ஆருத்ரா தரிசன பூசை மிக சிறப்பாக கொண்டாடப் பட்டது என்று வெளியே இருந்த ஒரு அறிவிப்பு பலகை உணர்த்தியது. 21/12/2013 அன்றே குரு பூசையும் செய்து விட்டார்கள் என்று அறிந்தோம்.
அந்த அறிவிப்பு பலகையை வாசித்த போதே எங்கள் மனம் அளவிட முடியாத அளவுக்கு சந்தோஷப்பட்டது. அதில் அகத்திய முனிவரை பற்றிய பிறந்த நாள் விவரமும், அவருக்கான குரு பூசையை பற்றிய தகவல் இருந்தது. அடடா! எங்கு சென்றாலும் அகத்தியர் அருள் நமக்கு மறைமுகமாக கிட்டிக் கொண்டே இருக்கிறதே என்ற எண்ணத்துடன் உள்ளே சென்றோம்.
உள்ளே சென்று, ஒவ்வொரு சன்னதியாக கண்டு வணங்கி செல்ல, ஒரு சன்னதியை அடைந்ததும், திக்கு முக்காடிப் போய்விட்டேன். ஆம், அகத்தியருக்கு என ஒரு தனி சன்னதி. அங்கு அவர் அருள் பொழிந்து நின்று கொண்டிருந்தார். அவருக்கு ஏற்கனவே குரு பூசை நடந்து முடிந்து விட்டிருந்தது.
"வாடா! இன்று என்னை பார்க்க வேண்டும் என்று தானே ஆசைப்பட்டாய்!" என்று சொல்லாமல் சொல்வதுபோல் அருள் வழங்கி நின்று கொண்டிருந்தார்.
என்ன சொல்ல? இதற்கு மேல் என்ன பாக்கியம் வேண்டும். அந்த சமாதி கோவிலுக்கு முதன் முறையாக செல்கிறோம். அங்கு அகத்திய பெருமானுக்கு ஒரு சன்னதி இருக்கும் என்று கூட தெரியாது. இன்றைய தினம் அவரை தரிசிக்க முடியாமல் போய்விடுமோ என்றெல்லாம் கலங்கிய எனக்கு, "என்னை சரணடைந்து விட்டாய் அல்லவா! உன் விருப்பத்தை நிறைவேற்றாமல் விட்டுவிடுவேனா?" என்று சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்.
எனக்கும், கூட வந்திருந்த என் மனைவிக்கும் கண்கள் குளமாகிவிட்டது. ஆம்! இருக்காதா பின்னே! முன் பின் அறிமுகமில்லாத ஒரு இடத்தில், முதல் முறையாக போகும் போது, நம் மன விருப்பத்தை உணர்ந்து அகத்தியப் பெருமான், சரியாக வழி நடத்தி செல்ல வைத்திருக்கிறார் என்பதை அப்போது உணர்ந்தேன். ஏன் என்றால், அக்கா சுவாமிகள் கோவிலுக்கே முதன் முறையாக செல்கிறோம். அந்த கோவிலை பற்றி ஒரு தகவலும் தெரியாது. இப்படி விஷயங்கள் நடந்தால் நீங்கள் கூடத்தான் கரைந்து போவீர்கள்.
மகா முனி உண்மையாகவே எங்களை ஆசிர்வதித்ததை உணர்ந்தோம். இன்னும் நிறைய ஆசிர்வாதங்களை தருவார் என்று என் மனது திண்ணமாக உணர்ந்தது.
நாங்கள் இருவரும் அவர் சன்னதி முன் அமர்ந்து மனம் ஒன்றி, 108 முறை "ஓம் அகதீசாய நமஹ!" என்று ஜபம் செய்தோம். திரும்பி வந்து அவரின் "சித்தன் அருள்" தொகுப்பை படித்த போது, அது எங்களுக்கு என்றே எழுதப்பட்டது என்று தோன்றியது. ஆம்! இன்னும் 13 நாட்களில், எங்கள் அலுவலக வியாபார விரிவாக்கும் முயற்சிகள், உலக அளவில் விரிவடையப் போகிறது, என்று அறிந்தேன்.
இதற்கு மேல் என்ன வேண்டும்? வழி நடத்தி செல்ல அகத்தியப் பெருமான் கூட இருக்கும் போது, நடந்து செல்ல வேண்டியது என் கடமை என்று உணர்ந்தேன். அனைத்தையும் அவர் பாதங்களில் சமர்பித்து, எல்லோரும் நலமாக வாழ பிரார்த்தித்துக் கொண்டு,
சாய்ராம்!
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDelete