​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 12 December 2013

சித்தன் அருள் - 153 - நம்பிமலை!

[ நம்பிமலை கோவில் ]

அகத்தியர் சற்று நேரத்தில் கூறலானார்!

"முன்பொரு சமயம், பல்லக்கு தூக்கிகள் என்று ஒரு சிலருக்கு பெயர். அவர்கள் காலா காலமாக, பல்லக்குத் தூக்கியே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர்கள். பல்லக்கில் செல்பவனுக்கோ, "என்றைக்கு இந்த பல்லக்கு தூக்குபவர்களுக்கு நன்றி கடனை அடைக்கப் போகிறேன்" என்று ஆதங்கப்பட்டான். ஒருநாள், இறைவனே அந்த பல்லக்கில் வந்து அமர்ந்த பொழுது, இறைவனே மாறு வேடத்தில் வந்திருந்தான். மாறு வேடத்தில் வந்தாலும், வித்யாசம் பார்க்காமல், பேதம் பார்க்காமல் அவனையும் தூக்கி செல்ல, அங்கு அமர்ந்த இறைவனுக்கு, தூக்கி செல்பவனை உட்காரவைத்து, இறைவனே தன் தோளில் பல்லக்கை வைத்து தூக்கி செல்ல வேண்டும் என ஆசை ஏற்பட்டது.

அதன் படி ஒருநாள், இறைவன் பல்லக்கு தூக்கியாக மாறினான். பல்லக்கிலே அவனை உட்கார வைத்து ஆனந்தமாக உலா வந்தான். அது போல் இவன் அகத்தியனை பல்லக்கில் தூக்கி சுமந்து வந்தவன்டா! அதனால், அந்த இறைவன் போல், நான் அகத்தியன், ஒருநாள் இவனை பல்லக்கில் தூக்கி சுமப்பேன்!" என்றார்.

இதற்கிடையில் என் நண்பர் ஒருவர் குறிப்பிட்ட நோய்க்கு மருந்தைப் பற்றி விசாரிக்க, அகத்தியர் கூறலானார்.

"இது போன்ற பல்வேறு நோய்களுக்கெல்லாம் மூலிகைகள் இங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். ஒரு மனித உடம்பில் எத்தனை வியாதி இருக்கிறது என்று சொல்லியிருக்கிறேன். என்னென்ன வியாதிகள் எல்லாம் வரும் என்று கணக்கிட்டுத்தான் போகர் மூலம் கொடுத்தேன். இங்கிருந்து ஒரு காத தூரத்திலே, ஒரு நந்தவன தோட்டத்திலே, போகர் நட்டு வைத்து வளர்த்த ஒரு மூலிகை இருக்கிறது. அந்த மூலிகையை கொடிய விலங்குகள் சுற்றி வந்து காவல் காக்கிறது. யார் உட்கார்ந்து அந்த மூலிகையை பறித்து, உருவேற்றுவது என்பதுதான் கேள்வி. அகத்தியனுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு. அகத்தியன் இதற்கு தக்க பதிலை, விதிமகளிடம் கேட்டு "ஏன் இவளுக்கு இப்படி ஆயிற்று? இதற்கு என்ன பரிகாரம்? கர்ம வினை கழிந்ததா? அவள் வாங்கின கடனை திருப்பி கொடுத்துவிட்டாளா? என்றெல்லாம் கேட்டுவிட்டு, விதிமகளின் சம்மதத்தை வாங்கிக் கொண்டு, இரண்டு நாளில் இதற்கு வழி சொல்கிறேன். அதுவரை, சற்று அமைதி காக்க."

இன்னொருவர் தனது சொந்த வாழ்க்கையை பற்றி ஒரு கேள்வி கேட்க, அகத்தியர்
 
"அன்னவன் பொறுப்பேற்று, சூரியனும், சனியும் ஒரு இடத்தில் இருந்ததால் வந்த வினை இது. அன்னவன் மேல் சனி கொண்ட கோபத்தால் சற்று விளையாடுகிறான். அவன் புத்தியை மழுங்கிவிடச் செய்வது நான்கு பேர் சேர்ந்த கும்பல், அன்னவனே, அவர்களுக்கு எதிரியாக இருப்பதால் தான் சற்று தாமதமாகிறது. இனி வரும் காக பெயர்ச்சிக்கு பிறகு, (காகம் - சனி), நல்ல மாற்றம் ஏற்படும். கடைசி வரை கை கொடுத்து நிற்பார்கள். அஞ்சிட வேண்டாம்."

நண்பர் உடனே மூன்று நாளில் குணமாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்.

அகத்தியர் பதில் "சனிதான் காரணம் என்று சொல்லிவிட்டேன். எப்பொழுது அகத்தியனிடம் கோரிக்கையை இட்டாயோ அப்பொழுதே நான் பரிந்துரை செய்கிறேன். பொதுவாக, அகத்தியனை நாடி வந்திருக்க வேண்டும். அகத்தியன் நாடியின் சட்டத்தையே மாற்றுகிறாயே, என்னடா, நியாயம்? இவனுக்கு சுயமாக ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்பதற்காக, நாடிக்கே புறம்பாக கேட்கிறாய்! இது நியாயமா?"

இதை கேட்டதும் நாங்கள் அனைவரும் சிரித்துவிட்டோம். அகத்தியரும் விடுவதாக தெரியவில்லை.

"இந்நேரம் அகத்தியனை நோக்கி வந்திருந்தால், தகுந்த வழியை காட்டி, அவன் புண்பட்ட மனதை பண்படச்செய்து புது வழியில் அனுப்பியிருப்பேன். ஆனால் எப்படி கேட்கிறான் இவன். உரிமை இருக்கிறது என்பதற்காக இப்படியெல்லாமா கேட்பது. கர்ம வினை என்பதை மறந்துவிட்டான். சற்று முன்தான் சொன்னேன், அவரவருக்கு கர்ம வினை என்பது உண்டு. இவன் கர்மவினை போல் மனைவிக்கு இல்லை. இவன் மனைவியின் கர்ம வினை போல் , இவன் குழந்தைக்கு இல்லை. ஒவ்வொருவருக்கும் கர்ம வினை என்பது வேறு. ஒருத்தருக்காக கர்ம வினை என்பது வித்யாசமாக ஆகிவிடும். ஆகையால், அதை எல்லாம் தாண்டித்தான், அகத்தியன் இந்த கதையை சொல்கிறேன். அதை தாண்ட வேண்டும் என்பதற்காகத்தான் அதிக உரிமை எடுத்துக் கொண்டாய். அகத்தியன் மீது உள்ள பற்றின் காரணமாக, எத்தனையோ முடிவுகளை, துணிந்து எடுத்துக் கொண்டாய். அகத்தியன் மீதுள்ள அளவில்லாத பற்றின் காரணமாகவும், அகத்தியன் தனக்கொரு நல்லதொரு பதிலை உரைப்பான் என்பதற்காகத்தான் கேட்கிறாய் என்று எண்ணுகிறேன். அந்த உள்ளம் புண்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எனக்கு தெரியும். இரண்டே நாள் என்று சொன்ன காரணம், இரண்டு நாளில் நல்ல செய்தி வந்துவிடும்."

இதற்கிடையில் ஒரு நண்பர் கேட்டார் 

"த்யானத்தில் ஒரே குழப்பமாக இருக்கிறது. த்யானமும் அதில் சம நிலையும் சித்திக்க வேண்டும்" என்று 

அகத்தியர் சொன்னார் "மனிதர் சக்திகளை அடக்குவதுதான் த்யானம். மனதை ஒரு முகப்படுத்துவது த்யானம். ஒவ்வொருநாளும் விடியல் பொழுதில் படுக்கையில் அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு, இறைவனை நோக்கி, மனதை கட்டுப்படுத்த முயர்ச்சிப்பதுதான் த்யானம். அந்த த்யானத்திலே குழப்பம் என்றால், இன்றும் சாதாரண மனிதனாகத்தான் இருக்கிறாய் என்று அர்த்தம். ஆக த்யானம் என்பது சட்டென்று வந்து விடக்கூடிய ஒன்றல்ல. படிப்படியாகத்தான் வரும்.

ஒருநாளில், காலை, வைகறை பொழுதினிலே, ஐந்து நிமிடம், வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, அல்லது கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு த்யானம் செய்து பார். முதலில் ஏகப்பட்ட குழப்பம் வரும். மறுநாள் அந்த ஐந்து நிமிடத்தை பத்து நிமிடமாக மாற்று. திரும்பவும் த்யானம் செய். கொஞ்சம் குறையும். அடுத்தநாள் பத்து நிமிடத்தை 15 நிமிடமாக மாற்று. நிமிடத்தை கணக்குப் போட்டு த்யானத்தை முடித்து விடாதே! த்யானத்தை கடிகார முள்ளுக்கு அப்பாற்பட்டு வை. எப்போது கடிகார முள்ளை பார்க்கிறாயோ, அப்போதே நீ த்யானத்துக்கு அப்பார்ப்பட்டவன் என்று அர்த்தம். நான் சொல்ல வந்தது, ஒவ்வொரு நாளும் த்யானத்தை 1 நிமிடம், 2 நிமிடம் என்று கூட்டிக் கொண்டு வந்தாலே போதும். த்யானம் என்பது அமைதியாக, மனதை அடக்கிக்கொள்ள சித்திக்கும். இதற்காக எத்தனையோ வழி முறைகள் இருக்கிறது. பெரியோர்கள் பலர் அதை சொல்லியிருக்கிறார்கள். ஞானிகள் பலர் பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். இத்தனையும் செய்து த்யானம் கைவல்யமாகவில்லை என்றால், நீ இன்னமும் சாதாரண மன நிலையில் இருக்கிறாய் என்று அர்த்தம்.  அதை எல்லாம் தாண்டி நிற்பது தானடா த்யானம். ஆகவே, நாளை முதலாவது, மனதை கட்டுப் படுத்திக்கொள், பல்லை கடித்துக் கொண்டு. உலகியல் வாழ்க்கையை சற்று ஒதுக்கிவிட்டு, உனக்கும் சூரிய வெளிச்சத்துக்கும் இடையில் எந்த விஷயமும் வராமல், ஒரு ஐந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு, மனதை கட்டுப்படுத்தி, உன் எதிரில் ஒளி நெளிய வேண்டும். அதை கண்டு, மனதில் இறைவனை த்யானித்து, அடக்கிக்கொண்டு த்யானம் பண்ணிப்பார். த்யானம் வரும். உறுதி உண்டடா!"

இதற்கிடையில் இன்னொரு நண்பர் "மருத்துவத் துறையில், அவர் சொல்வதை நன்றாக புரிந்து கொண்டு, நல்ல முறையில் சேவை செய்யவேண்டும். அதற்கு அவரது அருளாசி வேண்டும்" என்றார்.

"இல்லை என்றால் போகன் கட்டினை உனக்கு தந்திருக்க மாட்டேன். நீ சொல்வதை முடிப்பாய் என்பதில் அகத்தியனுக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. அதனால் தான் உன்னிடமே ஒப்படைக்கிறேன்" என்றார் அகத்தியர்.

அடுத்த கேள்வியாக அவரே "ஞானத்துக்கு போகிற வழி, அதை பற்றிய அவரது அருள் வேண்டும்" என்றார்.

"சில கர்ம வினைகள், விட்ட குறை தொட்ட குறை என்று இருப்பதால் தான், இன்னமும் அந்த மானிட பாதையில் பயணம் செய்யவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரே நாளில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வந்து விட முடியாது. அதற்குரிய தகுதி, பயிற்சி சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும் தான் உண்டு. ஆனால், அந்த சித்தத் தன்மையை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பகுதி பகுதியாக அந்த நிலையை அடைந்து விடுவாய். நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில காலம் தாண்டிவிட்டால், சற்று முன் அங்கோர் மனிதன் மலை ஏறும் பொழுது, இது ஒரு ஏற்றம் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றிக் கூட்டிக் கொண்டு வந்தானே, அது போலத் தானடா அகத்தியனும் உன்னை ஏமாற்றுகிறேன். இதோ பக்கத்தில் ஒரு ஏற்றம், ஏறிவிட்டால், ஞானம் வந்துவிடும், என்று வந்துவிட்டால், உனக்கு அந்த ஞானம் வந்துவிடும். எப்படி நீங்கள் எல்லாம் இந்த நம்பி மலையை அடைந்தீர்களோ, அதுபோல, நீயும் அந்த ஞானத்தின் உச்சக்கட்டத்தை அடைவாய், ஞானம் அங்கே இருப்பது போல் நினைத்து காலை எடுத்து வை. அகத்தியன் யாம் உனக்கு பக்க பலமாய் இருந்து, வழிகாட்டுகிறேன் என அருளாசி".

சித்தன் அருள்........... தொடரும்!

5 comments:

 1. om agatheesaya namaha ! om agatheesaya namaha ! om agatheesaya namaha!

  agathiyar ennaku yenrum thunai nirpen endru solvathu pol ullathu

  ReplyDelete
 2. அகஸ்தியர் திருவடிகள் போற்றி  ReplyDelete
 3. Very well said about dhyanam, wonderful HE IS A GREAT TEACHER TOO..

  ReplyDelete
 4. ஓம் அகத்தீசாய நமஹ
  உலகிலுள்ள எல்லா ஜீவாத்மாக்களுக்கும் உங்கள் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்றேன் பிரபு.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete