​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 31 August 2014

ஒதிமலை முருகர் - பிறந்த நாள் 2014 - 1

அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஒதிமலையில், ஓதியப்பர் பிறந்தநாள் (23/08/2014) அன்று அங்கிருந்து, அவரின் ஆசியை பெற்றுக் கொண்டவர்களில், என் ஒரு நண்பர், தன் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த தொகுப்பு மிக இயல்பான வடிவில் வந்துள்ளது. அதில் உள்ள முக்கியமான கருத்துக்களை எடுத்துக் கொண்டு, அடியவர்கள் அனைவரும் ஓதியப்பர் அருள் பெற விரும்புகிறேன்.

ஓம் அகத்தீசாய நமஹ!

ஓதியப்பர் என்கிற முருகரின் பிறந்த நாள் இந்த வருடம் 23/08/2014 அன்று வருகிறது என்று அறிந்து, போன வருடம் சென்று அனுபவித்த இறை அருளை அந்த நாளில், இந்த வருடமும் பெற்றிட விரும்பி, நண்பர்கள் சிலரை தெரிவு செய்து பயணத்துக்கு வந்து சேரும்படி வேண்டிக்கொண்டேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் வேலை, பலரும் பல இடத்தில் இருந்ததால், 22/08/2014 அன்று கோயம்பத்தூரில் காந்திபுரத்தில் சந்தித்து அங்கிருந்து செல்லலாம் என்று எண்ணம். அனைவரும் ஒன்றாக சேர்ந்து மலை ஏறினால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. போன முறை தெரிவித்தும் வர முடியாமல் போனவர்களுக்கும் தகவல் கொடுத்து, எப்படியாவது 18 பேரை கொண்ட குழுவுடன் போய் ஒதியப்பரை சந்திக்க வேண்டும் என்று ஒரு அவா.

எண்ணிப்பார்த்த பொழுது குழுவில் 10 பேர்கள் தான் தேறினார்கள். ஓதியப்பா! உன் பிறந்தநாளுக்கு நாங்கள் வர விரும்புகிறோம். ஆசிர்வாதம் பண்ணு என்று வேண்டிக் கொண்டு, புறப்படுவதற்கான ஆயுத்தங்களை தயார் செய்தேன். ஓதியப்பருக்கு அவர் பிறந்த நாள் அன்று, காவி வேஷ்டிதான் உடுத்த கொடுக்க வேண்டும் என்று தீர்மானம்.

என் ஊரில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஓதியப்பர் உருவத்துக்கு 8 முழ வேஷ்டி தான் நிறைவாக இருக்கும். எல்லா இடத்திலும் 4 முழ வேஷ்டி தான் இருந்தது. எனக்கு அதை வாங்க விருப்பம் இல்லை. எப்படியாவது 8 முழம் வேஷ்டி வாங்கியே தீர வேண்டும் என்கிற எண்ணம்.

எதேச்சையாக, திருநெல்வேலியில் இருக்கும் ஒரு நண்பரின் நினைவு வர, அவரை கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னேன். அவர் சென்ற கடையில் இருந்தது. நல்ல வேஷ்டியாக பார்த்து வாங்கிவிடச் சொன்னேன். வாங்கிவிட்டார். அவரும் என்னுடன் வெள்ளிக்கிழமை அன்றே மலை ஏறுவதாக எண்ணம்.

புறப்படுவதற்கு இரண்டு நாள் முன் அவரால் வெள்ளிக்கிழமை வர முடியாது என்றும், சனிக்கிழமை தான் மலை ஏறி வர முடியும் என்று கூறினார். சரிதான் போ! ஓதியப்பர் விளையாட தொடங்கிவிட்டார் என்று புரிந்தது. செம கடுப்பாகிவிட்ட நான்,

"அபிஷேகம் காலையிலேயே முடிந்து விடுமே, உடனே பூசாரி வேஷ்டியைய் கேட்பாரே, நீங்கள் வருவதற்கு தாமதித்தால், வேறு ஏதேனும் வேஷ்டியை உடுத்திவிடுவாரே, நான் எப்படி அபிஷேகத்தை நீங்கள் வரும் வரை தடுத்து நிறுத்தி வைக்க முடியும்?" என்றேன்.

"எப்படியாவது விடியற்காலையில் வந்து சேர்ந்து விடுகிறேன். நீங்கள் டென்ஷன் ஆகாதீங்க" என்றார்.

அப்பொழுது தான் என்னுள் ஒரு எண்ணம் உதித்தது. ஓதியப்பர், "நீ முயற்சி செய்து, உன் கையால் வாங்கிக் கொடு" என்று எதிர்பார்ப்பது போல் தோன்றியது.

அமைதியாக, "இனி நான் பார்த்துக் கொள்கிறேன், பத்திரமாக வந்து சேர்கிற வழியை பாருங்கள்" என்றேன்.

அமைதியாக அமர்ந்து என்னென்ன தேவை என்பதை பட்டியலிட்டு, ஒவ்வொன்றாக வாங்கத் தொடங்கினோம். என்னுடன், இங்கிருந்து கிளம்புபவர்கள் 5 பேர் என்று முடிவாயிற்று.  அதில் ஒருவரிடம் ஓதியப்பருக்கு அபிஷேகத்துக்கு "வெட்டி வேர் எண்ணை" வாங்குகிற பொறுப்பை கொடுத்தேன். சென்னையிலிருந்து வரும் ஒரு அன்பர், நானும் அதை கொண்டு வருகிறேன் என்றார். இந்த எண்ணை அபிஷேகத்துக்கு மிகச் சிறப்பானது. உடனடியாக அவரை குளிர வைத்துவிடலாம் என்பதை போன வருடம் இதே நாளில் சென்ற பொழுது, அனுபவத்தினால் உணர்ந்ததே காரணம்.

போன வருடம் ஒரு நாள் முன்னரே மலை ஏறி அமர்ந்து விட்டோம். மறுநாள் தான் பூசாரி வந்து கோவிலை திறப்பார். த்யானத்திலும், ஜெபத்திலும் நேரத்தை ஒட்டி காத்திருக்கும் பொழுது பார்த்தால், ஒதிமலையை தவிர மற்ற எல்லா இடங்களிலும் மழை பெய்கிறது. ஒதிமலையில் ஒரு சொட்டுகூட விழவில்லை. இதென்ன ஆச்சரியம் என்று மனதில் குறித்துக் கொண்டேன். இரவு அடித்த காற்றில், கோவிலில் இருக்கும் ஒரு பெரிய மரம் உலுக்கி எடுக்கப்பட்டது. அப்படி சுழலும் காற்று. அந்த மரம் பட்ட பாட்டை 10 அடி தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரு துளி (அல்லது பங்கு) காற்றின் ஸ்பரிசம் கூட என்னை தழுவவில்லை.

"சரி! நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள். என்ன பயமுறுத்தினாலும் இங்கிருந்து செல்வதாக இல்லை. நாளை ஓதியப்பரின் பிறந்தநாளை கொண்டாடி, அவர் ஆசிர்வாதம் வாங்கிவிட்டுத்தான் செல்வோம்" என்று வாய் திறந்து சொல்லிவிட்டு, "மரத்திடம்" மானசீகமாக மனிப்புக் கேட்டேன்.

"இதுக்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நாங்கள் உபயோகித்துக் கொள்ள இருக்கிறோம். இருந்தாலும், உனக்கு மிகப் பெரிய சேதம் வராமல் இருக்க ஓதியப்பரை வேண்டிக் கொள்கிறேன்" என்று ஒரு வேண்டுதலை ஓதியப்பரிடம் வைத்துவிட்டு நான் உள்ளே மண்டபத்தில் உறங்க சென்று விட்டேன். மறுநாள் காலையில் எழுந்த உடன், அந்த மரம் அங்கே இருக்கிறதா என்று பார்த்து, கண்டு சமாதானமடைந்து, குளித்து தயாரானோம்.

பூசாரி வந்து சன்னதியை திறந்த பொழுது, உள்ளிருந்து ஒரு அக்னி நிறைந்த காற்று, பக்தர்களை தாக்கியது. உள்ளே நின்றவர்கள் அனைவரும், ஒரே நிமிடத்தில் வியர்வையில் நனைந்தனர். ஓதியப்பரின் கழுத்தில் போட்டிருந்த மாலைகள் அனைத்தும் இரண்டே நாளில் அழுகி போய் இருந்தது. அத்தனை சூடு சன்னதியில். பூசாரியே மலைத்துப் போய் விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

"என்ன ஓதியப்பா! இப்படி சூடாக இருக்கிறது உன் சன்னதி? உன்னால் எப்படி பொறுத்துக் கொள்ள முடிகிறது? நேற்றிலிருந்து பார்க்கிறேன், மலையை சுற்றி எல்லா இடத்திலும் மழை பெய்கிறது. உன் மலையில் மட்டும் மழையே இல்லையே. சரி! "வெட்டி வேர் எண்ணை" வாங்கி வந்திருக்கிறேன். உனக்கு எண்ணை காப்பு போட்டு குளிர வைக்க வேண்டும். அதை ஏற்று, நீ குளிர்ந்து, உன் மலையும் குளிரவேண்டும். மழைக்கு ஏற்பாடு பண்ணு" என்று பிரார்த்தித்துவிட்டு அந்த எண்ணையை கொடுத்தேன்.

சும்மா சொல்லக் கூடாது! அவர், அவர் தான்! எண்ணை காப்பு தலையில் போடத்தொடங்கும் பொழுது மதியம் மணி 2.30. அப்பொழுது தொடங்கிய மழை இரவு 7.30 வரை தொடர்ந்து பெய்தது. சுற்று வட்டத்தில் இருக்கும் மற்ற சன்னதிகளுக்கு போய் அபிஷேகம் செய்து அலங்காரம் பண்ணக் கூட போக முடியவில்லை, பூசாரியால். நொந்து பொய், பூசாரியே ஒதியப்பரை திட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். (பூசாரி ஓதியப்பருக்கு ரொம்ப நண்பர்ங்க. அதனால் அவருக்கு திட்டுகிற உரிமை உண்டு).  இரவு 7.30 மணிக்கு மழை நின்றது. அதன் பின்னர் தான் மற்ற சாமிகளுக்கு பூசை செய்ய முடிந்தது.

அப்படிப்பட்ட அனுபவத்தை தந்த "வெட்டி வேர் எண்ணையை" இந்த முறையும் அவருக்கு காப்பு போட கொடுத்து, முடிந்தால் அபிஷேகம் செய்த எண்ணையை கொஞ்சம் பிரசாதமாக வாங்கி கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. அதையும் ஓதியப்பரிடம் மானசீகமாக வேண்டிக் கொண்டு, புறப்படுகிற நாளை நோக்கி காத்திருந்தோம்.

இரண்டு நாட்களுக்கு முன் நான்கு நண்பர்கள் தங்களால் சனிக்கிழமை தான் வர முடியும் என்று கூறினார்கள். சரி! 6 பேர் கொண்ட குழுவுக்குத்தான் வெள்ளிக்கிழமை அன்று விதித்திருக்கிறார் ஓதியப்பார் என்று தீர்மானித்து, பயணமானோம்.

கோயம்பத்தூரில், ஒரு நண்பர் வீட்டில் குளித்து பசியாறி, அண்ணூர் வந்து பூசைக்கான மாலை, பூக்களுக்கு ஏற்ப்பாடு செய்துவிட்டு, போகிற வழியில் அகத்தியர் லிங்கத்துக்கு அபிஷேக சாமான்களை வாங்கிக் கொண்டுடோம். எதிர்பார்த்தது போல், அண்ணூரில் 8 முழ காவி வேஷ்டியும், அங்க வஸ்திரமும் கிடைத்தது. "இது கிடைத்துவிட்டது, இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்ற எண்ணம் ஊக்கத்தை தர, மலை அடிவாரத்தை சென்றடைந்தோம்.
மலை அடிவாரத்தில் இருக்கும் பிள்ளையாருக்கு பூசை செய்து, பிரார்த்தித்துக் கொண்டு, மலை ஏறத் தொடங்க, வெயில் சுட்டு எரித்தது. ஒரு வருடத்துக்குப் பின் மலை ஏறுவதால், "எப்படி 1800 படிகளை ஏறப் போகிறோம்?" என்ற மலைப்பு வந்தாலும், வெயிலின் உக்கிரம் சற்று அதிகமாகவே தாக்கியது.

வெள்ளிக்கிழமை, பிரதோஷ தினம். எல்லா பிரதோஷத்துக்கும், ஓதியப்பருக்கு ஸ்பெஷல் அபிஷேகம், பூசை உண்டு. ஆகவே அன்று பூசாரி கோவிலில் இருப்பார் என்று எதிர்பார்த்து நடந்தோம். வழியில் ஒருவரை கண்ட பொழுது தான் புரிந்தது, பூசாரி இனி மேல் தான் மலை ஏறி வரவேண்டும் என்று.

"அடடா! ஓதியப்பருக்குத் தான் என்னே கருணை! வரும் பக்தர்கள் (6 பேர்களும்)என் நிர்மால்ய தரிசனத்தை பெற்றுக் கொள்ளட்டும் என்று, அவரே ஏற்பாடு செய்திருக்கிறார் போலும்" என்று தீர்மானித்து நடக்கத் தொடங்கினோம். ஆனால் ஓதியப்பர் வேறு விதமாக தீர்மானித்திருக்கிறார் என்று பிறகு தான் புரிந்தது.

முருகன் அருள் ....................... தொடரும்!


1 comment:

  1. Kumabhisekam of a new Sri Agastya temple at Rameswaram is at 7.30 am on Monday, 8th Sept. Details: http://xn--vkc6a6ba9cg7h0ee.com/sage/?p=579

    ReplyDelete