​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 12 July 2012

சித்தன் அருள் - 80

கிடைத்த அனுபவம் போதுமென்று சந்தோஷப்பட்டு அந்த மலைக் கோயிலுக்கு நன்றி சொல்லி விட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என்று பேசாமல் வாயை மூடிக் கொண்டு சென்னைக்கு கிளம்பியிருக்கலாம்.  விதி விட்டால் தானே.

நாடிக் கட்டை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் எனக்கு உதவியாகக் குடைபிடித்து வந்த அவனுக்கு நாடி பார்க்கப் போய் தேவையில்லாத வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ என்று தான் நினைக்கத் தோன்றியது! போதாக்குறைக்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவன் அடித்த கமன்ட் என்னை வாய் பேச முடியாமல் தடுத்துவிட்டது.

ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும் என் கை செலவுக்கு இருந்த பணத்தில் கொஞ்சம் எடுத்தேன். அந்த "அப்பாவி" ஏழை கோடீஸ்வரனுக்கு கொடுத்து "இந்தப்பா! இதை வைத்து முதலில் மஞ்சள், பூ, பழம், வெற்றிலை, பக்கு, ஊதுபத்தி, சூடன் சாம்பிராணி, குங்குமம் கொஞ்சம் வாங்கிக் கொள். அப்புறமாக விளகேற்ற எண்ணை, திரி வாங்கிக் கொண்டு கோவில் குருக்களிடம் கொடுத்து அர்ச்சனை செய்துவிட்டு பின்பு கருவறையில் விளகேற்ற ஆரம்பி. எப்படியாவது நாற்பது நாட்களுக்கு விடாமல் ஏற்றி வா. நல்லதே நடக்கும்" என்றேன். காலில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு என்னிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டான்.

"சாமி! என்னை உள்ளே நுழைய விடமாட்டாங்களே சாமி!"

"வேண்டாம். அந்தக் கோயில் குருக்களிடம் கொடுத்துவிடு.  உன் சார்பாக அவர் கருவறையில் விளகேற்றட்டும்."

இதுவரை பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்த வண்டிக்காரன், "அய்யா, இதெல்லாம் நடக்கிற காரியமா எனக்கு தோணலை. ஒரு நாள் ரெண்டு நாள்ன்ன விளகேற்றலாம்.நாற்பது நாள்களுக்கு எப்படிங்க இவனால விளகேற்ற முடியும்?" என்றான்.

இதைக் கேட்டதும் எனக்கு பகீர் என்றது. இவன் வண்டிக்காரனா? இல்லை அந்த ஏழை கோடீஸ்வரனுக்கு வில்லனா? ஏன் எதற்கெடுத்தாலும் எதிர் மறையாகவே பேசுகிறான்? இவனுக்கு என்ன வந்தது? விளக்குதானே ஏற்றிவிட்டுப் போகட்டுமே என்று ஏன் நினைக்கவில்லை என்பதை எண்ணி அந்த வண்டிக்காரன் மீது எரிச்சல் பட்டேன்.

பின்னர் வண்டிக்காரன் பக்கம் திரும்பி "என்ன சொல்கிறாய்?  விவரமாகச் சொல்லேன்" என்றேன், சற்று பொறுமையை இழந்து.

"அய்யா, இவன் எங்க கிராமத்துகுன்னு நேர்ந்து விட்டவன். கல்யாணம் காட்ச்சின்னு எதுவும் இவனுக்கு கிடையாதுங்க. எங்க கிராமத்திலே எந்த வீட்டிலே துக்கம் நடந்தாலும், அங்கே இவன் போகணும்.பங்காளி தலைக்கட்டு முடிகிற வரைக்கும் அங்கு தான் இருக்கணும். அதே போல் கல்யாணம் வச்சிருந்தாலும் அங்கே கடைசிவரை இருந்து எடுபிடி வேலை செய்யணும். ஏன் அவ்வளவு தூரத்துக்குப் போவானேன்? இப்போ எங்க வீட்டுல என்னைப் பெத்தவ இன்னிக்கோ, நாளைக்கோன்னு படுத்த படுக்கையா கிடக்கா.உசிரு இன்னும் போக மாட்டேங்குது. அது சட்டுன்னு போயிடிச்சுன்னு வச்சுக்கொங்கோ, பதினாறு நாள் காரியம் முடியற வரைக்கும் இவன் இந்தண்ட அந்தண்ட போகமுடியாது. என் வூட்டுல முடங்கிக் கிடைக்கணும். இப்படி ரெண்டு மூணு உசிரு போராடிட்டு கிடக்குது. அதெல்லாம் கரை சேர்க்க இவன் வேணுங்க. அதை மனசிலே வச்சுட்டுத்தான் சொன்னேங்க" என்றான் மிகவும் தீர்க்கமாக!

"ஏம்பா அப்படியொரு வழக்கம், கட்டுப்பாடு இருக்கா" என்றேன்.

அந்த ஏழை "ஆமாங்க" என்றான் திக்கி திக்கி.எனக்கு இது மிகவும் தர்மசங்கடத்தை தந்தது.

"ஏம்பா வண்டிக்காரரே! இவன் அந்தக் கோயில்ல விளக்கேற்றி முடிக்கிற வரை உங்க கிராமத்திலே யாருக்கும் எதுவும் ஆகாது. பயப்படாதே! இவனுக்கு நீயும் ஒத்தாசையாக இரேன்" என்று அவனைச் சமாதானப்படுத்தினேன்.

"ஏங்க! இவன் கொடீஸ்வரனாகப் போறான்னு சொன்னீங்க. அது எப்போ நடக்கிறதோ அப்படி நடக்கட்டும். எனக்கொண்ணும் இவன் மேல பொறாமை இல்லை. எனக்குக் கிராமத்துலே பத்து ஏக்கர் நன்செய், புன்செய் இருக்கு. மாமியார் வூட்டு நிலமும் காடாகக் கிடக்குது. இவனுக்கு விளகேற்ற நானே வேண்டிய ஏற்பாட்டைச் செய்கிறேன்.ஆனாலும் ஊர்ல உள்ள நடைமுறையைப் பற்றி உங்க கிட்ட சொல்லணமே. அதான் ஒங்க காதிலே இப்படிப் போட்டு வைத்தேன்" என்றான் கொஞ்சம் கூட அசையாமல்.

"அகஸ்தியர் தான் இதேல்லாம் தடுத்து நிறுத்தணும்.நம் கையில் ஒன்றுமில்லை" என்று ஸ்டேஷனுக்குள் நடக்க ஆரம்பித்தேன்.

"ஏனுங்க, ஏனுங்க" என்ற குரல் கேட்டது.

திரும்பி பார்த்தேன்.

அந்த வண்டிக்காரர் என்னை நோக்கி வந்தார்.

"ஒரு சின்ன சந்தேகம்.  அவனுக்குப் பதிலா நான் தினம் கோயிலுக்கு விளக்கேத்தலாமாங்க!"

"கூடாது.......... அவனைத்தான் அகஸ்தியர் ஏற்றச் சொல்லியிருக்கார். அவன் தான் ஜாமீனின் வாரிசுன்னு சொல்றாரு."

"ஏங்க.... என்ன நீங்க........ ஜாமீன் வாரிசுன்ன அதுக்கு ஒரு தகுதி அடையாளம் வேண்டாங்களா. அது இந்தத் திக்குவாய்ப் பயலுக்கு எதுங்க?"

"இப்போ என்ன செய்யணும்னு சொல்றே?"

"இல்லைங்க..... அவனுக்குப் பதிலா நான் விளகேத்தினா எனக்கு அந்த ஜாமீன் சொத்து கிடைக்குங்களா.எனக்கும் அவனுக்கும் ஏறத்தாழ ஒரே வயசுதானுங்க.அதனால கேட்டேன்" என்றான், கொஞ்சம் கூட பதற்றப்படாமல். நான் திகைத்துப் போனேன்! கிராமத்தில் கூட இப்படி ஒரு மனிதனா? இது எங்கே கொண்டு போய் முடியுமோ என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. அவனிடம் பதில் சொல்லாமல் பிளாட்பாரம் கவுண்டரை நோக்கி நகர்ந்தேன்.

சென்னைக்குத் திரும்பினாலும் என் மனம் அந்தத் திக்குவாய் நபரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது.

அந்த வண்டிக்காரர் சொன்னபடியே "அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லை.  பெற்றவர்களே நேரில் வந்தாலும் இவன்தான் என் பிள்ளை என்று சொல்ல முடியாது. அவனை வளர்த்தவர்களோ இன்று உயிரோடு இல்லை. சிறு வயதில் இவனைக் கடத்தியவர்கள் யார் என்ற விவரமும் இல்லை. அப்படியிருக்க இவன்தான் ஜாமீன் வாரிசு என்கிறாரே.  அது எப்படி? எந்த ஊர் ஜாமீன் என்ற விவரத்தையும் அகஸ்தியர் சொல்லவில்லை என்பதால் அவன் ஜாமீன் வாரிசாகத் வருவானா?" என்ற சந்தேகம், எனக்கும் ஏற்பட்டது.

அகஸ்தியர் ஜீவநாடியைப் படிக்க ஆரம்பித்ததிலேயிருந்து எனக்கும் சில சமயம் இப்படிப்பட்ட சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. ஒரு பகுத்தறிவு வாதியை மிகவும் சுலபமாகச் சமாளித்து விடலாம்.ஆனால் ஆன்மீக வாதியைச் சமாளிப்பது என்பது மிக மிகக் கடினம் என்பதை அனுபவரீதியாகவே உணர்ந்திருக்கிறேன்.

நான் ஆன்மீக வாதியா, இல்லை பகுத்தறிவு வாதியா? இல்லை ரெண்டும் கெட்டானா? என்று என்னை நானே பரிசோதித்துக் கொள்வேன். கையில் அகத்தியர் ஜீவ நாடியை வைத்துக் கொண்டு பகுத்தறிவு வாதம் பேச முடியாது. ஆனால் எதுவும் சட்டென்று நடந்து விடவேண்டும் என்று ஆசைப்படுபவன். ஆனால், நாடி பார்த்த பலருக்கு அப்படி நடப்பதில்லை."பொறுத்திரு பொறுத்திரு" என்று தள்ளிக் கொண்டே போகும் பொழுது நாடி பார்ப்பவர்கள் மட்டுமல்ல நாடி படிக்கும் எனக்கும் கூட எரிச்சலும் சிலசமயம் எதற்காக நாடியைப் படிக்க வேண்டும் என்று வெறுப்பும் கூட ஏற்ப்படும்.

இதற்கெல்லாம் ஒரு காரணம் நிச்சயம் வெளியே வரும். அது பின்னால் தான் தெரியும். அது நிறைய பேர்களுக்கு இன்னமும் தெரியாத தெய்வ ரகசியம்!

வண்டிக்காரனை நினைத்தால் அவன், அந்த திக்கு வாய்க்காரனை மிகச் சுலபமாக எமாற்றிவிடுவான் என்பது ஆணித்தரமான நம்பிக்கை.  இருப்பினும் அகஸ்தியரிடம் பின்பு இது பற்றிக் கேட்கலாம் என்று விட்டு விட்டேன்.

முப்பத்தைந்து நாட்கள் ஓடி விட்டன. அகஸ்தியரிடம் அந்தத் திக்குவாய்க் காரனைப் பற்றிக் கேட்டால் "பொறுத்திரு! அவனை அந்த மலையரசன் (மலை கோவில் சிவபெருமான்) பார்த்துக் கொள்வார் என்று தான் சொன்னாரே தவிர வேறு எந்தத் தகவலும் எனக்குக் கிட்டவில்லை. எனக்கோ அவனைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமென்று ஓர் ஆசை.துணிந்து அங்கு சென்று பார்த்துவிட்டுத்தான் வருவோமே என்று முப்பதெட்டாவது நாள் சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அந்தக் கிராமத்திற்குள் சென்றதும் இனம் தெரியாத பரபரப்பு ஏற்பட்டது. கிராம கர்ணத்தைச் சந்தித்தேன். உற்சாகமாக வரவேற்றுப் பேசினார்.

"ஊர்லே எல்லோரும் நலமா?"

"எல்லோரும் சௌக்கியம்"

"அன்னிக்கு எனக்கு ஊருக்குப் போறதுக்கு வண்டிக்காரர் ஒருத்தர் வந்தாரே அவர் சௌக்யமா? அவங்க அம்மா சௌக்யமா?"

ஒரு நிமிஷம் என்னை ஏறெடுத்துப் பார்த்தார், கொஞ்சம் மௌனம் காட்டினார்.

"என்ன திடீரென்று அவங்களைப் பத்தி கேட்கறீங்க. அகஸ்தியர் ஏதாவது சொன்னாரா" என்று பீடிகை போட்டார்.

"அகஸ்தியர் ஒண்ணும் சொல்லல்லே, அவருதான் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னார்"

"அதயேன் கேட்கறீங்க. அவன் நல்லத்தான் இருந்தான். கட்சி அரசியல்னு சேர்ந்துகிட்டு துடுக்குத்தனமாகத் தான் பேசுவான். அன்னிக்கு பாருங்க அந்தத் திக்குவாய்ப் பய கோயிலுக்கு விளகேத்தப் போயிருக்கான். இவனும் அவன் கூட மலைக் கோயிலுக்குப் போயிருக்கான். அங்க என்ன நடந்ததுன்னு தெரியல்ல.மலைப்படியிலிருந்து கீழே விழுந்து தோள்பட்டை, விலா, கணுக்காலுக்கு கீழே எலும்பு நொறுங்கி, இப்போது புத்தூர் அஸ்பத்ரியில் கிடக்கான்".

"அப்படியா.  அப்புறம்,"

"அவன் நன்றாகத் தேறிவர ஆறுமாசம் ஆகும்னு புத்தூர் வைத்தியர் சொல்லிட்டாராம்.கோயம்பத்தூர்ல கொண்டு போய் சேர்க்கலாம்னு அவனுக்குச் சொந்தக்காரங்க முடிவு பண்ணி ஊருக்குப் போயிருக்காங்க".

"அவங்க அம்மா?"

"கொஞ்சம் நடமாடறாங்க.  ஒத்தாசைக்கு ஆள் இருக்கு. அவளையும் அந்தத் திக்குவாய் பையன் தான் கவனிச்சிக்கிறான். ஆமா, அவன் ஜாமீன் வாரிசுன்னு நாடியிலே வந்திருக்குன்னு வண்டிக்காரன் சொன்னானுங்க.  அது நிசம்தானாங்க?"  என்று நிதானமாக கேட்டார்.

நான் தலையை ஆட்டினேன்.

"அன்னிக்கு அந்த வண்டிக்காரப் பிள்ளை என்கிட்டே சொன்னப்போ ஆச்சரியபட்டுப் போயிட்டேனுங்க. தமாசுக்குத்தான் சொல்லியிருபீங்கன்னு நெனச்சுட்டு இருந்தோம்.  இப்போதான் நானே நம்பறேன்."

"கர்ணம் அய்யா நம்பினால் சரிதான். ஆமாம், அந்தத் திக்குவாய் பையன் இப்போ எங்கே இருக்கான்?"

"கழுதை கெட்டா குட்டிச்சுவறு.  மலைக் கோயில்ல பிரகாரத்திலே படுத்திருக்கும்.தம்பி இப்போ அது முந்தயமாதிரி இல்லை. எப்போ பார்த்தாலும் கோயில் கோயில்னு கிடக்குது.யாராவது கேட்டா, கோயிலுக்கு விளகேத்தணும், எண்ணை கொடு, திரியை கொடுன்னு உசிரை வாங்குது.  பைத்தியம் தான் பிடிக்கலை" என்றார் அலட்ச்சியமாக.

எனது மௌனம் அவரைக் கிளப்பிவிட்டது.

"ஏன் தம்பி......... திடீரென்று வந்திருக்கிறீங்க.... மறுபடியும் கோயில்ல ராத்திரி தங்கணுமா?.  ஏதாவது உத்திரவு வந்திருக்கா?" என்று இப்போதுதான் விசாரிக்க ஆரம்பித்தார்.

"இல்லை, சும்மா இந்தப் பக்கம் வந்தேன். அப்படியே உங்க எல்லோரையும் பார்த்துட்டுப் போகலாம்னு தோணிச்சு.  அவ்வளவுதான்".

"கையில ஓலைச்சுவடி கொண்டு வரலீங்களா?"

"இல்லைங்க...... எதுக்கு கேட்டீங்க?"

"எனக்கு ரெண்டு விஷயம் தெரிஞ்சாகணும். ஒன்னு, பயில்வான் கணக்கா இருந்த வண்டிக்காரன் ஏன் எலும்பு உடைஞ்சு பெட்டுல படுத்துக் கிடைக்கணும். இன்னொன்று இப்பவோ அப்பவோன்னு கிடந்த மூணுபேர் இன்னிக்கு வரைக்கும் தப்பிச்சிட்டிருக்காங்க.உண்மையிலே அந்த வண்டிக்காரனின் தாயாரு போயிட்டள்னு நெனச்சு எல்லா எற்ப்பாடுகளையும் செய்திட்டோம். சுடுகாட்டில வைச்சு, கடைசி நிமிஷத்திலே தான் அவங்க உயிரோடு இருக்காங்கன்னு கண்டு பிடிச்சுட்டோம். இந்தக் கிராமத்திலே இது போல ஒரு சம்பவம் இதுவரைக்கும் நடந்ததே இல்லை. இதையெல்லாம் நாடியிலே கேட்கலாம்னு நெனச்சேன்" என்று முடித்தார்.

"நம்ப கையிலே என்ன இருக்கு?  எல்லாம் தெய்வச் செயல்" என்றேன். பின்பு அவரிடமிருந்து விடை பெற்று மலையில் உள்ள கோயிலை நோக்கி ஏறினேன். எனக்கு அந்தத் திக்குவாயனைப் பார்க்க வேண்டுமே. ஆனால் யாருமே எதிர்ப்படவில்லை.

குருக்கள் கோயிலைச் சாற்றிவிட்டு இறங்கிப் போனதற்கான அடையாளம் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன். ஆள் நடமாட்டம் காணவில்லை. எந்த இடத்தில் அமர்ந்து தேவர்களையும், சித்தர்களையும் உணர்வு  பூர்வமாக தரிசனம் செய்தேனோ அந்த இடத்தில் அந்தத் திக்கு வாய்க்காரன் படுத்திருந்தான். நான் வந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை.  அப்படியொரு தூக்கம்! கோயில் கதவு துவாரம் வழியாக உள்ளே பார்த்தேன்,. சுவாமியின் கர்ப்பக் கிரகத்தில் இரண்டு விளக்குகள் நிதானமாகச் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்ப மனம் வரவில்லை.

இன்றைக்கு இவன் மேல்சட்டை பனியன் கூட இல்லாமல் நான்கு முழ அழுக்குக் கரை வேட்டியோடு சுருண்டு படுத்திருக்கலாம்.ஆனால், வெகுவிரைவில் இவனுக்கோர் நல்லகாலம் சிவபெருமான் கிருபையால் கிடைக்கப் போகிறது என்று மட்டும் என் மனம் அறிவுறுத்தியது.

அமைதியாக இறைவனைப் பிரார்த்தனைச் செய்துவிட்டுத் திரும்பும் போது சர சரவென்று சிறு சப்தம். திரும்பி பார்த்தேன்.

மிகப்பெரிய நாகப் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அந்தத் திக்குவாய்க்காரன் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது.

சித்தன் அருள்................. தொடரும்!

3 comments:

  1. அகஸ்திய குரு சமர்ப்பணம்!
    (இதற்கெல்லாம் ஒரு காரணம் நிச்சயம் வெளியே வரும். அது பின்னால் தான் தெரியும். அது நிறைய பேர்களுக்கு இன்னமும் தெரியாத தெய்வ ரகசியம்!)-உணர்ந்தவர்களால் மட்டுமே உணரமுடியும்.
    நன்றி.

    ReplyDelete
  2. மிகப்பெரிய நாகப் பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து அந்தத் திக்குவாய்க்காரன் பக்கத்தில் சென்று கொண்டிருந்தது.


    பாம்பைப்பார்த்த அதிர்ச்சியில் திக்குவாய் குணமாகிவிட்டதா???

    ReplyDelete
  3. திக்குவாய் சரியாகவில்லை. அவனுக்கு தான் பம்ம்பு வருவது தெரியாதே, அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறானே. பாம்பு என்ன செய்தது என்றும், பாம்பு ஏன் என்பதும் இனி வரும் தொடரில் படிக்கும் பொது மலைத்துப் போகிவிடுவோம். பொறுத்திருங்கள்!

    ReplyDelete