​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 July 2012

சித்தன் அருள் - 79!


ஆனந்தமான எண்ணத்தோடு அகஸ்தியர் பெருமானையும் மலைமீது குடி கொண்டிருக்கும் சிவபெருமானையும் மனதார வணங்கினேன்.

கையிலிருந்த "நாடிக்கு" மானசீகமான நன்றி சொல்லிவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கிய எனக்கு அந்தக் கிராமத்து மக்களின் வழியனுப்பு விழாவும் கிடைத்தது.

"இங்கேயே உங்களுக்குச் சகலவிதமான வசதிகளையும் செய்து தருகிறோம்.  இந்த மலை கோயிலுக்குச் சித்தர்களும் வருகிறார்கள்.  புனிதமான இந்தக் கிராமத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுங்களேன்" என்று சொன்ன அந்தக் கிராமத்து ஜனங்களின் அன்பான வேண்டுகோளுக்கும் நன்றி சொல்லிவிட்டு ஊருக்குப் புறப்பட்டேன்.

கைமுறுக்கு, பணியாரம், அப்பம், பழம் ஆகியவை அவர்களால் எனக்கு அன்போடு கொடுக்கப்பட்டது.  இரட்டைக் காளை வண்டி ஒன்றை தயார் செய்து, அதில் ஏற்றி விட்டாலும், அந்தக் கிராமத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் வரை என் மீது வெயில் படக்கூடாது என்பதற்காக ஒருவர், வண்டியில் ஏறி நின்று கொண்டே குடைபிடித்து வந்தது என் மனதை உருகச் செய்தது.

எப்படியும் இந்தக் கிராமத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரமாகும்.  பொழுதை எப்படியாவது நல்ல படியாகக் கழிக்க வேண்டும் என்றால் அதற்க்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது எனக்குக் குடைபிடித்துக் கொண்டிருந்தவர் பரிதாபமாக என்னையும் அருகில் இருந்த நாடி வைத்திருந்த பெட்டியையும் மாறி மாறிப் பார்ப்பது தெரிந்தது.  ஆனால் வாய் திறந்து கேட்கவில்லை.

சரி இவனுக்கும் தான் "நாடி" பார்ப்போமே என்று எண்ணி அவனை அழைத்து "உனக்கு நாடி பார்க்க வேண்டுமா?" என்று கேட்டேன்.

"ஆமாம்" என்று வேகமாகத் தலையை ஆட்டினான்.

"சரி.  என் பக்கத்தில் உட்கார் - உனக்கு நாடி படிக்கிறேன்" என்று சொன்னேன்.  பவ்வியமாக உட்கார்ந்தான்.

எனக்கும் பொழுது போக வேண்டுமே - அகஸ்தியர் நாடியை ஓடுகின்ற மாட்டுவண்டியில் படிக்க ஆரம்பித்தேன்.

படிக்க படிக்க எனக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.  அவனைப் பற்றி ஒரு புதிய வரலாறே கிடைத்தது.

"மிகப்பெரிய ஜாமீன் பரம்பரையைச் சேர்ந்த அவனைச் சிறுவயதிலேயே சொத்துக்காகக் கடத்தி வந்திருக்கிறார்கள்.  அவன் பெற்றோர்களுக்குக் கொலை மிரட்டலும் அனுப்பப்பட்டிருக்கிறது.  இதை அவனது பெற்றோர் துளிகூட லட்ச்சியம் செய்யவில்லை.  ஆந்திராவுக்குக் கொண்டு சென்று கொல்ல வேண்டும் என்று எண்ணியவர்கள், அங்கு செல்லவில்லை.  ஈரோட்டிலேயே சில நாட்கள் தங்கிவிட்டார்கள்.  எந்த மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் பயப்படாததால் இந்தக் குழந்தையைக் கொல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று அந்தக் குழந்தையை ஒரு வைகறைப் பொழுதில் ரோட்டில் விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்.

ரோட்டில் தனியாகக் கிடந்த ஆண் குழந்தையை இந்த மலைக் கோயிலைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தினர் ஈரோடு சந்தைக்கு வரும் பொழுது கண்டெடுத்துத் தங்களோடு எடுத்துச் சென்று விட்டனர்.

எங்கோ ராஜ போகாமாகப் பிறந்த இந்தக் குழந்தை விதியின் கொடுமையால் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரு மண் குடிசைக்குள் வாழ்ந்து வந்தது.  நாளாக நாளாக அந்தப் பையன் வளர்ந்தான்.  படிப்பு இல்லை.  மலைக் கோயிலுக்கு அருகேயுள்ள மலைக்குன்றில் ஆடு மாடுகளை மேய்த்தும், சுள்ளி, விறகுகளைப் பொறுக்கியும் காலத்தைத் தள்ளியிருக்கிறான்.

ஒவ்வொரு நாளும் ஆடு மாடு மேய்க்கப் போகும் போது, மலைகோயில் சிவபெருமானை மனதார வேண்டி பிரார்த்தனை செய்து நூற்றி எட்டு தோப்புக் கரணங்களையும் போடுவான்.  எதற்காகப் பிரார்த்தனைச் செய்கிறான் என்று யாருக்கும் தெரியாது.  ஆனால் தெய்வ நம்பிக்கை மட்டும் அவனுக்கு அதிகம் இருந்தது.

அந்தக் கிராமத்தில் எல்லோருக்கும் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்த அவனுக்கு அவ்வளவாகப் பேசவராது.  திக்கித் திக்கித்தான் பேசுவான்.  கோயில் திருவிழா என்றாலும், அந்தக் கிராமத்து வீட்டுத் திருமண விழா என்றாலும் சரி, இவன் தான் முக்கியப் பொருப்பேர்ப்பான்.  வலிய வந்து உதவுவான்.

இதற்கிடையில் இவனை வளர்த்த அந்த விவசாயி காலமாகவே, ஊர் சோற்றில் வளர்ந்து கொண்டிருந்தான்" என்றொரு கதையை அகஸ்தியர் எனக்கு முதலில் சொல்லி - "விதி எவ்வளவு வலிது என்று பார்த்தாயா?" என்று என்னிடம் கேட்டார்.

"விதி வலிது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.  ஆனால், இவன் தன் பெறோரிடம் இனியும் சேர்ந்து வாழ முடியாதா?  அதற்கு அகஸ்தியர் அனுகிரகம் பண்ணக் கூடாதா?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"அப்படியொரு வாய்ப்பு அவனுக்கு இருப்பதனால் தான் அவனுக்கு யாம் உதவ இங்கு வந்தோம்" என்று ஒரு போடு போட்டார் அகஸ்தியர்.

"எப்படி?"

"சொல்கிறேன் கேள்.  இன்றிலிருந்து நாற்பது நாள் வரை இவன் அந்த மலைக் கோயில் சிவபெருமான் கருவறையில் ஒரு விளக்கு ஏற்றி வரட்டும்.  நாற்பத்தி ஒன்றாம் நாள் இவனைத் தென் மேற்குத் திசையிலிருந்து வருகின்ற ஒருவர், வேலைக் காரணமாக நியமித்து அழைத்துச் செல்வார்.

பின்னர்தான் இவன் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசும்.  எந்த ஜமீனிலிருந்து வெளியே வந்தானோ, அதே ஜாமீனுக்குள் நுழைவான் இருபத்தெட்டு ஆண்டுளுக்குப் பிறகு" என்று முடித்தார்.

நான் அவனை ஆச்சரியத்தோடும் பரிதாபத்தோடும் பார்த்தேன்.

அவனுக்குச் சரியாகப் பேசவராது என்று ஒன்றைத்தவிர சொலவதைப் புரிந்து கொள்ளும் சக்தி இருந்தது.

மெதுவாக அவனுக்குப் புரியும்படி அகஸ்தியர் நாடியில் வந்த விஷயத்தைச் சொன்னேன்.  முதலில் அவனுக்கு "ஜாமீன்" என்றால் என்னவென்றே புரியவில்லை.  அவன் கேட்ட ஒரு கேள்வி இதுதான்.

"எனக்கு மூணு வேளைக்கு வயிறார கஞ்சி கிடைக்குமா.  நல்ல வேட்டி கிடைக்குமா?" மிகப்பெரிய ஜாமீன் என்று அகஸ்தியர் குறிப்பிட்டதை எண்ணி இவனையும் பார்த்தேன்.  கோடிக்கணக்கான சொத்து கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவன் இப்பொழுது வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறான்.  காய்ந்த வயிறு வெயில் பட்டுப்பட்டுக் கருத்துப் போன மேனி.  சீவாத தலை, ஷேவ் பண்ணாத முகம், சட்டையோ - பனியனோ போடாத உடம்பு.  ஒரு நான்கு முழ அழுக்கு வேட்டி, அடிக்கடி வெற்றிலை பாக்குப் போடுவான் போலிருக்கிறது.  அதனால் பல்லில் வெற்றிலைக் கறை லேசாகத் தெரிந்தது.

இத்தனையும் கொண்டிருந்தாலும் விகல்பம் இல்லாத மனது.  வெகுளியான பார்வை.  அடிகொரு தடவை மலைக் கோயிலைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுகின்ற பக்தி.  இது தான் எனக்கு அவன் மீது அளவற்ற அன்பை வர வழைத்தது.  இல்லையெனில் அகத்தியர் நாடியை இவனுக்கு நான் ஏன் பார்க்கப் போகிறேன்?

"நாற்பது நாள் கோயிலுக்கு விளகேத்தனும், முடியுமா உன்னால்?"

"என்னை உள்ளே விடமாட்டாங்களே சாமி.  என்ன செய்யறது?"

நான் சொன்னதாகச் சொல்லு.  கர்ப்ப கிரகத்திலே விளக்கேத்த விடுவாங்க".

"சரி சாமி.  இந்த வண்டிக்காரர் கிட்டேயும் சொல்லுங்க சாமி.  அப்பத்தான் அவங்க நும்புவாங்க".

நான் உடனே எனக்கு வண்டி ஒட்டிக் கொண்டு வந்தவரிடம் "அகஸ்தியர் அருளும், மலைக்கோயில் சிவனது அருளும் இவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று நடந்ததைச் சொல்லி, நாற்பது நாள் கோயில் கர்பக்ரகத்தில் இவன் விளகேத்தணும்" என்றேன்.

"சரிங்க.  இவன் கையிலே காலணா காசு இல்லை.  எப்படி விளகேத்துவான்" என்று வண்டிக்காரர் கேட்டார்.

"நான் என்னால் ஆனதை தரேன்.  நீயும், மற்ற ஊர் காரங்களும் இவனுக்கு விளகேற்ற உதவி செய்யுங்க.  இவன் இன்னிக்கு ஒன்னும் இல்லாதவனாக உங்களுக்குப் படலாம்.  பலகோடி சொத்துக்கு விரைவில் அதிபதியாவான்.  அப்போ உன்னையும் கவனிச்சுப்பான்" என்று நான் சொன்னதைச் சுத்தமாக அந்த வண்டிக்காரர் நம்பவில்லை.

"சாமி! ஏதோ ஊருக்கு வந்தீங்க, மலை கோயிலுக்குப் போனீங்க.  உயிரோடு திரும்பி வந்தீங்க.  ஊர் சனங்க உங்களைப் பத்தி ஒசத்தியா நெனக்கிறாங்க.  எல்லாம் சரிதான்.  ஆனா போற போக்கிலே இவனைப் பத்தி சொல்லி "ஜாமீன் வாரிசு" கோடி கணக்கான சொத்துக்கு அதிபதின்னு சொல்றீங்களே இதைத்தான் நான் நம்பலே.

ஒரு வேளை சினிமாவிலே வேணா இப்படி நடக்கும்க.  நிஜ வாழ்க்கையிலே இதெல்லாம் நடக்காதுங்க.  இப்படி நான் சொல்றேன்னு என்னைத் தப்ப நெனச்சுக்காதீங்க" என்று பட்டவர்த்தனமாக என்னிடம் நேரிடையாகவே சொல்லிவிட்டார்.  நான் வாய் மூடி மௌனமானேன். மேற்கொண்டு பேசவோ விளக்கவோ முடியவில்லை.  இதற்குள் ஈரோடு ரயில்வே நிலையத்தை வண்டி நெருங்கியது.

சித்தன் அருள் .............. தொடரும்!

5 comments:

  1. sir i am from erode only... can you please tell the exact place of this mountain temple... pls sir..

    ReplyDelete
  2. sir am from erode only.. can you pls tell me the exact place of this mountain temple.. pls sir....i beg you

    ReplyDelete
  3. ஈரோடு பக்கத்தில் எந்த ஊர் என்று அவர் கடைசி வரை சொல்ல மறுத்துவிட்டார். ஏன் என்றால், அந்த மலையில் உள்ள ஆபத்து விலகிவிட்டதா இல்லையா என்பதை பற்றி அறிய முடியவில்லை. எத்தனையோ முறை பலரும் கேட்டும் பதில் உரைக்கவில்லை. இப்படிப்பட்ட நிகழ்ச்சியை அறிந்த பின்னர் அவர் சொல்லாததால், எங்கெல்லாமோ வேறு இடங்களை தேடி பிடித்து சென்றவர் பட்ட துன்பங்களை இனிவரும் தொகுப்புகளில் படிக்கும் பொது "போதுமடா சாமி" என்று உங்களுக்கே சொல்ல தோன்றும்.

    ReplyDelete
    Replies
    1. thanks for your timing reply.... lets see.. if my soul is blessed with agasthiyar, i may get chance to visit there....

      Delete
  4. sir i have read all jeeva nadi stories in thinathanti but suddenly i was very hurt when it stops. later i know that agatiar mainthan sri hanumanthasan attains paramapatha.but now i heartly thank you for this publish . please furnish more agastiar teaching to us with the great sage agastiar permission. thank u once again

    ReplyDelete