​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 22 January 2015

அகத்தியரும் அருணாச்சல கிரிவலமும்!


ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

திருவண்ணாமலையில் அகத்தியர் அருளால், ஒரு கிரிவல நேரத்தில் நடந்த இனிய நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஒரு அவா.

அது ஒரு மஹா சிவராத்திரி மாதம். எல்லா வருடமும், மஹா சிவராத்திரியின் பொழுது, நண்பர்களுடன் மூன்று நாட்கள் கிரிவலம் செய்கிற பழக்கம் உண்டு. பிரதோஷ நாள், சிவராத்திரி நாள், அமாவாசை நாள் என்று மூன்று நாட்கள் தெரிவு செய்வேன். நண்பர்களுக்கு தெரிவிக்க, குறைந்தது 7 முதல் 8 பேர் வரை ஒன்று கூடி கிரிவலம் செல்வோம். ஆனால் அந்த முறை இரண்டு நண்பர்கள் தான் இருந்தார்கள். ஒருவர் சென்னையிலிருந்து, இன்னொருவர் பெங்களூரிலிருந்து.

இரவில் தான் கிரிவலம். ஏனென்றால், இரவின் தனிமை, அமைதி, காலியான, ஆள் அரவம் இல்லாத கிரிவலப்பாதை எனக்கு மிகவும் பிடிக்கும். மொத்த கிரிவலப் பாதையும் நம்முடையது என்று உணர்ந்து அமைதியாக அருணாசலேஸ்வரரின் "மூல மந்திரத்தை" ஜெபித்தபடி, அடிக்கடி மலையை திரும்பி பார்த்து தரிசனம் செய்து செல்வது ஒரு அலாதியான இன்பம்.

சிவராத்திரி அன்று மட்டும் தனிமை கிடைக்காது, பக்தர்கள் காட்டாற்று வெள்ளம் போல் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சி நடந்தது, அமாவாசை கிரிவலத்தின் பொழுது.

சிவராத்திரி கிரிவலம் முடிந்து ஒரு நண்பர் விடை பெற, மற்றவரிடம் நான் கேட்டேன்.

"உங்க பிளான் என்ன? ஊருக்கு திரும்பி செல்வதானால், இன்றே கிளம்புங்கள். நான் நாளை ஒருநாளும் இருந்து அமாவாசை அன்று கிரிவலம் செய்துவிட்டுத்தான் கிளம்புவேன். என்னுடன், தங்கி இருந்து செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் இல்லை" என்றேன். ஏனோ தெரியவில்லை, அப்பொழுது மனம் நிறைய தனிமையை விரும்பியது.

நண்பரோ, "நான் தங்குகிறேன். இன்னும் ஒரு நாள் கூட இருந்து கிரிவலம் பண்ணிட்டு, நீங்கள் கிளம்புகிற பொழுதே நானும் ஊருக்கு கிளம்பி செல்கிறேன்" என்றார்.

சரி! நம் மனம் தனிமையை விரும்பினாலும், விதி வேறு ஏதோ ஒன்றை நடத்த விரும்புகிறது. அதன் படியே சென்று என்ன வருகிறதோ அதை ஏற்றுக் கொள்வோம் என்று தீர்மானித்தேன்.

கிளம்பிய மற்ற நண்பரை நன்றி சொல்லி அனுப்பிவிட்டு, நாங்கள் தங்கிய அறையில் கால் மடக்கி, வெற்றிலை போட்டு, வடக்கு நோக்கி அமர்ந்து கண் மூடி த்யானத்தில் அமர்ந்திருந்தேன்.

"எங்கு நோக்கினும் நின் அருளன்றோ" என்று ஏதோ ஒரு கவி பாடிய பாட்டைப் போல், கிரிவலப் பாதையில் உள்ள சிவலிங்கங்கள் கண் முன் விரிந்தது. எங்கும் ஒரே அமைதி. சட்டென்று சூழ்நிலை மாறியது. எதிரே ஒரே புழுதி படர்ந்த பாதை. வாகனங்கள் புழுதியை கிளப்பி செல்ல, மனிதர்கள் குறுக்கும் நெடுக்கும்மாக நடந்து சென்றனர். ஒரே சத்தம்.

"ச்சே! இது என்ன காட்சி! அமைதியை கெடுத்துவிட்டதே!" என்று என் மீதே எரிச்சல்பட்டு த்யானத்தை விட்டு வெளியே வந்து, "இப்பொழுது வருகிறேன்" என்று கூட இருந்த நண்பரிடம் கூறிவிட்டு, மொட்டைமாடிக்கு வந்து, அருணாசலேஸ்வரரின் கோபுரத்தையும், அதன் பின்னர் பரந்து விரிந்து, ஆழ்ந்த அமைதியில் இருக்கும் மலையையும் உற்று நோக்கியபடி நின்றேன். மெல்ல மனதுள் பிரார்த்தனை உதித்தது.

"அய்யனே! இன்று செய்ய ஆசைபடுவது மூன்றாவது நாள் கிரிவலம். உடலும், காலும் இரண்டு நாள் கிரிவலத்திலேயே மிகவும் தளர்ந்து உள்ளது. நீங்கள் தான் உடலுக்கும், காலுக்கும் சக்தியை தந்து, இன்றைய கிரிவலத்தையும் நல்லபடியாக நிறைவு செய்து தரவேண்டும்" என்றேன்.

காற்று நன்றாக வீசிக் கொண்டிருக்க, அண்ணாமலையார் பதில் ஏதும் தராமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

சற்று நேரம் நின்று இருந்த பொழுதிலேயே, உடல் ஒன்று சேர்ந்து அமைவது மெலிதாக புரிந்தது. வீசிய காற்று ஒரு புத்துணர்வை உள்ளுக்குள் விதைத்தது. மானசீகமாக அண்ணாமலையாருக்கு நமஸ்காரங்களை தெரிவித்துவிட்டு, அறைக்கு திரும்ப படிகளில் இறங்கினேன்.

யாரோ தூரத்திலிருந்து "அஷ்டலிங்கத்துக்கும் விளக்கு போட்டால் ரொம்ப நல்லது" என்று சன்னமாக கூறினார்கள். திரும்பி பார்த்தேன், யாரையும் காணவில்லை.

இது என்ன? நமக்கு அருளிய உத்தரவோ? இருகட்டுமே! அது ஒருவேளை புதிய அனுபவத்தை தரலாம். சரி! நல்லது என்று உணர்ந்துவிட்டால், உடனே அதை செய்துவிடவேண்டும், என்று தீர்மானித்து, அறைக்கு சென்று நண்பரிடம் என் பிளானை சொன்னேன்.

அன்று மாலை ஒரு மூன்று மணி இருக்கும். இருவரும் இறங்கி கீழே போய் ஒரு காப்பி குடித்துவிட்டு, கிரிவலம் போகிற வழியில் இருக்கும் 8 லிங்கங்களுக்கும் விளக்கு போடுகிற சாமான்களை வாங்கினோம். என்ன தோன்றியது என்று தெரியவில்லை, 8 என்கிற எண் 9 ஆக மாறி, 9 விளக்குகளை வாங்கினோம்.

"எட்டு தானே சொன்னீங்க! இப்ப எதுக்கு 9வது விளக்கு வாங்கறீங்க?" என்றார் நண்பர்.

"8 விளக்கு அஷ்டலிங்கத்துக்கு, 9வது விளக்கு கோவில் பெரிய கோபுரத்தின் முன் அண்ணாமலையாருக்கு" என்றேன் சட்டென்று.

"சிறப்பான செய்தி ஏதேனும் உண்டா?" என்றார் என் நண்பர்.

"பொறுத்திருந்து பார்ப்போமே! எதிர்பார்ப்பின்றி இருப்போம். நடக்கும் பொழுது உணர்ந்திருந்து, ஆனந்தத்தை அனுபவிப்போமே" என்றேன்.

நான் கூறியது அவருக்கு புரியவில்லை, என்று எனக்கு தெளிவாகியது.

9 மண்விளக்கு, நூல் திரி, நெய், தீப்பெட்டி, ஊதுபத்தி என எளிய பூசைக்கான சாமான்களை வாங்கிக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்து, இரவு 9 மணிக்கு கிரிவலம் தொடங்கலாம் என்று தீர்மானம் செய்தோம்.

9 மணிக்கு அண்ணாமலையார் கோபுரத்தின் முன் நின்று, கற்பூரம் ஏற்றி வைத்து வேண்டிக் கொண்டோம்.

"அய்யனே, இன்றைய கிரிவலத்தை நல்லபடியாக நடத்திக் கொடுத்து, ஏற்று வாங்கிக் கொள்ளுங்கள்" - இது மட்டும் தான் என் வேண்டுதல்.

அஷ்டலிங்கத்துக்கும விளக்கு போட்டுவிட்டு, கடைசியில் அண்ணாமலையாருக்கு விளக்கு போடலாம் என்று தீர்மானம். கூட வந்த நண்பர் அத்தனை சாமான்களையும் தன் கையில் வைத்துக்கொண்டார். சற்று கனமாகத்தான் இருந்தது போலும். சற்று நேரத்தில் அவர் தோளில் தொங்கிய ஜோல்னா பைக்குள் இவை அனைத்தும் அடைக்கலாமாகியது. ஏதோ, அவற்றின் கனம் தாங்க முடியாமல் அவர் பைக்குள் வைத்துக் கொள்கிறார் என்று நினைத்து, நான் கிரிவலம் பாதையில் நடக்கத் தொடங்கினேன்.

என் மனம் அமைதியாக ஜெபித்துக் கொண்டிருந்தது. கவனம் ஒன்று பட்டிருக்க, கண்கள் இந்திர லிங்கம் செல்லும் பாதையில் சென்றது. கூட வந்த நண்பரை காணவில்லை, அங்கு நிலவும் கூட்டத்தில் தடுத்து நிருத்தப்பட்டிருப்பார், வரட்டும் என்று நினைத்து, நான் முதல் லிங்கத்தை நோக்கி நடந்தேன். அங்கு சென்று அடைந்து 2 நிமிடங்களுக்குப் பின் நண்பர் வந்து சேர்ந்தார்.

9 மணி கழிந்துவிட்டதால் அந்த கோவிலின் சன்னதி மூடியிருந்தது. வெளியில் நின்று தரிசனம் செய்யலாம். ஆதலால், அவர் வாசலிலேயே விளக்கேற்றி வழிபட தீர்மானித்தோம். நண்பர் தன் பையிலிருந்து விளக்கை எடுக்கும் பொழுது சற்று ஸ்ரமப்பட்டார்.

"என்ன பிரச்சினை?" என்றேன்.

"ஒன்றும் இல்லை" என்றார்.

"சீக்கிரம் விளகேற்றுங்க!" என்று கூறிவிட்டு அவர் விளகேற்றியதும் "இறைவா! இன்று என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உங்களுக்கு விளகேற்ற வேண்டும் என்று தோன்றியது. போட்டுவிட்டோம். இதை ஏற்றுக் கொண்டு, பாரத கண்டத்தை எட்டு திக்கிலிருந்தும் கட்டிப்போட்டு காப்பாற்று" என்று வேண்டிக் கொண்டேன். எனக்கே அந்த வேண்டுதல் என்னுள் எப்படி வந்தது என்று ஒரு ஆச்சரியம். விளகேற்றும் வரை எந்த எண்ணமும் இல்லாமல் இருந்து திடீரென்று அப்படி ஒரு எண்ணம் வர காரணம் என்ன என்று கடைசிவரை எனக்கு புரியவே இல்லை.

விளக்கேற்றி விட்டு அக்னிலிங்கத்தை நோக்கி நடந்தோம். போகும் வழியில், பிள்ளையார், காமாட்சி தேவி என இரு சன்னதிகளில் நின்று சுற்று வழியாக கிரிவலப் பாதையை அடைய, ஒரே இரைச்சல், ஒரே புழுதி மயம். குறுக்கே நடந்து செல்லும் மனிதர்கள், ஹார்ன் அடித்தபடி அலறிச்செல்லும் வண்டிகள். நிதானமாக யோசித்தேன். இது போன்ற இடம் தானே இன்று த்யானத்தின் பொழுது கண்டேன். என்ன நடக்கப் போகிறது? ஒன்றுமே புரியவில்லையே என்று நண்பரை பார்க்க, அவர் "ஹோ!" என்கிற வேதனையுடன் அவரது வலது கையை மணிக்கட்டில் பிடித்தபடி உதறிக் கொண்டிருந்தார்.

நடக்கும் பாதையில், புழுதியை காற்றில் வாரி இறைத்து, எதிர் வரும் வண்டி என்னவென்று தெரியாமல், பாதை இருந்தது. இங்கோ இவர் கையை உதறிக் கொண்டிருந்தார்.

"என்ன ஏதேனும் அடி பட்டுவிட்டதா?" என்றேன்.

"இல்லை! திடீரென்று மிகுந்த வலி மணிக்கட்டில். ஏன் என்று தெரியவில்லை. அது தான் உதறிப்பார்க்கிறேன்" என்றார்.

"ஏதேனும் மருந்து வாங்க வேண்டும் என்றால் சொல்லுங்கள். இங்கே தான் வாங்க வேண்டும்" என்றேன்.

"வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம்" என்றார்.

நான் என்ன செய்வது என்று தெரியாமல், இதென்ன நமக்கு வந்த சோதனை என்று, சற்று நேரம் ஆகாயத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். பின்னர் மெதுவாக நடக்கத் தொடங்கினேன்.

நடக்கும் பொழுதே மனதுக்குள் வேண்டுதல் தானாக உருவாகியது.

"அகத்தியப் பெருமானே! இது என்ன சோதனை. எட்டு லிங்கத்துக்கும் விளக்குப் போட்டு இன்றைய கிரிவலத்தை வித்யாசமாக முடிக்க வேண்டும் என்றுதானே நினைத்தேன். தயை கூர்ந்து ஏதேனும் ஒரு உருவில் அல்லது வழியில் வந்து இவர் வலியை மாற்றித்தாருங்கள். என்னவோ, உங்களைத்தான் அழைக்கத் தோன்றியது. உங்களிடம் சமர்ப்பித்துவிட்டேன். இனி நீங்களாக பார்த்து ஏதேனும் ஒரு உதவியை செய்தால்தான் உண்டு." என்றேன்.

பிறகு நண்பரிடம் "வாருங்கள் போகலாம்" என்றேன். இருவரும் நடக்கத் தொடங்கினோம். நண்பர் மணிக்கட்டை பிடித்தபடி நடந்து வந்தார்.

இரண்டு நிமிட தூரம் நடந்திருப்போம். இன்னொரு எண்ணம் தோன்றியது. ஏதேனும் ஒரு சாதுவை கண்டால், காசு தானம் பண்ணி மறுபடியும் வேண்டிக் கொள்வோம் என்று.

பாதையின் இடது புறமாக நடந்து கொண்டிருந்தோம். மெதுவாக தூரத்தில் பார்க்க, சற்று குள்ளமான ஒருவர், முதுகில் ஒரு குப்பை தாள்களை நிரப்பி, ஒரு கோணிப்பையை தன் முதுகில் வைத்து, பாதையின் வலது பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். நான் கவனித்துவிட்டு அமைதியாக இருந்தேன்.

வாகனங்கள் வராத இடைவெளியில் சட்டென்று சாலையை கடந்து எங்கள் பக்கமாக வந்து நின்று, முதுகில் இருந்த கோணிப்பையை கீழே வைத்துவிட்டு, கைகூப்பி, என் முன் நின்று, விழிகளை த்யானத்தில் இருப்பவர் போல் மேல் விழித்திரைக்குள் மறைத்து, "ஓம் நம சிவாயா" என்று கூறி நின்றார்.

உடனேயே புரிந்துவிட்டதால், அவர் உயரத்தை கவனித்துவிட்டு, அவர் கண்களை பார்த்தேன். விழிகளை காண்பிப்பதாக இல்லை என்று புரிந்தது. மெதுவாக என் பைக்குள் கையை விட்டு கையில் தட்டுப்பட்ட ரூபாய் தாளை எடுத்து, இரு கைகளையும் சேர்த்து பிடித்து அவரிடம் கொடுத்தேன். அவரும் இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார். மனதுக்குள் "சிவார்ப்பணம்" என்று ஒலித்தது. நான் உள்ளே சிரித்துக் கொண்டேன்.

நான் கொடுத்ததைப் பார்த்த நண்பர் தானும், தன் பைக்குள் கையை விட்டு ரூபாயை எடுத்து வலது கையால் நீட்டினார். நான் என்ன நடக்கிறது என்று நிதானமாக பார்த்துக் கொண்டிருந்தேன். விழிகளை தாழ்த்தி அவரை பார்த்தவர், இரு கைகளையும் ஒன்று சேர்த்து அவரது வலது மணிக்கட்டை நோக்கி கொண்டுபோய், அங்கிருந்து தடவி, அவரின் விரல்நுனிவரை வந்து, அவரை பார்த்தபடியே நின்று, அந்த ரூபாயை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டார். மறுபடியும் "ஓம் நமசிவாயா" என்று கூறிவிட்டு, தன் கோணிப்பையை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு வலது பக்கமாக நடந்து போனார்.

நான் சற்று நேரம் உறைந்து போய் நின்றுவிட்டேன். சுய நினைவுக்கு வந்து "சரி! வாருங்கள் போகலாம்" என்று கூறி நடக்கத் தொடங்கினேன்.

ஒரு பத்து அடி தள்ளிப்போய் திரும்பி பார்க்க, எங்களுக்கு பின் ஓடிய பாதையில் யாரும் தென்படவில்லை. நடந்து சென்ற பெரியவரை காணவில்லை. நண்பரும் திரும்பி பார்த்தார். ஆனால், எதுவும் அவர் உணரவில்லை என்று புரிந்தது.

அந்த தெருவின் முனையில் ஒரு பிள்ளையார் கோவில் உண்டு.  அங்கு போய் நின்று "நன்றி" கூறிவிட்டு, அக்னிலிங்கம் சன்னதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

இயல்பாக நடந்து வந்த நண்பரிடம்,

"என்ன! கை வலி போயாச்சா?" என்றேன்.

அப்பொழுதுதான் உணர்ந்தவர், தன் மணிக்கட்டை அழுத்திப்பார்த்துவிட்டு, "அட! ஆச்சரியமாக இருக்கிறதே! வலியே இல்லையே! இது எப்படி சாத்தியம்! உங்களுக்கு எப்படி அந்த வலி போய் விட்டது என்று தெரியும்?" என்று வினவத் தொடங்கினார்.

நான் சிரித்தபடியே, "நீங்கள் இயல்பாக நடந்துவருவதை கண்டு கேட்டேன்" என்றேன்.

"இல்லை! நீங்க என்னவோ மறைக்கறீங்க! உங்களுக்கு தெரியும்! சொல்லுங்க! எப்படி என் வலி போயிற்று?" என்றார்.

"அது எப்படி போயிற்று என்று எனக்கு தெரியாது" என்று பல முறை கூறியும், நம்ப மறுத்தார்.

கடைசியில் உண்மையை சொல்ல வேண்டி வந்தது.

"உங்கள மாதிரி ஆளுங்களுக்கு, திருவண்ணாமலையில் கிரிவலம் போகும் பொழுது, ஏன் தெளிவும் உணர்வும் இருக்க மாட்டேன் என்கிறது என்று எனக்கு புரியவில்லை. மிகுந்த கைவலி என்றதும், ஏன் என்று தெரியவில்லை, நான் அகத்தியப் பெருமானைத்தான் மனதுக்குள் வேண்டி அழைத்தேன். வந்தவர் அவர்தான் என்று நான் நம்புகிறேன். ஏன் என்றால், ரூபாய் நோட்டை வாங்குகிற சாக்கில், நைசாக மணிக்கட்டை தடவி, வலியையும் எடுத்துக் கொண்டு போய்விட்டாரே" என்றேன்.

அப்பொழுதுதான் நடந்ததை யோசித்து உணர்ந்தவர், தன் தவறை அறிந்தார், "ஏன் நீங்க இதை அப்பவே சொல்லியிருக்கலாம் இல்லையா! அவர் வந்துட்டு போனப்புறம் சொல்லறீங்க. குறைந்தது நடுரோட்டிலேயே அவர் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் பண்ணியிருப்பேன் இல்ல?" என்றார்.

"இப்ப சொல்லுவீங்களே! அவரை  உங்களிடம் காட்டிக் கொடுத்து, நான் அவரிடம் திட்டு வாங்கவா? கூர்மையாக உங்களை ஒருமுறை பார்த்தாரில்லையா? அது போதும் உங்களுக்கு. அவருக்கே தெரியும் நீங்கள் இன்னும் தெளிவு பெறவில்லை என்று. அதனால் அவரும் மௌனமாக போய்விட்டார்." என்றேன்.

"என்ன இருந்தாலும், நீங்கள் செய்தது சரி இல்லை" என்றார்.

"ஹலோ! ஒரு விஷயம் புரிஞ்சுக்குங்க. அவர்கள் பார்வை தான் நம் மீது படவேண்டும். நம் பார்வை ஒன்றும் அவர்களுக்கு தேவை இல்லை. இதை உணர்ந்தால், காட்சியளித்த பொழுது உணரவே இல்லையே என்ற வருத்தம் வராது. இது தான் திருவண்ணாமலை. இங்கு இதுபோல், ஒவ்வொரு வினாடியும் ஒரு நிகழ்ச்சி நடக்கும்." என்றேன். மேலும் "அவர் என்னை பார்க்கவே இல்லையே, ஒன்றும் சொல்லவே இல்லையே. ஏதோ கையில் வந்ததை கொடுத்தேன். நமசிவாயா என்று கூறி பெற்றுக் கொண்டார். அது போதும் என்று திருப்தி ஆகிவிட்டேன். அப்படி மனதை வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் உங்களை உயர்த்தும்" என்றேன்.

என்ன தான் சொல்லியும் அவர் சமாதானம் அடையவில்லை.

"சரி! இனி மேற்கொண்டு 7 சன்னதியிலும் விளகேற்ற வேண்டாமா? இன்னும் ஒன்பதாவது விளக்கை, அருணாச்சலேஸ்வரர் முன் நம்மில் யார் ஏற்றப் போகிறார்கள் என்று தெரியவில்லையே" என்று சொன்னதும்,

"நான் தான் ஏற்றப் போகிறேன்" என்றார். அவருக்கு அப்பொழுதே ஒரு சந்தேகம். 9வது விளக்கை குறிப்பிட்டு சொல்லியதால், அங்கு ஏதேனும் நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று தீர்மானித்துத்தான் அப்படிச் சொன்னார் என்று எனக்கு புரிந்தது.

சிரித்தபடியே, "எல்லாம் அவன் செயல். நாம் யார் அதை இப்பொழுதே தீர்மானிப்பதற்கு. அதை அருணாசலம் முன்பு நிற்கும் பொழுது அவர் தீர்மானிக்கட்டும். வாருங்கள் செல்வோம்" என்று கிரிவலத்தை தொடர்ந்தோம். கிரிவலம் நிறைவு பெறுகிரவரை,  எதிர்பட்ட அனைவரையும் உற்று உற்றுப் பார்த்து நடந்து வந்தார்.  மறுபடியும் அவர் வரமாட்டாரா என்கிற ஏக்கம் இருந்ததை, உணர முடிந்தது.

ஒன்பதாவது விளக்கை அருணாச்சலேஸ்வரர் கோவில் முன்பு ஏற்றுகிற பாக்கியத்தையும் அவருக்கே கொடுத்து, மனநிறைவுடன் அன்றைய கிரிவலத்தை சந்தோஷமாக நிறைவு செய்தோம்.

அகத்தியர் அடியவர்களே! அருணாசலம் போன்ற இடங்களில், கிரிவலம் செல்லும் பொழுது விளகேற்றுகிற பாக்கியம் கிடைத்தால், கைபற்றிக் கொள்ளுங்கள், அகத்தியர் பாதத்தை.

இந்த தொகுப்பு நிறைவு பெற்றது!

7 comments:

  1. Brother Arunachalam Sairam

    Om Agatheesaya Namaha: What a great blessing, Even we had such a darshan, will write it to you later by mail. Thanks for sharing.

    ReplyDelete
  2. ஓம் நமச்சிவாய!
    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி.....

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமஹ. என் பிரபு இதை வாசித்து அறிகின்ற சந்தர்பத்தையாவது அளித்த உமது அருளுக்கு அடியேனின் கோடானு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  4. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  5. Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!
    Om Agastheesaya Namaha !!!

    ReplyDelete
  6. இறைவன் அருள் நிறைந்தவர் தாங்களும்... மற்றும் அனைத்து ஜீவராசிகளும்...

    ஓம் அருணாச்சலம் போற்றி போற்றி

    ReplyDelete