மிகச் சிறந்த அறிவாளிகள் அனைவரும் புதன் கிரகத்தின் கருணையால் பிறந்தவர்கள் என்று ஜோதிட கிரந்தம் சொல்கிறது.
படிப்பில் மேன்மை பெற, வாக்குவாதத்தில் வெற்றி பெற, சக்திகள் குறையாமல் இருக்க, எல்லா கலைகளிலும் உயர்வு பெற புதன் கருணை புரிவார்.
ஆரோக்கியம் நன்றாக அமைவதற்கும் புதன் ஒரு முக்கிய காரணம். எனவேதான் "பொன்னை விட புதன் உயர்வு" என்று எல்லோரும் பெருமையாகவும், உயர்வாகவும் புதனைப் பற்றி பேசுவார்கள்.
நவக்ரகங்களில் ஒன்றான புதன், சூரியனுக்கு வடகிழக்கே இருப்பவர். புதனுக்கு வலப்பக்கத்தில் விஷ்ணு இருப்பதால் விஷ்ணுவை பிரார்த்தனை செய்தாலும், புதனுக்கு போய்ச்சேரும்.
கிழமைகளில் நான்காவதாக இருப்பவர். "மந்திரம்" ஜெபித்து மேன்மை அடைய வேண்டுபவர், கவிதையில் புகழ்க் கொடியை நாட்ட ஆசைப்படுபவர், புதனை வணங்கி வந்தால் மிகவும் உயர்வான நிலைக்கு ஏற்றப்படுவார்கள்.
குருபகவானின் மனைவியான தாரை, ஒரு காலகட்டத்தில் சந்திரனுடைய இல்லத்திற்கு சென்ற பொழுது, சந்திரனைக் கண்டு மயங்கினாள். தன் கணவனான குரு பகவானை சிலகாலம் மறந்திருந்தாள்.
சூரியனுக்கும் ஒப்பான சிவபெருமானை நோக்கித் தவம் செய்யும் பொருட்டு, அப்பொழுது குருவும் த்யானத்தில் இருந்ததால் தாரையைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.
இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி தாரையை தன் மனைவியாகவே பாவித்து சிலகாலம் சந்திரனும் தாரையோடு இல்வாழ்க்கை வாழ்ந்து வந்தான்.
குரு பகவான் தன் த்யானம் முடிந்ததும், தாரையைத் தேடினார். தாரை, சந்திரனிடமிருந்து விடை பெற்று குருவிடம் சரண் அடைந்தாள். அச்சமயம் தாரை கருவுற்று இருந்தாள்.
குருவோடு சிலகாலம் வாழ்ந்ததும் தாரா, ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தைக்கு புதன் என்று பெயரிட்டாள். மண வாழ்க்கைக்கும் தாம்பத்திய இயல்புக்கும் மாறாக பிறந்த அந்த குழந்தை சீக்கிரமே பிறந்து விட்டது. இந்த குழந்தைக்கு உண்மையான தந்தை யார்? என்று குரு பகவானுக்கே சந்தேகம் ஏற்பட்டது.
புதன் தன்னுடைய குழந்தை தானா? என்று குரு சந்தேகப்பட்டார். அவரது சந்தேகம் நியாயமானது என்பதை அறிந்த பிரம்மதேவர் புதனுடைய உண்மையான தந்தை சந்திரன் தான் என்று குருவுக்கு உணர்த்தினார் என்பது புராண கால வரலாறு.
பிரம்ம தேவன் புதனை அழைத்து "சூரியனுக்கு அருகில் அமர்க" என்று சொன்னதால், புதனும் அவ்வாறே சூரியனுக்கு அருகே அமர்ந்தான்.
சூரியனைப் போலவே மேருமலையை வலம் வந்தான். சிவபிரானை நோக்கித் தவம் செய்து ஒன்பது கிரகங்களில் ஒன்றாக விளங்கும் பேறு பெற்றான்.
புதன் தன் கைப்பட பிரதிஷ்டை செய்த லிங்கம் ஒன்று இப்பொழுதும் காசியில் இருக்கிறது, புதன் மறுபடியும் கடும் தவம் செய்ததால், ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்தின் அதிகாரியாக நியமிக்கப்பட்டான் என்கிறது ஐயங்கார் பாகவதம்.
மாந்தர்களுக்கு அறிவை வழங்குவதால் புத்தி தாதா என்றும், அறிவை வளர்ப்பதால் புத்தி விவர்த்தனன் என்ற பெயரும் புதனுக்கு உண்டு.
தனப்ரதன், தயாகரன், தாரா புத்திர தானிய பசுப்ரதன் என்ற பெயர்களும் உண்டு.
அழகுடையவன் என்பதை காட்ட கஞ்ச நேத்திரன், மனோகரன், சௌம்யா மூர்த்தி ஆகிய பெயர்களும் புதனுக்கு உண்டு.
மற்ற கிரகங்கள் செய்கின்ற பீடையினால் மனம் நொந்து, புதனை பிரார்த்தனை செய்தால், புதன் வந்து காப்பாற்றுவான். இந்த திறமை புதனுக்கு மட்டும்தான் உண்டு. இதற்காக "க்ராகபீடாஹரன்" என்று சிறப்புப் பெயரும் புதனுக்கு உண்டு.
அதர்வண வேதம் 20வது காண்டம் 137 வது சூக்தம், இரண்டாவது மந்திரம் இந்திரனைப் பற்றியது. இந்த மந்திரத்தின் தேவதை புதன்.
தர்க்க சாஸ்த்திரத்தில் நிபுணன். வியாபாரத்தில் கெட்டிக்காரன் என்றெல்லாம் புதனைப் பற்றி சொல்வார்கள்.
புதன் பூசித்து வணங்கிய தலங்களுள் மிக முக்கியமானவை திருவெண்காடு. மற்றொன்று திருவாலவாய் எனப்படும் மதுரை.
திருவெண்காடு, வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்திலிருந்தும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்தும் செல்லலாம். இங்குள்ள மும்மூர்த்திகளில், முக்கியமானவர் அகோரமூர்த்தி.
சிவபெருமான் உருவம் கொண்டு, நின்ற கோலமாக இங்குதான் பார்க்க முடியும். ஞாயிற்றுக் கிழமை இரவில் அர்த்தயாமத்தில் அகோர மூர்த்திக்கு விசேஷ பூசை இன்றைக்கும் நடைபெறுகின்றது. சிவபெருமானுக்கு மூன்று கண்கள். அவை சூரிய, சந்திர, அக்னிக் கண்கள் எனப்படும். இதையொட்டி, இந்த கோயிலில் சோமதீர்த்தம், சூரிய தீர்த்தம், அக்னிதீர்த்தம், என்று மூன்று தீர்த்தங்கள் உண்டு.
புதன் இங்கு சிவபெருமானை வழிபட்டது போல வித்தையில் பலிதம் வேண்ட பக்தர்கள் திருவெண்காடு சென்று வருகின்றனர்.
இதேபோல் மதுரை சொக்கநாதர் கோயிலும் புத ஸ்தலம் ஆகும். இங்குள்ள பொற்தாமரை குளத்தில், சிவபெருமான் மூழ்கி, பின்னர் தான் லிங்கமாக மாறினார். புதன், சிவபெருமானை தரிசித்த ஸ்தலம் என்பதால், இன்னொரு சிறப்பும் இந்த கோயிலுக்கு உண்டு.
சூரியனுக்கு வடகிழக்கில், பாண வடிவான மண்டலத்தில் தங்கப் பிரதிமையாக வடக்கு முகமாக புதன் வீற்றிருப்பார்.
சூரியனிடம் பிரகாசத்தைப் பெற்று, பூமியிலுள்ள செடி கொடிகளை பச்சை நிறமாகும் தன்மை உள்ளவர்.
பச்சைப் பதார்த்தங்களில் ப்ரியமுள்ளவர். அவருக்கு பச்சை பயிற்றை நிவேதனமாக கொடுத்தால் ப்ரீதி அடைவார்.
ஜோதிடத்தில் புதனை பற்றி உயர்வாகவே கூறியிருக்கிறது. கூர்ந்து கவனித்தால், "ஞாழல் மொட்டுப் போன்ற ஒளியுடையவன். உருவத்தில், அழகில் உவமையற்றவன். கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு எல்லாவற்றிற்கும் மூல கர்த்தா இவனே. நாடகம், நடனம், புத்தக கலை ஆகியவற்றின் நாயகன் புதன் தான். அறுபத்துநான்கு கலைக்கும் அதிபதி."
உடலில் ஏற்படும் நரம்பு சம்பந்தமான அனைத்துக்கும் முழுக் காரணமானவன்.
பசும்பால் நிறத்தோன், பல்சுவைப் பிரியன். வார சரீரணி, ராஜச குணமுடையவன், ரத்தினத்தில் மரகதமாக இருப்பவன். தோட்டக்கலைக்கு அதிபதி.
பஞ்ச பூதங்களில் மண் இவர். வடக்கு திசைக்குரியவன். ஜாதகத்தில் பாவக் கிரகங்களோடு சேர்ந்திருந்தால், கெடுதலையும், சுபக் கிரகங்களோடு சேர்ந்தால் சுப பலன்களையும் தருபவன்.
கிரகங்களில் அலி. ஜோதிடம் இவனுக்கு மிகவும் விசேஷமானது. ஜோதிடர்கள் சொல்வது பலிக்க வேண்டுமானால், வாக்கு சுத்தியை தருபவன். குதிரை வாகனத்தோடு வலம் வருபவன்.
மிதுனம், கன்னி ராசிக்கு அதிபதி. மீனம் நீச வீடு, கன்னி உச்ச வீடு. சூரியன், சுக்கிரன் இருவரும் இவனுக்கு நண்பர்கள்.
குரு, சனி, செவ்வாய் சமமானவர்கள். சந்திரன் பகைவன். உலோகத்தில் பித்தளை, நான்காவது வருணத்தோன்.
ஆயில்யம், கேட்டை, ரேவதி என்ற மூன்று நட்சத்திரங்களின் நாயகன்.
ஜோதிட சாஸ்த்திரத்தில் எண் "5"ஐ இவனுக்குரியது என்பார்கள்.
குழந்தைகள், பேச தொடங்கும் காலங்களில், பச்சை நிறக் கற்களை காதில் அணிவிக்க, மழலை விலகி, திருத்தமாக குழந்தைகளை பேச வைக்க, இவன் அருளுவான்.
சீரும் சிறப்புமாக காணப்படுபவன் என்று பெரியதாக விவரித்து எழுதப்பட்டிருக்கிறது.
கஜ த்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீ மஹி
தன்னோ புத ப்ரசோதயாத்
என்கிற புதனின் காயத்ரி மந்திரத்தை சொல்லிவருவோருக்கு அறிவும், ஆற்றலும், ஞானமும் கிடைக்கும். சபையில் பெருமதிப்போடு வாழலாம்.
சகல சாஸ்த்திரத்தில் ஞானம் பெற சௌந்தர்யாலஹரியில் கூறியுள்ள கீழ் கண்ட ஸ்லோகத்தை பாராயணம் பண்ணலாம்.
சவித்ரிபீர் வாசாம் சசிமணி சிலாபங்க ருசிபி
வசிந் யாத் யாபீஸ் த்வாம் சஹ ஜனனி ஸந்சிந்த தயதிய!
சகர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கி சுபகை:
வசோபிர் வாக்தேவி வதன கமலாமோத மதுரை.
புதனுக்கு நவக்ரக சாந்திக்காக ராமர் அல்லது விஷ்ணு அவதார் மூர்த்திகளை பூசித்தாலும் பச்சைப் பட்டு, மரகதம் இவைகளை அணிந்தாலும், ஸ்வர்ண தானம் அல்லது பாசிப்பயறு தானம் செய்தாலும் தோஷ நிவர்த்தியாகும்.
புதனுக்குரிய நிறம் - பச்சை
புதனுக்குரிய கல் - மரகதம்
புதனுக்குரிய தேவதை - விஷ்ணு
புதனுக்குரிய அங்கம் - நரம்பு
புதன் வாக்கிற்கு அதிபதி. .
சித்தன் அருள்................... தொடரும்!
Om Agastheesaya Namaha !!!
ReplyDeleteOm Agastheesaya Namaha !!!
Om Agastheesaya Namaha !!!
Om Sree Agasthisaya Namaha
ReplyDelete