​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 5 February 2015

அருணாச்சல அனுபவம் - 1


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"அருணாசலம்" என்கிற நாமத்தை ​நினைக்கும் பொழுதும், உச்சரிக்கும் பொழுதும் எதோ ஒரு இனம் புரியாத ஒரு அதிர்வு உள்ளே பரவுவதை எப்பொழுதும் உணர்ந்துள்ளேன். ஒரு நண்பனிடம், சொல்லவேண்டிய விஷயங்களை கொட்டித் தீர்த்தவுடன் நம்முள் விரியும் நிம்மதி போல், உச்சரித்த, நினைத்த நேரத்திலேயே, அமைதி கிடைக்கும். அதனால், அருணாசலம் என்கிற திருவண்ணாமலை என்னை பல முறை கவர்ந்து இழுத்துள்ளது என்று சொல்வதுதான் சரி.

போன அனுபவத்தில் சொன்னது போல், அருணாசலத்தில், ஒவ்வொரு வினாடியும் ஏதேனும் ஒரு அதிசய நிகழ்வு நடந்து கொண்டேதான் இருக்கும். நம் மனித சக்திக்கு அப்பால் நடக்கிற விஷயங்கள் எல்லாமே நமக்கு அதிசயம் தானே! அதுபோல் மேலும் நடக்கவேண்டும் என்று மனம் விரும்பும் என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டின் வடக்கு பகுதிக்கு ஏதேனும் யாத்திரையாக சென்றால், திரும்பி வரும் வழியில், திருவண்ணாமலைக்கு சென்று அப்பனை தரிசித்து, நேரம் இருந்தால் ஒரு கிரிவலமும் செய்தவிட்டு வருவதை ஒரு வழக்கமாக கொண்டிருந்தேன்.

அப்படி ஒரு முறை சென்னையில் உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசியம் வந்தது. திரும்பி வரும் வழியில் திருவண்ணாமலையில் இறங்கினேன். எங்கோ சாப்பிட்டது ஒத்துக் கொள்ளவில்லை, உடலை வருத்தியது. அதை பொருட்படுத்தாது ஒரு நாள் இருந்து கிரிவலம் செய்துவிட்டு செல்லலாம் என்று தீர்மானித்தேன்.

திருவண்ணாமலையில் கால் பதித்த நேரம் மாலை 5.30. தங்கும் விடுதியில் ஒரு அறை எடுத்து, உடல் சுத்தம் செய்து கொண்டு அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க சென்றேன். தனிமை எனக்கு மிக பிடித்தமான விஷயம். பெரிய கோபுரத்தில் உள்ள கணபதியை பிரார்த்தித்துவிட்டு, முருகரை தரிசனம் செய்து அருணாச்சலேஸ்வரர் சன்னதியை நோக்கி நடந்தேன்.

பொதுவாகவே, கூட்டமும், சத்தமும் நிறைந்திருக்கும் அந்தக் கோவிலில் அன்று ஒரே நிசப்தம். அங்கங்கே, ஓரிருவர் அமர்ந்திருந்தனர். இரண்டே நிமிடத்தில் அருணாசலேச்வாரரின் முன் போய் நின்றேன். வெளியே வந்த பூசாரி, கூட்டம் அதிகம் இல்லாததால், என்னை அழைத்து உள்ளே கொண்டு நிறுத்தினார்.

எனக்கும், அருணாசலேஸ்வரருக்கும் ஒரு மூன்று அடி தான் தூரம். அனுமதித்தால், அங்கேயே அவர் பாதத்தில் விழுந்துவிடுவேன் என்கிற மன நிலை. இருந்தும் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு, பூசாரி காட்டிய தீபாராதனையை ஏற்று வாங்கிக் கொண்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டேன்.

என்ன வேண்டிக் கொள்ள? என்ன கேட்க? என்று மனம் எண்ணியது. அருளியது எல்லாமே நிறைவாக இருப்பதை உணர்ந்த மனது, வேறு ஏதும் வேண்டவில்லை. இருப்பினும், ஐயனை கண்ட பொழுதில், பேச வேண்டுமே! மனதுள் பிரார்த்தித்துக் கொண்டேன்.

"இறைவா! நாளை விடியற்காலையில் உன்னை கிரிவலம் செய்ய ஆசைபடுகிறேன். உடல் பாதிப்பை நிவர்த்தி செய்து, கூட துணை இருந்து, கிரிவலத்தை நல்லபடியாக நடத்தி, வாங்கிக் கொள்ளுங்கள்" என்றேன். வேறு எதுவும் தோன்றவில்லை.

வெளியே வந்து மூன்றுமுறை பிரகாரத்தில் பிரதட்சிணம் செய்துவிட்டு, உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு வந்தேன். அங்கும் நல்ல தரிசனம், கூட்டமே இல்லை.

என்னவாயிற்று, இன்று எல்லாமே சுலபமாக அமைத்துக் கொடுக்கிறார்கள். எப்பொழுதும் தரிசனத்துக்கு 45 நிமிடங்களாவது ஆகிற அளவுக்கு கூட்டம் இருக்கும். இன்று எண்ணிப்பார்த்தால், அரிதாகவே பக்தர்கள் இருக்கிறார்கள். ஹ்ம்ம்! என்னவோ நடக்கிறது, ஆனால் என்னவென்று புரியவில்லை.

அம்மையின் அருளோடு வெளியே வந்து கோவிலின் ஈசான மூலையில் இருக்கும் பஞ்சலிங்க சன்னதிக்கு வந்து அங்கிருக்கும் ஆகாய லிங்கத்தின் முன் அமர்ந்து சற்று நேரம் த்யானத்தில் அமர்ந்தேன். மனம் இலகுவாக படிந்தது. தூரத்தில் சன்னமாக யாரோ "நமசிவாய" என ஜெபம் செய்வது கேட்டது. நானோ, என் முன் இருக்கும் லிங்கத்தை அப்படியே உள்வாங்கும் எண்ணத்தில் அமர்ந்தேன். 30 நிமிட த்யானத்துக்குப் பின், புற உலக உணர்வுக்கு வந்தேன். மனம் மிகவும் அமைதியாக மாறிவிட்டது.

"இது ஒரு நல்ல தொடக்கம்" என்று என் மனம் சொல்லியது.

உணவருந்தி, காலை 3 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு, உறங்கத் தயாரானேன்.

உறங்கும் முன் எப்பொழுதுமே பிரார்த்தித்துவிட்டு கிடப்பது என் பழக்கம். அன்றும் "அருணாச்சலா! சரியான நேரத்துக்கு எழுப்பி விட்டுவிடு" என்று கூறிவிட்டு உறங்கினேன்.

உறக்கத்தில், கனவில், அருணாச்சலத்தை சுற்றி எங்கெல்லாமோ நுழைந்து, அலைகிற நிலைதான் தென்பட்டது. என்னென்னவோ விதவிதமான காட்சிகள்.

சரியாக காலை 2.59 மணிக்கு, யாரோ தொடையில் தட்டி "எழுந்திருடா!" என்று உணர்த்துவது போல் உணர்ந்தேன். நேரம் என்னவாயிற்று என்று பார்க்கவும், முன்னரே நான் வைத்திருந்த அலாரம் 3 மணி என்றது. ஹ்ம்ம். சொல்லிட்டுப் படுத்தால், சரியான நேரத்துக்கு எழுப்பிவிடுவார் போல இருக்கு, என்று அன்று உணர்ந்தேன்.

சற்று நேரம் அமர்ந்து த்யானத்தில் ஈடுபட்டேன். குளித்தபின், கிரிவலம் செல்ல அறையை விட்டு கிளம்பினேன்.

வெளியே தை மாதத்து பனி கடுமையாக தாக்கியது. இதை நினைத்துக் கொண்டிருந்தால் கிரிவலம் போக முடியாது என்று தீர்மானித்து, வருவது வரட்டும் என பெரிய கோபுரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். தெருவில் யாருமே இல்லை. ஒன்றிரண்டு பைரவர்கள் அங்கும் இங்கும் நின்று கவனித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே ஒருசிலர் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

கோவில் வாசலை அடைந்த உடன் ஆச்சரியப் பட்டேன். உள்ளே செல்லும் வழி எங்கும் சாதுக்கள் தலை வரை போர்த்திக் கொண்டு உறங்கினர். நடுவே நடந்து செல்ல ஒரு வழி. கோபுர விநாயகருக்கு முன் இருக்கும் கதவு வரை செல்லலாம். மற்றபடி கதவு பூட்டியே இருந்தது.

கதவின் அருகில் சென்று, கண் மூடி த்யானித்து, என் பிரார்த்தனையை மனத்தால் இறைவனிடம் வைத்தேன்.

"அய்யனே! இது இன்று கிரிவலம் செய்யச் செல்கிறது. உடல் நிலை பாதித்திருந்தாலும், எல்லாவற்றையும் நீ பார்த்துக் கொள்வாய் என்ற நம்பிக்கையில் இறங்கியிருக்கிறது. எங்கும் மிகுந்த தனிமை காணப்படுகிறது. அரவமே இல்லை. தனியாக கிரிவலம் இதுவே முதல் முறை. உன் அருள் வேண்டும், அருகாமை வேண்டும், வழி நடத்தல் வேண்டும். உடனிருக்க வேண்டும். மனம் ஒன்றி உன்னிலே இருந்து கிரிவலம் பண்ணவேண்டும்!

இந்த கிரிவலத்தை ஏற்றுக் கொண்டு, யாரெல்லாம் தன் பிரச்சினைகளை இதனிடம் சொன்னார்களோ, அதை எல்லாம் உடனே நிவர்த்தி செய்து கொடு. எல்லோரும் நன்றாக வாழ்ந்திட அருள்புரிவாயாக" என்றேன்.

எங்கும் அமைதி நீடித்தது. ஒரு வினாடிக்குப் பின் .............

பெரிய கோபுரக் கதவுக்குப் பின்னால் இருந்து என் பிரார்த்தனைக்கு பதில், தெளிவான தமிழில் செய்யுள் வடிவில் வந்தது.

தொடரும்!

2 comments:

  1. Arunachalam Ayya, you are truly blessed. cannot wait to read your next posting and what Cheyyul you heard. Please accept my humble pranams.

    ReplyDelete
  2. Brother Arunachalam,

    ஓம் அகத்தீசாய நம

    தங்களுடன் கிரிவலம் சுற்றி வர காத்திருப்போம்

    நன்றி சாய்ராம்

    ReplyDelete