​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 14 February 2015

முருகர் அருளிய அமுது - 2


மிக மிக அருமையான அபிஷேகம், தீபாராதனை கண்டு வெளியே வந்தோம்.  அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்தவர் என்னிடம் வந்து

"நீங்க ஜோசியரா?" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே "இல்லை" என்றேன்.

"அப்ப உபாசகரா?" என்றார்.

"தெரியவில்லை. பூசை செய்வேன்" என்று சுருக்கமாக பதிலளித்தேன்.

"உங்க மாலைல இருக்கிற லிங்கம் ரசமணியா?" என்று தொட்டு பார்க்க கையை நீட்டினார்.

நான் எனது வலது கையை மார்புக்கு நேராக வைத்து, தடுத்து "இல்லை" என்றேன்.

என் செயலை அவர் எதிர் பார்க்கவில்லை போலும். சற்று அதிர்ந்துதான் போனார்.

நாங்கள் கோவில் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

"சரி கிளம்பலாம், எல்லாம் நல்லபடியாக முருகர் நடத்தி கொடுத்துவிட்டாரே" என்று நினைத்து அவருக்கு நன்றி கூறி விடை பெற முயற்சித்தவுடன், ஏற்பாடு செய்தவர் வேகமாக எங்களிடம் வந்தார்.

"ஒரு நிமிஷம்!" என்றார்.

"சொல்லுங்கோ!" என்றேன்.

"நீங்க எல்லோரும் அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிடணுமே!" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே " என்ன சொல்லறீங்க! இப்ப மணி 7தான் ஆகியுள்ளது. இப்பப் போய் எப்படி உணவருந்துவது? வேறு யாரையாவது தேடுங்கள்! கிடைப்பார்கள். அவர்களுக்கு கொடுங்கள்! அழைத்ததற்கு மிக்க நன்றி" என்றேன்.

"இல்லை! வேறு யாரையும் கூப்பிட முடியாது! உங்கள மாதிரி ஆட்கள் தான் வேண்டும்" என்றார்.

நான் அவரை கூர்ந்து கவனித்தேன். பிறகு கேட்டேன் "என்ன சொல்லறீங்க? எங்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்க நினைக்கிற எந்த மாதிரியான ஆட்களும் இல்லை நாங்கள் அனைவரும்" என்றேன்.

"அதில்லை. ஒரு விஷயத்தை சொல்கிறேன். அப்பொழுது புரியும்" என்றார்.

"சரி! சொல்லுங்க!" என்று காத்திருந்தேன்.

"இந்த கோவில்ல ஒரு முறை இருக்கிறது. அதாவது, நான்கு வேதங்களுக்கு சாப்பாடு போடுவதாக வேண்டிக் கொண்டு, நான்கு ஆண்களுக்கு சாப்பாடு போட்டுவிட்டுத்தான், முருகருக்கு தினமும் காலையில் நிவேதனம் போடலாம்! இது அவரே வகுத்துக் கொடுத்த விதி. இன்று வேறு யாரையும் தேடிப்போனால் இன்னும் ரொம்ப நேரம் ஆகும். நீங்கள் மூன்று பேர்கள் இருக்கிறீர்கள், எங்களில் ஒருவரும் உங்களுடன் அமர்ந்து நான்கு பேர்களாக சாப்பிட்டால், முருகனுக்கு நிவேதனம் சீக்கிரமே கொடுத்துவிடலாம். அதனால் தான் உங்களை நிர்பந்திக்கிறேன்! நீங்கள் வேண்டுமானால் பாருங்கள் என்ன நடக்கிறது என்று" என்றார்.

நான் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டேன். சிறு வயது முதல், எல்லா கோவில்களிலும், வீட்டிலும், முதலில் இறைவனுக்கு படைத்தபின்தான் நமக்கு ஏதேனும் உணவு படைக்கப்படும். இங்கென்ன இப்படி ஒரு வித்யாசமான நிலைமை.

என் நண்பர்களை பார்த்து "என்ன சொல்கிறீர்கள்?" என்றேன்.

அவர்கள் உடனே சம்மதித்தார்கள்.

"சரி! வாருங்கள் போகலாம்" என்றேன் அவரிடம்.

எனக்குள், என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்ற எண்ணம்.

எங்களை அழைத்துக் கொண்டு சென்றவர், முருகர் சன்னதிக்கு வெளியே, ஆனால் பக்கத்தில் இருக்கும் ஒரு மண்டபத்துக்கு சென்றார்.

அங்கு நான்கு புறமும் துணியால் மறைக்கப் பட்டிருந்தது. ஒரு சிறிய இடைவெளி இருந்ததை காட்டி,

"அது வழி உள்ளே போய் அமர்ந்து கொள்ளுங்கள். நான் இப்பொழுது வருகிறேன்" என்று சென்றார்.

நாங்கள் மூன்று பேரும் (ஆண்கள் மட்டும்) உள்ளே புகுந்தோம்.

உள்ளே நான்கு நுனி வாழை இலை போடப்பட்டு, அமர, நான்கு பலகை ஆசனமும் இருந்தது. ஒரே ஆச்சரியத்துடன், என்ன நடக்கிறது என்று புரியாமல் ஒருவருகொருவரை பார்த்தபடி அமர்ந்தோம்.

சற்று நேரத்தில், முழு நிறைவான சாப்பாடு பரிமாறப்பட்டது. நான் எப்பொழுதுமே இறைவனை வேண்டிக் கொண்டபின்தான் உணவருந்துவது பழக்கம். ஒரு நிமிட த்யானத்தில் அமர, ஏற்ப்பாடு செய்தவர் ஓடி வந்தார்.

"சாப்பாட்டை இப்ப சாப்பிட தொடங்காதீங்க! கொஞ்சம் பொறுத்துக்குங்க.  இப்ப தலைமை பூசாரி வருவார். அதற்குப் பின்தான் சாப்பிட வேண்டும்" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே "அதற்கென்ன! காத்திருக்கிறோம்" என்றேன்.

சற்று நேரத்தில் பூசாரி வந்தார். ஒரு இலையில் பூ, ஒரு பாத்திரத்தில் தீர்த்தம்.

பூவையும், தீர்த்தத்தையும், சேர்த்து எடுத்துக் கொண்டு, மனதுள் மந்திரம் ஜெபித்து, எல்லோரையும் கை நீட்டச்சொல்லி, தந்து,  அன்னத்தின் மேல் தெளிக்கச் சொன்னார். அவர் கூறியது போல் செய்துவிட்டு காத்திருந்தோம்.

"இனிமேல் நீங்கள் சாப்பிடலாம்" என்றார்.

மெதுவாக உணவருந்த தொடங்கினோம். மிக விமர்சையான சாப்பாடு. எங்கள் அனைவருக்குள்ளும் ஆனந்தம், ஆச்சரியம்.

"இப்ப பாருங்க என்ன நடக்கிறது என்று. கோவில் உள்ளே பெரிய மணி அடித்து, முருகருக்கு நிவேதனம் செய்வார் பூசாரி" என்றார், இவை அத்தனையும் ஏற்பாடு செய்தவர்.

அவர் சொன்னது போல், நாங்கள் சாப்பிட தொடங்கிய பின், கோவில் உள்ளே மணி அடிக்கப்பட்டு, இறைவனுக்கு நிவேதனம் நடந்தது.

எங்கள் அனைவருக்கும், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காக முருகர் எங்களை தேர்வு செய்தார்? எதற்கு இந்த சாப்பாட்டை அருளினார்? இது என்ன செய்யப் போகிறது? என்று எத்தனையோ கேள்விகள். இவற்றிற்கு, இன்றுவரை பதில் இல்லை.

மிக அருமையான, சுவை நிறைந்த சாப்பாடு. எங்களுடன் வந்த என் நண்பரின் மனைவி வெளியே நின்று கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டு முடித்தவுடன், மிச்சம் இருந்த கொஞ்சம் சாதத்தை, சாம்பார் விட்டு கலக்கி "வந்ததுக்கு, நீங்களும் முருகரின் கொஞ்சம் சாப்பாட்டை சாப்பிடுங்கள்" என்று நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் அவரிடம் கொடுத்தார்.

அவர் மனைவிக்கும் மிகுந்த சந்தோஷம். கிடைத்த அருளை விட்டுவிடக்கூடாது என்று, வெளியே நின்றபடி அதை சாப்பிட்டு முடித்தார்.

சாப்பாட்டை முடித்தபின் ஏற்பாடு செய்தவரிடம் நன்றியை கூறிவிட்டு, திகைப்புடன் வெளியே வந்தோம்.

ஒருவருக்கும் இப்படி ஏன் நடந்தது என்று புரியவில்லை. சரி! இறை விளையாடல்களை புரிந்து கொள்வது கடினம் என்று தீர்மானித்து விடை பெற்றோம்.

ஆனால், இறை விளையாடல் இத்துடன் நிற்கவில்லை. ஊருக்கு சென்ற நண்பர், தன் நண்பர்களிடம் கூற, இப்படி எல்லாம் நடக்குமா? என்ற கேள்விதான் எல்லோருக்கும். அவரில் ஒருவர், திருச்செந்தூர் செல்கிற வாய்ப்பு கிடைத்ததும் அங்கு சென்று விசாரித்திருக்கிறார். கிடைத்த பதில் எதிர் மறையாக இருந்தது.

"என்ன இது? சுவாமிக்கு முன் மனிதர்களுக்கு சாப்பாடா? அப்படி எல்லாம் இங்கு ஒரு முறையே கிடையாது. யாரோ உங்கள் காதில் நல்ல பூ சுற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் இங்கு நடக்காது" என்று விரட்டி விட்டனர்.

இதை, அந்த நண்பர் திரும்பி வந்து சொன்ன பொழுது, என் நண்பருக்கு ஆச்சரியம் இன்னும் கூடிவிட்டது என்று கூறவும் வேண்டுமோ?

நாங்கள் எல்லோருமே கதை கட்டிவிட்டோம் என்று தான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நடந்தது என்ன என்று உணர்ந்தது, நம்பியது நாங்கள் நான்கு பேர் தான்.

இந்த தொகுப்பு இத்துடன் நிறைவு பெற்றது!

1 comment:

  1. Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!

    ReplyDelete