​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 February 2015

வேலவனின் அருள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபகாலமாக, அகத்தியப் பெருமான், ஓதியப்பர், அருணாச்சலேஸ்வரர் என பல தொகுப்புகளை உங்கள் முன் தந்திடக் காரணமே, நிறைய நல்ல செய்திகள் பல, தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக, அனைவரும் இறை, சித்தர் அடியவர்களாக ஆகிட ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், அடியேனிடம் தெரிவிக்கப்பட்ட, வழங்கப்பட்ட  விஷயங்களை உடனேயே பகிர்ந்து கொண்டுவிடுகிறேன். ஒரு தகப்பனுக்கு தன் குழந்தை மீது இருக்கும் கனிவு போன்றுதான் இந்த பகிர்தலும்.

"வேல் மாறல்" பற்றிய ஒரு தொகுப்பை முன்னரே சித்தன் அருளில் பதிவு செய்திருந்தேன். அந்த "வேல்" ஒருவர் வாழ்வில் நிகழ்த்திய சந்தோஷமான நிகழ்ச்சியை, ஒரு அகத்தியர் அடியவர், என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் அனுமதியுடன், நன்றியை அவருக்கு கூறிவிட்டு, அந்த நிகழ்ச்சியை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஒருவரது அனுபவம், இன்னொருவருக்கு பாடமாக இருக்கும், நிறைய வேளை, ஊக்கமாக இருக்கும், என்கிற எண்ணத்தில், அவர் சொல்வதை பார்ப்போம்.

வேல் மாறல் பாராயணம்  நிகழ்த்திய அற்புதம்!

அற்புதம் என்பது அழகான வார்த்தை. இப்பிரபஞ்சத்தில் கணத்துக்கு கணம் நிகழ்ந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு நிகழ்வுமே அற்புதம்தான். இறைவனது/சித்தர்களது பார்வையில் எல்லாமும் அற்புதமே! மனிதன் தன் மனதில் ஆசைப்படும் எண்ணம் நிறைவேறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அது நடக்கும்போது அற்புதம் என்றும் நிறைவேறாதபோது கடவுள் கண் திறந்து பார்க்க மறுக்கிறார் என்றும் கூறிக்கொள்ளுகிறான். ஆனால் இரண்டிற்குமே நம் கர்மவினை தான் பொறுப்பு என்பதை நாம் உணர்வதில்லை.

குருநாதரின் அருள்வாக்கின்படி ஈன்றவர்களும் ஒரு ஆத்மா அவர்களது பிள்ளைகளும் ஒரு ஆத்மா, அவரவர்களது கர்மவினைகளின்படி அவரவர்களது வாழ்வில் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். இதில் ஒருவரைகுறித்து மற்றவர் கவலைப்பட என்ன இருக்கிறது? இது சாதாரணமாக இருக்கும்போது புரிந்தாலும் எல்லா நேரங்களிலும் மனம் அமைதியடைவதில்லை. அதுவும் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் அந்த ஆத்மாவிற்கு உடல் கிடைக்க காரணமாக இருந்த பெற்றவர்களுக்கு, பெற்ற கடமைக்காக கவலைப்படாமலோ, பிரார்த்தனை செய்யாமலோ இருக்கமுடிவதில்லை. 

என்னை பொறுத்தவரை கவலைகளும் பிரச்சனைகளும்தான் என்னை இறைவனுடன் எப்போழுதும் இணைத்திருக்கிறது என்று நம்புவதால், பிரார்த்தனை செய்ய கவலைகளை காரணமாக்கி, அவை தீருகிறதோ இல்லையோ மனமொன்றி பிராத்திக்க வழி ஏற்பட்டது என்று மகிழ்வேன்.

எனது இரண்டாவது மகன் முன்னணி கல்லூரிகளில் ஒன்றில் இஞ்சினீயரிங் நான்காம் ஆண்டு படிக்கிறான். முதலாம் ஆண்டு பாடம் ஒன்றை நான்கு முறை எழுதியும் பாஸ் ஆகாமல் மூன்றாம் ஆண்டு பாடம் ஒன்றையும் வைத்துக்கொண்டு, சென்ற டிசம்பரில் மொத்தம் எட்டு பாடம் மற்றும் இரண்டு செய்முறை பாடம் இவற்றை பாஸ் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்தான். இது தவிர வேலைவாய்ப்பு வளாகத் தேர்வும்  சேர்ந்துகொண்டது. முன்னணி நிறுவனங்கள் என் மகனை வளாகத்தேர்வு எழுத அனுமதிக்காத நிலையில், உடன் படிப்பவர்கள் வேலை கிடைத்த சந்தோஷத்தில் இருக்க அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவேண்டியதில்லை. நான்கு ஆண்டுகளாக மனதாலும் உடல் உபாதையாலும் மிகுந்த சிரமங்களை அனுபவித்துவரும் அவனுக்கு, ராகு தசை நடக்க, ஏழரை சனியின் பிடியில் இருந்த அவனுக்கு எனது ஆறுதல் வார்த்தைகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஏற்கனவே முதல் மகனை வெளிநாடு அனுப்பி படிக்கவைக்க ஏற்பட்ட மிகப்பெரிய கடன் சுமையினால் தள்ளாடிகொண்டிருந்த எனக்கும் என் மனைவிக்கும் இது மிகப்பெரிய கவலையாக வாட்டிகொண்டிருந்தது. 

கடந்த  25 அக்டோபர் 2014 அன்று “ஒரு செய்தி > ஓதியப்பர் உங்களுக்கு தந்த பரிசு!” என்ற தலைப்பில் “வேல் மாறல்” பற்றிய சித்தனருள் பதிவில் கடைசியாக இருந்த  குறிப்பு:- “எதனால், இது இப்போது தெரிவிக்கப்பட்டது என்று புரியவில்லை. உங்களில் யாரோ ஒருவருக்காக கூட இருக்கலாம். இதை கேட்பவரின் வேண்டுதலுக்கு ஏற்ப அந்த ஓதியப்பரே நேரடியாக இறங்கி வந்து அருள் புரிய வேண்டி தந்தார் என்று என் மனம் சொல்கிறது”.

எனக்கு உள்ளுக்குள் ஒரு உணர்வு, இது நமக்காகத்தானோ என்று. ஏனன்றால் குருநாதர் எனது வாழ்வியல் தேவைக்கேற்ப அவ்வப்போது சில மந்திரங்களை உரு ஏற்றும் எண்ணத்தை அல்லது யார் மூலமாகவாவது உபதேசத்தை தந்தருள்வார். அதன் படி சித்தனருள் மூலமாக கிடைத்த வேல் மாறலை  அருணகிரிநாதரின் தமிழை உச்சரிக்க சிறிது நாட்கள் படித்து பழக வேண்டியிருந்தது. வேல் மாறல் பற்றி தேடியதில்  சென்னை நங்கநல்லூர் பொங்கி மடத்தில் வேல் மாறல் எந்திர படத்துடன் கூடிய புத்தகம் கிடைக்கும் என்று அறிந்து, நண்பர் ஒருவரை வாங்கிவருமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் ஒன்றுக்கு இரண்டாக வாங்கிவந்து தந்தார். அந்த புத்தகம் என் கைக்குக்கிடைத்த அரைமணி நேரத்தில், ஒதிமலையில் சேவை செய்யும் அன்பர் ஒருவர் என்னை தொடர்புகொண்டு நாளை தான் சென்னை வருவதாகவும் என் வீட்டிற்க்கு வருவதாகவும் சொன்னார். புத்தகம் கிடைத்த அன்று நவம்பர் 19ம் தேதி மாலை தடைகள் வராமல் தொடர்ந்து பாராயணம் செய்ய திருவருள் வேண்டி குருநாதரிடமும் மூத்தோனிடமும்  பிரார்த்தனை செய்து, “எனது மகன் நல்லபடியாக தேர்வு எழுதி அனைத்து பாடங்களையும் பாஸ் செய்யவேண்டும்” என்ற ஒரே ஒரு கோரிக்கையுடன் பாராயணம் செய்ய ஆரம்பித்தேன். எனக்கு முன்பே எனது துணைவியார் ஆரம்பித்துவிட்டார் அதே கோரிக்கையுடன். 

அடுத்த நாள் ஒதிமலை அன்பர் வீட்டிற்க்கு வந்தார். சில விஷயங்கள் நடந்து முடிந்த பிறகு, அதற்குமுன் நடந்த சம்பவங்கள் எதனால் எதற்காக நடந்தது என்று நமக்குப்புரியவரும். ஆனால் எனக்கு சில சம்பவங்கள் நடக்கும்போதே இது எதற்காக என்று உள்ளுணர்வு தோன்றும். முடிவைப்பற்றிய சூசகமான தகவல்கிடைத்துவிடும். அப்படித்தான், ஒதிமலை அன்பர் என் வீட்டிற்க்கு வந்தது ஓதியப்பரே என் கோரிக்கை பிராத்தனையை ஆரம்பிக்க ஆசிர்வதித்ததாக எனக்குப்பட்டது. அந்த அன்பருக்கு  வேல் மாறல் புத்தகம் ஒன்றை கொடுத்தேன். (அவரும் ஒரு கோரிக்கையுடன் பிரார்த்தனை செய்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்). எங்கள் பிரார்த்தனை தொடர்ந்தது. டிசம்பர் 24ம் தேதியுடன் பரிட்சைகள் முடிந்தது. பரிட்சைமுடிவு தெரியும்வரை பிராத்தனையை செய்வதென்று முடிவுசெய்து தொடர்ந்தோம்.

ஜனவரி கடைசி வாரத்தில் பரிட்சை முடிவு எப்பொழுது வரும் என்று தெரியவில்லையே முடிவு என்னவாகும் புரியவில்லையே என்று குழம்பிக்கொண்டிருக்கும்போது, 22ம் தேதி அகத்தியர் தரிசனம் பெற்று அவர் ஆணையின்படி தேவி ப்ரித்யங்கரா யாகம் செய்துவரும் நண்பர் ஒருவர் என் இல்லம் வந்தார். அவர் வந்தது சுப சகுனமாகப்பட்டது. அடுத்தநாள் பகல் ஒரு மணிக்கு, அலுவலகத்தில் ஒருவர் அண்ணா யூனிவெர்சிட்டி ரிசல்ட் வந்துவிட்டதாம், என் உறவினர் மகன் ரிசல்ட் பார்த்து சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார். என் மகன் தேர்வுஎண் கைவசம் இல்லாததால் துணைவியாரிடம் தொலைபேசியில் கேட்க அவருக்கும் பதற்றம் பற்றிக்கொண்டது. நெஞ்சு துடிக்க ஆவல் கடலாய் பெருக என் மகனின் ரிசல்ட்ஐ தேடினேன். சோதனையாக இன்டர்நெட்டில் அந்த பக்கம் கிடைக்கவேயில்லை. மாலை 4 மணிவரை கிடைக்காததால் வெறுத்து ஒரு வேலையும் ஓடாத நிலையில், திருப்பதி சென்றுவந்த அலுவலக நண்பர் ஒருவர் அருட்ப்ரசாதமான லட்டு கொண்டுவந்து தந்தார். நான் இருந்த மனநிலையில், அந்த பிரசாதம் என்னைத்தேடி வந்தவுடன் அதுவரை இருந்த மனபாரம் சட்டென்று வடிந்தது. கண்ணில் நீர் துளித்தது. ஏழுமலையானை நினைத்து வேண்டி அதை சாப்பிட்டேன். மாலை 6 மணிக்கு வீடு வந்து பார்த்தும் நெட் கிடைக்கவில்லை. மனைவிக்கு ஆறுதல் சொல்லி நம்பிக்கையூட்டி பிராத்தனைக்கு அமர்ந்தேன். 6.30க்கு எனது மகன் கல்லூரியிலிருந்து வந்தான். நாங்கள் ஒன்றும் சொல்லாமல், அவன் ஆசுவசப்படுத்திக்கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தபோது, அவன் சர்வ சாதாரணமாக பையிலிருந்து ஒரு பேப்பர் ஐ எடுத்து “ஆல் பாஸ்” என்று சொன்ன அந்த கணம், எங்கள் இருவருக்கும் ஆனந்தக்கண்ணீரை அடக்கமுடியாமல் போனது.

பிறகென்ன முழு சந்தோஷத்துடன் மன நிறைவுடன் அன்று பிரார்த்தனை முடிந்தது. கோரிக்கை நிறைவேறினாலும் வேல் மாறல் பாராயணத்தை தொடரவேண்டும் என்று முடிவுசெய்தோம். ஆனால் அடுத்தநாள் காலை ஒரு அசுப செய்தி வந்து பத்து நாட்களுக்கு நாங்கள் எதுவும் செய்யமுடியாமல் போனது. பிரார்த்தனை ஆரம்பித்த நாள் முதல், சரியாக பரிட்சை முடிவு தெரியும் நாள் வரை எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேல் மாறல்  பாராயணம் செய்ய அனுக்ரகம் செய்து, கோரிக்கையையும் நிறைவேற்றி தந்த ஓதியப்பரின் கருணையை என்னவென்று சொல்வது.

ஒரு புது கோரிக்கையுடன் அடுத்த சுற்று பாராயணம் ஆரம்பித்தாயிற்று என்று சொல்லவும் வேண்டுமோ?

ஓம் சரவணபவாய நமஹ!

3 comments:

  1. Such a wonderful experience of this person who read the Vel maraal. it was only yesterday that I read the Vel Maraal posting of october 25th in siththan arul and I wanted to hear this beautiful prayer and i downloaded it from you tube and when I heard it i became instantly attracted to the prayer because it was so beautiful. I have started listening to the prayer from yesterday asking only for the Arul and compassion of Lord Murugan and to guide me on this siddha path. Pranams to karthikeyan Ayya for all these wonderful postings.

    ReplyDelete
  2. Ayya I felt this post is for me from murugar to say something... But still I didn't get the proper answer from Him....will be waiting for His answer....

    ReplyDelete
  3. Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!
    Om Saravana Bhava !!!

    ReplyDelete