​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 February 2015

அருணாச்சல அனுபவம் - 2


"அருள் உண்டு, அதற்கும் பொருள் உண்டு,
அருள் நிறைந்த வாழ்வுண்டு, 
அகம் ஒன்றில், அருகாமை உண்டு!
மனம் அடங்கும், வலம் ஒன்றில்..........."

(மன்னிக்கவும்! இது நடந்தது பத்து வருடங்களுக்கு முன். அதனால், நினைவில் நின்றவரை தட்டச்சு செய்துவிட்டேன்) 

கதவுக்கு பின்னால் நின்று இந்த செய்யுளை யாரோ கூறுவதை தெளிவாக கேட்டேன். 

அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் என் பிரார்த்தனைக்கு, இத்தனை வேகத்தில் பதில் கிடைக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. ஆனந்தத்தில் துள்ளியது மனம். ஆனால், சத்தம் போட்டால், சாதுக்கள் உறக்கம் கலைந்துவிடும்  என்று மனதுள் "நன்றி இறைவா" என்று கூறிவிட்டு, கோவில் வாசல் முன் வந்து கற்பூரம் ஏற்றி வைத்தேன். அப்பொழுதும் மனதுள் "உன்னை நம்பித்தான்" என்று வாக்கியம் வந்தது.

கிரிவலம் தொடங்கி, இந்திர லிங்கம் தரிசனம் முடித்து அக்னிலிங்கம் சன்னதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன். எதுவுமே மனதுள் ஓடவில்லை. கேட்ட செய்யுளின் விரிவான அர்த்தம் என்ன என்ற யோசனையில் மனம் இருந்தது. அக்னிலிங்கம் சன்னதியில் ஆனந்தமான தரிசனம் முடிந்து, கற்பூரம் ஏற்றி வைத்தவுடன், எங்கிருந்தோ வந்த சப்தம் போல் தலைக்குள் "ஓம் நமசிவாய" என்ற வாக்கியம் புகுந்தது. பிறகு எதை பற்றிய சிந்தனையும் இல்லை. ஒவ்வொரு லிங்க சன்னதியிலும் பிரார்த்தித்து, கற்பூரம் ஏற்றும் பொழுதெல்லாம் என் தலைக்குள் "ஓம் நமசிவாய" என்ற வாக்கியமே உரக்க முழங்கிக் கொண்டிருந்தது. நான் நானாக இல்லை என்பது புரிந்தது. என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், அந்த நிலை மிகுந்த ஆனந்தத்தை தந்தது என்பது உண்மை.

போகும் வழி எங்கும், தனிமை, அமைதி, நிசப்தம். என் மூச்சே எனக்கு கேட்கிற அளவுக்கு அமைதி. மெதுவாக நடந்து அடி அண்ணாமலை கோவிலை அடைந்தேன். கோவில் திறந்திருக்காவிட்டாலும், வெளியே நின்று பிரார்த்தனை செய்யலாம் என்று போனவனுக்கு, "நீ வரக் காத்திருக்கிறேன். வா" என்றழைப்பதுபோல் கோவில் திறந்திருந்தது.

மணி 6.30 இருக்கும். அபிஷேகம் முடிந்து எங்கும் கழுவிவிடப்பட்டது போல் சுத்தமாக, அமைதியாக இருந்தது. அங்கும் தனிமை கிடைத்தது. பூசாரி மட்டும் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தார். 

திரும்பி பார்த்தவர் "சற்று பொறுங்கள். அலங்காரம் முடித்துவிட்டு, தீபாராதனை காட்டி பிரசாதம் தருகிறேன். அதுவரை அமர்ந்திருங்கள்" என்றார்.

நான் ஒரு இடம் தேடி அமர்ந்து அடிஅண்ணாமலையாரை பார்த்துக் கொண்டிருந்தேன். மனதுள் ஜபம் இயல்பாக, தானே ஓடிக் கொண்டிருந்தது. நிமிட நேரத்தில், கண்மூடி என்னை அறியாமல் த்யானத்தில் போய்விட்டேன்.

சற்று நேரத்தில், மணி அடிக்கும் சப்தம் என் த்யானத்தை கலைத்தது. பூசாரி மந்திர உச்சாடனத்துடன், தீபாராதனை காட்டி, கற்பூர ஆரத்தியை என்னிடம் கொண்டு வந்து காட்டினார்.

ஆரத்தியை கண்ணில் ஒற்றிக் கொண்டு, பிரசாத விபூதியை வாங்கி பூசிக்கொண்டு, மிச்சம் இருந்ததை வாயில் போட்டுக் கொண்டேன்.

"எங்கிருந்து வரேள்!" என்றார்.

"சென்னையிலிருந்து ஊருக்கு போகும் வழி. அருணாச்சலத்தை ஒரு தரிசனமும் அப்படியே ஒரு கிரிவலமும் செய்துவிட்டு போகலாம் என்று நடக்கத் தொடங்கினேன். இங்கு கோவில் திறந்து இருந்ததை பார்த்த பொழுது, உள்ளே வந்தேன்" என்றேன்.

"ஓ! அப்படியா. நல்லது, நல்லது. எப்பொழுதும் அவன் அரணாக நின்று எல்லோரையும் காப்பாற்றுவான். இன்று என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பொதுவாக 7 மணிக்கு மேல் தான் சாவகாசமாக வந்து கோவிலை திறந்து வைத்து பூசை செய்வேன். இன்று காலை 3 மணிக்கே முழிப்பு வந்துவிட்டது. பிறகு தூக்கம் இல்லை. 5 மணிக்கு மேல் கிளம்பி வந்து, எல்லா இடத்தையும் சுத்தப் படுத்தி, அவருக்கு சீக்கிரமே அபிஷேகம், அலங்காரம் முடித்துவிட்டேன். பொதுவா, எல்லோரும் ஒரு 7.30 மணிக்குத்தான் வருவா. ஆனா, இன்னிக்கு யாரையும் காணேம். என்னெனவோ நடக்கிறது" என்று பேசியபடி சன்னதிக்குள் சென்றார். நான் சிரித்தபடி நின்றிருதேன். எனக்கு புரிந்தது. 

சற்று நேரத்தில், நான் உத்தரவு வாங்கிக் கொண்டு கிரிவலத்தை தொடர்ந்தேன்.

அதிகாலை நேரத்தில், அருணாச்சல மலையை பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். உச்சியில் கொஞ்சம் மேகம் போர்த்தி இருக்க, அமைதியாக உறங்கும் குழந்தையின் பிரதிபலிப்பு இருக்கும். திரும்பி, திரும்பி பார்க்க வைக்கும் காட்ச்சிகள் நிறைய. சத்தமும் இருக்காதா, இயற்கையின் ஸ்பரிசம், மெல்லியதாக வீசும் காற்று, பட்சிகளின் சப்தம், தூரத்தில் எங்கோ குரல் கொடுக்கும் ஒரு பசு என, எல்லாமே வித்யாசமாக இருக்கும். சின்ன வயதில் கிராமத்து உறவினர் வீட்டுக்கு போய் தங்கிய பொழுது, உணர்ந்த அந்த சூழ்நிலை. அதே சூழ்நிலை மறுபடியும் கிடைக்க 30 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது என்பது உண்மை. இதுவே, அருணாச்சலேஸ்வரர் கோவிலின் அருகில் இருந்தால் கிடைத்திருக்காது. அடி அண்ணாமலை இருக்கும், மலையின் இந்த பக்கத்தில் மட்டும் தான் அதை உணர முடியும்.

மெதுவாக நடந்து ஒரு வழியாக, வாயு லிங்கம் வரை வந்துவிட்டேன். தரிசனம் முடித்து, சற்று நேரம் அமர்ந்து கண் மூடி இருக்கும் பொழுது

"உன்னை தேடி காவல் துறை அதிகாரிகள் வருவார்கள். பயம் வேண்டாம். உண்மையை சொல். எந்த பிரச்சினையும் உன்னை அண்டாது. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று வந்தது.

ஒரு நிமிடம் சற்று ஆடித்தான் போனேன். ஏன் எதற்கு? நான் என்ன தப்பு செய்தேன்? வெளியூர் வேற. பிரச்சினை எதுவும் வரக்கூடாது. சரி! சொன்னபடி உண்மையாக இருப்போம். மற்றவற்றை அவர் பார்த்துக் கொள்வார் என்று சமாதானப் படுத்திக் கொண்டு, கிரிவலத்தை தொடர்ந்தேன்.

குபேர லிங்கம், ஈசான லிங்கம் என்று தரிசனம் முடித்து, கோவில் வாசலுக்கு வந்த பொழுது மணி 9.

நேராக உள்ளே சென்று, அருணாச்சலேஸ்வரர் சன்னதி முன் நின்றேன்.

மனதுள் பேசத்தொடங்கினேன்.

"அய்யனே, உங்கள் அருளால், இந்த கிரிவலம் இனிதே நடந்துவிட்டது. அடியேனுக்கும் அறிவுரை கூறி அருளியதற்கு, மிக்க நன்றி. அடி அண்ணாமலையில், கோவில் திறக்க வைத்து, அடியேனுக்கு காட்சி கொடுத்ததற்கும் மிக்க நன்றி. கூடவே, ஏதோ ஒரு பிரச்சினையை கோடிட்டு காட்டினீர்கள். அது நடந்தால், நடக்கும் பொழுது, உங்கள் பார்வை என்னை காக்கட்டும்." என்று வேண்டிக்கொண்டேன்.

வெளியே வந்து, பிரதட்சிணம் செய்து, கிரிவலத்தை நிறைவு செய்யும் விதமாக கற்பூரம் ஏற்றி வைத்துவிட்டு, அறைக்கு வந்து சேர்ந்தேன். நல்ல அசதி! உடல் நிலை சரியாக இல்லாததால், சாப்பிடக் கூட தோன்றவில்லை. அப்படியே படுத்து உறங்கிப்போனேன்.

இரண்டு மணி நேரம் உறங்கியபின், நல்ல உறக்கத்தில், யாரோ பலமாக "சார்!" என்று கூப்பிட்டு கதவை தட்டுகிற சத்தம். எழுந்திருக்க முடியவில்லை, இருந்தும் ஸ்ரமப்பட்டு போய் கதவை திறந்து பார்த்தால், அறையின் சொந்தக்காரரும், அவருடன் இரண்டு இன்ஸ்பெக்டர், ஒரு போலீஸ்காரரும் நின்று கொண்டிருந்தனர்.

முதலிலேயே இன்ஸ்பெக்டரின் கேள்விக்கணை துளைத்தெடுத்தது.

"யார் நீங்க? என்ன பேரு? எங்கிருந்து வந்திருக்கீங்க? எதுக்கா வந்தீங்க?" என்று தொடர்ச்சியாக கேள்விக்கணைகள்.

உறங்கி எழுந்திருந்தாலும், அப்பன் முன்னரே தெரிவித்திருந்ததால், நிதானமாக அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொன்னேன்.

"என்ன பண்ணிட்டிருந்தீங்க?" என்றார்.

"உறங்கிக் கொண்டிருந்தேன்!" என்றேன்.

"இப்ப மணி 11. கோவிலுக்கு வந்தேன்னு சொன்னீங்க! இந்த நேரத்திலா உறங்குவாங்க?" என்றார்.

"உள்ள வாருங்களேன், ஏன் வெளியே நின்னு பேசறீங்க. இன்று காலையில் 3 மணிக்கு எழுந்து கிரிவலம் செய்யப் போய்விட்டு, 9 மணிக்குத்தான் வந்தேன். உடல் நிலையும் சரி இல்லை. அதனால் அசதியில் உறங்கிவிட்டேன்." என்றேன்.

உள்ளே வந்தவர் "உங்கள் பெட்டியை செக் பண்ணனும்" என்றார்.

"தாராளமாக்" என்றேன்.

கூட இருந்த போலீஸ் ஒருவர், என் பையை திறந்து முழவதும் கலைத்துப் பார்த்துவிட்டு,

"ஒண்ணும் இல்லை சார்! உடைகளும், விபூதியும் தான் இருக்கு" என்றார் இன்ஸ்பெக்டரிடம்.

"சரி! அறையை பூட்டிக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு கிளம்பிய இன்ஸ்பெக்டரிடம்,

"எதுக்காக, இப்படி செக் பண்ணினீங்கனு, தெரிஞ்சுக்கலாமா?" என்றேன், அமைதியாக.

"இன்னிக்கு ஜனவரி 26. திருவண்ணாமலை கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் வந்துள்ளது. அதனால், எல்லா லாட்ஜிலும் சோதனை போடுகிறோம். குறிப்பாக, தனியாக அறை எடுத்து தங்குகிறவர்களை விசாரிக்கிறோம்" என்றார்.

நான் சிரித்துக் கொண்டே, அமைதியாக இருந்தேன். அவர்கள் அனைவரும் அடுத்த அறையை நோக்கி நடந்து சென்றனர்.

திடீரென்று காவல்துறை வந்து விசாரித்தால், யாருமே ஆடித்தான் போவார்கள். அப்படி வேறு ஏதேனும் பேசி பிரச்சினையை விலை கொடுத்து வாங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான், அருணாச்சலேஸ்வரர் முன்னரே செய்தி தந்து, அமைதி படுத்தினார் என்று புரிந்தது.

அன்று மாலையே, அருணாச்சலத்தை விட்டு கிளம்பி அடுத்தநாள், ஊர் வந்து சேர்ந்தபொழுது, நல்ல செய்தி காத்திருந்தது. வருடங்களாக வேலை தேடிக் கொண்டிருந்த ஒரு நண்பருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைத்துள்ளது என்று கூறினார். அவரை போலவே பலரையும் மனதில் வைத்து, வேண்டுதலை கொடுத்து கிரிவலம் செய்ததற்கு, ஒரு மாதத்திற்குள், அனைவருக்கும் நல்லது நடந்தது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

அருணாசலம் அன்பே உருவானவர் என்று உணர்ந்தேன்.

அகத்தியர் அடியவர்களே! அருணாசலத்தில் தனிமை இருந்தால், நம் கர்மாப்படி நிறைய ஆசிர்வாதங்கள் கிடைக்கும். பலர் ஒன்று கூடும் பொழுது நிறைய விஷயங்கள், நமக்கு தெரிவிக்க வேண்டியது, தெரிவிக்கப் படாமலே போய்விடும், என்பதை தத்ரூபமாக அன்று அடியேன் உணர்ந்தேன்.

இந்த தொகுப்பு இத்துடன் நிறைவு பெற்றது

3 comments:

  1. So Touching and beautiful.

    ReplyDelete
  2. Last week, I was in Chennai and took a Bhrigu Rishi jeeva nadi reading from Shri RT Selvam of Tiruvottiyur. The humility, depth and advanced aangeegam of Shri Selvam was obvious. Bhrigu Rishi was kind enough to give a long and detailed insight into my problems and remedies therefor. I have no hesitation in recommending that those who are happen to travel to Chennai would benefit from jeeva nadi reading from Selvam. Incidentally, Selvam was closely involved in the recent Bhirgu pooja celebrations at Marudheri.

    ReplyDelete
  3. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete