​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் புதிய அனுபவத்தை படிக்கலாம்!

Thursday, 26 March 2015

சித்தன் அருள் - 216 - "பெருமாளும் அடியேனும் - ஓர் அறிமுகம்"


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்தன் அருள்" வலைப்பூவில் "பெருமாளும் அடியேனும்" என்கிற தலைப்பில் அகத்தியப் பெருமான், பெருமாளுடன் சேர்ந்திருந்து நடத்திய திருவிளையாடல்களை இங்கு தொகுத்து வழங்குகிற வேலையை/கடமையை, திரு.கார்த்திகேயன் அவர்கள் அடியேனிடம் ஒப்படைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு மேலாக, இந்த வேலையை சிரம்மேற்கொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும், என்ற நிரந்தர வேண்டுதல்களை வைத்த பொழுது, "அடியேன் அப்படிப்பட்ட புனித பணிக்கு ஏற்றவன் அல்ல! சித்தன் அருள் வலைப்பூவை அகத்தியப் பெருமான் உத்தரவால் தொடங்கி, அவர் அருளால் இன்றுவரை நிர்வகித்து வருகிற, உங்களுக்குத்தான் அது விதிக்கப்பட்டுள்ளது" என்று விலகியே இருந்தேன். 

என்னுள், அகத்தியப் பெருமான், இந்த வேலையை, அவருக்கு ஒரு நிமித்தமாக கொடுத்துள்ளார், அதில் நாம் பங்குபெறுவது எப்படி சரியாகும்? என்ற நினைப்பு இருந்தது தான் காரணம். 

சமீபத்தில் அவரை சந்தித்த பொழுது, அவர் வாழ்வில் ஏற்பட்ட மகத்தான மாற்றங்கள் காரணமாக, சித்தன் அருள் தொகுப்பை நிறைவு செய்வதில் குறியாக இருந்ததை உணர்ந்து,  ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். அவரிடம் இருக்கும் எஞ்சிய பொக்கிஷம், அனைத்தும் அகத்தியப் பெருமானின் அடியவர்களை சென்று சேரவேண்டும், என்று நினைத்து, இந்த தொடரை தட்டச்சு செய்து, சித்தன் அருள் வலைப்பூவில், எப்பொழுதும் போல எல்லா வியாழன் அன்றும் தரலாம் என்று தீர்மானித்தேன். இந்த தொடரில் "பெருமை/நன்மை" இருந்தால் அது அகத்தியப் பெருமானுக்கும், நண்பருக்குமே சேரும். ஏதேனும் குறைகள் இருந்தால், நிச்சயமாக அதை தொகுத்து தருகிற அடியேனை மட்டும் சேரும். இதை எல்லோரும் நினைவிற் கொள்ளவேண்டும்.

இந்தத் தொடருக்கு "அகத்தியரும் பெருமாளும்" என்றுதான் நான் முதலில் தலைப்பை முடிவு செய்து வைத்திருந்தேன். அது என்னவோ, அகத்தியர் மேல் உள்ள பற்றினால் என்று கூறலாம். இதை திரு கார்த்திகேயனிடம் கூறிய பொழுது, அவர் முகம் என்னவோ சற்று வாடியது. 

"இதை குருநாதர் ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நீங்கள் வாழ்ந்து வந்த விதத்தினால் குருவை முதல் இடத்திலும், தெய்வத்தை அதற்கு பின்னரும் வைத்து தலைப்பை வைத்துவிட்டீர்கள். குருநாதரிடமே கேட்டுவிடுகிறேன். என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!" என்று கூறினார்.

உடனே நானும் "முடிந்தால் இந்த தொடரை அடியேன் எழுத அனுமதி உண்டா? என்றும் கேட்டுவிடுங்கள்" என்றேன்.

எப்படியாவது இப்படிப்பட்ட வேலையில் இருந்து, தப்பித்துவிடலாமே ஏதேனும் தவறாக தட்டச்சு செய்து அகத்தியப் பெருமான் கோபத்துக்கு ஆளாகக் கூடாதே என்கிற பயமும் தான் காரணம்.

இரண்டு நாளாயிற்று ஒன்றும் அவரிடமிருந்து பதில் வந்தது போல் செய்தி வரவில்லை.

அது ஒரு வியாழக் கிழமை. "சித்தன் அருள்" தொகுப்பை வழங்கிவிட்டு, எப்பொழுதும் என் நண்பர் திரு.கார்த்திகேயன், அகத்தியப் பெருமான் கோவிலுக்கு சென்று வருவார்.

அன்று மாலை இரவு என்னை அழைத்து செய்தியை சொன்னார்.

நடந்தது இதுதான்.

கோவிலுக்குள் சன்னதிக்கு பக்கத்தில் இவர் சென்று நிற்கவும், கதவு திறந்து தீபாராதனை. அருள் நிறைந்த அகத்தியர் முகத்தை பார்த்து நிற்கவும், அவரின் அருள் செய்யும் வலக்கரம் இவர் கண்ணில் பட்டது. தீபாராதனையின் வெளிச்சம் அகத்தியப் பெருமான் வலது கையில் பட்டு தெரித்தது. ஒரு நிமிடம் கண் மூடி தியானிக்க, அவருக்கு உத்தரவு வந்தது.

"அருள் உண்டு! ஆனால் "பெருமாளும் அடியேனும்" என வேண்டும்!"

இதை அறிந்த பொழுது, நான் உண்மையிலேயே மௌனமாகிவிட்டேன்!

ஆகவே! "பெருமாளும் அடியேனும்!" என்கிற இந்த தொகுப்பை வழங்குபவர் "அகத்தியப் பெருமான்!" அடியேன் அல்ல!

இந்த தொகுப்பின் முதல் பதிவை, அடுத்த வாரம் வியாழக் கிழமை அன்று, அகத்தியர் அருளால் பதிவு செய்கிறேன்!

வணக்கம்!