​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 27 October 2024

சித்தன் அருள் - 1714 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-2!


குருநாதர்: துன்பக்காலத்தில் தான், அவனை பக்குவங்கள் படுத்தி, துன்பத்திலிருந்து விலக்க முடியும் அப்பனே! இதற்கும் பல கட்டாயங்கள் உண்டு அப்பனே! வரும் காலத்தில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே! கவலையை விடு.

அடியவர்: அப்படியானால், இறைவன், ஒருவனுக்கு, துன்பத்தில் தான் அருகில் இருக்கிறாரா?

குருநாதர்: ஆம்! ஏதோ ஒன்றை கொடுத்து, இன்பத்தை இறைவன் கொடுத்திருந்தால், இப்பொழுது, இறைவனே பறந்து போயிருப்பான், உன் உயிரும் பறந்து போயிருக்கும். ஆகவே, வேறு எதோ ஒன்றை கொடுத்து, இறைவன் உன் அருகில் இருக்கின்றான். இப்பொழுது சொல், இறைவன் உனக்கு நல்லது தானே செய்திருக்கிறான்.

அடியவர்: ஆமாம்! இறைவன் துன்பத்திலும், நல்லதை தான் செய்திருக்கிறார்!

குருநாதர்: ஏன் என்றால், அனைத்தும் இறைவனுக்கு  தெரியுமப்பா.எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அப்பா! ஆனால், அதற்குள்ளேயே, எல்லாம் வேண்டும் வேண்டும் என்று சொன்னாலும் அப்பனே, ஒரு குழந்தை பிறக்கின்றது, முதலிலே குழந்தை அனைத்தும் கற்றுக் கொள்கின்றது அப்பனே. அதனால் தான் அப்பனே, யார் யாருக்கெல்லாம் பக்குவங்கள் இல்லையோ, அவர்களை பக்குவங்கள் படுத்தி படுத்தித்தான் அனைத்தும் செய்வான் அப்பனே! அப்பனே, உடம்பு கூட உங்களுக்கு சொந்தமில்லையப்பா. அப்பனே, அறிந்தும் கூட அனைத்தும் எந்தனுக்கு சொந்தம் என்று சொல்கிறீர்களே, இது எவ்விதத்தில் நியாயமப்பா? அதனால், அனைத்திற்கும் சொந்தம் இறைவனே என்பேன் அப்பனே. இயக்குபவன் அவனே அப்பனே. அவ் ஆட்டத்தை நிறுத்தவும் தெரியும், எடுக்கவும் தெரியும், அதனால், நீங்கள் அனைவருமே, பொம்மைகள் தான். 

அடியவர்: குருநாதா! தெளிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

குருநாதர்: தேவை இல்லை அப்பனே! அன்பு, அதாவது, தாய் மீதும், தந்தை மீதும் அன்பிருந்தாலே, மகிழ்வார்கள் அப்பனே! பின் அன்பிருந்தால் போதுமானதப்பா! கட்டி அணைத்துக் கொள்வேன் உன்னை!

அடியவர்: குருநாதா! சற்றுமுன் ஒரு மனிதனுக்கு மூன்று கண்டங்கள் உண்டு என்று கூறினீர்கள். அவை எப்பொழுது, எப்படி வரும் என்று கூற முடியுமா.

குருநாதர்: அப்பனே, இப்பொழுது நான் உரைத்தால், மனிதன் அவற்றிலிருந்து தப்பித்து கொள்வானப்பா! ஆனால், அதிலிருந்து தான் இறைவன் பாடத்தை கற்பிப்பான் என்பதை தெளிவு படுத்துவேன், அன்பு மகனே! இப்பொழுது முடிந்து விட்டதா உன் கதை? இன்னும் இருக்கின்றது.

அடியவர்: அப்படியாயின், இன்னும் நான் உயிரோடிருப்பது எதற்காக?

குருநாதர்: இன்னும் நான் தெரியவைக்கத்தான் போகின்றேன், உந்தனுக்கு. அதாவது, அப்பனே! ஒரு குழந்தைக்கு ஐந்து வயதாகின்றது, சொன்னால் புரியுமா? இல்லை. பத்து வயதாகின்றது, இல்லை, பதினைந்து வயது, இல்லை. முப்பது வயதில் புரியும். ஆகவே, எந்த வயதில், எங்கு, எப்படி புரியவைக்க முடியும் என்பதெல்லாம், எந்தனுக்கு தெரியுமப்பா. கவலை இல்லை. தந்தை நான் உன் அருகிலிருந்து வழி நடத்துகிறேன், கவலையை விடு!

அடியவர்: குருநாதா! இந்த காலத்தில், ரமண மகரிஷி மாதிரியாகவோ, காஞ்சி மகான் மாதிரியாகவோ, யாரேனும், எங்கேனும் இருக்கிறார்களா?

குருநாதர்: ஆம்! நீயே கண்டுணர முயற்சி செய். இல்லை என்றால் என்னிடம் மறுபடியும் கேள்.

அடியவர்: ஜோதிடத்தை பற்றி ஒரு கேள்வி கேட்க வேண்டும். அடியேனை காப்பாற்ற வேண்டி பிரம்மாவிடம் நீங்கள் வாதிட்ட பொழுது, "அவன் கணக்கில் புண்ணியமே இல்லை, அவன் வந்துதான் ஆகவேண்டும்" என ப்ரம்மா கூறியதாக கூறினீர்கள்! இதில்......

குருநாதர்: அப்பனே! அனைவருக்கும், செப்பி, செப்பி புண்ணியம் அனைத்தையும் கொடுத்து விட்டாய் அப்பனே! புரிந்து கொள் அப்பனே!

அடியவர்: அதெப்படி முடியும்?

குருநாதர்: அப்பனே! அதனால்தான் புரிய வைத்து விட்டேன் இப்பொழுது.

அடியவர்: ராமாயணம் படிக்கிறோம், மஹாபாரதம் படிக்கிறோம், இவைகளும் புண்ணியத்தை சேர்க்கும் தானே!

குருநாதர்: அப்பனே! புண்ணியம், நிரம்பி வழிந்தது, ஆனால், அனைவருக்கும், பிரித்து கொடுத்து விட்டாய் அப்பனே!

அடியவர்: சரி! புண்ணியத்தையே தானமாக கொடுக்கிற பொழுது, இங்கு கர்ணனின் கதை தான் ஞாபகம் வருகிறது. அந்த கொடுத்த புண்ணியத்துக்கு ஒரு புண்ணியம் கிடைத்திருக்க வேண்டுமே! அது எங்கே போயிற்று?

குருநாதர்: அதனால் தான் அவன் மேலும் கோரவில்லை! அப்பனே!

அடியவர்: எனக்கு தோன்றியது என்ன வென்றால், பிரம்மாவுக்கு, என் புண்ணிய கணக்கை ஒழுங்காக பார்க்க தெரியவில்லை போல் இருக்கு, அல்லது என் கணக்கில் புண்ணியத்தை ஒழுங்காக எழுதவில்லை போலும்!

குருநாதர்: அப்பனே! அதுவும் சரி என்று வைத்துக் கொள்!

அடியவர்: அப்புறம் எனக்கு புண்ணியமே இல்லை என்று எப்படி சொல்லலாம். நீங்கள் சொன்னதை எல்லாம் தானே இத்தனை வருடங்களாக செய்திருக்கிறேன்! என் பக்கத்து நியாயத்தையும் கேட்க வேண்டும் அல்லவா?

குருநாதர்: அப்பனே! புண்ணியம் நிரம்பி........... வழிந்ததப்பா! மற்றவர்களுக்கு செப்பி! செப்பி கொடுத்து விட்டாய் அப்பனே! அவ்வளவே! உன்னிடத்தில் என்ன உள்ளது. பூஜ்யம் தான் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே, "0" என்று நினைத்துவிடாதே அப்பனே. சரியான இடத்தில் "0" வைத்துக் கொண்டே இருந்தால் அதன் மதிப்பு தெரியுமப்பா. அப்பனே! கவலை இல்லை அப்பனே! புரிந்து கொள் அன்பு மகனே!

[கூடிய விரைவில், சித்தன் அருள் முதல், அனைத்திலிருந்தும் விலகிவிட வேண்டும் என்று அடியேன் மனதில் தோன்றியது. ஆம் பாத்திரத்தில் அன்னம் காலியாகிவிட்டது, கழுவத்தான் எடுத்து வைக்க வேண்டும்!]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    அய்யா கடைசியில் உள்ள வரிசையில் உள்ளது அந்த அடியவருடையதுதானே

    ReplyDelete
  2. ஐயா அந்த அடியவர் நீங்கள் தான் என்பது புரிந்தது, மற்றவர்களுக்கு எடுத்து சொல்லும் போது அது உயர் தர புண்ணியம் ! அதை தான் பல காலமாக நீங்கள் செய்தீர்கள் சித்தன் அருள் வலை மூலமாக, அப்படி இருக்க தங்கள் கணக்கில் புண்ணியம் எவ்வாறு இல்லை என்பது எனக்கும் புரியவில்லை ஐயா

    ReplyDelete
  3. anbu aiiyaa thangal seivadhu sevai, uyarndha sevai. thayavu seidhu thodaravum. Kandippaga aiyavidam nangal anaivarum vendikkolvom.

    ReplyDelete
  4. அய்யா தாங்கள் அன்பும் ஆதரவும் தான் எங்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.... தயவுசெய்து எங்களை அனாதை ஆக்கிவிட்டார்கள்.... தங்களின் புண்ணிய கணக்குகள் எண்ணிலடங்காதவை.... தாங்கள் நலமுடன் வாழ எம்பெருமான் துணை இருப்பார்... ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை

    ReplyDelete
  5. தங்களின் பாத்திரம் என்பது அக்சய பாத்திரம் அது என்றும் காலி ஆகவே ஆகாது... நீங்கள் தான் எங்கள் துணை

    ReplyDelete
  6. அகத்தியர் ஐயாவிடம் உறையாடும் பாக்கியமும், அவர் உங்களுக்காக வாதாடும் பாக்கியயும் பெற்று உள்ளீர்களே, இதை விட உயர்ந்த புண்ணியம் வேறு என்ன உண்டோ?
    ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  7. அப்பா அகத்தியா நல் அடியார்கள் நலமுடன் வாழ நீங்க தான் கருணை காட்ட வேண்டும். விதி ஒன்று உள்ள போது விதி விலக்கு என்ற ஒன்றையும் நீங்க தான் கற்பித்து இருக்கீங்க....நன்றி 🙏

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete