வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப்பெருமான், தன் அடியவர்களுக்கு அருளுவதற்காக பல ரூபங்களிலும் பல இடங்களுக்கும் செல்வதுண்டு. அடியவர் எண்ணத்தில் தோன்றி, பல புண்ணியத் தலங்களுக்கும் வரச்சொல்லி, அதிசயங்களை நடத்தி, அவர் மனம் நிறைய வாழ்த்தி அருளுவதுண்டு. அப்படி நடந்த நிகழ்ச்சியை ஒரு அகத்தியர் அடியவர், பகிர்ந்து கொண்டதை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
ஒரு முறை, நானும் (அகத்தியர் அடியவர), மனைவியும், கும்பகோணம் பக்கத்தில் உள்ள சில புண்ணிய தலங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்து, அருள் பெற்று வரலாம் என்று கிளம்பினோம். புண்ணிய தல யாத்திரை என்பது, நேரமும், இறைவனும், குருவருளும் ஒன்று கூடி அருள்வதினால் அமைவது என்று நம்புபவன் நான்.
யாத்திரையின் முடிவாக, அகத்தியம்பள்ளி சென்று, குருநாதரை தரிசித்து அருள் அருள் பெற்று வரலாம் என்று சென்றோம்.
அகத்தியம்பள்ளி ஆலயத்தில், கூட்டம் இல்ல. சுவாமி சன்னதியில் ஒரு பூஜை செய்பவர், அகத்தியர் சன்னதியில் ஒருவர், பின்னர் நாங்களும். அகத்தியருக்கு பூஜை செய்து, நிவேதிக்க சிறிது இனிப்பு மிட்டாய்களை வாங்கி சென்றிருந்தோம். மிக சிறப்பாக பூசை செய்து, குருவின் ஆசீர்வாதத்துடன் பிரசாதத்தை தந்தார். அவருக்கு, தக்ஷிணையுடன் ஒரு சில இனிப்பை கொடுத்தபின், மிகுந்த அமைதியுடன், கோவிலில் ஒரு தனிமையான இடத்தில் சென்று அமர்ந்தோம். எதுவும் பேச தோன்றவில்லை. இருப்பினும்,
"குருநாதர் அகத்தியப்பெருமான் வந்திருக்க வேண்டும். நம்மால் தான் அவர் அருகாமையை உணர முடியவில்லையோ" என்று எண்ணம் ஓடியது. இதை கூறிய பொழுது, "அவரிடம் நம் பிரார்த்தனை போய் சேர்ந்ததா என்பதே முக்கியம்!" என்றாள் மனைவி.
சற்று நேரத்தில், காற்றிலிருந்து இறங்கி வந்தது போல், ஒரு பைரவர் வாயில் எதோ சுவைத்தபடி ஓடி வந்து, எங்கள் முன் நின்றது. அடியேன் அதை கூர்ந்து கவனிக்க, அதன் வாயில், சுவைத்து தின்ற இனிப்பு மிட்டாயின் மிச்சம் இருந்தது. ஹ்ம்ம்! பூஜை செய்தவருக்கு கொடுத்தோம், அவர் இந்த பைரவருக்கு கொடுத்திருப்பார் போல, என்று நினைத்தேன்.
அது என்னதான் செய்கிறது என பார்ப்போமே என்று அமைதியாக அமர்ந்திருந்தோம். நிதானமாக சுவைத்து தின்று தீர்த்துவிட்டு,"இன்னும் கொஞ்சம் கிடைக்குமா?" என்ற பார்வையுடன் என்னை பார்த்தது. என்னிடம் இரண்டு இனிப்புகள் மிச்சமிருந்தது. இரண்டையும் கொடுத்து விடுவோம் என்ற நினைப்பில் அவற்றை கொடுக்க, எழுந்து நின்று, வாயில் அவற்றை கவ்வி வாங்கிக்கொண்டு, ஒரு மனிதன் தரையில் அமர்ந்து உண்ணுவது போல், அமர்ந்து சுவைக்கத் தொடங்கியது. சற்று நேரம் அதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் "இதன் கர்மா என்னவோ! பைரவராக பிறந்து, இன்று இங்கு, நாளை எங்கோ!" என்றெல்லாம் எண்ணம் ஓடத்தொடங்கியது.
சற்று நேரத்துக்குப்பின், குருவை வணங்கி, இறைவனை தொழுது, விடை பெற்றோம். மனதுள், குருநாதர் வந்திருப்பார் இல்லயா? என்கிற எண்ணம் மறுபடியும் ஏறி அமர்ந்தது. திருப்தியாக ஊர் வந்து சேர்ந்த பொழுது, ஓர் அசரீரிபோல், திரும்பி, திரும்பி மனதுள் வந்து கொண்டே இருந்தது.
"முன்னரே கூறிய நாடி வாக்கை மறுபடியும் வாசித்துப் பார்!" என்று. பல தடவை நாடியில் வந்த வாக்குகளை ஒரு புத்தகத்தில் பதித்து வைத்திருந்தேன். அதை தேடினேன், கிடைக்கவில்லை.
மறுநாள், மிகுந்த தேடல்களுக்குப்பின் அது கிடைக்க, சந்தோஷத்துடன் பிரித்துப் பார்த்தால், அந்த பக்கத்தில் எழுதியிருந்தது,
"அடிக்கடி, மிருகமாகவும், பறவையாகவும் யாம் உன் முன் வருவோம்! முடிந்தால் உணர்ந்துகொள்!" என்றிருந்தார்.
அன்றைய தினம், பைரவராக நாங்கள் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து, "இன்னும் கிடைக்குமா?" என்று கண்களால் பேசி, பார்த்து, அருள் புரிந்து சென்றது, குருநாதர்தான் என்பதில் பின் எந்த சந்தேகமும் இல்லை.
அருள் புரிய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், குருநாதர் எந்த ரூபத்திலும், எவ்விடத்திலும், எப்படி வேண்டுமானாலும் வரலாம். நாம்தான் அவர் கண்களை உற்றுப் பார்த்து, உணர்ந்து, எளிமையாக, கனிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்பது, அன்று ஒரு பாடமாக அமைந்தது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
இந்த சித்தன் அருள் வலைத்தளம் தவிர வேறு எந்த வகையிலும் அகத்திய பெருமானை என்னால் உணர முடியவில்லை.ஆனால் ஒரு சில உயர்ந்த உள்ளங்களுக்கு மட்டும் எப்பொழுதும் துணையாகவே இருந்து கொண்டிருக்கிறார்.அகத்திய பெருமானை அருகில் உணர வழி சொல்லுங்கள்.
ReplyDelete
Deleteவணக்கம்!
அகத்தியப்பெருமான் விவரித்த, நடந்த ஒரு நிகழ்ச்சியை விளக்குகிறேன். புரிந்து கொள்ளுங்கள்.
ஒரு முறை எல்லா சித்தர்களும் ஒரு இடத்தில் கூடி இருந்து, பல விஷயங்களையும் விவாதித்தார்கள். யாருக்கும் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. ஒரு சித்தர் எழுந்து, "கோடிக்கணக்கில் நாங்கள் சித்தர்கள் இருந்தும், போகர் பெருமானை மட்டும் மிக சிறந்த, என் அபிமான சிஷ்யர் என்று ஏன் கூறுகிறீர்கள்? எங்களிடம் என்ன குறை இருக்கிறது?" என்றார்.
"இப்பொழுதே அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்" என்ற அகத்தியப் பெருமான், "போகர் சித்தரே! இங்கு வாருங்கள்!" என்றார்!
அனைவரையும் விலக்கி, கடந்து வந்த போகர் "சொல்லுங்கள் குருநாதா!" என்று முன் வந்து நின்று அகத்தியரின் பாதத்தை பார்த்து தொழுதபடி நின்றார்!
ஒரு செடியை சுட்டி காட்டி "இது என்ன செடி என்று தெரியுமா?" என்றார்.
"தெரியவில்லை குருநாதா?" என்றார் போகர்! (மூலிகை மருத்துவத்தில் மிக சிறந்தவர் போகர்)
ஒரு உருளை கல்லை எடுத்துக்காட்டி, "இது எந்த வகை?" என்றார்.
"தெரியவில்லை குருநாதா!" என்றார் போகர்! (ரசவாதத்தில் தலை சிறந்த நிபுணர் போகர்)
"நவபாஷாண கட்டு தெரியுமா?" என்றார் அகத்தியர்!
"தெரியாது குருநாதா!" என்றார். (பல நவபாஷாண விக்கிரகங்களை உருவாக்கியவர் போகர்)
"வாலையை தெரியுமா?" என்றார்.
"தெரியாது குருநாதா?" என்றார். (சித்தர்களில் போகருக்குத்தான் வாலை நிறைய அருள் புரிந்திருக்கிறாள்!)
"சிவனருள் பெற்றவன் தானே!" என்றார்.
"தெரியாது குருநாதா!" என்றார் போகர். (சித்தர்கள் போகரை பற்றி புகார் செய்த பொழுது அவரை அழைத்து, ஆரத் தழுவி, அவர் படைப்பை கண்டு உச்சி முகர்ந்து பாராட்டை பெற்றவர்)
"எதை கேட்டாலும் தெரியாது தெரியாது என்கிறாயே! உனக்கு என்னதான் தெரியும்!" என்றார் அகத்தியர்.
"அய்யனே! குருநாதா! தாங்கள் திருவடி அன்றி வேறொன்றும் அறியேன் அடியேன்" என்ற பவ்யமாக.
மற்ற சித்தர்களை பார்த்து, "இப்பொழுது புரிந்ததா! அத்தனையும் அடைந்துவிட்டு, குருவின் பாதம் அன்றி வேறொன்றும் அறியேன்! என்று இருக்கும் போகருக்குத்தானே சிறந்த சிஷ்யனாக இருக்கும் தகுதி உள்ளது. போகனைத்தானே உதாரணமாக காட்ட முடியும்" என்றார்.
இந்த உதாரணத்திலிருந்து புரியும் என்று நினைக்கிறேன்.
அகத்தியப்பெருமானின் இன்னொரு உத்தரவை தெரிவிக்கிறேன்.
"எவனொருவன், தனக்கு நடக்கும் நிகழ்ச்சிகளை, கர்மா கழிவு என்று பொறுத்துக் கொண்டு, தான, தர்மங்களை, நல்ல எண்ணங்களை, நல்ல செயல்களை, நல்ல பிரார்த்தனையை இறைவனிடம் சமர்ப்பித்து வாழ்கிறானோ, அவனுக்கு யாங்களே இறங்கி வந்து, வேகமான கர்மா கழிவிற்கு உதவுவோம். கர்மா சுத்தமான பின் எங்கள் தரிசனம், அருகாமை போன்றவை அவனறியாமலேயே எப்பொழுதும் அவனுடன் இருக்கும்."
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அக்னிலிங்கம்!
ஐயா....சித்தனருள் படிக்கும் போது உணர்கின்றீர் அந்த நொடியில் அகத்தியர் அய்யன் உங்களுடன் இருக்கின்றார்.
Deleteஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
இன்னும் நிறைய படிகள் ஏற வேண்டும் நாம் அனைவரும்
வணக்கம்
Deleteஐயா நான் சித்தன் அருள் வலைப்பூ வழி அகத்திய பெருமானின் வழிகாட்டுதல்களை தெரிந்து கொண்டு வருகின்றேன் கடந்த 9 ஆண்டுகளாக. மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியை தருகிறது. பல முறை அனுமத்தாசன் அய்யா அவர்களை சந்திக்கும் பேறு கிடைக்க வில்லை யே என்று ஏங்கி இருக்கிறேன். சித்தன் அருள் வலைப்பூ வழி அகத்திய பெருமானின் அற்புதங்களை அனைவரும் தெரிந்து கொள்ள தங்களின் சீரிய முயற்சியால் அந்த ஏக்கம் இன்று இல்லை. பல அடியார்களுக்கும் அகத்திய பெருமானிற்க்கும் பாலமாக இருக்கும் தங்கள் தொண்டு மேன்மேலும் சிறக்க, தொடர அகத்திய பெருமானை வேண்டிக் கொள்கிறேன்
வணக்கம்!
Deleteமேலே கூறியுள்ள அனுபவம் எனது நண்பருக்கு ஏற்பட்டது. அடியேனின் சிறு முயற்சி, அகத்தியப்பெருமானுடன் உள்ள உறவை, அனுபவங்களை, ஆசீர்வாதங்களை, அருள் உரைகளை உங்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணி மட்டும். உங்களாலும், எல்லோராலும், மிக மிக அன்பாக, நேர்மையாக இருந்தால் அகத்தியப்பெருமானின் தரிசனம், கைவல்யமாகும் என்பதைத்தான் மறுபடியும் கூறுகிறேன். எல்லா பெருமையும் அவரை சாரும்! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! அக்னிலிங்கம்!
ஆனால் உண்மையானவனாக!!!! அதாவது பின் பொய் சொல்லாதவனாக!! பின் பொறாமை இல்லாதவனாக அவை மட்டும் இல்லாமல் பின் யாருக்கும் துன்பம் விளைவிக்காதவாறு தான் மட்டும் எதையென்று பின்.. அகத்தியனே போதும் என்றும் இறைவனே போதும் என்றும் என்று இருப்பவர்களுக்கு... நிச்சயம் யான் விடிவெள்ளி தருவேன்!!!
DeleteHi Sir,Feeling blessed and thankful to read the above explanation as I too was seeking the answer for the same question..
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteமேலே கூறியுள்ள அனுபவம் எனது நண்பருக்கு ஏற்பட்டது. அடியேனின் சிறு முயற்சி, அகத்தியப்பெருமானுடன் உள்ள உறவை, அனுபவங்களை, ஆசீர்வாதங்களை, அருள் உரைகளை உங்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் பணி மட்டும். உங்களாலும், எல்லோராலும், மிக மிக அன்பாக, நேர்மையாக இருந்தால் அகத்தியப்பெருமானின் தரிசனம், கைவல்யமாகும் என்பதைத்தான் மறுபடியும் கூறுகிறேன். எல்லா பெருமையும் அவரை சாரும்! ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! அக்னிலிங்கம்!
அற்புதமான விளக்கங்கள் ஐயா குருநாதர் அகத்தியரை வணங்கி வருபவர்கள் எந்த மாதிரியான நிலையில் உணர்வில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை மிக எளிமையாக விளக்கம் தந்து விட்டீர்கள் ஐயா உண்மையில் எந்தனக்கு எதுவும் தெரியாது என்ற மனநிலையில் இருந்தால் மட்டுமே சரணாகதி மனப்பான்மை வரும் கற்றுக் கொள்ளும் பக்குவம் வரும் இவை வந்தாலே பக்தி வரும் என்பதை மிகச் சிறப்பாக விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா ஓம் அகத்தீசாய நமக
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Agastheeswaraya Namaha 🙏🙏🙏
ReplyDelete