ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ! சில விஷயங்கள் பின்னுரையாக.
அகத்தியப் பெருமான் அருளிய "பெருமாளும் அடியேனும்" என்கிற தொடர் திடீரென்று முடிந்து போனதில், உங்களுடன், எனக்கும் சற்றே அதிர்வை தந்தாலும், நாடியில் வந்து அகத்தியப் பெருமான் அதை அருளிய காலத்தில் என்ன நடந்தது என்பதை, ஏன் நின்று போனது என்பதை திரு.கார்த்திகேயன் அவர்கள் பகிர்ந்து கொண்டதை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். கூறப்படுகிற விஷயங்களை, அதனதன் நிலையில் நின்று புரிந்து கொள்ளுங்கள்.
"ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!"
"எல்லோரும் இன்புற்று இருப்பதே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே" என்ற இறைவனின் எண்ணம் வளர்ந்து இந்த பூமியில் "தர்மம்" இன்றளவும் நிலைத்து நிற்க காரணமாயிற்று. இதையே சித்தர்கள் அனைவரும் அடிப்படை எண்ணமாக கொண்டனர், நடை முறைப்படுத்தினர். அவர்களுக்குத்தான் எந்த எதிர்பார்ப்பும் கிடையாதே. தங்களுக்கு என்று எதையும் வேண்டாமல், கலியின் பாதிப்பினால் வழி தவறி செல்கிற மனிதனை, எத்தனை பெரிய தவறு செய்திருந்தாலும், மன்னித்தருள இறைவனிடம் வேண்டி, உத்தரவை பெற்றபின், "நாடி" என்கிற ஒரு முறையை உருவாக்கினர். ஆம்! இந்த உலகின் அத்தனை விஷயங்களையும் "ஓலைச்சுவடியில்" எழுதி வைத்தனர். ஒரு சில நாடிகளில் மட்டும் எழுதி வைக்காமல், வேண்டிக் கொள்கிறபோது எழுத்துக்களை தோற்றுவித்து, விஷயங்களை விளக்கினர். இந்த வகை நாடியை "ஜீவ நாடி" என்பர். எல்லா சித்தருக்கும் ஜீவ நாடி என்பது உண்டு. அதை கை வசம் வைத்திருக்கும் அந்தப் பெரியவரை நாடி சென்று கேட்கிற பொழுது, பிரச்சினைக்கான காரணத்தை விளக்கி, என்ன செய்தால் பரிகாரமாக ஆகும் என்பதையும் சொல்லி, அதை செய்ய வைத்து தனிப்பட்ட மனிதரை கரை ஏற்றி விட்ட நிகழ்ச்சிகள் இந்த பூமியில் ஏராளம்.
எத்தனையோ ஜென்மத்துக்கு முன்பு செய்த செயலால் சேர்த்து வைத்தக் கர்மவினை கூட மிக எளிதாக சித்தரால் கண்டிபிடிக்கப் பட்டுவிடும். ஆம் சித்தர்கள் முக்காலமும் உணர்ந்த ஞானிகள்.
அப்படிப்பட்ட ஜீவ நாடி ஒருவருக்கு கைவரப் பெறுவது என்பது மிக சாதாரணமான விஷயமல்ல. மகான்களை காண்பதே மிகப் பெரிய புண்ணியம். அதே மகானுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பது என்பது எத்தனை ஜென்ம புண்ணியம்! அப்படிப்பட்ட ஒரு புண்ணிய ஆத்மாவை நண்பனாக அடைவது என்பது, அதற்கு பின்னர் இந்த உலகில் நமக்கு எந்த பௌதீக வஸ்துவுமே தேவை இல்லை என்கிற நிலைக்கு கொண்டு வந்து விட்டுவிடும். அப்படிப்பட்டவரை, நல்ல நண்பனாக மட்டும் பார்க்காமல், குரு ஸ்தானத்தில் வைத்து கொண்டாடினால்! ஆம் அதற்கும் ஒரு குடுப்பினை வேண்டும். இறை அருள் வேண்டும். சித்தர் வழிநடத்தல் வேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு நண்பரின் தொடர்பினால் ஏற்பட்ட நட்பில், அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட நல்ல விஷயங்களை, இங்கே "சித்த மார்க" தேடலில் முனைந்து இருக்கும் சித்தர் அடியவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்கிற எண்ணத்தில் தர நினைத்த போது உருவானது தான்
"சித்தன் அருள்"
என்கிற தொகுப்பு. இந்த தலைப்பை கூட அகத்தியப் பெருமானே எடுத்துக் கொடுத்தார், என்பதே உண்மை.
எங்கள் நட்பை ஒரு போதும், பிறர் புரிந்து கொள்கிறபடி நாங்கள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. ஒரு ஆழமான தெளிவு அதில் இருந்தது. என்னை முழு உரிமையுடன் "டேய்" போட்டு கூப்பிடுகிற அளவுக்கு அது இருந்தது. ஆனால் அப்படி கூப்பிடுவது கூட ஒருவரை மிக தாழ்வாக கருதுவது போல் ஆகிவிடும் என்று நினைத்து மிக மரியாதை கொடுத்துதான் பேசுவார் அவர். அதுவே அவரிடம் எனக்கு மிகுந்த மரியாதையை வளர்த்தது. மேலும் அவர் உருவில் தனியாக இருந்தாலும், அரூபமாக, அவர் வாக்கில் அகஸ்திய சித்தரே அவருடன் எப்போதும் உள்ளார் என்று பல முறை உணர்ந்திருக்கிறேன். அது தான் உண்மையும் கூட. தனக்கு பெயர் வர வேண்டும் என்றோ, புகழ் வேண்டும் என்றோ ஒரு நிமிடம் கூட நினைக்காதவர். எல்லோரும் சித்தரை கொண்டாடுங்கள் என்று தான் கூறுவார். என்னவோ தன் வாழ்க்கை கூட, அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்து கிடப்பதே என்று நினைத்து வாழ்ந்தவர். அடுத்த நிமிடத்தை பற்றி கவலைப் படமாட்டார். எல்லாம் அகத்தியர் பார்த்துக் கொள்வார் என்று திடமாக நம்பியவர். அவரைப் பார்த்து, அவர் சொன்னதை தெளிவாக கேட்டு, உணர்ந்து, வாழ்க்கையை செம்மையாக மாற்றிக்கொண்டேன், நான். என்னுள் அவர் கொண்டு வந்த மாற்றங்கள், அவரை ஒரு குருவாக ஏற்க வைத்தது. இன்றும் அவர் என் மானசீக குருதான்.
ஒரு முறை பேசும் போது "இந்த உடலை பற்றி நான் கவலைப்படவே இல்லை! அதனால் என்ன நடந்தாலும் யாரும் வருத்தப்படவே கூடாது. எல்லாம் அகத்தியர் பார்த்துப்பார்" என்றார்.
என்னவோ நடக்கிறது, என்னவோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த நான் "என்ன! இப்பொழுது இந்த வார்த்தை?" என்றேன்.
அப்பொழுது மடைதிறந்த வெள்ளமென பிறர் அறிந்திராத பல விஷயங்களை என்னிடம் கூறினார். நிறையவே புரிந்து கொள்ள முடிந்தது. எதுவும் நம் கையில் இல்லை என்று. அனைத்தையும் தீர்மானிப்பது இறைவன் செயல். முடிந்த அளவுக்கு வாசனைகளை களைவதே நல்லது என்று உணர முடிந்தது. கூடவே, அவரின் உறவினர் வழி ஒரு தொகுப்பை கொடுத்துவிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு "இது உன்னிடம் இருக்கட்டும். அகத்தியருக்கு சேவை செய்கிற பாக்கியம் என்றேனும் உனக்கும் கிடைக்கலாம். நானும் வேண்டிக் கொள்கிறேன். உன் கர்மாவை, அதில் இருக்கும் வாசனைகளை களைய அகத்தியப் பெருமானால் முடியும். பத்திரமாக வைத்து உபயோகப் படுத்திக்கொள்" என்றார்.
மிகுந்த யோசனையுடன் அவர் கொடுத்த விஷயங்களை வாங்கி வைத்துக் கொண்டேன். கிடைத்ததை பார்த்தால், அதில் ஒன்று தற்போது முடிந்து போன "பெருமாளும் அடியேனும்" தொடரின் நிகழ்ச்சிகள். ஆனால், அது நிறைவு பெறாமலேயே இருந்தது.
"இப்படி நிறைவு பெறாமலேயே இருக்கிற ஒரு விஷயத்தை என்னிடம் தந்தால், நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டேன்.
"ஹ்ம்ம். தவறான கேள்வி. ஏன் அது இத்துடன் நிறுத்தப் பட்டது? மீதியை எப்போது கொடுப்பார் அகத்தியர்? என்று கேட்டிருக்கவேண்டும்" என்றார் என் நண்பர்.
"உண்மைதான். நாடியில் அகத்தியர் வந்து சொன்ன இத்தனை விஷயங்கள் எதனால் திடீரென்று நின்று போனது?"
"ஆறு மாசமாச்சு! உத்தரவு வந்து. எங்கும் உபயோகிக்கப்பட்ட என் பெயரை, இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்று குருநாதரின் உத்தரவு? அதை மெதுவாக மறக்க தொடங்க வேண்டும். எல்லோரிடமிருந்தும், எல்லாவற்றிலிருந்தும் விலகி நில்! என்கிறார்."
அகத்திய பெருமானின் உத்தரவை கேட்டதும், சற்றே அதிர்ந்து போனாலும், அதை மறைத்துக் கொண்டு ஒரு கேள்வியை திருப்பிக் கேட்டேன்.
"விரிவாக என்னிடம் கூறலாம், என்றால் விளக்குங்களேன்!" என்றேன்.
"ஏழு மலைக்கு பெயர் வந்த சூழ்நிலையை அகத்தியர் நாடியில் வந்து விளக்கத் தொடங்கினார். ஐந்து மலை வரை வந்தாகி விட்டது. ஆறாவது மலை பற்றிய நிகழ்ச்சிகளை எதிர் பார்த்து காத்திருந்தேன். தினமும் நாடி வைத்து வேண்டிக் கொண்டபின், அதில் அகத்தியப் பெருமான் கூறியதை நகல் எடுப்பது என் வேலை. அன்றும் அகத்தியர் நாடியில் வந்து பேசக் காத்திருந்தேன். எப்போதும் வேண்டிக் கொண்டவுடன் பேசுகிற அவரை, காணவில்லை. ஆம்! நாடியில் வரவில்லை. ஏதோ நடந்திருக்கிறது அல்லது நடக்கிறது. அதனால் தான் அவர் வரவில்லை என்று நினைத்து நாடியை பூசை அறையில் ராமர் பாதத்தில் வைத்துவிட்டு, இயல்பாக வெளியே வந்துவிட்டேன்."
"மூன்று நாட்களாகியது. இப்படி சொல்லாமல், கொள்ளாமல் அகத்தியர் தவிக்க விட்டதே இல்லை. நான் என்ன தவறு செய்தேன் என்று கூட யோசித்துப் பார்த்தேன். எதுவும் ஞாபகத்துக்கு வரவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல், அகத்தியரை நினைத்து த்யானம் செய்யத் தொடங்கினேன்."
"பொதுவாக, அகத்தியர் வந்து வாக்கு உரைக்கவில்லை என்றால், ஏன்? என்று கூட கேட்க, உண்மையாகவே எனக்கு துணிவு கிடையாது. அவரே மௌனமாக இருந்துவிட்டதால், வராததால், மிச்சம் இருந்த கொஞ்சம் தைரியமும் கரைந்து போனது."
அது ஒரு வியாழக்கிழமை. குருவாரம் என்பதால், நிச்சயமாக அகத்தியர் அருளுவார் என்று நம்பிக்கையுடன் அவரை தியானித்து, பூசை செய்து காத்திருந்தேன். அகத்தியப் பெருமான் நாடியில் வந்து பேசலானார். எனக்குள் மிகுந்த சந்தோஷம்.
அகத்தியப் பெருமானே, மூன்று நாட்களாக தங்களை எதிர்பார்த்து, வேண்டிக்கொண்டு காத்திருக்கிறேன். தாங்கள் வரவில்லை. அடியேன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து, பொருத்தருள வேண்டும். இன்னும் இரு மலைகளின் நாமதேயத்தை சுற்றி நடந்த விஷயங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்!" என்றேன்.
வந்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.
"யாம் முன்னரே சொன்னபடி எல்லாவற்றிலிருந்தும், எல்லா மனிதர்களிடமிருந்தும் விலகி நில். உன் பெயரை மறக்க வேண்டும். முகம் மறக்க வேண்டும். இறைவன் தன் மலைகளின் நாம புராணத்தை விளக்குவதை இத்துடன் தடுத்து நிறுத்திவிட்டார். ஏன் என வினவியபோது, கைலாயப் பெருமானை சென்று வணங்கி கேட்டுக்கொள் என்று கூறிவிட்டார். உடனேயே கைலாயம் சென்றேன். அதனால் தான் வாக்குரைக்க வரவில்லை."
ஒரே குழப்பமாக இருந்தாலும், அகத்தியப் பெருமானுக்கு தெரியாததா? என்று அமைதியாக இருந்தேன்.
அவர் கூறலானார்.
"கைலாயத்தில் சிவபெருமானை கண்டு வணங்கி நின்றேன். ஆனந்தமாக இருந்தது. என்ன அகத்தியர்! இந்த நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் என்றார்.
"இறைவனை கைலாயத்தில் வந்து தரிசனம் செய்தாலே பெரும் புண்ணியமாயிற்றே! அதனால் தான் அடியேன் இங்கு வந்து சேர்ந்தேன், என்றேன்."
"கேட்க வந்த விஷயத்தை, அகத்தியர் சுற்றி வளைக்காமல் நேரடியாக கேட்கலாமே!" என்றார்.
"திருமலையின் சிறப்புக்களை பெருமாள் அனுமதியுடன் உலகறிய உரைத்து வந்தேன். திடீர் என பெருமாள் கொடுத்த அனுமதியை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். ஏன் இப்படி? என தாச விண்ணப்பத்துடன் கேட்ட பொழுது முக்கண்ணனை கண்டு விஷயத்தை அறிந்து கொள் என்றார். ஆதலால் இங்கு ஏகினேன். அடியேனுக்கு அருள் கூர்ந்து வழிகாட்ட வேண்டும்" என்றேன்.
"நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தனின் விதி முடிகிற காலம் வந்துவிட்டது. அவன் திரும்பி வரவேண்டிய காலம் நெருங்குகிறது. ஆதலால், ஏழுமலையான் தன் உத்தரவை திருப்பி வாங்கி கொண்டுவிட்டார். அதனதன் விஷயங்கள், விதிப்படி தானே நடக்கும்." என்றார்.
"அடியேனின் ஒரு விண்ணப்பம். பூமியில் மனித குலம் தர்மத்தின் வழி சென்று, இறையை அடைய, நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. அதற்காக, இந்த மைந்தனை தெரிவு செய்துள்ளேன். இன்னும் ஒரு தசவருடம் மைந்தனின் ஆயுளை நீட்டி தரும்படி எம்பெருமானிடம் வேண்டிக்கொள்கிறேன்" என்றேன்.
அதற்கு எம்பெருமான் "இல்லை அகத்தியா! இவன் விதியை மாற்றுவதாக எமக்கு எண்ணமில்லை. அவன் வந்து சேர்ந்துதான் ஆகவேண்டும். நீ சென்று வா. காலம் உன் செயல்களுக்கு உதவி செய்யும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். எத்தனையோ முறை வேண்டிக்கொண்டும் அவர் மனம் மாறுவதாக தெரியவில்லை.
"நடப்பதெல்லாம் இறைவன் செயல், எனக்கு கூட புத்திரபாசம் இருக்கிறதோ?" என்ற கேள்வியுடன் கைலாசத்தை விட்டு வந்துவிட்டேன். ஒரு மனிதனாக இருக்கும் உனக்கு, இது நிச்சயமாக சலனத்தை ஏற்படுத்தலாம். தாக்கத்தை உருவாக்கலாம். எல்லாவற்றின் மீதும் உள்ள பற்றை விட்டுவிடு. சரியான தருணத்தில், யாம் வந்து அழைத்துச் செல்கிறோம்" என்று கூறி அமைதியாகிவிட்டார் அகத்தியர்.
சொன்னது எல்லாம் பேரிடியாகி உள்ளே இறங்கினாலும், மனதை கல்லாக்கிக்கொண்டு நண்பரிடம் வினவினேன்.
"சரி! என்று? எத்தனை நாட்களில்? எப்படி? எப்பொழுது? என்பதை அகத்தியப் பெருமான் கூறினாரா?" என்றேன், சிறு பதட்டத்துடன்.
சற்று புன்னகைத்தபடி, "என்ன? நீயும் சாதாரண மனிதனாக இருக்கிறாய்? அப்படிப்பட்ட முகூர்த்தத்தை அவர் தெரிவிப்பாரா? அது இறைவன் சித்தமாயிற்றே! போய் அமைதியாக இரு! உன்னிடம் தந்தவற்றை பத்திரமாக வைத்துக்கொள். அகத்தியப் பெருமானுக்கு சேவை செய்யும் பாக்கியம் உனக்கும் கிடைக்கும். அதை கெட்டியாக பிடித்து கொண்டு, மேலேறி வந்துவிடு. பிறகு பார்க்கலாம். சென்று வா" எனக்கூறி விடை பெற்றார், அகத்தியர் மைந்தன்.
அவர் மெதுவாக திரும்பி நடந்து செல்வதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன். அதுவே கடைசியாக சந்தித்ததும், பார்த்ததும்.
கிடு கிடுவென நாட்களும் ஓடியது. நிறைய மாற்றங்களும் அவர் உடல் நிலையில் வந்தது. ஒரு சில நாட்கள் மருத்துவ மனையில் சிகிர்ச்சை அளித்தும், பலனின்றி, அவர் ஆத்மா நல்ல முகூர்த்தத்தில், உடலை விட்டு பிரிந்தது..................
நான் அதிர்ந்து போய் அமர்ந்துவிட்டேன். ஒரு வாரத்துக்கு மேல் யாரிடமும் பேசவில்லை. எதுவும் செய்யவில்லை. தினப்படி செய்கிற விஷயங்கள் கூட நின்று போனது. எதிலும் சிறு துளி கூட விருப்பமில்லாத நிலை. அமைதியாக அமர்ந்து அகத்தியர் படத்தை பார்த்தபடி இருந்தேன். மிகப்பெரிய இழப்பு என்ற உணர்வு வரவே, மொத்தமாக இடிந்து பெயர்ந்து போன நிலை.
என்னை சுற்றி யார் யாரோ வந்து போகிற மாதிரி உணர்வு வந்தது. யாரென உணரவில்லை. என்னென்னவோ பேசுவது கூட கேட்டது.
" மனித பிறவியெடுத்தவர்களுக்கு இது நிச்சயம். இதை விட்டு வெளியே வா! இன்னும் இது போல் நிறையவே நடக்கும். அனைத்தையும், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டு, உனக்கு விதிக்கப்பட்ட கடமையை பற்றின்றி செய்!" என யாரோ காதருகில் வந்து மிக சன்னமாக கூறினார்கள்.
தலை குனிந்து, கண் மூடி த்யானத்தில் அமர்ந்திருந்த என் தலைக்குள் இந்த செய்தி தெளிவாக கேட்டது. உடன் கண் திறந்து வலது பக்கம் பார்த்தேன். ஏதோ ஒரு அதீத சக்தி, காற்றாய் வந்து சொல்லிவிட்டு மெதுவாக விலகி சென்றது போல் உணர்வு ஏற்பட்டது. என் நண்பரா? சித்தனா? அகத்தியரா, கூறி சென்றது யார் என்று புரியவில்லை.
சற்று நேர அமைதிக்குப்பின், நடந்த விஷயங்களை மறுபடியும் யோசித்து பார்த்து "சரி! யாரோ துணை இருக்கிறார்கள்! சொன்ன படியே நடந்து கொள்வோம்" என தீர்மானித்து, இயல்பு நிலைக்கு வர தீர்மானித்தேன். இருப்பினும் உள் அமர்ந்த சோகம் விலக சிறிது நாட்களாகியது.
ஒருநாள், காலை த்யானத்தில் எதோ ஒரு உணர்வு உந்த, ஒரு விண்ணப்பத்தை தெரிவித்தேன், அகத்திய பெருமானை நினைத்து.
"என் நண்பர், நிறையவே என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவை அத்தனையையும் இந்த உலக மக்கள் தெரிந்து கொள்ள வெளியிட அனுமதி வேண்டும். என் நண்பரின், அகத்தியரின் புகழ் எங்கும் பரவ வேண்டி மட்டும் தான் இதை கேட்கிறேன். அடியேனுக்கும், உங்கள் இருவருக்கும் ஏதேனும் சேவை செய்ததுபோல் இருக்கும். அதனால் வருகிற பெருமைகள் அனைத்தையும் உங்களுக்கே தாரை வாரத்துக்கு கொடுத்துவிடுகிறேன். ஏதேனும் சிறுமைகள் இருந்தால் அது அடியேனின் தவறாக நினைத்து மன்னித்தருளுக! இதற்கான அனுமதியை எதிர் பார்க்கிறேன்!" என்று கூறிவிட்டு, சொந்த விஷயத்தை பார்ப்பதற்காக வெளியே சென்று விட்டேன்.
எங்கெங்கோ அலைந்து, வீட்டு விஷயங்களை பார்த்து, வீடு திரும்பிய பொழுது மாலை நேரமாகிவிட்டது. நடந்து வரும் வழியில், "வீடு சென்று குளித்து த்யானத்தில் அமரவேண்டும்" என்று தோன்றியது.
அதன் படியே அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் "எமது ஆசிகள் உமக்குண்டு" என்று ஒலிக்க, யாரது அருள்வது என்று கண்மூடி பார்த்தால், அகத்தியப் பெருமான் வலது கரம் உயர்த்தி ஆசிர்வதித்தபடி நின்றிருந்தார்.
ஆனந்த அதிர்ச்சியில், எழுந்து நின்று, அவர் நின்ற திசை நோக்கி சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம் செய்தேன்.
"நலம் உண்டாகட்டும்" என்றார்.
"தாங்களே! அதற்கும் வழிகாட்டி, ஒரு தலைப்பு பெயரையும் சூட்டி விடுங்களேன்" என்றிட,
அவர் திருவாயால் அருளிய தலைப்பே
"சித்தன் அருள்"
சூட்ச்சுமமாக அனைவருக்கும் அதை உணர்த்தவே, அந்த தலைப்பை பின்னர் "அகத்தியப் பெருமானின் - சித்தன் அருள்" என்று தற்போதைய நடத்துனர் மாற்றினார்.
இதனால்தான், "பெருமாளும் அடியேனும்" திடீரென ஐந்து மலைகளின் நாமகரணத்துடன் நின்று போனது. பின்னர், வேறொரு சமயத்தில், பெங்களூரில் அகத்தியப் பெருமான் நடத்திய சத்சங்கத்தில் (திரு.கணேசன், தஞ்சாவூர் அவர்கள் வாசித்த நாடியில்) ஒரு அடியவர், "ஏழு மலையில், மீதமிருக்கும் இரண்டு மலைகளின் நாமகரண சரித்திரத்தை, எங்களுக்கு கூறக்கூடாதா?" என்று வினவியபோது, "காலம் கனியும் பொழுது, இறைவன் அனுமதி அளிக்கும் பொழுது, யாமே அதை பற்றி கூறுவோம். பொறுத்திருங்கள்" என்றார், அகத்தியர்.
அகத்தியர் அதை பற்றி கூறும் பொழுது, அதை கேட்கிற பாக்கியம் செய்தவர்கள், அதை கேட்டு அவர் அனுமதியுடன் அதை பதிவு செய்கிற அந்த புண்ணிய ஆத்மா யாரோ? தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் என் அவா. இந்த உலக மக்களுக்கு அந்த மலைகளுக்கு பெயர் வந்த போது நடந்த நிகழ்ச்சிகள் கிடைக்கவேண்டும்.
இறைவன் கனியும் வரை, அகத்தியர் அருளும் வரை காத்திருப்போம்.
சித்தன் அருளை இத்தனை நாட்கள் வளர்ந்து வர அகத்தியப் பெருமான் அருளியிருந்தாலும், அதன் வளர்ச்சியில் நிறைய அகத்தியர் அடியவர்கள் பங்கு பெற்றனர். ஒவ்வொருவரும் அவரவர் பங்கை ஒவ்வொருவிதத்தில் அளித்தனர். அத்தனை பேருக்கும், எனது பணிவான நன்றியை வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வலைப்பூவில் பங்கு பெற்று, தன் சித்திரங்களால் "சித்தன் அருளை" அழகுபடுத்தி இன்று வரை எனக்கு கூட உறுதுணையாக நின்றிருந்த திரு.சரவணனுக்கு, மனமார்ந்த நன்றியை, அகத்தியப் பெருமானின் ஆசிர்வாதத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போதைய வலைப்பூ நடத்துனரும், திரு சரவணனும் செய்த ஒரு கூட்டு முயற்சியாக இன்றைய படம் மிக சிறப்பாக வந்துள்ளது. "ராமருக்கு" பட்டாபிஷேகம் இருக்க, ஏன் வேங்கடவருக்கு அது போல் ஒரு ராஜ்ய பரிபாலன தர்பார் இருக்கக் கூடாது என்று நினைத்து இன்றைய படத்தை தொகுத்து தந்துள்ளார். அருமையாக, மிகச்சிறப்பாக வந்துள்ளது என்று தெரிவித்துக் கொண்டு, "சித்தன் அருளில்" நின்றும், உங்கள் அனைவரிடமிருந்தும், என்றைக்குமாக விடை பெறுகிறேன்.
அனைவரும் அகத்தியர், இறைவன் அருள் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன். வணக்கம்!
கார்த்திகேயன்