உண்மையிலேயே, இந்த நிகழ்ச்சியை அகத்தியப் பெருமான் தான் தன் அடியவர்கள் வழி நடத்தி எடுத்துக் கொள்கிறார் என்பது அன்று தெளிவாயிற்று.
3-4 அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து பெருமாள், தேசிகர் இவர்களின் அபிஷேக பீடத்தை தூக்கி வெளியே கொண்டுவந்து வைத்தனர். ஒரு சிலர் சேர்ந்து, பூசைக்கான பூக்களை எடுத்து அடுக்கி வைத்து கேட்கும் பொழுது எடுத்து கொடுக்க வரிசை படுத்தி வைத்தனர். ஒரு சிலர் சேர்ந்து, துளசி, ரோஜா பூ போன்றவற்றை ஆய்ந்து, அர்ச்சனை செய்வதற்கு ஏதுவாக பூ கூடையில் வைத்தனர். ஒரு சிலர் அபிஷேகத்துக்கு தேவையான பாத்திரங்களை மேடை மேல் கொண்டு வைத்து அதில், மடப்பள்ளியிலிருந்து நீர் பிடித்து வைத்தனர். ஒருவரிடம் இந்த இடத்தை கூட்டி சுத்தம் பண்ணிவிடுங்களேன் என்றிட, அதை செய்வதற்கும் பலர் போட்டியிட்டனர். இதற்குள் வந்திருந்த பக்தர்களின் எண்ணிக்கை 150ஐ தொட்டது. எல்லோரும், மிக அமைதியாக மேடைக்கு எதிர் புறத்தில் அமர்ந்திருந்தனர்.
உள்ளே சென்று, உற்சவ மூர்த்தியை எடுத்துவர திரும்பிய அர்ச்சகரிடம், ஒரு சிறிய பொருளை கொடுத்து "பெருமாள் பாதத்தில் வைத்து, பூசைகள் முடிந்ததும், என்னிடம் தாருங்கள்" என்றேன். அவரும் அதை வாங்கிச் சென்று, பெருமாள் பாதத்தில் வைத்தார்.
உற்சவ மூர்த்தி, இரு தாயார்கள், சக்கரம், சாலிகிராமம், தேசிகர் இவர்களின் அபிஷேக மூர்த்தங்கள் மேடைக்கு வந்து சேர்ந்தது. கோலம் போடப்பட்டு, கலச தீர்த்தம் வைத்து, தயாராக இருந்தது.
அர்ச்சகர், சங்கல்பத்துடன் பூசையை தொடங்க வேண்டி, என்னை அழைத்து, "யார் பேருக்கு சங்கல்பம் செய்ய வேண்டும்" என்றார். முன்னரே தீர்மானித்திருந்தபடி, "அகத்தியப் பெருமான்", அன்றைய நட்சத்திரம், திதி இவைகளை கூறி பூசையை தொடங்கச் சொன்னேன். அவரும், கடைசியாக "அகத்தியர் பக்த ஜன சபை" என்று ஒரு நாமத்தையும் சேர்த்து, அகத்தியர் அடியவர்களை பெருமை படுத்தும் விதமாக பூசையை தொடங்கினார்.
20 நிமிடத்தில் கலச பூசை நிறைவேற, அடுத்தது அபிஷேக பூசை தொடங்கப்பட்டது. அனைத்து அடியவர்களும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எல்லோருடைய மனதிலும் ஒவ்வொரு விதமான பிரார்த்தனை என்பதை, அவரவர் முகம் காட்டிக் கொடுத்தது.
பெருமாள் பாதத்தை பார்த்து, "எல்லோருக்கும் அருள் புரியுங்களேன்" என்று வேண்டிக் கொண்டேன்.
முதலில் விதவிதமான அபிஷேகம் செய்யப்பட்டது. கடைசியில்தான் கலச தீர்த்த அபிஷேகம்.
வாசனாதி திரவியங்கள் சேர்த்த தைலக்காப்பு பெருமாளுக்கும் தாயாருக்கும், தேசிகருக்கும், சக்கரத்துக்கும், சாலிக்ராமத்துக்கும் செய்யப்பட்டு, அதில் ஒரு சிறு பங்கு, அங்கு வந்திருந்த அனைத்து அடியவர்களுக்கும், உடலில் தேய்த்துக் கொள்ள, கையில் கொடுக்கப்பட்டது. இதே போல், திருமஞ்சனத்துக்கு உபயோகிக்கப்பட்ட, பெருமாள், தாயார் மார்பில் இருந்த மஞ்சள் கலவையும் எல்லோருக்கும் பின்னர் வழங்கப்பட்டது. [இது மிகப் பெரிய அரிய மருந்து, என்பதை, நானறிவேன்].
தேன், நெய், பால், தயிர், 128 மூலிகைப் பொடி, மஞ்சள், வாசனாதி திரவியங்கள், என பலவிதமான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அபிஷேக நேரத்தில், பெருமாளின் முகத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அதில் பல விதமான உணர்வுகள் வெளிப்படுவதை காண முடிந்தது. ஒரு முறை மூச்சு முட்டி, முகத்தை வழித்து விட்டு நிற்கிற குளிக்கும் குழந்தை போல், மறுமுறை, ஆனந்தமாக கண்ணை மூடி அபிஷேகத்தை அனுபவிக்கிற நிலை. ஒரு முறை கண்ணை திறந்து வைத்துக் கொண்டு "சரி! ஏற்றுக் கொண்டுவிட்டேன்" என்றும், உடனேயே அடுத்த அபிஷேகத்தில் பள்ளி கொண்டு, ஆனந்தமாக நீரில் சயனித்து இருக்கும் முக பாவம். என்னவென்று சொல்வது. இதை நேரில் கண்டுதான் உணரவேண்டும்.
அபிஷேகத்தின் பொழுது பலர் ஒன்று சேர்ந்து "புருஷ சூக்தம்" என்கிற மந்திரத்தை ஓதினார்கள். மிக ரம்மியமாக இருந்தது, சூழ்நிலை. அமைதியாக அமர்ந்திருந்த அகத்தியர் அடியவர்கள், இந்த சூழ்நிலையை மிகவே கவனமாக கவனித்து வந்தனர் என்பதற்கு, பின்னர் ஒருவர், பெருமாளின் அபிஷேகத்தின் போது, மாறி மாறி வந்த அவரின் முக பாவத்தை விளக்கிய பொழுதே புரிந்தது.
முதல் கட்ட அபிஷேகம் முடிந்து போன நிலையில், இரண்டாம் கட்டமாக கலச தீர்த்த அபிஷேகம் செய்யப்பட்டது. அமோகமாக, நாராயணா என்கிற நாமம் ஒலிக்க, பெரிய கலச தீர்த்தம் அபிஷேகத்துக்குப் பின் தீர்த்தமாக அனைவருக்கும் தலையில் தெளிக்கப்பட்டது.
அபிஷேகம் முடிந்து போனதால், திரை போடப்பட்டு, அலங்காரம் தொடங்கப்பட்டது. அரை மணி நேரத்தில் அலங்காரம் முடியவே, முதலில் மூலவருக்கு பூசையும், தீபாராதனையும் செய்யப்பட்டது. அத்தனை பேரும் அந்த சின்ன சன்னதிக்குள் செல்ல முடியாது என்பதால், அடியேன் வெளியே நின்று, ஒரு நிமிடத்தில் பெருமாளை எட்டிப் பார்த்து தரிசனம் செய்து கொண்டேன்.
தரிசனம் முடிந்து அனைவரும் வெளியே வர, உற்சவ மூர்த்திக்கு நிவேதனம் செய்யப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுக்கப்பட்டது. அமைதியும், ஆனந்தமும் ஒரு சேர, அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி நாராயணா என்கிற மந்திரம் உள்ளொலிக்க பெருமாளின் தரிசனத்தை பெற்றனர்.
வந்திருந்த அனைவருக்கும், சடாரி சார்த்தப்பட்டு, தீர்த்தம் கொடுக்கப்பட்டு, துளசி ப்ரசாதத்துடன் குங்குமம் அளிக்கப்பட்டது.
கோவில் நிர்வாகி, "பிரசாதத்தை உங்கள் ஆட்களை வைத்தே எல்லோருக்கும் கொடுத்து விடுங்களேன்" என்றார். முன்னரே, பிரசாதத்தை உள்வலம் வரும் வழியில் வைத்து கொடுக்கலாம் என்று தீர்மானித்திருந்ததால், ஒரு நான்கு அகத்தியர் அடியவர்களை தேர்ந்தெடுத்து வரிசையாக மேடைமேல் நிற்கச்சொல்லி, பிரசாத பாத்திரத்தை அடுக்கி வைத்தோம். ஒருவர் தட்டு கொடுக்க, மற்றவர்கள் வரிசையாக வந்து சென்ற அகத்தியர் அடியவர்களுக்கு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல் என விநியோகம் செய்தனர். இதனுடன் ஐந்தாவதாக நின்றவர், அகத்தியர் அடியவர்கள் கொடுப்பதற்காக வாங்கி வந்த "இனிப்பு பலகாரத்தை" கொடுத்தார். எனக்கோ ஆச்சரியம். எப்படி அகத்தியர் அடியவர்கள் தாங்களும் பங்கு பெற வேண்டும் என்ற அவாவில், இனிப்பை வாங்கி வந்திருக்கிறார்கள் என்று. எனக்கு அது தோன்றவே இல்லை. சரி அந்த பாக்கியத்தை அகத்தியப் பெருமான் அவர்களுக்கு உணர்வாக இருந்து கொடுத்துள்ளார் என்று புரிந்து கொண்டேன். ஆறாவதாக நின்ற ஒரு பெரியவர், தன் சார்பாக "லோபா முத்திரையுடன் அகத்தியப் பெருமான்" சேர்ந்திருக்கும் ஒரு சிறிய படத்தை அனைவருக்கும் கொடுத்தார். இதற்கிடையில், விநியோகம் தொடங்கும் முன்னரே, அர்ச்சகரிடம் அடியேன் கொடுத்து உள்ளே மூலவர் பெருமாளிடம் வைத்திருந்த அந்த சிறிய பொருளை வாங்கி, முதல் பரிசாக ஒரு "786" பதித்த ரூபாய் நோட்டை பெருமாளுக்கு கொடுத்து அவர் பாதத்தில் வைத்த பின், இரண்டாவதாக அர்ச்சகருக்கு ஒன்றை கொடுத்த பின், ஏழாவதாக நின்று கடைசியில், வந்திருந்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் "இது பெருமாளின் பரிசு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று கூறி கொடுத்தேன். அடியேனுக்கு பெருமாள் கொடுத்தது, இந்த சின்ன வேலைதான். அதிலேயே, திருப்தி வந்துவிட்டது.
அடியவர்கள் அனைவரும், மிக அமைதியாக, அன்பாக, வரிசையில் வந்து இவை அனைத்தையும் பெற்று சென்றனர். அனைவரும் சாப்பிட்டபின் தட்டை கோவிலுக்கு வெளியே எடுத்துச்சென்று, அதற்கான இடத்தில் விட்டு சென்றது, நம் மக்களுக்குள்ளும், சுத்தம், சுகாதாரம் என்கிற எண்ணம் நன்றாக பரவியுள்ளது, என்பது புரிந்தது.
வந்திருந்த பலரும், திரு.கார்த்திகேயன் வந்திருக்கிறாரா என்றுதான் விசாரித்தனர். அவர் வராததால் தப்பித்தார். இந்த வருட இந்த புண்ணிய தினத்துக்குப் பிறகு இப்படி ஒரு "பல முனை தாக்குதல்" போல "அகத்தியப் பெருமானின் சித்தன் அருளை" விட்டு விலகிவிடுவார் என்று அடியேன் நினைக்கவில்லை. அதற்கான காரணமும் நியாயமானது. அதை பற்றி பின் ஒருமுறை தெளிவாக விளக்குகிறேன். அவர் விலகிய செய்தியில் சற்றே செயலிழந்து நின்றதால்தான், இந்த இரண்டாம் பாகம் சற்று தாமதமாகிவிட்டது. உண்மையிலேயே மறந்தே போனது.
நிறைய அடியவர்கள், அடியேனிடமும் சற்று நேரம் பேசினார்கள். இதுவே பெரும் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டேன். அதிலிருந்து, அகத்தியப் பெருமானின் சித்தன் அருள், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் வேரோடி, உள் புகுந்து, நல்லவைகளை செய்துள்ளது என்று உணர முடிந்தது. அனைத்து பெருமையும், அகத்திய பெருமானுக்கும், திரு.கார்த்திகேயனையும் சாரும். அனைவரும் இறை அருள் பெற்று, இன்பமாக விலகி செல்ல 4 மணியாயிற்று.
எல்லாம் முடிந்த பின் ஒரு அசதி வந்தது பாருங்கள். உடல் வலிமை அனைத்தும் வற்றி போனது போல். அருகிலிருந்த ஒரு வீட்டில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துவிட்டு, அன்றைய தினம் "சனிப்பிரதோஷம்" ஆனதால், சிவபெருமானுக்கு வாங்கி வைத்த அபிஷேக பொருட்களை எடுத்துக் கொண்டு 5.30க்கு கோவிலுக்கு சென்றோம். அந்தக் கோவில் செவ்வாய்க்கான பரிகார தலம். மிகுந்த கூட்டம். வெளியே நின்று, ஒரு அடியவரிடம் வேண்டி, விலகி வழி தரச்சொல்லி, மெதுவாக எட்டிப்பார்த்துவிட்டு, பூசைக்கான பொருட்களை அங்கே அமர்ந்திருந்த பக்தர்கள் வழி உள்ளே கொடுத்துவிட்டேன்.
"சரி! உங்களுக்கும் மரியாதை செய்தாகிவிட்டது. ஏற்றுக் கொள்க! எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்" என வேண்டிக் கொண்டு, பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். ஒரு விஷயம் தெரியுமா? பெருமாள் கோவில் உள்ள ஊர்களில், சிவபெருமான் தான் "ஷேத்ரபாலகராக" இருக்கிறார். எந்த பெருமாள் கோவிலுக்கு சென்றாலும், ஆராய்ச்சி பண்ணி பாருங்கள். பக்கத்தில் எங்கேனும் ஒரு சிவலிங்கம் இருக்கும்.
இரவு 7.30க்கு நடை சாற்றி வீட்டுக்கு செல்ல வேண்டும் என பெருமாள் கோவில் அர்ச்சகர் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தால், அவசர அவசரமாக கோவிலுக்கு வந்தோம். அப்பொழுதும் ஒரு 50 பேர் நின்றிருந்தனர். உள்ளே பெருமாள் ஆனந்தமாக, அமைதியாக நின்றிருந்தார்.
அவரை பார்த்ததும் ஒன்றுதான் கேட்கத் தோன்றியது. "மழை இல்லை, நீர் இல்லை, ஏன் தாமிரபரணியே மெலிந்துவிட்டாள். இன்றைய பூசையை நீங்கள் ஏற்றுக் கொண்டதாக இருந்தால், இந்த குறைவை நிவர்த்தி செய்யக் கூடாதா?" என்றேன் மனதுள்.
இரவில் பூசை, தீபாராதனை, அதன் பிறகு சடாரி வைக்கப்பட்டு, துளசி குங்குமம் கொடுக்கப்பட்டு, சுண்டல் பிரசாதம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. சற்றே நேரத்தில், எந்த செயற்கை வெளிச்சமும் இன்றி, மறுமுறை கும்ப தீபம் காட்டி, நேத்ர தரிசனம் அனைவருக்கும் செய்து வைக்கப்பட்டது. நாங்கள் காத்திருந்தோம். பெருமாள் சார்பாக, பள்ளியறை பால் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. அதை அருந்தி பார்க்க வேண்டும். இந்த காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்தின் ருசியுடன், இப்படி ஒரு பாலா? என்று நம்மை திகைக்க வைக்கும்.
பூசை முடிந்து கருவறை திரையிட்டு மூடிய பின், சற்று நேரம் அர்ச்சகரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
"எல்லாம் திருப்தி தானே?" என்ற பொதுவான கேள்வியை கேட்டேன்.
அதற்கு அவர்,
"பெருமாள், இன்று ரொம்ப குளிர்ந்து போய், ஆனந்தமாக, அழகாக இருக்கிறேன் என்கிறார். இது போல் தினமும் எனக்கு பூசை ஏற்பாடு செய்தால், நான் தினமும் சந்தோஷமாக இருப்பேன்" என்றார்.
"அது சரி! வருடத்தில் ஒரு நாள் ஏற்பாடு செய்வதற்குள் எல்லோரும் படுகிற பாடு என்னவென்று அவருக்கு தெரியும். இதை தினமும் என்றால், அவ்வளவுதான். எதுக்கும், அவர் பெயரை "ப்ரஹன்மாதாவார்" என்கிற நாமத்திலிருந்து "நித்ய கல்யாண பெருமாள்னு" மாத்திக்கச் சொல்லுங்க!" என வேடிக்கையாக சொல்லிவிட்டு, என் வேண்டுதலை மறுபடியும் ஒரு முறை கூறிவிட்டு, கிளம்பினோம்.
மறுநாள், அதிகாலையில் தொடங்கிய மழை, யாரையுமே வீட்டை விட்டு வெளியே போகவிடாமல் செய்து, 24 மணிநேரம் திருநெல்வேலியை ஸ்தம்பிக்க வைத்தது என அதிர்ச்சி தரும் செய்தி வந்து சேர்ந்தது.
அகத்தியர் அடியவர்களே, உங்கள் பங்கினாலும், பிரார்த்தனையினாலும், அகத்தியப் பெருமானின் அருளாலும், இந்த வருட அந்த புண்ணிய தினம் மிக விமர்சையாக நடந்தேறியது. அதற்கு பரிசாக, உங்கள் அனைவருக்கும், இறை அருளையும், எனது பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டு,
மேலும் இது போல் நிறைய வழிகளை, நம் அனைவருக்கும், அகத்தியப் பெருமான் அருளட்டும், என்று வேண்டிக் கொண்டு, இந்த தொகுப்பை நிறைவு செய்கிறேன்.
நமஸ்காரம்.
சித்தன் அருள் ................ தொடரும்!
it was well organised.om agatheesaya namaha
ReplyDeleteOm Bhruhan Madhvay Namah
ReplyDeleteOm Agatheesaya Namah
நாங்களும் நேரில் சென்று கண்டு வந்தது போன்று உள்ளது ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி.