“நாரதரே!” என்று அடிவயிற்றிலிருந்து கத்திய கலிபுருஷன் “இதைவிட ஒரு பச்சைத் துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கத்தினான்.
தன்னை எதுவும் செய்து விடுவானோ என்ற பயத்தில் நாரதருக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. மௌனமாகத் தலை குனிந்து நின்றார்.
“வேங்கடவன் எதுவும் செய்யமாட்டார், உன் இஷ்டப்படி என்ன வேண்டுமானாலும் செய், இனி பூலோகத்தில் உன் எதிர்காலம் கொடிகட்டிப் பறக்கும் என்று என்னிடம் சொல்லி, என்னையும் தூண்டிவிட்டு, திருமலைக்குச் சென்று வேங்கடவனிடமும் தூண்டிவிட்டு என்னைக் கேவலப்படுத்தி விட்டீர்களே”
என்று கலிபுருஷன் பூமியில் ஓங்கி அறைந்து சொன்னபோது நாரதர் ‘கடகட’ வென்று சிரித்தார்.
“செய்வதையும் செய்துவிட்டு என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு?” என்றான் கலிபுருஷன்.
“ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டம் என்பதை மிக நன்றாகவே எடுத்துக் காட்டுகிறாய் என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது கலிபுருஷா!” என்றார் நாரதர்.
“என்ன சொல்கிறீர் நாரதரே!”
“எதிர்காலம் இனி கலிபுருஷன் கையில்தான் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால் கலிபுருஷனுக்கு என்மீது நம்பிக்கை இல்லை. அதை நினைத்துத்தான் சிரித்தேன். ஆத்திரம் உன் கண்ணை மறைக்கிறது என்பதையும் புரிந்து கொண்டேன். உன்னை இனியும் என்னால் திருத்த முடியாது.”
“நாரதர் சொல்வது எதுவும் எனக்குப் புரியவில்லை.”
“எப்படிப் புரியும்? உனக்குத்தான் ஆத்திரம் கண்ணை மறைக்கிறதே!”
“என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு நல்வழி காட்டுங்கள்!”
“இப்போது நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது. உன் வேலையை மட்டும் தொடர்ந்து செய். வேங்கடவனைப் பற்றிக் கவலைப்படாதே! உன்னால் இந்தப் பூலோக மக்கள் அனைவரும் மாறவேண்டும். மதத்தின் பெயரால் கலவரத்தை உண்டு பண்ணு. மனிதர்கள் பேசும் மொழியால் பேதத்தை ஏற்படுத்து. எந்த ஊரில் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களோ அங்கு சென்று விரோதத்தை உண்டாக்கு.”
“தாங்கள் சொல்வது நியாயம்தான். அதைத்தான் செய்யவிடாமல் தடுக்க வேங்கடவன் ஓடிவந்து விடுகிறாரே”
“எத்தனை நாளைக்கு திருமலைவாசன் வருவார்? அவரால் முடியாது. காட்டுத் தீயைப் பற்றவைப்பது போல் நீ ஓரிடத்தில் நிற்காமல் ஊர்முழுதும் ஒவ்வொரு கிராமம் தோறும் ஓய்வில்லாமல் உனக்கிட்ட பணியைச் செய். வெற்றி உனக்குத்தான்”
“சரி! இப்பொழுது வேங்கடவன் மழையைப் பொழியவைத்து இந்தக் கிராமத்து வறுமையைப் போக்க வந்திருப்பது போல் நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் என்னைப் பின் தொடர்ந்து வந்தால் நான் எப்படி என் கடமையைச் செய்யமுடியும்?”
“நியாயம்தான். ஆனால் ‘எறும்பு ஊரக் கல்லும் தேயும்’ என்பதை நீ மறந்து விட்டாய் சிறிதுகாலத்திற்குத்தான் வேங்கடவன் துணைக்கு வருவார். பிறகு அவரே விலகிவிடுவார்.”
“எப்படி நாரதரே?”
“பூலோக மக்களுக்கு உன் பலத்தால் தெய்வ நம்பிக்கை படிப்படியாகக் குறையும். பின்னர் கோவிலுக்குச் செல்லமாட்டார்கள்”
“அப்படியா?”
“கோவிலுக்குச் செல்லாவிட்டால் இறைவனின் கருணையும் அவர்களுக்குக் கிடைக்காது. கருவறை இருண்டு விட்டால் தெய்வம் அங்கிருந்து விலகிவிடும். அப்போது உன் ஆட்சி மலரும்.”
“இது நடக்குமா நாரதரே?”
“அதற்காகத்தானே நீயே பிறப்பெடுத்திருக்கிறாய்! அதுமட்டுமா? இன்னும் போகப்போக கோவிலில் ஆறுகால பூஜையே நடக்காது. கோவில் சொத்துகள் கொள்ளையடிக்கப்படும். அர்ச்சகர்கள் பக்தி இல்லாமல் தீட்டு கலந்துதான் செயல்படுவார்கள்”
“சபாஷ்! எனக்கு அதுதான் வேண்டும்”
“இன்னும் இருக்கிறது கலிபுருஷா! எதிர்காலத்தில் நீ தூவும் விஷமானது முதலில் கோவில்களைத்தான் தாக்கும். ஏன் பிற்காலத்தில் கோவில் சிலைகளைத் திருடி விற்கும் காலம் கூட வரும்.”
“அப்படிக் கூட நடக்குமா நாரதரே?”
“எல்லாம் உன் திருவிளையாடல்தான். இதெல்லாம் என் கண்ணுக்கு இப்பொழுதே மிக நன்றாகத் தெரிகிறது கலிபுருஷா!”
“நாரதரே! நான் நிச்சயம் உங்கள் வாக்கை நம்புகிறேன். இப்படி நடந்தால் எனக்கு அதைவிட வேறு மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. ஆனால்...”
“என்ன ஆனால்?”
“எனக்கு எதிராகச் செயல்படத்தான் திருமலையில் வேங்கடவன் தோன்றியிருக்கிறார். அப்படியிருக்க என் எண்ணம் எப்படி நிறைவேறும் என்றுதான் திடீரென்று சந்தேகம் வருகிறது. தாங்கள் இப்படிக் கேட்டதற்காக கோபித்துக் கொள்ளக் கூடாது. என் மீது சந்தேகப் படவும் கூடாது.” என்று பவ்வியமாகப் பேசினான் கலிபுருஷன்.
இதைக் கேட்டதும் மறுபடியும் சிரித்தார் நாரதர்.
“கலிபுருஷா! உன்னைத் திருத்தவே முடியாது. இவ்வளவு சொல்லியும் நீ என்னை நம்ப மறுக்கிறாய். ஒன்று செய். இந்த பூலோகத்தில் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தெய்வபக்தி அதிகம். அவர்களுக்கு பக்தியை வரவிடாமல் கெடுத்துவிட்டால் போதும். நான் சொன்னது பொய்யா? உண்மையா? என்று புரியும்.” என்றார்.
“இதை எப்படிச் செய்வது?”
“கலிபுருஷா! இதையெல்லாம் சொல்லித் தருவது என் வேலையில்லை. வழியை மட்டும் காட்டி விட்டேன். மற்றது உன் பொறுப்பு” என்று நழுவினார் நாரதர்.
கலிபுருஷனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கண்ணை மூடிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.
அகஸ்தியப் பெருமான் திருமலையில் தியானம் செய்து கொண்டிருந்தாலும், நாரதர்- கலிபுருஷன் பேச்சு வார்த்தை ஞானக் கண்ணால் நன்றாகத் தெரிந்தது. மனத்துக்குள் சிரித்துக் கொண்டார்.
நாரதரால் எப்படி இவ்வளவு அழகாக நடிக்கத் தெரிகிறது? எப்படி கலிபுருஷனின் கோபத்தைத் திசை திருப்பி விட்டார்? கலிபுருஷனை யோசிக்கவே வைக்காமல் பேசி ஜெயித்து, தானும் கலிபுருஷனின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பி விட்டாரே! என்று யோசித்தார் அகஸ்தியர்.
அதே சமயம்-
வானத்தில் கருமேகம் சூழ்ந்தது. இடியும் மின்னலும் கண்ணையும் காதையும் பாதிக்கும் அளவுக்கு இயற்கை விஸ்வரூபம் எடுத்தது. கடந்த சில வருடங்களாக வானம் பார்த்து ஏங்கிப் போன பூமி மழையால் நனைந்தது. காய்ந்த பூமி தண்ணீருக்குள் மூழ்கியதால் பூமியின் வெப்பம் குறைந்தது.
இந்த மழை குறிப்பிட்ட அந்தக் கிராமங்களில் மட்டும்தான் பெய்ததால் எல்லாருமே மிகவும் ஆச்சரியப்பட்டனர். வேங்கடவன் கருணையால், இயற்கை செழிக்க ஆரம்பித்து விட்டதால் அந்தக் கிராம மக்களுக்கு தெய்வ நம்பிக்கை மேலும் அதிகமாயிற்று.
கலிபுருஷனின் பேச்சைக் கேட்டு மாறாக நடந்தவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். ஊர் மக்கள் அப்படிப்பட்ட மக்களை ஊருக்குள்ளே இருக்கக்கூடாது என்று விரட்டவும் ஆரம்பித்தனர்.
கலிபுருஷனுக்கு மனம் மறுபடியும் சங்கடப்பட்டது.
இருந்தாலும் தன் பேச்சைக் கேட்டு நம்பிச் செயல்பட்டவர்கள் இனி இந்தக் கிராமத்தில் இருந்தால் அவர்களை வேறு விதமாகப் பாதிக்கும் என்றெண்ணி அவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, தன்னோடு அழைத்துக் கொண்டு வேறு கிராமத்திற்குச் சென்றான்.
அந்தக் கிராமத்து மக்களைத் தன் பக்கம் திசை திருப்ப என்ன செய்யலாம்? என்று யோசித்த கலிபுருஷன், தன்னோடு அழைத்து வந்த தெய்வபக்தி இல்லாதவர்களைக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தான். அவர்களுக்கு ‘சாமி’ வருவது போல் வரவைத்தான்.
தன்னையுமறியாமல் அவர்களுக்கு சாமி (அருள்) வந்தால் அதைவைத்துக் கொண்டே தேவையில்லாத அவதூறுகளைப் பொதுமக்களிடம் எதிருக்கு மாறாகப் பரப்பினான். இதை அறியாத அந்தப் புதிய கிராம மக்கள் தெய்வம்தான் இப்படி சாமியாட்டம் ஆடி அத்தனையும் சொல்கிறதோ என்று நம்பினார்கள்.
அதன் காரணமாக அதுவரை அமைதியாக இருந்த இந்தக் கிராமத்தில் ஜனங்கள் ஒருவர்க்கொருவர் அடித்துக் கொண்டனர். ஆடு மாடுகள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக் கொள்வது போல் மோதிக் கொண்டனர். அதனால் ரத்தக் களரி ஏற்பட்டுவிட்டது. யார் என்ன சொன்னாலும் யாரும் கேட்கவில்லை.
மாறாக தெய்வத்திற்கு இணையாக தாயார் ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட்ட பெண்கள் பலர், பலபேர் முன்னிலையில் மானபங்கம் செய்யப்பட்டனர். வரலாற்றில் இப்படிப்பட்ட சம்பவம் இதுதான் முதல்முறையாக நடந்திருப்பதால் பெரியவர்கள் வாயடைத்துப் போனார்கள். எந்த வீட்டிலும் சந்தோஷக்களை இல்லாமல் போயிற்று.
மொத்தத்தில் அதுவரை சுபிட்சமாக இருந்த அந்தக் கிராமம் மோசமாயிற்று. தெய்வமே இல்லையா? இந்தக் காட்சியை இன்னமும் நாங்கள் பார்க்க வேண்டுமா? என்று ஏகப்பட்ட பேர் ஒன்றாகக் கூடி “சாந்தி ஹோமம்” ஒன்றைச் செய்வதற்காக ஏற்பாடு செய்தனர்.
அதைக்கண்டு கலிபுருஷன் நீண்ட நாள்கள் கழித்து ஆனந்தமாக சிரித்துக் கொண்டே சொன்னான்.
“இது கலிபுருஷனின் காலம். இனி இதுபோன்ற நிகழ்வுகள்தான் அடிக்கடி நடக்கும். இந்தக் கிராமத்தில் மட்டுமல்ல. இந்த பூமியெங்கும் நடக்கும். நீங்கள் நினைக்கிறபடி எந்தத் தெய்வம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி மீறி வந்தால் இந்த ஊர்க் கோவில்களில் தெய்வச் சிலைகளே இருக்காது. கோவிலும் தீப்பற்றி எரியும்” என்று சொன்ன கலிபுருஷன், “நாளைக் காலையில் நீங்கள் செய்யப்போகும் யாகத்திற்கு எந்தவிதப் பயனும் கிடைக்காது. ஏனென்றால் உங்கள் வேண்டுகோளைக் கேட்க தெய்வம் இந்தப் பூமியில் எங்கும் இல்லை.” எனவும் அறைகூவல் விட்டான்.
அசரீரி போல் கலிபுருஷனின் இந்தக் குரலைக் கேட்டு அத்தனை பேரும் அதிர்ச்சியாக உறைந்து விட்டனர்.
இருந்தாலும் “சாந்தி ஹோமத்தைச் செய்யாமல் விடக்கூடாது என்பதை மனத்தில் வைத்துக் கொண்டு விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்துவிடலாம். தெய்வம் நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்று திட்டமிட்டனர்.
விடியற்காலையில் உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் யாகசாலையை அமைக்க ஏற்பாடு செய்யும் பொழுது அந்த இடத்தில் தொடர்ந்து மாமிசத் துண்டுகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன.
என்ன செய்வது? என்று தெரியாமல் திகைத்தபோது “இதற்கும் மீறி யாகம் நடத்தினால் யார் யாகம் நடத்துகிறார்களோ அவர்கள் வாய்பேச முடியாமல் செயலற்றுப் போய் விடுவார்கள். இதற்குச் சம்மதம் என்றால் இங்கு சாந்திஹோமம் செய்யட்டும்.”
என்று கலிபுருஷன் எச்சரிக்கை விடுத்தான்.
இது யாகம் செய்ய வந்தவர்களை உச்சக்கட்டப் பயத்தில் கொண்டுவிட்டது. அவர்களுக்கு பேச வாயே வரவில்லை.
“என்னதான் நடக்கும் நடக்கட்டுமே” என்று துணிந்த மூன்று பேர் தெய்வ ஸ்லோகத்தை விடாது சொல்லிக் கொண்டு யாகசாலையைக் கட்டி முடித்தார்கள். சமித்துகளைக் கொண்டு அக்னியை மூட்ட நினைத்தபொழுது அக்னி எரியவில்லை. பலமாகக் காற்று வீசியதால் காற்றுக்குப் பயந்து பாதுகாப்போடு சமித்துக்கு அக்னியைப் பற்றவைத்தபோது-
கலிபுருஷன் தன் கையிலிருந்த மண்பானையிலிருந்த தண்ணீரை அந்த அக்னி குண்டத்தில் கொட்டினான். இதைக் கண்டு அந்த யாகம் நடத்த வந்தவர்களுக்கு துயரம் ஆறாகப் பெருகியது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கலிபுருஷன் கைதட்டி அட்டகாசமாகச் சிரித்தான்.
சித்தன் அருள்........................ தொடரும்!
No comments:
Post a Comment