​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 15 November 2023

சித்தன் அருள் - 1503 - அந்த நாள் - இந்த வருடம் -2023 - கோடகநல்லூர்! 1



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்த நாள் இந்தவருடம் என்கிற தலைப்பில், கோடகநல்லூரில், பச்சைவண்ண பெருமாளுக்கு, அகத்தியப்பெருமான், அடியவர்கள் சார்பில் நடத்துகிற அபிஷேக பூஜைகள் 26/10/2023 வியாழக்கிழமை அன்று அகத்தியப்பெருமானால் தீர்மானிக்கப்பட்டது!

25/10/2023 அன்றே கோடகநல்லூர் சென்று பெருமாளை சந்தித்து, தனிமையில் த்யானம் செய்யலாம் என்று கிளம்பி சென்றேன்.

அவ்வாறு கிளம்பும் முன், அடியேன் பூசை அறையில், அகத்தியப்பெருமானையும் சேர்த்து, அனைவரிடமும் உத்தரவு வாங்கும் பொழுது, மனதுள் உதித்த ஒரு கேள்வியை சமர்பித்தேன்.

திரு ஹனுமந்ததாசன் அவர்கள் வாசித்த ஜீவ நாடியில் வந்து வாக்குரைத்த நீங்கள், பச்சைவண்ணப் பெருமாள் இங்கு வந்து அமரும் முன் 6000 வருடங்களுக்கு முன்னரே யாம் இங்கு வந்து பூங்காவனம் அமைத்து, தவமிருந்தேன் என கூறினீர்கள். தாங்கள் இங்கு அமர்ந்து தவம் செய்ததிற்கு ஏதேனும், சாட்சியம் உள்ளதா? என கேட்டேன், பின்னர் மறந்தே போனேன்.

கடந்த 6 மாதங்களாகவே, அடியேனுக்கும், குருநாதருக்கும், சில பொது விஷயத்தில் ஜீவநாடியில் சரியான வாய் தகராறு. கேள்வி கேட்கும் பொழுது, ஒரு பயமுமின்றி தெளிவாக எந்த விஷயத்தை பற்றியும் கேட்டு விடுவது அடியேனின் குணம். கேள்வி கேட்டு அவரை ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது. அனைத்தும் அறிந்தவரானதால், எல்லாவற்றிற்கும் அவரிடம் பதில் இருக்கும். ஒரு நிலைக்குப்பின் பின்னர், எதுவுமே கேட்காமல் அமைதியாக விலகி நின்றேன். திரு.ஜானகிராமனோ, அடியேன் கேட்கும் கேள்விகளை குருநாதரிடம் கேட்க பயப்படுவார். அவர் திட்டினால், அடியேன் பெயரை சொல், நான் கேட்க சொன்னேன் என்று கூறு என்பேன். பின்னர் யோசித்த பொழுது, எதற்கு இந்த களேபரத்தை உருவாக்க வேண்டும், என தோன்றியது. அமைதியாகிப் போனேன், இனி குருநாதரே விரும்பி ஏதேனும் சொன்னால் மட்டும் கேட்டு கொள்ளலாம், நாமாக எதுவும் கேட்க வேண்டாம் என்று, ஒதுங்கிக் கொண்டேன்.

இப்படிப்பட்ட நிலையில்தான் "சாட்சியம்" கேள்வி மனதுள் உதித்தது. எதிர்பார்ப்பின்றி கேட்டு விட்டேன்.

புதன் கிழமை மாலை, 4 மணிக்கு கோடகநல்லூரில் இறங்கினேன். கோவில் திறக்கவில்லை. சிறிது நேரம் தாமிரபரணிக் கரையில் அமர்ந்திருக்கலாம் என்று மனைவியுடன் சென்றேன். தூரத்திலிருந்து பார்க்கும் பொழுதே நிறைய மண்மேடு தெரிந்தது. அப்படியென்றால், நீர் வரத்து மிக குறைவு என்று புரிந்தது. அருகில் சென்றதும் உண்மை என்று புரிந்தது. கால் கீழ் முட்டு வரையே நீர் சென்றது. எல்லா வருடமும், அந்தநாளுக்கு முன்னரே ஒரு நாள் வந்து பெருமாளிடம், நதியில் நீர் நிறைய வேண்டும் என விண்ணப்பித்து செல்வது அடியேனின் வழக்கம். இம்முறை, இந்த பக்கமே வராததினாலும், அகத்தியப்பெருமான் சொல்லட்டும் பின் பார்க்கலாம் என்று ஒதுங்கி நின்றதினாலும், விண்ணப்பம் சமர்ப்பிக்க மறந்து போனது. இருப்பினும், நதிக்கரையில் நின்று பெருமாளிடம் விண்ணப்பித்தேன், "நாளை உங்கள் குழந்தைகள் வருவார்கள், எல்லோரும் ஸ்னானம் செய்ய, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் கொடுக்க, இன்னும் சற்று நீர் வேண்டும். ஏதேனும் பார்த்து செய்யுங்கள்" என்றேன். பெருமாளும் ஆசிர்வதித்தார். [கீழ் முட்டு வரை இருந்த ஓடும் நீரின் உயரம், மறுநாள் காலை மேல் முட்டு வரை சென்றது.]

ஆற்றின் கரையில், மிக அமைதியான சூழ்நிலை. எதிர்கரையில், மயிலின் சப்தம், நிமிர்ந்து பார்க்க தோகை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. வானில் மழை மேகம். மனம் ஒன்றி அமைதியை நாட, குளிர்ந்த காற்றில் மௌனமானேன். நகர பேரிரைச்சல் வாழ்க்கையில் ஒருபோதும் கிடைக்காத சூழ்நிலை.

சற்று நேரத்தில் எழுந்து, கோவிலை நோக்கி நடந்தேன். முன் வாசல் திறந்திருந்தது. "வாருங்கள்! எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டபடி அர்ச்சகர் கோவிலில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சுருக்கமாக பேசிவிட்டு, உள்ளே எட்டி பார்க்க, கொடிமரம் வரைதான் போக முடியும். உள்ளே கதவு இன்னும் திறக்கப்படவில்லை.

பெருமாளை பார்க்கும் முன் கருடாழ்வாரை பார்த்து, நமஸ்காரம் சொல்லிவிடலாம் என்று நினைத்தேன். வெகு நாட்களுக்குப்பின் வருவதால் கொடி மரத்தின் முன் நமஸ்காரம் செய்தேன். கண்ணை மூடி தியானித்து  பின் கருடாழ்வாரை பார்த்துவிடலாம் என்று அடி எடுத்து வைக்க,

"யாம் இங்குதான் இருக்கின்றோம்!" என்று கூறுவது தெள்ளத் தெளிவாக செவியில் கேட்டது. மனம் திறந்திருந்தால், இது அகத்தியப் பெருமானின் வாக்கு என்று உணர முடிந்தது.

"அது சரி! எங்க இருக்கீங்கன்னு எப்படி தெரியும்?" என்று மனதுள் கேள்வி கேட்டேன்.

"கருடாழ்வாருக்கு விளக்குப் போட்டுப்பார்! எம்மை பார்க்கலாம்!" என்று பதில் வந்தது. விளக்கு போட திரி, எண்ணெய், தீப்பெட்டி, விளக்கு என எதுவுமே கையில் இல்லை. வெறும்கை வேங்கடவனாக நடந்தேன்.

கருடாழ்வார் சன்னதி முன் சென்று நின்ற பொழுது, அவரை நோக்கி கை கூப்பி "இது வந்துவிட்டது! அய்யனே! நமஸ்காரம்!" என கூறிவிட்டு, பார்வையை அங்கும் இங்கும் ஓட்டினேன்.

எரிந்து முடிந்த விளக்குகள் நிறைய இருந்தது. கருடாழ்வாருக்கு இருபுறமும், சிறு தூண் விளக்கு. இடதுபுற விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. எண்ணெய் இல்லாமல் அணையப்போகிற நிலை. வலது பக்க தூண் விளக்கில், எண்ணை விட்டு, திரி போட்டு விளக்கேற்ற தயார் நிலையில் இருந்தது. அந்த திரியை எடுத்து எதிர் பக்க விளக்கில் அக்னியை கடன் வாங்கி விளக்கில் சேர்க்க வெளிச்சம் மிக குறைவாக இருந்தது.

இன்னொரு நூல் திரி இருந்தால் நன்றாயிருக்குமே என்று தேட, அந்த விளக்கின் அடியில் ஒரு புது திரி கிடந்தது. அதை எடுத்து விளக்கில் சேர்த்து தீபத்தை தூண்டிவிட, உயர்ந்து வந்த ஜோதியின் முனையில், அதற்குப்பின் தூணில் ஒரு உருவம். கங்கைக்காக தவம் செய்த பகீரதனின் தவம் போல், ஒற்றைக்காலில், (இடது கால் வலது முட்டியில் வைத்து) ஜடா முடி விரித்துப்போட்டு, கைகளை தலைக்குமேல் சேர்த்து கூப்பி, ஒரு சித்தனின் உருவம். உடனே புரிந்தது, இது நான் கேட்ட "சாட்சி"க்கு குருநாதர் காட்டித்தரும் "அத்தாட்சி". உடனேயே அவர் காலை தொட்டு வணங்கினேன்.





"போதுமா?" என்றார்!

"போதும்! ஆனால் வருபவர் அனைவரிடமும் உங்களை காட்டிக் கொடுப்பேன். அனைவருக்கும் அருள வேண்டும்!" என்றேன்.

முதலில் அர்ச்சகரை கூப்பிட்டு "அகத்தியப்பெருமானை" காட்டிக் கொடுத்துவிட்டு, "தினமும், கருடாழ்வாருக்கு விளக்கு போடும் பொழுது, குருநாதருக்கு ஒரு விளக்கு போட்டு விடுங்கள்!" என்றேன். அருகில் வந்து, அகத்தியப்பெருமானை பார்த்தவர், "அட! இத்தனை வருடங்களாக இந்த கோவிலில் வேலை பார்க்கிறேன், இதுவரை நான் பார்த்ததே இல்லை. இதற்குமேல் என்ன சாட்சியம் வேண்டும்? இனி தினமும் விளக்கு அவருக்கும் சேர்த்தே போட்டுவிடுகிறேன்!" என்றார்.

இதற்குள், அர்ச்சகர் கதவை திறக்க, நாளைய பூஜைக்கு அகத்தியப்பெருமான் இன்றே வந்துவிட்டார் என்ற உணர்வுடன், பெருமாளை தரிசிக்க சென்றேன்.

இரவு பூசை முடிந்து, அர்ச்சகர் தந்த பிரசாதம், பெருமாள் பாதத்தில் சார்த்திய மஞ்சள்பொடி, பள்ளியறைப்பால் (மிக அருமை) போன்றவை பெற்றுக்கொண்டு, ஒரு துணிப்பை நிறைய தனத்தை "பெருமாள் பாதத்தில் வைத்துவிடுங்கள், நாளை மதியம் வாங்கிக்கொள்கிறேன்" என்று கொடுத்தேன். முதன் முறையாக, அடியவருக்கு கொடுக்க நினைத்த தனம் (786/354/108) ஒரு நாள் முழுவதும் பெருமாள் காலடியில் சென்று அமர்ந்தது.

மறுநாள், பூஜைக்கான விஷயங்களை அர்ச்சகரிடம் பேசிவிட்டு, விடை பெற்றேன்.

அடுத்த நாளுக்காக காத்திருந்தேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. I am very happy to see agathiyar aiya... because of you sir thank you....

    ReplyDelete
  2. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️ மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete
  3. ப்ருஹன்மாதர் சன்னதியில் அகத்திய பெருமான் திருவுருவ தரிசனம் பகிர்ந்தமைக்கு கோடி நமஸ்காரங்கள் நன்றிகள் அய்யா... வரலாற்று சிறப்பு மிக்க தகவல்..!.. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஓம் லோபாமுத்ராம்பிகா சமேத அகத்திசாய நமோ நம🙏🙏

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete