​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 November 2022

சித்தன் அருள் - 1216 - அகத்தியர் மைந்தனுக்கே பரீட்சை - 3


​[வணக்கம் அகத்தியர் அடியவர்களே! இதுவரை தொகுப்பை மூன்றாம் மனிதர் கூறுவது போல் பார்த்தோம். இனி குருநாதர் ஹனுமந்த தாசன் அவர்களின் நேரடி வாக்காக பார்ப்போம்.]

காலை பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, உடல் சுத்தி, மனசுத்தியுடன் த்யானத்தில் அமர்ந்தேன். அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது, அகத்தியர் இனி 48 நாட்களுக்கு நாடியில் வரமாட்டார் என்பது.

சரி, அவர் கூறியது போல் த்யானத்தில் சிறிது நேரம் அமர்ந்து பின் இயல்பாக வேறு ஏதேனும் படிக்கவோ, எழுதவோ செய்யலாம், அல்லது இளைப்பாரலாம் என்று நினைத்தேன்.

"ஓம் அகத்தீசாய நமஹ!" என்கிற ஜபம், இயல்பாக தானே உள்ளிலிருந்து வந்தது.

எவ்வளவு நேரம் அந்த த்யான நிலையில் அமர்ந்திருந்தேன் என்று தெரியவில்லை. திடீர் என கால நிலை மாறி, மழை பெய்வதற்கான அறிகுறியாக, தூரத்தில் மின்னல் அடித்து, இடி உருண்டு ஓடியது. மழை பலமாக பெய்யத் தொடங்கியது. மின்னல் அடித்த அடுத்த நொடியில் பலமான இடி ஒன்று தெருவில் விழுந்து ஓடவே, அதன் பாதிப்பு, த்யானத்தில் இருந்த என்னை தூக்கி வாரிப் போட்டது.

எப்படி த்யானம் செய்த இடத்தை விட்டு சற்று தள்ளி விழுந்திருந்தேன் என புரியவில்லை. மெதுவாக எழுந்து அமர்ந்து சுற்று முற்றும் பார்க்கவே, ஞாபகம் சற்று மழுங்குவது புரிந்தது. தலை சுற்றலும், உடல் மிக கனமாக மாறியதையும் உணர்ந்து, படுக்கையில் ஏறி அமர்ந்து, அசதியுடன் கண் அயர்ந்தேன், உறங்கிப்போனேன்.

இரண்டு மணிநேர உறக்கத்துக்குப்பின் கண் விழித்த போதும் ஏதோ உடல் உபாதை வந்தது போல் சக்தி அற்று இருப்பதை உணர்ந்தேன். மனதுள் ஓம் அகத்தீசாய நமஹ என்று ஜபம் ஓடிக்கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் காயத்ரி ஜபமும், பிராணாயாமமும் நிறைய அளவுக்கு உடல் அசதியை போக்கும். இதற்கு முன்னர் பல முறை அது கவசமாக நின்று காப்பாற்றியுள்ளது. அதை செய்வோம் என தீர்மானித்து ஜெபிக்க, முடிவில், உடல் நல்ல ஜுரம் வந்தது போல் கொதிக்க ஆரம்பித்தது.

அகத்தியர் இருந்திருந்தால், நாடியில் இது ஏன்? என்ன செய்ய வேண்டும் என கேட்டுவிடலாம். அவரும் இறை சேவை உள்ளது என சென்றுவிட்டார். நம் பிரச்சினையை நாம் தான் எதிர் கொள்ள வேண்டும். எதற்கும் அவரையே நினைத்துக்கொண்டு இருப்போம், என தீர்மானித்து, நண்பர் மருத்துவர் ஒருவரை அணுகினேன்.

அவரும் பரிசோதித்துவிட்டு, ரத்த அழுத்தம் நார்மல், ஜுரம் அதிகம், வாந்தி எடுத்தீங்களா? என்று கேட்ட அடுத்த நொடி, அவர் கிளினிக்கில் வாஷ் பேசினில் வாந்தி எடுத்தேன். காலை சாப்பிட்ட டிபனும் காப்பியும் நிறம் மாறி வெளி வந்தது.

"என்ன? சாப்பாடு சரியில்லை போல் இருக்கிறதே! ஏன் இந்த நிறம்? ஏதோ விஷம் கலந்து போல் நிறம் மாறிவிட்டதே?" என்றபடி மருத்துவர் முதுகை தடவிக் கொடுத்தார்.

"மாத்திரை தருகிறேன்! ஒரு மூன்று நாட்களுக்கு சாப்பிடுங்கள். வெறும் நீர் ஆகாரம் தான் சாப்பிடலாம். வயிற்றுக்குள் சென்றது அனைத்தும் வெளியேற வேண்டும்! பிறகுதான் சரியாகும்!" என்றார்.

உணவில் மிக கவனமாக இருப்பேன். அதுவும் இட்லி, தோசைதான் சாப்பாடு. அது எப்படி ஒவ்வாமைக்கு கொண்டு விட்டது என யோசிக்க தொடங்கினேன்.

உள்ளே சென்ற ஏதோ ஒன்றுதான் இந்த பாடு படுத்துகிறது. அனுபவித்து தீர்ப்போம் என்று தீர்மானித்து மருந்துடன் வீடு வந்து சேர்ந்ததும், தலை சுற்றியது. தொண்டை, நாக்கு, குடல் வயிறு என அனைத்தும் ஒரே நேரத்தில் எரியத்தொடங்கியது.

நாக்கு வறண்டது போல் இருக்கவே, எச்சிலை முழுங்க எத்தனிக்க அதுவும் தொண்டையில் நின்றது.

சரி! இனி என்னவெல்லாம் வரவேண்டியுள்ளதோ! இந்த நேரம் பார்த்து அகத்தியரும் இல்லை, என்று நினைத்தபடி கண் அயர்ந்தேன், உள்ளுக்குள் "ஓம் அகத்தீசாய நாம" என்ற ஜபம் மட்டும் தன்னிச்சையாக ஓடிக்கொண்டு இருந்தது. கனவில் ராமர், சீதை, லக்ஷ்மணர், அனுமன் வந்து சென்றார்கள். கைகூப்பியதும், மனம் அகத்தியரை அழைத்ததும் மட்டும் ஞாபகத்தில் இருந்தது.

படுக்கைக்கு அருகில் துளசி, சந்தன வாசனை அடித்தது! உறங்கிப் போனேன்!

சித்தன் அருள்...........தொடரும்!

3 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  2. அகத்தியம் பெருமானுக்கு அடியவனின் அன்பு வணக்கங்கள்... நலம் நலமே தொடரும்... தொடரட்டும் அய்யனே...

    ReplyDelete
  3. பாகவத்தில் வரும் யானை முதலை ஸ்ரீமான் நாரயணன்
    மாதிரி உள்ளது. விடிவுகள் சீக்கிரம் எல்லோருக்கும் வர வேணுமாய்
    பிராத்திக்கிறேன்.
    ஒம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே
    ஓம் லோபமுத்ரா சமேச மகான் அகத்தியாய நமஹ

    ReplyDelete