​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 November 2022

சித்தன் அருள் - 1214 - அகத்தியர் மைந்தனுக்கே பரீட்சை - 2


​சோதனைக்கு அனைவரும் உட்பட்டுத்தான் ஆகவேண்டும். சோதனை வைப்பது இறைவனாகவோ, குருவாகவோ இருக்கலாம். தன் மைந்தன் உண்மையிலேயே இறைவனை/குருவை முழுமையாக நம்பி வாழ்கிறானா என சோதிப்பதற்கு பலமான பரீட்ச்சை வைப்பார்கள். அது இவனால் இது முடியும் என உலகுக்கு உணர்த்தவே.

"சொல்லுங்கள் அனுமனே! தாங்கள் வந்த காரணம் என்னவோ? அடியேன் ஏதேனும் விதத்தில் உங்களுக்கு உதவ முடியுமா?" என்றார் அகத்தியப் பெருமான்.

"நல்லது! அடியேன் ராமபிரானின் உத்தரவின் பேரில் இங்கு வந்துள்ளேன். உன் மைந்தன் என்றாயே, அவனுக்கு குரு பக்தியா, இறை பக்தியா எது மேலோங்கி நிற்கிறது என சோதித்து வரும்படி ராமபிரானின் உத்தரவு." என்றார்.

"இவ்வளவு தானா. அதற்கு சோதனை ஏன் வைக்க வேண்டும். அடியேனிடம் கேட்டால் நானே சரியான பதிலை கூறிவிடுவேனே. அவனுக்கு குருவான அகத்தியப் பெருமானிடம் தான் பற்று அதிகம். எப்போதும் அடியேன் நாமத்தையே ஜெபித்துக் கொண்டே இருப்பான்." என்றார்.

"என்ன அகத்தியப் பெருமானே! அவன் என் தரிசனத்துக்குப்பின் ஸ்ரீ ராமனின் பெயரை மாற்றி, அனுமனின் தாசன் ஆக தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டவன். இதிலிருந்தே தெரியவில்லையா, அவனுக்கு என் மீது பக்தி அதிகம் என்று. ராமபிரான் கேட்ட பொழுது அவனுக்கு இறை பக்தி தான் முன் நிற்கும் என நானே கூறியிருப்பேன். இருந்தாலும் ஒரு சோதனையை செய்தபின் தெரிவிக்கலாம் என அவர் உத்தரவை சிரம் மேற்கொண்டேன்" என்றார்.

"உங்களுக்காக வேண்டுமானால், நானே வந்து ஸ்ரீராமனிடம் அவனுக்கு அடியேன் மீது தான் பக்தி அதிகம் என கூறிவிடுகிறேன், உங்களுக்கு சிரமம் இல்லை என்றால்!" என்றார் அகத்தியர்.

"என்ன அகத்தியரே சோதனையே வைக்காமல் எப்படி ஒரு முடிவுக்கு வர முடியும்! இது தெரிந்து தான் அடியேனுக்கு அனுமதி அளிக்கும் போது யாருடைய சான்றிதழையும் ஏற்க வேண்டாம். நீயே சோதனை செய்து வா, என ஸ்ரீ ராமன் உரைத்தார். எனக்கு உதவுவதாக எண்ணம் இருந்தால் ஒரு மண்டலத்துக்கு அவனை விட்டு விலகி இருங்கள். பேசவே கூடாது. அவனிடம் சென்று 48 நாட்களுக்கு இறைவன் முக்கியமான வேலையை தந்துள்ளார். அதற்காக போகிறேன். நாடியில் வர மாட்டேன்" என கூறிவிட்டு செல்லுங்கள். ஒரு மண்டலம் சோதனை செய்த பின், நானே நல்ல பதிலை உங்களுக்கு உரைக்கிறேன்"  என்றாரே பார்க்கலாம்.

அகத்தியப் பெருமானுக்கு இப்பொழுது அனைத்தும் விளங்கியது. தன்னை. தன் மைந்தனிடமிருந்து விலக்கி நிறுத்தி,  பேசவிடாமல் செய்து, அவனின் பக்தியை சோதிப்பது என்பது, ராமர் குழந்தையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி, உதவிக்கு ஆள் இல்லாத நிலையில், யாரை அழைக்கிறான் என்று பார்க்கிறார்.

"சரி! ராமதாசனே! ஒரு மண்டலம் விலகியே நிற்கிறேன். தாங்கள் எப்படி வேண்டுமானாலும் அவனை சோதித்துக் கொள்ளுங்கள். என் மைந்தன், என்னை அன்றி வேறு யாரையும் உதவிக்கு அழைக்க மாட்டான். இருப்பினும், அடியேன் நாடியில் சென்று இறைவன் உத்தரவால் ஒரு முக்கியமான வேலையாக செல்வதாக கூறிவிட்டு மௌனமாகி விடுகிறேன். ஒரு மண்டலத்துக்குப் பின் உங்களை சந்திக்கிறேன்! சோதனையின் முடிவு எப்படியாயினும், என் மைந்தனை ஆசிர்வதித்து செல்லுங்கள். அடியேன் விடை பெறுகிறேன்!" என்று கூறி நாடியில் வந்து, இறைவன் உத்தரவால் செல்கிறேன், 48 நாட்களுக்கு நாடியை ராமர் பாதத்தில் வைத்து விடு, எப்போதும் போல் தியானம் செய்து அமர்ந்திரு என செய்தியை கொடுத்த பின் அகத்தியர் நாடியில் நின்று மறைந்தார்.

என்ன அப்படி ஒரு அவசரம் அகத்தியப்பெருமானுக்கு? என்று யோசித்தபடி நாடியை கட்டி ராமர் பாதத்தில் வைத்துவிட்டு "அது தெய்வீக ரகசியமாக இருக்கும்! இல்லையென்றால் நம்மிடம் கூறியிருப்பாரே" என்று நினைத்தபடி, நடக்கப் போவதை அறியாமல், த்யானத்தில் அமர்ந்தார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

4 comments:

  1. 🙏🙇‍♂️ அகத்தீசாய நம நன்றி ஐயா

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ !! ஓம் அகத்தீசாய நமஹ !! ஓம் அகத்தீசாய நமஹ !!
    ஓம் அஞ்சனை மைந்தன் திருவடிகள் போற்றி !!
    ஜெய் ஸ்ரீ ராம் !! ஜெய் ஸ்ரீ ராம் !! ஜெய் ஸ்ரீ ராம் !!

    ReplyDelete
  3. appa saranam ammaiappa saranam

    ReplyDelete