​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 15 April 2017

சித்தன் அருள் - 643 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம்!


​​​​வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

அகத்தியப் பெருமானின் அருள்வாக்கை மனதுள் வாங்கி, அதுவே வாழ்க்கை என வாழ்ந்து வருகிற போது, அடியவர்களும் சோதனைக்குள்ளாக்கப் படுவார்கள். எந்த சோதனை வந்தாலும், அதனை ஒரு அனுபவமாக பார்க்க வேண்டும் என்ற அகத்தியரின் வாக்கு, தகுந்த சமயத்தில் நினைவுக்கு வர, அப்படியே ஆகட்டும் என தலை வணங்கி, ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை, பெற்ற ஒரு நிகழ்ச்சியை இங்கு தொகுத்தளிக்கிறேன். அனைத்தையும் கிளப்பிவிட்டு, நடத்தி, சோதனை பண்ணி, பொறுமைக்கு பரிசாக வேண்டுதலை ஆசிர்வதித்தனர். சித்தர்கள் நடத்துகிற நிகழ்ச்சியில், இறைவனும் பங்குகொண்டு தன்னை வெளிப்படுத்தினால்! இதற்கு மேல் வாழ்வில் என்ன வேண்டும் என தோன்றிவிடும்.

என் உறவினர் ஒருவர் நோய் வாய்ப்பட்டார். அறுவை சிகிர்ச்சை செய்துதான் ஆகவேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கயில், ஒரு யோசனை தோன்றியது. அடிக்கடி, கோடகநல்லூர் சென்று பச்சைவண்ணப் பெருமாளை தரிசனம் செய்து வருவதால், அவரிடமே மருந்து கேட்ப்போமே என்று தோன்றியது. எனது பூசை அறையில் அமர்ந்து பிரார்த்தனையை சொல்லி, த்யானத்தில் இருந்த போது, "நீ கிளம்பி வா! நான் மருந்து தருகிறேன்!" என வாக்கு வந்தது. அந்த வாரம் கடைசியில் ஒரு நாள் அலுவலக விடுமுறை வந்ததால், மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாயிற்று. சென்று பார்த்துவிடுவோம் என்று தீர்மானித்தேன்.

இதற்கிடையில், ஒருநாள், சென்னையில் இருக்கும் இரு நண்பர்கள் (திரு.ஸ்ரீதரன், திரு.சதீஷ்) அகத்தியரை தரிசிக்க பொதிகை செல்வதாகவும், அந்த வார சனிக்கிழமை அன்று கோடகநல்லூரில் பெருமாளை தரிசித்து செல்லலாம் என்றும் தீர்மானித்திருப்பதாக, தொலைபேசியில் கூறினார்.

"சனிக்கிழமை உங்களை கோடகநல்லூரில் சந்திக்கிறேன்" என்றுவிட்டு, "நமக்குத்தான் போக குடுப்பினை இல்லை, போகிறவர்களை சந்தித்து உற்சாகப்படுத்தி, அகத்தியருக்கு அபிஷேகம் செய்ய ஏதேனும் கொடுத்துவிடலாம்" என்று தீர்மானித்தேன்.

அகத்தியர் அபிஷேகத்துக்கு, விபூதி, சந்தனப்பொடி, ஜவ்வாது, வாசனாதி திரவியங்கள் போன்றவை சேகரித்து வைத்துக் கொண்டேன்.  புதன் கிழமை அன்று மதியம் அலுவலகத்தில் அனுமதி வாங்கி கொண்டு, திருநெல்வேலியை நோக்கி பயணித்தேன். பொருட்களின் பாரம் சற்று அதிகமாக இருந்தது. இந்த சந்தனப்பொடியை பெருமாள் வாங்கி கொண்டுவிடுவாரோ? "இது ரொம்ப கனமாக இருக்கிறது, என் உடம்பை தூக்கி கொண்டு நடப்பதே மிக சிரமம். கொஞ்சம் பாரத்தை குறைத்துக் கொடுங்களேன்" என்று நண்பர் கேட்பார் என்று தோன்றியது. இருக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று, அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து வைத்துக் கொண்டேன்.

வியாழக்கிழமை அன்று காலை கோடகநல்லூர் கோவிலுக்கு சென்றேன். காலை பூசை முடிந்து அனைவருக்கும் பிரசாதம் கொடுக்கிற நேரம். நேராக பெருமாள் சன்னதி முன் நின்று "வரச் சொன்னீர்கள்! வந்துவிட்டேன். இனிமேல் நீங்கள் அருளினால் தான் உண்டு. இங்கு தானா என்று தெரியவில்லை. ஏதோ பார்த்து அருளுங்கள்" என்று வேண்டி நிற்கயில், பிரசாதம் தந்த அர்ச்சகர், ஏதோ ஞாபகம் வர உள்ளே சென்றார்.

திரும்பி வந்தவர் கையில் ஒரு மஞ்சள் உருண்டை. "இந்தாருங்கள், இதை வைத்துக் கொள்ளுங்கள், இது இன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்த பொழுது எடுத்து வைத்தேன்.  யார் வருவார்கள் என்று தெரியவில்லையே! என்று யோசித்த பொழுது "ஒருவன் இன்னும் இரண்டரை நாழிகையில் வருவான். அவனிடம் கொடு" என்று உத்தரவு வந்ததாக கூறினார்.

மிக அமைதியாக பக்தியுடன் அதை வாங்கி கண்ணில் ஒற்றிக்கொண்ட பொழுது, நல்ல சுத்தமான விரளி மஞ்சளின் வாசனை. "ஓ! இதுதான் மருந்தா?" என்று நினைத்து பாத்திரப்படுத்திக் கொண்டேன். அர்ச்சகர் மேலும் கொடுத்த பிரசாதத்தை வாங்கி கொண்டு,

"நாளை ஸ்ரீவில்லிபுத்தூர் செல்கிறேன்! உங்களை சனிக்கிழமை அன்று சந்திக்கிறேன்! என் இரு நண்பர்கள் இங்கு அன்று வருவார்கள், சுவாமி தரிசனத்துக்கு. வந்தால் அவர்களுக்கு தரிசனம் செய்து வையுங்கள். நானும் ஒரு 10 மணிக்குள் வந்துவிடுவேன்" என்று கூறி விடை பெற்றேன்.

மறுநாள், திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றேன். ஒரு நண்பர் என்னை சந்தித்து பல நண்பர்களை சந்திக்க அழைத்துச் சென்றார். அனைவரையும் சந்தித்து, நண்பர் வீட்டுக்கு செல்லவே, அவர் வீட்டில் அமர்ந்திருக்கும் பொழுது ஒருவர் "கையை நீட்டு. இந்தா இதையும் சாப்பிடச்சொல்!" என்று ஏதோ ஒரு துகளை கையில் போட்டார்.

"சரி! இது என்ன?" என்று வினவினேன்.

"திருப்பதி பெருமாளுக்கு மார்பில் சார்த்திய சந்தானம். மஹா லட்சுமி அவர் மார்பில் உறைகிறார் என்பது தெரியுமே! இது ஒரு அருமருந்து!" என்று கூறி கூடவே,

"இந்தா! இது பெருமாள் தீர்த்தம்!" என்று ஒரு பாட்டிலில் கொடுத்தார். நல்ல பச்சை கற்பூரத்தின் வாசனை தூக்கியது.

"இதற்காகத்தான் இத்தனை தூரம் பெருமாள் நம்மை வரவழைத்திருக்கிறார். சிகிர்ச்சைக்கு செல்பவருக்கு நிச்சயம் உடனடியாக குணம் கிடைத்துவிடும்" என்று நினைத்து, மிக்க நன்றியுடன் அவைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு பத்திரப்படுத்தினேன்.

சனிக்கிழமை அன்று கோடகநல்லூர் சென்று நண்பர்கள் இருவரையும் சந்தித்தேன்.

"நல்ல தரிசனம்! பெருமாள் ஆசிர்வாதமும் பண்ணிவிட்டார். நீங்களும் வாங்களேன். உள்ளே போய் இன்னும் ஒருமுறை தரிசனம் செய்யலாம்" என்று வரவேற்றனர்.

நானும் சிரித்துக் கொண்டே "பொறுங்கள்! முதலில் பொதிகை அகத்திய பெருமானுக்கு பூசை சாமான்கள் வாங்கி வந்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டு, பிறகு உள்ளே செல்வோம்" என்று கூறி ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தேன்.

முதலில் நான் கொண்டு போன கைப்பையை தூக்கிப் பார்த்துவிட்டு, "ரொம்ப கனமாக இருக்கே! என் உடம்பை தூக்கிக்கொண்டு நடப்பதே பெருவிஷயம். கொஞ்சம் கனத்தை குறைத்துக் கொடுங்களேன்" என்றார்.

வெளியே வைத்த அனைத்தையும் பார்த்துவிட்டு அவரே "அந்த சந்தனப்பொடியை எடுத்துவிடுங்கள், விபூதி இருக்கட்டும்" என்றார்.

நான் சன்னதியை பார்த்தேன்.

"உமக்கு சந்தனம் வேண்டுமென்றால் சொன்னால் போதாதா? இப்படி அடியவர்களை கொண்டு காலைவாரி வாங்கிக்கணுமா? சரி! அதுதான் விதி போல. அகத்தியரே! மன்னித்துவிடுங்கள். உங்களுக்கு வந்து சேர வேண்டிய சந்தனப்பொடி பெருமாளுக்கு செல்கிறது. உங்களுக்கு விபூதியும், விதவிதமான வாசனாதி திரவியங்களும் வந்து சேரும். அனைத்தையும் ஏற்றுக் கொண்டு எல்லோருக்கும் அருள் புரியுங்கள்" என்று மானசீகமாக வேண்டிக் கொண்டேன்.

தரிசனம், அருள், ப்ரதக்ஷிணம் முடிந்து பெருமாள் கோவில் திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து, பொதிகை பயணத்தை பற்றி பேசிவிட்டு, ஒரு வேண்டுதலை வைத்தேன், நண்பர்களிடம்.

"அகத்தியரின் அபிஷேக பூசைக்குப் பின், அடியேனுக்கு சிறிது அபிஷேக எண்ணையும், அபிஷேக விபூதியையும் பிரசாதமாக அனுப்பித்தாருங்களேன். நீங்கள் சென்னை போய் சேர்ந்ததிற்கு பின் போதும்!" என்றேன்.

அவர்கள் திங்களன்று அபிஷேகம் செய்து கீழே இறங்கி சென்னை சென்று சேர புதன் கிழமை ஆகிவிடும். அதற்குப்பின் அனுப்பி பிரசாதம் வந்து சேர மேலும் நான்கைந்து நாட்களாகிவிடும். சரி! மெதுவாக வரட்டுமே! எப்பொழுது வந்தாலும் அகத்தியர் அபிஷேக பிரசாதம் அதன் மகிமையுடன் இருக்கும். அது போதும். அகத்தியர் என்ன கூரியர் சர்வீஸா நடத்துகிறார்? உடனே வந்து சேர! அது அதற்கு காலம் என்று ஒன்று உண்டு. அதுவரை காத்திருக்கத்தான் வேண்டும்!" என்று நினைத்துவிட்டு, நண்பர்களிடமிருந்து விடைபெற்றேன். கிளம்பும் முன் அர்ச்சகரை சந்தித்து, சந்தனப்பொடியை கொடுத்து, "ஞாயிறன்று அபிஷேகத்துக்கு வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினேன்.

நண்பர்கள் விடை பெற்றனர்.

அடியேன் பொதிகை இருக்கும் தென் திசை நோக்கி கும்பிட்டு "குருவே! உங்கள் குழந்தைகள் தரிசன, அபிஷேக, பூசைக்காக கிளம்பி வருகிறது. அருள் புரிந்து, ஏற்றுக் கொள்ளுங்கள்" என வேண்டிக் கொண்டேன்.

மறுநாள் காலை (ஞாயிறு) மீண்டும் கோடகநல்லூர் சென்ற பொழுது தாமதமாகிவிட்டது. பெருமாள் அபிஷேகம் முடிந்திருந்தது. திரை போட்டிருந்தது.

வெளியே வந்த அர்ச்சகர் என்னை கண்டதும் "வாருங்கள்! மெதுவாக திரையை விலக்கி பாருங்கள். இன்று என்னவோ பெருமாள் ரொம்ப சந்தோஷத்தில் திளைக்கிறார். நீங்கள் கொண்டுவந்து தந்த சந்தனப்பொடியை அபிஷேகம் செய்தேன். நிறைய அளவுக்கு அவர் விக்கிரகத்திலேயே ஒட்டி கொண்டுள்ளது. பாருங்கள்" என்றார்.

"பெருமாள் சந்தோஷமாக இருந்தால் சரி! நான் எங்கே தந்தேன். இது அவராக நாடகம் நடத்தி பிடுங்கி கொண்டுவிட்டார். அகத்தியருக்கு போய்ச்சேரவேண்டியது. இங்கு பெருமாள் விக்ரகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளது" என்றேன்.

அன்றைய பூசை முடிந்தது, ஒரு உருண்டை சந்தனமும், ஒரு உருண்டை மஞ்சள் பொடியும் பிரசாதமாக தந்தார்.

அதை வாங்கி கொண்டு விடைபெற்று, நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட்டபடியே ஊர் வந்து சேர்ந்து ஒரு உறவினர் வழி இறைவன் அருளிய அனைத்து மருந்துகளையும், சாப்பிட கொடுத்துவிட்டேன்.

ஞாயிறன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிர்ச்சை செவ்வாய் கிழமைக்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள் கிழமை மாலைக்குள், மருந்தும், தீர்த்தமும் உறவினரின் உடலுக்குள் சென்றது.

செவ்வாய் கிழமை அறுவை சிகிர்ச்சை நடந்து, ஆபத்தான அந்த கட்டத்தை இறைவன் அருளால், அந்த உறவினர் கடந்தார்.

திங்கட்கிழமை பொதிகையில், அவர் அடியவர்களால் அபிஷேக, அலங்கார பூசை மிக சிறப்பாக நடந்தேறியது.

தொடர்ந்து நடந்த விஷயங்கள் என்னை ஆச்சரியத்தில் மலைக்க வைத்தது.

சித்தன் அருள்.................. தொடரும்.

3 comments:

 1. Agathiyar kitta kelunga.Please reply sir.reply pannama mattum irukathinga reply please..enga irukan agathiyan irukan avan ah enna panna naan.siththar ila throki en family nasam pannitan.avan kettu muttum enna priyochanum onnu appa,amma irukukanum ila ponnu,paiyan vathu irukanum,enaku agathiyana pakkanum enaku pathi venum.naan ketathan vaiya thoraka matrane neenga keta solluvala ketu sollunga

  ReplyDelete
  Replies
  1. AUM SHRIM AUM SARGURU PATHAME, SAABA PAABA VIMOCHANAM, ROGA AHANGAARA THURVIMOCHANAM, SARVA DEVA SAGALA SIDHA OLI RUPAM, SARGURUVE AUM AGASTHIYA GIRANTHA KARTHAYA NAMA!

   Please recite this mantra daily (if possible 108 times daily) definitely guru agathiyar will guide you in whatever problems you have. Guru Agathiyar has always asserted that he is a mother to all of us. So pray to our guru and surrender completely. Guru parapatcham paarpadhilai yar azhaithalum azhuthalum varuvar.
   thai ullam konda guruvai vanangi dhyanam panni parunga unga kelvigaluku vidai kidaikkum.

   Om Agathisaya nama!

   Delete
 2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete