​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 9 April 2017

சித்தன் அருள் - 636 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் கருணையாலே எதையெடுத்தாலும் வினைகள், வினைகள், சென்ற பிறவிகளின் கர்மாக்கள் என்று கூறுவதால் என்ன லாபம்? மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறிவு எதற்கு ? அந்த அறிவைக்கொண்டு ஒரு மனிதன் தன் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள இயலாதா? துன்பங்களற்ற நிலையை அடைய இயலாதா ? என்றால், இறைவன் படைத்த மனிதன், தான் பெற்றுள்ள அறிவை விருத்தி செய்து கொள்ளவும், அந்த அறிவை அனுபவங்களால் நிரப்பி, தான் ஏற்கனவே பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுக்கவும், தன்னுடைய அறிவின் திறன் கொண்டு தன்னை வளர்த்துக்கொள்ளவும், தனக்கு இடர் வராமல் காத்துக்கொள்ளவும் அவன் முயல்வது தவறு என்று நாங்கள் கூற வரவில்லை. அப்படி முயலுகின்ற பல மனிதர்களில் சிலரில், சிலரில், சிலரில், சிலரில், சிலருக்கு மட்டுமே அவன் எண்ணுவது போல ஓரளவு வாழ்க்கை நிலை அமைகிறது. பலருக்கு அவ்வாறு அமைவதில்லை. அதுபோன்ற தருணங்களில் எல்லாம் மனிதன் சோர்ந்துவிடக்கூடாது. என்றோ, எப்பொழுதோ செய்த வினை இப்பொழுது வருகிறது என்று எடுத்துக்கொண்டு, பக்குவமாக அதனை எதிர்கொண்டு, இனி பாவங்களற்ற வாழ்க்கையை வாழ போராட ஒவ்வொரு மனிதனும் கற்றுக்கொண்டிட வேண்டும்.  தன்னுடைய லோகாய கடமையை நேர்மையாக ஆற்றுவதோடு, தன்னால் இயன்ற தொண்டினை செய்வதோடு அமைதியான முறையிலே பிரார்த்தனைகளை, ஸ்தல யாத்திரைகளை தொடர்வதும், இயன்ற தர்மகாரியங்களை செய்வதும் ஒரு மனிதனின் பாவங்களைக் குறைப்பது மட்டுமில்லாமல் மேலும் கடுமையான பாவங்களை சேர்க்காமல் இருப்பதற்கும் உதவும். இஃது போன்ற பொதுவான கருத்துக்களை நாங்கள் மீண்டும், மீண்டும் கூறுவதின் நோக்கமே  மீண்டும், மீண்டும் இஃதுபோன்ற கருத்துக்களை அசைபோட, அசைபோட, அசைபோட, அசைபோட மனித மனம் தடுமாற்றமில்லாமல் உறுதியோடு இதனை பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான். ஏனென்றால் சராசரி மனிதர்கள் எதையெதையோ பேசி, சற்றே தடுமாறி மேலே வரக்கூடிய மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடும் என்பதால்தான் நல்ல விஷயங்களை, உயர்ந்த கருத்துக்களையெல்லாம் மனிதன் அடிக்கடி செவியில் விழுவதுபோல் ஒரு சூழலை ஏற்படுத்திக்கொண்டிட வேண்டும். எனவேதான் வினைகளின் தொகுப்பான பிறவிகளை களைய மனிதன் முயற்சி எடுத்திட வேண்டும். இஃதொப்ப எல்லா நிலையிலும் மனிதனுக்கு துன்பங்களற்ற நிலை வேண்டும் என்றாலும் துன்பங்களற்ற ஒரு நிலையை புறத்தே தேடுவது என்பது அத்தனை ஏற்புடையது அல்ல. ஒரு மனிதன் பக்குவப்பட, பக்குவப்படத்தான்  துன்பங்களற்ற சூழல் என்பது அவன் உணரக்கூடிய சூழலாக இருக்கும்.

ஒரு மனிதன் வியாபாரத்திலே கடுமையான நட்டத்தை சந்திக்கிறான். அதிகளவு பொருளை இழக்கிறான். உண்மையில் பார்க்கப்போனால் அது மிகப்பெரிய நட்டமே. அதைப்போல் இன்னொரு மனிதனும் அடைகிறான். இரண்டு மனிதர்களும் இழந்தது மிகப்பெரிய இழப்பு, நட்டம். ஆனால் ‘ சரி, போகட்டும். எங்கோ தவறு செய்துவிட்டோம், இனி கவனமாக இருப்போம் ‘ என்று மனதை தளரவிடாமல் ஒரு மனிதன் இருந்தால் அவனைப் பொறுத்தவரை இந்த நட்டம் துன்பத்தை தரவில்லை. அதை விடுத்து ‘இப்படியொரு நட்டம் வந்துவிட்டதே, இனி எப்படி வாழ்வது?' என்று அவன் மிகவும் சோர்ந்து, சோர்ந்து அமர்ந்தால் இருக்கின்ற சக்தியும் அவனைவிட்டு சென்றுவிடும். சோர்வே அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். எனவே நிஜமான துன்பம் என்பதும், நிஜமான இன்பம் என்பதும் இந்த உலகில் இல்லை என்பதை மனிதர்கள் புரிந்துகொண்டிட வேண்டும். அப்படியானால் துன்பம் என்று உணர்வதும், இன்பம் என்று உணர்வதும் பொய்யா? என்றால், அது பொய் என்று உணரும் நிலை வரும்பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் அது புரியும். ஏனென்றால் பக்குவம் அடைய, அடையத்தான் எது நிஜமான துன்பம்? எது நிஜமான இன்பம்? என்பது மனிதனுக்குத் தெரியும். இறைவனின் கருணையால் இஃதுபோன்ற ஞானக்கருத்துக்களை அசைபோட்டாலே வாழ்வின் எதிரே எத்தகைய சூழல் வந்தாலும் மனம் கலங்காமல் வாழ்ந்திடலாம்.

3 comments:

  1. மதிப்பிற்குரிய திரு.அக்னிலிங்கம் அருணாச்சலம் அய்யா அவர்களுக்கு வணக்கம்,

    இந்த வாரம் விகடனில் இந்த பதிவை பார்த்தேன். அகத்தியர் அடியவர்கள் இந்த புனித அன்னதான திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் இணைந்து அன்னதான புண்ணியத்தை சேர்க்கலாம்.

    இந்த தகவல் சொல்ல பலமுறை யோசித்தேன், செய்யலாமா / வேண்டாமா என்று. காரணம் இந்த தகவல் பொருளாதாரத்தை சேர்ந்தது.

    சிலருக்கு பொருள் இருக்கும் வாய்ப்பு இருக்காது, சிலருக்கு வாய்ப்பு இருக்கும் பொருள் இருக்காது. பொருள் இருப்பவர்கள் கொடுத்து உதவலாம், வாய்ப்பு இருப்பவர்கள் அவர்களுக்கு வேறு விதமாக உதவலாம்(நேரடியாக சென்றும் உதவலாம்). அதனால் நான் இதில் முடிவு செய்ய ஒன்றும் இல்லை. மற்றும் இது குரு அகத்தியர் அன்னதானம் என்று உள்ளது. அன்னதானமே புன்னியம் அதிலும் குரு அகத்தியர் அன்னதானம் என்ற பெயரில் தரும் பொழுது கூடுதல் புண்ணியம். அதனால் வாய்ப்பு வசதி இருப்பவர்கள் பயன் பெறட்டும் என்கிற நோக்கத்தோடு பதிவு செய்கிறேன்.

    எல்லாம் குருவருள்.

    இந்த தகவலால் யாரேனும் ஒருவர் பயன்பெற்றாலும் நமக்கு மகிழ்ச்சியே.

    விகடன் பதிவு லிங்க்:
    http://www.vikatan.com/news/tamilnadu/85478-a-man-who-has-resigned-his-railway-job-to-serve-free-food-for-patients.html

    Youtube Link:
    https://www.youtube.com/watch?v=BDBNrnRX2oU

    Home Page:
    http://www.agasthiyarannadhanam.org/index.html

    பின் குறிப்பு:
    தங்களது ஈமெயில் முகவரி தந்தால் இது போல கிடைக்கும் செய்திகளை கமெண்ட் செய்யாமல் நேரடியாக அனுப்ப ஏதுவாக இருக்கும். தாங்கள் அதை பகுத்து பார்த்து பதிவு செய்யலாம்.

    மிக்க நன்றி,
    இரா.சாமிராஜன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களை போல் சில நல்ல உள்ளங்கள் இருப்தால்தான் உலகம் இன்னும் சுழன்று கொண்டுள்ளது . தங்கள் இந்த சேவை மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் ..

      Delete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete