​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 5 April 2017

சித்தன் அருள் - 633 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

முன்பே கூறியது போல மிருக தேகத்திற்குள் நுழைந்த ஆத்மா எது வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த மிருக உடலிலே இருந்துகொண்டு பாவத்தை மட்டும் நுகர்வதற்காக அனுமதிக்கப்பட்டவை. அங்கே புதிதாக பாவம் சேர வாய்ப்பில்லை. வேண்டுமானால் புண்ணியம் சேரலாம். அந்த மிருகங்கள் தன்னையும் அறியாமல் செய்கின்ற செயல்களில் புண்ணியம் சேரலாம். ஆனால் அறிந்து பாவம் செய்வதற்கு அங்கே வழியில்லை. அறியாமல் செய்தாலும் பாவமில்லை. ஆனால் மனிதனுக்கு முழுக்க, முழுக்க சிந்தனையாற்றலை இறைவன் தந்திருப்பதே ‘இது தக்கது, இது தகாதது, இது பாவம், இது புண்ணியம், இதை செய்யலாம், இதை செய்யக்கூடாது' என்பதையெல்லாம் உணர்ந்து நல்வழியில் நடக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் விதி எங்கே விளையாடுகிறது? என்றால் பல நூறு பிறவிகள் மிருகமாகவே பிறந்து, இறந்து எல்லாப் பாவமும் தீர்ந்த நிலையில், "சரி, இப்பொழுது ஒரு மனித தேகம் தருகிறேன். புண்ணியத்தை சேர்த்துக்கொள்" என்று இறைவன் வாய்ப்பு தந்தால், முந்தைய மிருகப் பதிவான சினமும், அகங்காரமும், கொடுமை குணமும், சுயநலமும் மட்டுமே மேலோங்கி நிற்க, கிடைத்த மனித பிறவியை பண்படுத்திக்கொண்டு மேலேற வைத்துக்கொள்ள, அந்த மனிதன் தவறி விடுகிறான். அவனுடைய வினையும் அவனுக்கு சரியான வழியைக் காட்டுவதில்லை. எனவே ஒட்டுமொத்த மனிதர்களைப் பார்த்து எல்லா மனிதர்களுக்கும் இயல்பு இதுதான் என்றெல்லாம் கூற இயலாது. அது வினைகளைப் பொறுத்து, மனிதனுக்கு மனிதன் மாறுபடும். விலங்குகளுக்கும் இது பொருந்தும் என்றாலும் விலங்குகளுக்கு பெரிய அளவிலே அந்த மாற்றம் இராது. பாவங்கள் அதிகமாக, புண்ணியங்கள் குறைவாக இருக்கின்ற மனிதன், இறைவன் கருணையில்லாத நிலையிலே மேலும் பாவத்தை சேர்த்துக்கொள்ளாமல் வாழ இயலாது. ஏனென்றால் ஏற்கனவே செய்த பாவம் மீண்டும் பாவ வழியைதான் காட்டும். ஆனால் சில ஆத்மாக்களுக்கு இறைவன் கருணைகொண்டு வழி காட்டுகிறார். பாவங்கள் இருந்தாலும் கூட அந்த பாவங்களின் எதிரொலியாக வாழ்க்கையில் துன்பங்கள் வந்தாலும் கூட ‘அப்பனே! இது நீ விழித்துக்கொள்ள வேண்டிய பிறவி. இப்பொழுது நீ நுகர்வதெல்லாம் இன்று நீ நல்லவனாக இருந்தாலும் பழைய பிறவிகளில் சேர்த்த பாவங்கள்' என்பதை யார் மூலமாகவாவது உணர்த்தி அந்த ஆத்மாவை விழிப்படைய செய்கிறார். கொள்கை அளவில் இதனை ஏற்றுக்கொண்டாலும் வாழ்க்கையிலே நிதர்சனமாக பிரச்சினைகளை சந்திக்கும்பொழுது மனிதன் தன்னிலை மறந்து மீண்டும் சுயநலத்திலும், சினத்திலுமே ஆழ்ந்து விடுகிறான். எனவே மனிதனின் தன்மை இத்தன்மைதான் அல்லது இதற்குள்தான் என்றெல்லாம் கூற இயலாது. அகவை 10(சிறு) வயதிலும் பக்குவம் கொண்ட ஆத்மாக்கள் உண்டு. அகவை, 90–ஐ எட்டினாலும் பக்குவமற்ற தன்மையோடு வாழ்கின்ற ஆத்மாக்களும் உண்டு. பாவங்கள் எந்தளவிற்கு ஒரு மனிதனிடம் இருக்கிறதோ அந்தளவிற்கு பக்குவமின்மையும், இறைவனைப் புரிந்துகொள்ளாத தன்மையும், தர்மத்தை ஏற்றுக்கொள்ளாத தன்மையும், நீதியை பின்பற்றாத தன்மையும் இருக்கும். மனிதனுக்கு, இறைவன் பல வாய்ப்புகளை வழங்குகிறார். மேலும் பாவங்கள் சேர்க்காத நிலையில் வாழ்ந்தால் அதுவே மிகப்பெரிய நன்மை என்பதை சூசகமாக உணர்த்திக் கொண்டேயிருக்கிறார். இவற்றை மிருகங்களால் பின்பற்ற இயலாது. மனிதனுக்கு மிருகங்களை விட பல மடங்கு அரிய, பெரிய வாய்ப்பெல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதர்கள் அதை உணராமல் மீண்டும் மிருக இச்சைக்குள் புகுந்துகொண்டு மிருகம்போல்தான் வாழப் பிரியப்படுகிறான். யோசனை செய்து பார். சினம், மிருகத்திற்கும் உண்டு, மனிதனுக்கும் உண்டு. பசி, மிருகத்திற்கும் உண்டு, மனிதனுக்கும் உண்டு. அஃதொப்ப காமவேட்கை, மிருகத்திற்கும் உண்டு, மனிதனுக்கும் உண்டு. வலி, மிருகத்திற்கும் உண்டு, மனிதனுக்கும் உண்டு. இப்படி பொதுவான பல விஷயங்கள் இருவருக்கும் இருப்பதால் ஐந்தறிவிற்கு உட்பட்டே மனிதன் வாழ்கிறான். ஒரு மிருகம் தனக்குக் கிடைத்த அபரிமிதமான உணவை இன்னொரு மிருகம் பசியாக இருக்கிறது, இந்தா, என்றெல்லாம் பெரும்பாலும் கொடுப்பதில்லை. அதைப்போலதான் மனிதனும் இருக்கிறான். இதிலென்ன வேண்டி கிடக்கிறது மனிதன் மிருகத்தைவிட மேம்பட்டவன் என்று? எங்கே பரந்த எண்ணமும், பொதுநல நோக்கமும் இல்லையோ, அவன் தோற்றத்தில் மனிதனாக இருந்தும் குணத்தில் மிருகமாகத்தான் இருக்கிறான். ‘பிறருக்கு உதவி செய்தால் சங்கடம் வருகிறது. பிறருக்கு அள்ளி, அள்ளித் தந்தால் ஏமாற்றுக்காரர்கள் வருகிறார்கள். பிறகு நாங்கள் எப்படி தருவது?' என்றெல்லாம் மனிதர்கள் வினவலாம். இந்த இடத்திலே கவனமாக இருக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. தொடர்ந்து நியாயமான முறையிலே தர்மத்தை செய்துகொண்டேயிருந்தால் இறைவனே அதற்கு ஏற்ற ஒரு சூழலை ஏற்படுத்துவார். இறைவன் என்ன ஏற்படுத்துவது ? அவன் செய்கின்ற நியாயமான தர்மங்களே அவனை சுற்றி கவசம் போல் பாதுகாக்கும். அவன் அது குறித்தெல்லாம் அஞ்சத் தேவையில்லை.

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  3. மிகவும் சரி மனிதன் இன்னும் மிருகநிலைக்கு பொய் கொண்டிகிறான் ஆனால் ஐந்தறிவு என்று சொல்லகூடிய மிருகம் பலவிதத்தில் மேம்பட்டுள்ளது ....

    ReplyDelete
  4. Mahabharatham,ramayanam yen nadanthu,unmaiyana reason enna nu agathiyar kita sollllunga sir

    ReplyDelete
  5. ராமாயணம், மஹாபாரதம் போன்றவை இறைவனால் நடத்தப்பட்ட ஒரு நாடகம். அதில் பங்கேற்ற அனைத்து கதாபாத்திரங்களும் இறைவன் உத்தரவால், விரும்பி ஏற்றுக் கொண்ட பாத்திரங்கள். இன்னென்ன விஷயங்கள் தவறு என்று மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இறைவன் ஏற்பாடு செய்த நாடகம். இது அகத்திய பெருமானின் விளக்கம்.

    ReplyDelete
    Replies
    1. But 2 incidents suffered girls only then how it will be lesson to the world jii

      Delete