​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 16 April 2017

சித்தன் அருள் - 644 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளாலே நல்விதமாய் ஒரு மனிதன் வாழவேண்டுமென்று எண்ணுகிறான். அந்த நல்விதம் எது? என்பதுதான் மனிதர்களுக்கு பெரும்பாலும் காலகாலம் புரிவதில்லை. உலகியல் வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்கு தேவையே இல்லை, என்பது போல்தானே மகான்களின் வாக்குகள் இருக்கிறது. அங்ஙனமாயின் எதற்கு இந்த உலகைப் படைத்திடவேண்டும்? எதற்கு இந்த உடலை தந்திடவேண்டும்?  எதற்கு இந்த உடல் சார்ந்த இன்பங்களையெல்லாம் வைத்திடவேண்டும்?  என்றெல்லாம் மனித மனம் ஐயங்களை எழுப்பிக்கொண்டே இருக்கும். இப்படி எத்தனையோ ஐயங்கள் ஒரு மனிதனுக்கு வரவேண்டும். ஐயங்கள் எழ, எழத்தான் ஒரு மனிதன் தனக்குள்ளே, அவன் உள்ளே சென்றுகொண்டிருக்கிறான் என்று பொருள். சென்றுகொண்டே இருக்கவேண்டும். பூமியின் உட்புறத்தே தோண்டித் துருவி பார்க்கும்பொழுது, எடுத்த எடுப்பிலேயே எப்பொழுதும் எல்லா இடத்திலும் வைரமும், கனகமும் ஏன்? சுக்ர உலோகமும் கிட்டிவிடாது. உயர்ந்த உலோகம் என்று மனிதனால் மதிக்கப்படுகின்ற விஷயமே, பூமியின் மேற்பரப்பிலே இல்லாமல், இன்னும், இன்னும், இன்னும் தோண்டத்தான் தென்படுகிறது என்றால், ஒரு மனிதன் தன்னைத்தானே உணர்தல் என்பது வெறும் மேலெழுந்தவாரியாகவே நடந்துவிடுமா? அல்லது அவன் மேல் எழுந்த வாரியாக இருக்கக்கூடிய உலகியலால் நடந்துவிடுமா ? அவன் மேல் எழுந்த உலகியல் வாரி, அவையெல்லாம் அவன் வாரி வைத்துக்கொள்வதாலே நடந்துவிடுமா?  எனவே இறைவனை உணர்தலும், அப்படி உணர்வதால் யாது கிட்டும்? என்பதை உணர்தலும், அப்படி கிட்டுவதால் என்ன லாபம்? என்பதை உணர்தலும் எளிய முறையில் ஒரு மனிதனால் செய்துவிட இயலாது. அதற்காக அது கடினமான முறையும் அல்ல. மெய்யாக, மெய்யாக, மெய்யாக பற்றை அறுத்து, பற்றே அனைத்து துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்துகொண்டு, அஃதே சமயம் பெற்ற உடலுக்கு ஏற்ப லௌகீக கடமைகளை மனசான்றின்படி நன்றாக நடத்திக்கொண்டு உள்ளுக்குள் ஆத்ம தேடலை வைத்துக்கொண்டே இருக்கக்கூடிய மனிதனுக்கு இறைவனருள் என்ன? என்பது இறைவன் அருளாலே மெல்ல, மெல்ல விளங்கத் துவங்கும். இதனை ஒவ்வொரு மனிதர்களும் புரிந்துகொண்டு வாழ்வதே சிறப்பான வாழ்க்கைக்கு வழிவகுப்பதாகும்.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete