​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 17 April 2017

சித்தன் அருள் - 646 - இறைவனும் சித்தர்களும் - ஒரு சிறு அனுபவம் - 2 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

நாம் ஒன்று நினைக்க, அதுவே நடந்தால், மனித மனம் உற்ச்சாகம் பெரும். நாம் நினைத்தது வேறு வடிவில் (நமக்கு சாதகமாக) நடந்தால் மனம், "சரி! ஏற்றுக்கொள்வோம்" என்று அமைதியடையும். இவை இரண்டுக்கும் முரணாக நடக்கையில் தான் வருத்தப்படும், மனித மனம்.

என்னை பொறுத்தவரை, இதுவரை நடந்ததே மிகப் பெரிய பாக்கியம் என்று நினைத்து, நன்றி கூறி ஏதும் இதற்கு மேலும்  எதிர்பார்க்காமல் இருந்துவிட்டேன். மனம் திருப்தி அடைந்துவிட்டது. பெருமாளே அத்தனையையும் ஏற்பாடு செய்து தந்ததால், வேறு யாரும் உள்ளே நுழைய முடியவில்லை.

பொதிகை சென்றவர்களின் பூசை பிரசாதம் இனி 15 தினங்களுக்குப் பின்தான் வந்து சேரும் என்ற நியாயமான உணர்வோடு இருக்கையில்.......

ஒரு இன்ப அதிர்ச்சி. செவ்வாய் கிழமை கீழே வந்துவிட்ட நண்பர் ஒரு ஆச்சரியமான விஷயத்தை சொன்னார்.

"நண்பரே! நீங்கள் வேலை பார்க்கும் அலுவகத்தில் பணிபுரிந்த ஒருவர் எங்கள் குழுவில் இருந்தார். அவராகவே தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட பொழுது, உங்களை தெரியுமா என்று விசாரித்தேன். மிக நன்றாக தெரியும் என்று கூறிய பொழுது, அபிஷேக பிரசாதம் தருகிறேன் அவரிடம் கொண்டு போய் சேர்க்க முடியுமா என்றேன்."

"என்னிடம் கொடுங்கள். அவர் பணிபுரியும் அலுவலகத்தின் பின் புறத்தில் தான் என் வீடு உள்ளது. வீட்டிற்கு போய்விட்டு, பின்னர் அவரை சந்தித்து பிரசாதத்தை கொடுத்துவிட்டு, நான் வேலை பார்க்கும் வெளியூருக்கு செல்கிறேன்" என்று வாங்கி கொண்டார்.

"அவரை தொடர்பு கொண்டு, பிரசாதத்தை வாங்கி கொள்ளுங்கள்" என்று கூறி தொடர்பு எண்ணையும் தெரிவித்தார்.

நான் மலைத்துப் போனேன். அபிஷேக பிரசாதத்தை கோடகநல்லூரில் கொடுத்தபின், யோசித்தது ஞாபகத்துக்கு வந்தது. "அகத்தியர் என்ன கூரியர் சர்வீஸ் நடத்துகிறாரா? அது வரவேண்டிய நேரத்துக்கு வந்து சேரும்" என கிண்டலடித்திருந்தேன்.

"நீ என்னடா கிண்டலடிப்பது. என் வேகத்தைப்பார்!" என்று சொல்லாமல் சொல்லி, செவ்வாய் கிழமை அன்று மாலை 5 மணிக்கு அலுவலகம் விட்டு சரியாக வாசலுக்கு வந்தவுடன், அங்கே அவர் நின்று கொண்டிருந்தார்.

ஒரு பையில் பிரசாதம். என்னை பார்த்ததும் புன்னகைத்தபடி "இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்" என்று தந்துவிட்டு, உடனேயே விடைபெற்றார்.

சரியான சந்தனம், மஞ்சள், விபூதி மணம். திறந்து பார்த்தால், அகத்தியருக்கு அபிஷேகம் பண்ணிய விபூதி. என்ன நடக்கிறது, என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து நின்றேன்.

நாம் சென்று அபிஷேகம் செய்யாவிடினும், கொடுத்துவிட்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர், நம்மை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அன்று உணர்ந்தேன்.

அபிஷேகம் பண்ணிய எண்ணெய்தான் கிடைக்கவில்லை. கிடைத்த விபூதி அந்த குறையை போக்கியது. (இன்றும் அந்த விபூதிப்பை வீட்டில் இருக்கும் ஓதியப்பர் விக்ரகத்தில் அவரது வலது கையில் தொங்கி கொண்டிருக்கிறது.)

பிரசாதத்தை பத்திரமாக பாதுகாத்து வைத்துக் கொண்டேன்.

சபரி மலையில் நீண்ட நாட்களுக்கு நடை சாற்றும் முன், கடைசி நாளில், அய்யப்பனை ஒரு சித்தராகவே மாற்றி, விபூதியால் மூடி, திரை போட்டு கதவை சார்த்திவிடுவார்கள். பிறகு என்று நடை திறக்கிறதோ, அன்றைய தினம் அத்தனை விபூதியையும் எடுத்து அங்கு வருகிற பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுவார்கள்.

என் கூட வேலை பார்க்கும் ஒரு நண்பர், அங்கே எங்கள் அலுவலகத்தில் அமர்த்தப்பட்டார். சபரி மலைக்கு கிளம்பும் முன் என்னை என்னை அழைத்த போது "உனக்கு என்ன வேண்டும், அரவணையும் அப்பமும் வாங்கி வரட்டுமா? ஆனால் மண்டல காலம் முடிந்த பின் தான் வருவேன், தர முடியும்" என்றார்.

"எனக்கு அதெல்லாம் தேவை இல்லை. முடிந்தால், அய்யப்பனை பொதிந்து மூடிய அந்த விபூதி நிறைய வேண்டும்" என்றேன்.

சரி என்று ஒத்துக்க கொண்டு சென்றவர், புதன் கிழமை அன்று ஒரு பெட்டி நிறைய அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்த விபூதியை கொண்டு தந்தார். (அதுவும் ஓதியப்பர் விக்கிரகத்தின் முன் பத்திரமாக அமர்ந்திருக்கிறது, இன்றும்.)

"சரி! எல்லோரும் சேர்ந்து விளையாடாத தொடங்கிவிட்டார்கள். இது எங்க போய் நிற்கும் என்று தெரியவில்லையே!" என்று சற்று யோசிக்க தொடங்கினேன்.

மறுநாள், வியாழக்கிழமை, எப்போதும் போல் அகத்தியர் கோயிலுக்கு மாலை தரிசனத்துக்கு சென்றேன்.

கோவில் மிக அமைதியாக இருந்தது. நானும் பூசாரியும் மட்டும்தான். ஒவ்வொரு தெய்வங்களாக (முதலில் அகத்தியர் லோபாமுத்திரை, பின்னர் அவருக்குப் பின் புறத்தில் பிள்ளையார், அடுத்தது நாகர், பின்னர் கிருஷ்ணர் அதன் பின் ஓதியப்பர் சன்னதி என வரிசையாக இருக்கும்).

அனைவரையும் தரிசித்து கடைசியில் ஓதியப்பர் சன்னதிக்கு வந்து நின்றால், அவர் ரொம்பவே வித்யாசமாக இருந்தார். சிரசில், மார்பில், உடுத்தியிருந்த வேட்டியில், பாதத்தில் என எங்கும் விபூதி தங்கியிருந்தது.

"இன்று உமக்கு என்னஒய் விசேஷம் என்று" இயல்பாக மனதுள் கேட்டுவிட்டேன்.

புன்னகைத்தபடி (நமுட்டு சிரிப்புடன்) இருந்தவரின் தலை முதல் கால் வரை மறுபடியும் பார்த்த பொழுது மூன்று தினங்களாக நடக்கும் பிரசாத கூரியர் சர்வீஸ் ஞாபகத்துக்கு வந்தது.

"ஓ! ஓதியப்பா! உன் சிரசில் இருக்கும் விபூதியையோ, உன் வேட்டியில் தங்கி நிற்கும் (கஞ்சி போட்டு சலவை பண்ணிய முடமுடப்பாக விரைத்து நின்ற வேஷ்டி போல் இருந்த புது வேஷ்டி) விபூதியையோ குடேன். பூசாரியிடம் ஒரு முறை கேட்டு பார்க்கிறேன். கொடுப்பதற்கு ஏற்பாடு செய்." என்று வேண்டிக் கொண்டு, அகத்தியர் சன்னதிக்கு வந்து அங்கு நின்ற பூசாரியிடம் கேட்ட பொழுது, உள்ளிருந்து ஒரு வாழை இலையை எடுத்து, ஓதியப்பர் சன்னதிக்கு சென்று, அவர் சிரசு, மார்பு, வேஷ்டி, பாதம் இவற்றில் இருந்த விபூதியை எடுத்து இலையில் வைத்து, தந்துவிட்டு நேராக அகத்தியர் சன்னதிக்குள் புகுந்துவிட்டார்.

மிகுந்த ஆச்சரியத்துடன் ஓதியப்பரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு, அகத்திய பெருமானின் சன்னதிக்கு வந்து "உங்க குரு, இன்னிக்கு விபூதியை குடுத்திட்டார். அவருக்கு இன்னிக்கு ஏன்ன ஆச்சுன்னே எனக்கு புரியலை. எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணை வைத்துக்கொள்ளவும்" என்று கூறி நமஸ்காரம் செய்துவிட்டு வரும் வழியில் நண்பரை பார்த்தேன்.

தொடர்ந்து நான்கு நாட்களாக பிரசாதம் மேல் பிரசாதமாக மஞ்சள் பொடி, விபூதி என எல்லோரும் தருவதை சொல்லி, "இது என்னவோ விபூதி வாரம்னு நினைக்கிறேன். எல்லோரும் போட்டி போட்டு அருளுகிறார்கள். எங்கயோ சரியான ஆப்பு காத்திண்டிருக்கு. எதற்கும் கவனமாக இருக்க வேண்டும்" என்று கூறி விடைபெற்றேன்.

வீட்டிற்கு வந்ததும், ஒரு யோசனை. இத்தனை விபூதி பிரசாதமும் நான் கேட்டு வாங்கியதல்ல. அவர்களாக கொடுத்துவிட்டது. அப்படியென்றால், இது அந்த உறவினருக்கு போய் சேரவேண்டும் என்பதே அவர்கள் விருப்பம் போல். யாரிடம் கொடுத்தனுப்புவது. யாரும் இங்கிருந்து அவர்கள் ஊருக்கு போவதாக தெரியவில்லையே! சரி எதுக்கும் ஒரு விண்ணப்பத்தை அகத்தியரிடம் போட்டு விடுவோம் என்று தீர்மானித்து, 

"அய்யனே, கொடுத்துவிட்டீர்கள், புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் அடியேனால் விடுமுறை எடுத்து செல்ல முடியாத நேரம். ஏதாவது ஒரு வழி காட்டுங்களேன். இந்த பிரசாதம் எல்லாமாக கலந்து அவருக்கு போய் சேரவேண்டும்" என்று பிரார்த்தித்துவிட்டு காத்திருந்தேன்.

இரவு ஒரு 8 மணியிருக்கும். என் தாய் உணவருந்த அழைத்த பொழுது கீழிறங்கி வந்து பார்த்தால், வேறொரு உறவினர் வந்தமர்ந்திருந்தார்.

என்ன திடீர்னு ஒரு விஜயம், போன ஞாயிறுதானே நாம் சந்தித்தோம், என்றேன்.

"இல்லை! அந்த உறவினர் அறுவை சிகிர்ச்சை முடிந்து தேறிவருகிறார் இல்லையா? அவரை போய் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பி வந்தேன். இங்கு வராமலேயே போயிருக்கலாம். இருப்பினும், இங்கு வந்து உங்கள் அனைவரையும் பார்த்தபின் செல்லலாம் என்று, இந்த ஊர் வந்து சேர்ந்தபின் தோன்றியது. அதான் அடுத்த ட்ரெயின் ஏறிப்போகாமல், இங்கு வீட்டிற்கு வந்தேன்" என்றார்.

மனதுள் புன்னகைத்தபடி, "சரி எப்போது அவரை சந்திக்கப் போகிறீர்கள்?" என்றேன்.

"நாளை காலை புறப்படலாம் என்றிருக்கிறேன்" என்றார்.

"நல்லது! நான் ஒரு பிரசாதம் தருகிறேன். அதை அவரிடம் சேர்த்து விடுங்கள், அவரை அதை சாப்பிடச் சொல்லுங்கள்" என்றேன்.

"தாராளமாக! கொடுங்கள் இப்பொழுதே. நாளை என்றால் ஒருவேளை நான் மறந்துவிடுவேன்" என்றார்.

எதேச்சையாக வேண்டிக் கொண்டேன். உடனேயே ஏற்பாடு செய்துவிட்டீர்களே. மிக்க நன்றி என என் பூசை அறைக்குள் சென்று கூறி, மூன்று விபூதியையும் கலந்து வைத்திருந்த பார்சலை அவரிடம் சேர்த்தேன்.

அதுவும் அடுத்தநாளே அவரிடம் சென்று சேர்ந்தது.

இந்த நிகழ்ச்சியில் என்ன புரிகிறது?

வெள்ளிக்கிழமை - திருப்பதி பெருமாள் மார்பு சந்தனமும், தீர்த்தமும்
ஞாயிற்று கிழமை - கோடகநல்லூர் பெருமாள் மஞ்சள் பொடி
செவ்வாய் கிழமை - பொதிகை முனியின் அபிஷேக விபூதி 
புதன் கிழமை - சபரிமலை அய்யப்பனின் அபிஷேக விபூதி 
வியாழக் கிழமை - ஓதியப்பரின் அபிஷேக விபூதி

பெருமாள் கூப்பிட்டு மருந்து குடுத்தார் என்றவுடன், மற்றவர்களும் "நான் தருகிறேன்! நான் தருகிறேன்!" என்று போட்டியா?

இல்லையேல் நம் வாழ்க்கை/வாழ்க்கையில் இறை/சித்தர் அருள் என்றால் இப்படியல்லவா அமையவேண்டும்  என்கிற எண்ணமா?

ஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி நன்றி சொல்வது? தவிப்புதான் மிச்சம்.

இதன் முடிவில் அடுத்தவாரம் அதிர்ச்சிகரமான ஒரு விஷயம் நடந்தது. அதை அடுத்த பதிவில் விளக்குகிறேன்.

சித்தன் அருள்.................. தொடரும்.

2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete