​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 11 April 2017

சித்தன் அருள் - 638 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப வினைகளின் கூட்டுத்தொகுப்பான பிறவிகளில் மனிதப்பிறவி விலங்கான பிறவிகளிலிருந்து சற்றே கடுகளவு மேம்பட்டது என்றாலும் மேலும் மேம்பட சற்றே முயலாமல் அந்த விலங்குத்தன்மையை மட்டும் கொண்டு உணர்வுகளுக்கு ஆட்பட்டு, உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டு வாழ்கின்ற தன்மையே பெரும்பாலான மாந்தர்களிடம் நிலவிவருகிறது. இறைவனின் கருணையைப் பெறவும், மேலும், மேலும் இறை நோக்கி பயணம் செய்யவும், பாவங்களை சேர்க்காத வாழ்க்கை வாழவும், சேர்த்த பாவங்களை கழிக்கவும் மட்டுமே மனித பிறவி என்று ஒரு மனிதன் புரிந்துகொள்ளவே பல, பல, பல பிறவிகள் ஆகிவிடுகிறது. அவன் புலன்களால் கண்டு, கேட்டு உணரக்கூடிய வாழ்க்கை முறையை நுகர்வதே வாழ்க்கை என்று எண்ணுகின்ற தன்மையில்தான் பெரும்பாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இஃதொப்ப புலன் வாழ்வைத் தாண்டி மேலான வாழ்வு நிலையை நோக்கி செல்வதற்கு கொடுக்கப்பட்ட பிறவியை நன்றாக பயன்படுத்திக்கொள்ள கூடுமானவரை முயற்சி செய்வதே ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஆகிடுமே மனதை உறுதியாக வைத்துக்கொள்ள இஃது. அஃதொப்ப வினைகளின் தொகுப்பு, உறவுகள் ரீதியாகவும், நட்பு வழியாகவும், இன்னும் தொடர்பு கொள்ளக்கூடிய பிறமாந்தர்கள் வழியாகவும், வேறு, வேறு காரணங்களைக் கொண்டும் செயல்படும் தன்மையாகும். தேகத்தின் ஒட்டுமொத்த இயக்கம் மனிதன் தன் அறிவால் கண்டு "இஃது இதனால் இயங்குகிறது. இஃது இவ்வாறு இருக்கிறது" என்று புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் செயல்பட்டாலும், அப்படி தேகம் இயங்குகின்ற அந்த இயக்கத்தின் பின்னால் இருப்பதும் வினைகள்தான், என்பதை புரிந்துகொள்வது கடினமே.

1 comment:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete