அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
யாங்கள் அடிக்கடி கூறுவது போல இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக்கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா, பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக்கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எஃதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இஃது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு, உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்துகொண்டு, புகுந்துகொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து, மடிந்து, வாழ்ந்து, மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான், அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும், புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும், நனவிலும், ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக்கொண்டே, கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக்கொண்டே உள்ளத்தில் சதாசர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக்கொண்டு, எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல, மெல்ல புரியத் துவங்கும்.
பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும், எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும், அப்படியில்லாத சராசரி மனிதனுக்கும் வேறுபாடே, அதிகளவு துன்பத்தை பார்க்கும்பொழுது அதனை எப்படி எதிர்கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக்கொண்டும், தான் கற்ற கல்வியைக்கொண்டும் துன்பங்களை எதிர்கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா, இறைபக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனைவிட. எனவே மனசோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.
Agnilingam sir agathiyar kita KAALI AMMAN pathi keta soltringala
ReplyDeleteAgnilingam sir agathiyar kita KAALI AMMAN pathi keta soltringala
ReplyDeleteஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete