அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
இறைவன் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப சித்தர்களை உள்ளன்போடு வணங்குகின்ற ஆத்மாவிற்கு துன்பங்கள் வரலாமா? மெய்யான ஆன்மீகம் என்றால் என்ன? என்று அறியாமலும் வாழ்க்கையை அதன் போக்கிலே சென்று சுயநலமாய் வாழ்ந்து பிறர் நலத்தை மறுத்து வாழ்கின்ற மனிதர்களெல்லாம் பெரிதாக உலகியல் துன்பங்களில் மாட்டிக்கொள்ளாமல் வாழும்பொழுது, ஓரளவு புண்ணியம் செய்யவேண்டும், இறைவனை வணங்கவேண்டும் என்று எண்ணுகின்ற ஆத்மாக்களுக்கு மட்டும் ஏன் துன்பங்கள் தொடர்கிறது? என்பது காலகாலம் மனிதர்கள் மனதிலே எழுகின்ற ஐயங்கள், வினாக்கள். இதற்கு, எத்தனை முறை கர்மவினையை எம்போன்ற மகான்கள் காரணமாகக் கூறினாலும் கூட துன்பத்திலே துவண்டு, துயரத்திலே ஆழ்ந்து, வேதனையிலே கிடந்து மனம் சோர்ந்திருக்கும் மனிதனிடம் எந்தவித சமாதானமும் எடுபடாது. தீர்வை மட்டும்தான் அவன் எதிர்பார்ப்பான் என்பது எமக்கும் தெரியும். ஆனாலும் பல்வேறுவிதமான மனித மனத்தின் எண்ணங்களையெல்லாம் அவனவன் மனசாட்சியின்படிதான் அவன் பார்த்து ‘நமக்கு வந்திருக்கும் துன்பம் உண்மையில் நம் தவறினால்தான் வந்திருக்கிறதா? அல்லது நாம் தீவிர கவனமாக இருந்தும் பிறரால் வந்திருக்கிறதா?' என்றெல்லாம் ஒவ்வொரு மனிதனும் ஆய்ந்து பார்க்கவேண்டும்.
வாகனத்தை பூட்டி வைக்காமல் இருந்து அதை ஒருவன் இழந்திருந்தால், ஒருவேளை சமாதானம் அடையலாம். ஆனால் ஒன்றுக்கு இரண்டாக பூட்டி வைத்த வாகனம் தொலைந்து போனால்தான் ‘ஆஹா ! விதி அங்கே நன்றாக செயல்படுகிறது' என்று ஒரு மனிதன் சிந்தித்து அந்த விதியின் நுட்பத்தை புரிந்துகொள்ளலாம். எனவே, ஒரு மனிதன் மனித ரீதியாக கவனமாக வாழவேண்டியது என்றென்றும் அவசியமாகும். ‘சித்தர்கள்தான் அனைத்தும் விதி என்று கூறிவிட்டார்கள். விதிப்படி நடக்கவேண்டியது நடந்துவிட்டுப் போகட்டும். நான் ஏன் முயற்சி செய்யவேண்டும்? பிரயத்தனம் செய்யவேண்டும்?' என்றெல்லாம் எல்லா மனிதர்களும் இருக்கவேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. அந்த கருத்து எதற்காக கூறப்படுகிறது என்றால் ஒரு மனிதன் நல்லவனாக, மனசாட்சிக்கு பயந்து நடப்பவனாக, நேர்மையாளனாக இருப்பதோடு கடும் உழைப்பையும், முயற்சியையும் மனசோர்வில்லாமல் செய்கிறானோ அதனையும் மீறி அவனுக்கு தோல்வி வரும்பொழுது துன்பம் வரும்பொழுது அவன் மனம் சமாதானம் அடையவேண்டும் என்பதற்காகத்தான், விதியின் மகான்களால் கூறப்படுகிறது, என்பதை ஒவ்வொரு மனிதனும் தெள்ளத்தெளிவாக புரிந்துகொண்டிட வேண்டும். ஒரு மனித முயற்சி என்பது, எள் முனையளவும், எக்காலத்திலும், அவனை அதனைவிட்டு விலகியிருப்பதற்கும், ஒதுங்கியிருப்பதற்குமான ஒரு சூழலை தந்துவிடக்கூடாது. அதாவது முயற்சியை ஒதுங்கி நிற்றல் கூடாது என்று கூறுகிறோம். ஞானமார்க்கத்தை நோக்கி செல்லுகின்ற மனிதனாக இருந்தாலும், முழுக்க, முழுக்க ஒரு ஞானியாக இருந்தாலும் கூட லோகாய முயற்சி இல்லையென்றாலும் கூட வேறுவகையான முயற்சிகளில் அவன் சதாசர்வகாலம் ஈடுபட்டுக்கொண்டுதான் இருப்பான். தவமும், தவம் சார்ந்த சிந்தனைகளும், மெய்ஞானம் சார்ந்த செயல்பாடுகளும் அவனைப் பொறுத்தவரை நடந்துகொண்டேதான் இருக்கவேண்டும்.
ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!
ReplyDelete