​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 3 April 2017

சித்தன் அருள் - 631 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப காலகாலம் உயிர் அல்லது ஆத்மாவானது எத்தனையோவிதமான பிறப்புகளையெடுத்து இஃதொப்ப தாம்தாம் சேர்த்திட்ட கர்மவினைகளை நுகர்கிறது. இயம்புங்கால், அந்த கர்மவினைகள் பாவத்தின் எதிரொலியாகவும் இருக்கலாம். புண்ணியத்தின் எதிரொலியாகவும் இருக்கலாம். இதனை சார்ந்து பலாபலன்களை தொடர்ந்து நுகர்ந்துகொண்டே அந்த ஆத்மா பிறவிகளை தாண்டிக்கொண்டேயிருக்கிறது. இறைவனின் கருணையாலே எஃதாவது ஒரு பிறவியிலே இந்த உண்மை மெல்ல, மெல்ல அந்த ஆத்மாவிற்கு புரியவருகிறது. இஃதொப்ப புரிந்திட்டாலும் சட்டென்று ‘ தான் ‘ என்பது வேறு, தன்னுடைய ‘ தேகம் ‘ என்பது வேறு என்ற சிந்தனை வலுபெறாது. இறைவனின் கருணையாலே பாவப்பதிவுகள் குறைய, குறைய ஒருவேளை இதுபோன்ற மெய்ஞான சிந்தனைகள் ஒரு பிறப்பிலே தோன்றலாம். தோன்றினாலும் தோன்றியது உறுதி பெறவேண்டும். உறுதி பெற்றாலும் உறுதிபெற்ற வண்ணம் தொடர்ந்து நடைமுறை காணவேண்டும். நடைமுறை கண்டாலும் வாழ்விலே எதிர்பாராத நிகழ்வுகளைக் காணும்பொழுது மனம் சோர்ந்திடாமல் இருந்திட வேண்டும்.

வேண்டிடுமே! மனம் லௌகீக சுகங்களை இறை நோக்கி. விளம்பிடுவோம் வெறும் லௌகீக இன்பம் குறித்து, சிந்தனையும், செயலும், முயற்சியும் இருந்துவிட்டால் அதனைத்தாண்டி செல்ல இயலாமல் போய்விடும். விளக்குங்கால் இந்த உலகத்தில் இருந்துகொண்டு இந்த உலக இன்பங்களை, இந்த உலகம் சார்ந்த விஷயங்களை ஏற்கவேண்டாம், நுகரவேண்டாம் என்றால் அது எங்ஙனம் சாத்தியம் ? பின் எதற்கு உலகம் ? பின் எதற்கு இந்த தேகம் ? என்றெல்லாம் மாந்தனுக்கு ஐயம் எழலாம். மெய்தான். இந்த உலகம் ஒரு மெய்போல் தோற்றம் அளித்திட்டாலும் அது மெய்யல்ல என்பதை புரிந்துகொள்ளும் வண்ணமே மனித வாழ்வு அமைக்கப்பட்டிருக்கிறது. இறைவனின் கருணையாலே இதை உணர்ந்துகொள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிறிதளவேனும் முயற்சி செய்திடவேண்டும். இயம்புங்கால் வாழ்வு நிலை கர்மவினைகளின் அடிப்படையில் எங்ஙனம் அமைந்திட்டாலும் உயர் பதவியோ, செல்வமோ, நல் தேகமோ என்று எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் மனோரீதியாக இறை நோக்கிய சிந்தனையோடு ஒரு மனிதன் வாழ்ந்தால்தான், அதிலும் தடையற்ற பக்தியும், தெய்வீக ஞானத்தை புரிந்துகொள்ள முயற்சி செய்வதும், தளராத தர்மத்தையும் கடைபிடித்தால்தான் அவன் மெய்வாழ்வு வாழ்கிறான் என்பது பொருளாகும்.

ஆகிடுமே! இஃதொப்ப சிந்தனைகளையெல்லாம் பல்வேறு மகான்களை அனுப்பி காலகாலம் இறைவன் எஃதாவது ஒரு வழிமுறையில் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். ஆயினும்கூட மனிதர்களால் பல்வேறு தருணங்களில் இந்த மாய லோகத்தின் சக்தியை மீற இயலவில்லை. ஆயினும் தொடர்ந்து அதுகுறித்த சிந்தனையும், செயலும் இருந்திட்டால் அடுத்தடுத்த பிறவிகளில் மாயையை வென்று மெய் மனிதனாக, மனிதனில் புனிதனாக, புனிதனோடு மாமனிதனாக, இறுதியில் சித்தனாகக்கூட வாய்ப்பிருக்கிறது. ‘அங்ஙனம் ஏன் ஆகவேண்டும்?' என்றொரு ஐயம் எழலாம். மனிதரீதியாகக் கூறுங்கால் மனிதன் பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டிருக்கிறான். அங்ஙனம் பார்க்கும்பொழுது ஒரு நிலையடைந்த பிறகு அடுத்த நிலையை நோக்கி செல்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படியே தாண்டிக்கொண்டு செல்லும் பட்சத்திலே, ‘ எந்த நிலையை அடைந்துவிட்டால் அதனைத்தாண்டிய ஒரு நிலை இல்லை ‘ என்கின்ற எல்லை வந்துவிடுகிறதோ அந்த நிலைவரை மனிதன் ஓடியாகவேண்டும். பக்கவிளைவுகள் இல்லாத ஒரு நிரந்தர சுக அனுபவத்தை ஆன்மா பெறவேண்டுமென்றால் அது மெய்யான இறை சார்ந்த, அது தொடர்பான செயலாக இருந்தால் மட்டுமே சாத்தியம். அதுவன்றி தேகம் தொடர்பான கல்வியும், தேகத்தைப் பேணிக் காக்கவேண்டிய நிலையில் செயல்படக்கூடிய எந்த விஷயமும் ஒரு நிலைக்குமேல் பலன் தராது. அங்ஙனமாயின் தேகத்தை விட்டுவிட வேண்டுமா? என்றால் கூடாது. தேகத்தை இந்த ஆத்மா வசிக்கும் கூடாக எண்ணி முறையாக பராமரிப்பது அவசியம். ஆனால் அதிலேயே மூழ்கிவிடக்கூடாது என்பதே மெய்ஞான அனுபவம்.

இறைவனின் கருணையால் இதுபோன்ற ஞானக்கருத்துக்களைதான் இஃதொப்ப ஜீவ அருள் ஒலையிலே யாம் இந்த காலகட்டத்தில் பலரில் சிலருக்கும், சிலரில் சிலருக்கும், சிலரில், சிலரில், சிலரில், சிலரில் சிலருக்கும் ஓதவேண்டும் என்பது இறைவனின் கட்டளையாகும். ஆயினும்கூட அது நடைமுறையில் கடினம் என்பது எமக்கும் தெரியும். ‘ வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து சித்தர்களை அணுகக்கூடாதா ? ‘ என்றால் அணுகலாம். ஆனால் அதற்கு நாங்கள் காட்டுகின்ற வழியை மனிதனால் ஏற்க இயலாது. அவன் ஏற்க எண்ணினாலும் அவன் மதியை பிடித்து ஆட்டும் விதி ஏற்கவிடாது. அதனால்தான் பல்வேறு தருணங்களில் நாங்கள் மௌனம் காக்கிறோம். எனவே இடைவிடாத இறைவழிபாடும், தளராத தர்மமும், இயன்ற தொண்டும் இஃதொப்ப எல்லோரையும் உயர்த்தும்.


2 comments:

  1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete
  2. "அவன் ஏற்க எண்ணினாலும் அவன் மதியை பிடித்து ஆட்டும் விதி ஏற்கவிடாது"
    உன்மை அய்யா. ஓம்! ஸ்ரீ அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete