சித்தன் அருள் 2042ன் தொடர்ச்சியாக!
தமிழ் மொழிக்கு நம் மூதையர்கள் கொடுத்துள்ள விளக்கம் மிக அருமையானது.
"இம்மொழியானது தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியும், பழமைக்கு பழமையாய், புதுமைக்கு புதுமையாய், இளமை நலம் குன்றாது இயல்வது, புதுப்பொருள் ஒன்றை கண்டால் அதற்கும் ஆக்கச்சொல் அமைய இருப்பது, அதில், மெல்லிய, சுருங்கிய, சீரிய, கூரிய தீஞ்சொல் வளம் பெருக்குவது, அறம் தருவது, கலைகொழிப்பது, இன்பம் ஈவது, அன்பை ஊட்டுவது, ஆக்கம் அருள்வது, ஊக்கம் கொடுப்பது, வீரம் விளைவிப்பது, காதல் கனிவிப்பது, வெற்றியளிப்பது, பின்னும், எல்லா பொருளும் இதன்பால் உள! இல்லாத எப்பொருளும் இல்லை, என்னும் மொழிக்கு இலக்காக இலங்குவது, அதனால் வளம்கொழிக்கும் வற்றா களஞ்சியமென போற்றும் பெருமை வாய்ந்தது" என விவரித்துள்ளனர்.
அகத்தியரை, தமிழ்முனி, குறுமுனி, குடமுனி, பொதியமுனி, தமிழரென்பாரும், ஆரியர் என்பாரும் என பல திறத்தினராக கூறுவார். மேலும் இவரை, அமர முனிவன் அகத்தியன், என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான், அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு, என கூறுவதிலிருந்து அகத்தியர் என்கிற பெயருடையவரால் தமிழ் மொழி வளம்படுத்தப்பட்டது என்பதை அறியலாம்.
பொதிய மலை அகத்தியர் என்பவரை பற்றி கூறும்பொழுது அவர் வாழ்ந்த காலம் B.C 16000 என்று கூறப்பட்டுள்ளது. இக்கால மனிதர்களுக்கு இது எப்படி சாத்தியம் என்று தோன்றலாம்! அவர்கள் சித்தர்களாக வாழ்ந்தவர்கள், மேலும் இங்கு நாம் காண வேண்டியது அவர்களுடன் சமகாலத்தில், அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு முன்னரே தமிழ் மொழி வாழ்ந்து வந்துள்ளது என்பதே, இங்கு நோக்கப்படவேண்டியது.
1. முப்புர நிருதர் காலத்து பொதியமலை அகத்தியர் என்கிற குறுமுனி (ஒளியர்):-
இவர் வாழ்ந்த காலம் B.C 16000 என்று கூறப்பட்டுள்ளது. விந்திய மலையிலிருந்து தெற்கே தென்பாலிமுகம் (South Pole) வரையில் தமிழ்நாடு பரவி இருந்தது. இந்த நாடுதான் தமிழர்கள் உற்பத்தியான இடம்.
B.C 16500 இல் நிருதி நாட்டு (Africa) நிருதர்களால் (Negros) தமிழ்நாடு கைப்பற்றப்பட்டு அல்லலில் மூழ்கி இருந்தது. நிருதர்களில் கடைசியாக தமிழ்நாட்டை தாருகனின் மூன்று மகன்கள் ஆண்டு வந்தனர். இவர்களை முப்புரத்தவர் (திரிபுராதிகள்) என்று அழைப்பர். சேர, சோழ, பாண்டிய, குறும்பர் (பல்லவர்), எருமை நாட்டார் (Mysorians), துண்டீர நாட்டார்களால், நிருதர்களை அழிக்க முடியவில்லை.
முப்புரத்தவர்கள் மிகப்பெரிய கோட்டைகளை கட்டி ஆண்டு வந்தபடியால், சேர, சோழ, பாண்டிய, குறும்பர் (பல்லவர்), எருமை நாட்டார் (Mysorians), துண்டீர நாட்டார்களால் இவர்களை ஒழிக்கமுடியாமல், மன்னர்கள் எல்லாம் கயிலை சென்று பரமேஸ்வரரிடம் முறையிட்டார்கள்.
அவ் சமயம், பரமேஸ்வரருக்கும், உமை அம்மைக்கும் திருமணம் நடத்த நிச்சயித்திருந்து, திருமண நாள் வெகு அருகில் இருந்ததால், பரமேஸ்வரர் தனக்கு சமானமான அகத்தியரை விளித்து பெருஞ்சேனையுடன் தெற்கே தமிழர்களுக்கு உதவி செய்ய அனுப்பினார்.
இவரைத்தான், அருணகிரியார் "சிவனை நிகர் பொதியவரை முனிவன்" என்று கூறினார். இதுதான் அகத்தியர் தென்னாடு போவதற்கு காரணம். இவர் கைலாய வேளாளர் பரம்பரையை சேர்ந்தவர் என்கின்றனர்.
தென்னாடு போகும்படி சொன்னபோது அகத்தியர் பரமேஸ்வரனிடம்
"விடைகொடு போவான் ஒன்றை வேண்டினேன்!
ஏகுந் தேயம் தமிழ் நாடென்று சொல்லுப, அந்நாட்டின்
இடைபயின் மனித்த ரெல்லாம் இன்றமிழ் ஆய்ந்து கேள்வி
உடையவர் என்ப, கேட்டார்க் குத்தரம் உரைத்தல் வேண்டும்!"
என்று கூற, பரமேஸ்வரனார் அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை உபதேசித்து முத்தமிழிலும் வல்லவராக்கி அனுப்பி வைத்தார்.
அகத்தியர் சேனைகளுடன் தெற்கு நோக்கி வருவதை அறிந்த முப்புரத்தவர்கள், பெரும் சேனையை விந்தியமலையை நோக்கி அனுப்பி அங்கேயே தடுக்க முயன்றனர். அங்கே நடந்த போரில் அகத்தியர் வென்றார். அவருக்கு "விந்தம் அடக்கிய வித்தகர்" என தமிழர்கள் பட்டம் கொடுத்தனர். பின்னர் கிரௌஞ்ச மலை போரில் வெற்றி பெற்று, பொதிகை வந்து சேர்ந்து அங்கே பாசறை அமைத்து விந்தியமலை முதல், பொதிகை மலை வரை நிறுத்தர்களை அடித்து விரட்டி, தமிழ்நாட்டை மீட்டு ஆண்டு வந்தார். குமரி நாடு, பெருவள நாடு, ஒளிநாடுகள் மாத்திரம் நிருதர்கள் வசம் இருந்தது. பொதியமலைக்கு கீழே சென்று நிருதர்களை எதிர்க்க முடியாததால், இச்செய்திகளை தூதுவர்கள் மூலம் கைலாயத்துக்கு அனுப்பினார்.
பரமேஸ்வரரின் கல்யாணம் முடிந்த சில நாட்களில், பெரும் சேனையுடன் திருவேற்காடு என்ற இடத்தில் அகத்தியரை சந்தித்து, நாட்டின் நிலைமையை அறிந்து, கூவம் சென்று அங்கு போருக்கு வேண்டியவைகளை சேகரித்து, போர்கோலத்துடன் அச்சிறுப்பாக்கம் என்கிற இடத்தை அடைந்து அங்கே தேரின் அச்சு முறிய, அதை சரி செய்து திருவதிகையை அடைய அங்கே, முப்புறத்தவர்களின் சேனையை எதிர்கொண்டு போர் செய்து அழிக்க, முப்புரத்தவர்களை வெற்றிகொண்டு, அவர்கள் சரணடைய, அபயம் கொடுத்து, மூன்று பெரும் கோட்டைகளையும் தகர்த்து எறிந்தார்.
தமிழ்நாட்டை, தென்பாலிமுகம் (Southpole) வரை நிருதர்களிடமிருந்து மீட்டு, மகேந்திர மலையை அரசிடமாக்கி ஆட்சி புரிந்து வந்தார்.
போர் நின்று நாட்டில் அமைதி தவழ, அகத்தியர் பரமேஸ்வரனாரிடம் விடை பெற்று, பொதிகை வந்து தாம் உருவாக்கிய தமிழ் சங்கத்தில் மாணாக்கர்களை சேர்த்து, தமிழ் மொழிக்கு "அகத்தியம்" எனும் இலக்கண நூலை உருவாக்கினார். இவருடைய சங்கமானது நீண்ட நாள் நடை பெற்று வந்தது.
பொதிகை மலையில், பாவநாசத்தில் தான் இவ் அகத்தியரின் சங்கம் இருந்தது. ஆனால் குற்றாலத்திலும் அகத்தியருக்கு ஒரு இருக்கை உண்டு. இது கோடைகால இருக்கையாக இருந்தது.
ஆதலால் இவருக்கு குற்றால முனி என்றும் பெயர் வந்தது. மேலும் இவர் தென் தமிழ்நாட்டிலேயே இருந்ததால் "தென்முனி" என்றும் ஒரு பெயர் உண்டு.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment