​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 14 October 2023

சித்தன் அருள் - 1467 - அகத்திய பெருமானும் மஹாவில்வமும் - ஓர் எளிய அனுபவம்!


ஒரு அகத்தியர் அடியவருக்கு, அகத்திய பெருமான் அருளிய எளிய அனுபவத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அகத்திய பெருமான் எத்தனை மென்மையான தாயுள்ளம் கொண்ட மஹாமுனிவர்!!!! என்று விளக்கும் நிகழ்வு. அடியவரின் வார்த்தையாகவே இந்நிகழ்வை படிக்கலாம்.

நாங்கள் முதல் முறையாக தீர்த்தமலை குரு மண்டலம் அகத்தியர் ஆஸ்ரமம் சென்றோம். மிக மிக ரம்மியமான சூழலில் கருணை பொழியும் விழிகளுடன் அகத்திய பெருமானும், அன்னை லோபாமுத்திரையும்,  பதினெண் சித்தர்கள் புடைசூழ அருளாசிகள் கொடுத்து கொண்டிருந்தனர். அன்று பௌர்ணமி பூஜை அபிஷேகம் முடிந்த பின்னர் அலங்காரம் நடைபெற்று கொண்டு இருக்க நாங்கள் ஆஸ்ரமத்தில் சுற்றி இருந்த மரங்களை  பார்த்து கொண்டு நின்றிருந்தோம். அப்போது திடீரென பலமான காற்று எங்கள் மீது தொடர்ந்து 3-4 நிமிடங்கள் வீசியது.  ஏதோ ஒரு சக்தி எங்களை வாயால் ஊதி தள்ளியது போல உணர்வு. அந்த காற்று நாங்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே வீசியது, ஆச்சர்யமாக இருந்தது. சற்று தொலைவில் நின்றிருந்தவர்களை பார்த்தால் அவர்களின் உடைகள் காற்றில் அசையவில்லை. சரி நம்மை சுற்றி ஏதோ நடக்கின்றது என்று மட்டும் உணர முடிந்தது. அந்த ஆஸ்ரம வளாகத்தின் உள்ளே பேரமைதி மனதிற்கு இதமாக இருந்தது. அங்கிருந்த அதிர்வலைகள் நமது உடலிற்குள் அனைத்து  திசைகளில் இருந்தும் ஊடுருவி சென்றதை நன்றாக உணர முடிந்தது. ஒரு மிக அடர்ந்த காந்த வயலுக்குள் நாம் அகப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு. பசி தாகம் தெரியவில்லை. பூஜை தரிசனம் முடிந்து வந்த பின்னர் 3வது நாள் எங்களை வாட்டி வதைத்து கொண்டு இருந்த ஒரு பிரச்சினை முடிவுக்கு வந்தது. எதிர்பாராத நிகழ்வு அது. மகிழ்ச்சி என்பதை விட முதலில் எங்களுக்கு ஏற்பட்ட உணர்வு அதிர்ச்சிதான்.  ஏனெனில் அந்த பிரச்சினையை எதிர்கொள்வது ஒரு தினசரி வழக்கமாகிவிட்டிருந்தது. எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த சமயம் திடீரென வழி கிடைத்தது.

கோவிலுக்கு செல்லும் முன் அகத்திய பெருமானையும், அன்னை லோபாமுத்ரா தேவியையும் மனதார, "அப்பா அம்மா நீங்கள் இருவரும் எங்கள் கூட இருந்து எங்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்" என்று வணங்கிவிட்டு செல்வோம். ஒவ்வொரு முறையும் தீர்த்தமலை சென்று வந்த பின்னர் எங்கள் வீட்டில் இருக்கும் அகத்தியர் படத்தின் முன் அமர்ந்து நன்றி சொல்வேன். அது போல அடுத்து 2 மாதம் கழித்து இந்த தேதியில் வந்து உங்களை தரிசிக்க வேண்டும் என்று ஆசை. அதற்கும் நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று பிரார்த்தனை வைப்பேன். "அடுத்த முறை வரும் போது நான் என்ன வாங்கி வரட்டும் அப்பா" என்று பிரார்த்தனையில் கேட்பேன். என் மனதில் பளீரென்று நல்ல ஆழமான எண்ணமாக ஒரு பதில் வரும். நானே சிந்திக்கும் எண்ணங்களை விட அந்த பதிலாக வரும் எண்ணம் மிக மிக வித்தியாசமான முறையில் இருக்கும். அரை நொடியில் என் ஆழ் மனதில் மிக திண்ணமாக தெளிவாக பதிக்கபடும்.  அப்படி ஒருமுறை நான் பிரார்த்திக்கும் போது "வில்வமரம் வாங்கி கொணர்ந்து வை" என்ற எண்ணம் வந்தது. எனக்கு மிகுந்த சந்தோஷம். தீர்த்தமலை செல்ல 2 வாரங்கள் இருந்தது. 

பதில் கிடைக்க பெற்ற உடன், என் மனதில் ஒரு ஆசை தோன்றியது. வில்வமரம் வாங்க போகிறோம், மஹா வில்வ மரம் கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்ற ஆசைதான் அது. ஆனால் ஒருபோதும் என் ஆசையை  என் கணவரிடம் கூறவில்லை. "தீர்த்தமலை செல்லும் போது வில்வ மரக்கன்று வாங்கி செல்வோம்" என்று மட்டும் கூற அவரும் சரி வாங்கி செல்வோம் என்று சொன்னார். கணவரும் குழந்தையும் அலுவலகம், பள்ளி சென்ற பின்  இணைய தளத்தில் தேடினேன், சென்னையிலோ அல்லது செடி விற்பனை செய்யும் தளங்களிலோ மஹாவில்வ கன்று கிடைக்குமா என்று. ஒரு சில தளத்தில் 9 இலை கொண்ட மஹாவில்வ கன்று இருந்தது. ஆனால் எனக்கோ "13 இலை கொண்ட மஹாவில்வம் தான் வாங்கனும்" என்ற எண்ணம் தோன்றியது. இப்படியாக ஒரு வாரம் சென்றுவிட்டது.

சரி அகத்திய பெருமானிடமே  உதவி கேட்போம் என்று ஒருபுறம் நினைத்தேன். மறுபுறம், "அகத்திய பெருமான் இட்ட உத்தரவு நமக்கு தானே. அதுவும் நானாக கேட்ட பின் தானே பதில் தந்தார் அப்பா. கேள்வியும் கேட்டுவிட்டு பதில் வந்த பின் அதை செய்வதற்கும் போய் அகத்தியப்பெருமானை தொந்தரவு செய்வதா?" என்ற எண்ணம் வந்தது. அடிக்கடி அகத்திய பெருமான் நாடியில், "நீ நினைத்ததை எல்லாம்  செய்ய இறைவனும் சித்தர்களும் என்ன உந்தன் வேலையாளா? " என்ற வாக்குகள் நினைவில் வர பயத்தில் அமைதியாகி போனேன். நாமே முயன்று பார்ப்போம், மஹாவில்வம் கிடைத்தால் வாங்குவோம். கிடைக்காவிட்டால் காசி வில்வம் வாங்கி செல்வோம் என்று அரைகுறை மனதோடு முடிவு செய்தேன்.

நாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அரசு தோட்டகலைதுறை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக மிகப்பெரிய தோட்டமும் செடிகள் விற்பனையகமும் இருந்தது. ஒரு நாள் அங்கே சென்று கேட்டோம். அங்கே வில்வ மரக்கன்றை தவிர அத்தனை செடியும் இருந்தது. எனக்கோ பெரிய ஏமாற்றம். இருப்பினும் வரும் வழியில் நிறைய நர்சரிகள் இருக்கும், அங்கே கேட்போம் என்று சமாதானப்படுத்தி கொண்டேன். அந்த நர்சரி கள் ஒவ்வொன்றிலும் வண்டியை நிறுத்தி கேட்க எங்கேயும் "வில்வம் இல்லை"  என்ற பதிலே வந்தது.

பெருத்த ஏமாற்றம் மனச்சோர்வோடு  "அகத்திய பெருமானே என்னை மன்னித்து விடுங்கள் உங்கள் உத்தரவை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் முடியவில்லை.எனக்கு கொடுப்பினை இல்லை போலும். ஒரு வேளை  மஹாவில்வம் வாங்கும் தகுதி எனக்கில்லை என்று நினைக்கிறேன் .மன்னித்துவிடுங்கள் அப்பா" என்று மனதில் வணங்கி கொண்டேன்.சரி நாம் வலைதளத்தில்இல் கிடைக்கும் காசி வில்வமே வாங்கிக் கொள்வோம் என்று நினைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தோம். 

பொதுவாக இரு சக்கர வாகன த்தில் செல்லும் போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடையில் வண்டியை நிறுத்த சொன்னால் என் கணவரோ  மிக சரியாக நான் குறிப்பிட்ட கடையை தாண்டி சிறிது தூரம் சென்று தான் நிறுத்துவார். எனக்கு கோபம் கோபமாக வரும். "கடை வாசலில் நிறுத்தாமல் இவ்வளவு தூரம் நடந்து போய் வாங்குவதற்கு எதற்கு இரு சக்கர வாகனத்தில் வர வேண்டும்.பேருந்திலேயே போய் கொள்ளலாம் இல்லையா "என்று கடிந்து கொள்வேன்.

பாதி வழியில் திடீரென்று என் கணவர் வண்டியை ஓரம் கட்டினார்.  "என்னாச்சு என்று கேட்க? ", அந்த இடத்தில் ஒரு நர்சரி இருந்தது. என் கணவர் என்னிடம்,  "எதற்கும் ஒருமுறை நீ மட்டும் இறங்கி சென்று கேட்டுவிட்டு வாயேன்" என்றார். அந்த தருணம் வரை நான் என் கணவரிடம்" மஹாவில்வம் தான் வாங்கனும்" என்ற எனது விருப்பத்தை கூறவில்லை. "அரசு தோட்டத்துறையிலேயே இல்லை, எந்த நர்சரி யிலும் இல்லை. இங்கே மட்டும் என்ன கிடைத்துவிடவா போகிறது" என்ற அவநம்பிக்கையோடு சென்றேன்.

உள்ளே ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். பசுமையான சூழலில் நல்ல கூட்டம் இருந்தது. நான் உள்ளே சென்றதும் அவரே என்னிடம் வர, "அக்கா வில்வ மரக்கன்று இருக்குமா? " என்று கேட்டேன். அவரும் "இருக்கு மா" என்றார். "சரி, எங்க இருக்கு காட்டுங்க செடியை பார்த்து எடுத்துக்கறேன்" என்றேன். விறு விறு என்று என்னை மரக்கன்றுகள் அடுக்கி வைத்திருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று நிற்க வைத்தார். என் கண்களை நேரே உற்று நோக்கி, "உனக்கு வில்வம் வேண்டுமா? ,மஹா வில்வம் வேண்டுமா?" என நெற்றி பொட்டில் அறைந்தார் போல ஒரு கண்டிப்பு கலந்த உரிமையுடன் கேட்டார். மயிர்கூச்செறிந்துவிட்டது எனக்கு. அந்த தருணம் எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை.  ஏனெனில் நான் மஹா வில்வம் வாங்க ஆசைப்பட்டது எனக்கு மட்டுமே தெரியும் என்று நினைத்து கொண்டிருந்த முட்டாள் ஆவேனே. பயம்,சந்தோஷம் , ஆச்சரியம், அதிர்ச்சி, திகைப்பு ,வியப்பு அனைத்தும் கலந்த கலவையான உணர்வு. சில நிமிடங்கள் பேச்சு வரவில்லை. கண்கள் கலங்கி விட்டதை வெளி காட்டிக் கொள்ளாமல், பார்த்தேன்.. அந்த பெண்மணி ஒரு கணம் என் கண்களுக்கு அகத்திய பெருமானாகவே தோன்றினார்.

என் பதிலுக்காக காத்து உற்று நோக்கி கொண்டிருந்தவரிடம் " மஹாவில்வம் கொடுங்க" என்றேன். 10 காசி வில்வக்கன்றுகளுக்கிடையே ஒரே ஒரு மஹாவில்வம் நல்ல பசுமை யான தளிர்களோடு, கிளைகளோடு என்னைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தது.அந்த மஹாவில்வம் எனக்காகவே  காத்துக் கொண்டிருந்தது போல தெரிந்தது. மகிழ்ச்சியோடு வாங்கி கொண்டு வண்டியில் ஏறி சிந்தித்துக் கொண்டே  வந்தேன். எப்போதுமே மிகச் சரியாக கடை வாசலில் வண்டியை நிறுத்தாத என் கணவர் அன்று அந்த நர்சரியின் வாசலில் நிறுத்தியது எப்படி❓ அகத்திய பெருமானே அவரின் மனதை ஆட்கொண்டு அங்கே செல்ல வைத்திருக்கிறார் என்று உணர்ந்து கொண்டேன். வீட்டிற்கு வந்த உடன் தான் என் கணவரிடம் என்னுடைய ஆசையை பற்றியும் அகத்திய பெருமானின் கருணை பற்றியும் விவரித்தேன்.அவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி.

தன் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றுவதில் அகத்திய பெருமானுக்கு நிகர் அகத்திய பெருமானே. அவரின் கைகளை பிடித்துக் கொண்டே இந்த பிறவி பெருங்கடலை கடந்திட வேண்டும்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete