​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 11 October 2023

சித்தன் அருள் - 1462 - ஒரு அடியவருக்கு அகத்தியப்பெருமான் அருளிய அனுபவம்!


​சித்தன் அருள் தொகுப்பு 1456இன் தொடர்ச்சி.

கால் பெருவிரலை கவ்வியது பாம்பு என்று உணர்ந்த அந்த நொடியில், அவர், காலை உதறினார். பிடி தளர்ந்த பாம்பு, செடிக்குள் எங்கோ சென்று விழுந்தது. அருகில் இருந்த ஒரு துணியை கிழித்து, காலில் இறுக கட்டியபின் மனைவியை அழைத்துக்கொண்டு, தன் காரிலேயே மருத்துவமனைக்கு, தானே ஓட்டிச்சென்றார்.

பொதுவாகவே இறை பக்தியில் மூழ்கி தெளிந்தவர்கள், தனக்கென எந்த சூழ்நிலை வந்தாலும், பதறாமல், நிதானமாக செயல் படுவார்கள். ஏன் என்றால், அவர்கள் உள்ளுணர்வு, இறைவனை மீறி என்ன நடந்துவிடும், அவர் தீர்மானம்தான் நம் வாழ்க்கை என்ற ஆணித்தரமான எண்ணம் இருக்கும். இவரும் அதை உணர்ந்தவர், தெளிந்தவர், தரிசனம் கண்டவர்.

அரசாங்க மருத்துவமனை சென்றதும், விஷயத்தை கேள்விப்பட்ட மருத்துவர்கள், உடனடியாக அவருக்கான முதலுதவி சிகிர்ச்சையை கொடுத்து, அவருக்கான மேல் சிகிர்ச்சைக்கு முன் கட்டிலில் கிடத்தினர்.  இவர் கிடந்த கட்டிலுக்கு அடுத்து ஒரு படுக்கையும், பின் உயர்ந்த சுவரும். வழியோ, ஜன்னலோ எதுவும் கிடையாது.

திடீரென இரு சிவனடியார்கள், எங்கிருந்தோ அந்த அறைக்குள் தோன்றினர். அவர்களை கண்டதுமே, இவர் உணர்ந்து விட்டார். வந்திருப்பது வெள்ளியங்கிரி ஆண்டவரும், அவர் அடியவரும்தான் என்று. முகத்தில் அப்படி ஒரு தெளிவு, தீர்க்கமான பார்வை, விபூதியின் தூக்கலான மணம்.

அவர், படுக்கையில் அமர்ந்திருந்தாலும், இரு கரம் கூப்பி, கண்களில் நீர் மல்க அவர்களை வரவேற்றார். அவர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் அமர்ந்திருந்த பொழுது, வந்தவரில் ஒருவர், கட்டிலுக்கு அருகில் வந்து, எந்த விரலில் பாம்பு கடித்ததோ, அந்த விரலை பிடித்து நீவி விட்டார். பின் அவரிடம், "ஹர ஹர சிவ சிவ" என மூன்று முறை கூறு என்றார். அவ்வாறே கூறியதும், அவர் அமர்ந்திருந்த கட்டிலை ஒரு முறை, இருவரும் சுற்றி வந்தனர்.  பின்னர்,

"நீ உடல் நலமாய் ஆனபின், வெள்ளியிங்கிரிக்கு வா!" என்று உத்தரவிட்டனர்.

இவரோ வந்தவர்களை உணர்ந்து விட்ட ஆனந்தத்தில் கண்ணீருடன் தலையசைத்து அமர்ந்திருந்தார்.

இவர் மனைவிக்கு வந்தவர்கள், இருவரையும் புரியவில்லை. "நீங்கள் யார்! உங்களை தெரியவில்லையே! எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றார். ஏன் என்றால், இவர்களும் அடிக்கடி வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்வதால், அனைவரையும் பழக்கம். ஆனால் இப்படிப்பட்ட ஒருவரையும் அதுவரை கண்டதே இல்லை. மேலும் வினவிய பொழுது, "அங்கிருக்கும் சுவாமிநாதனின் மச்சான்தான் நாங்கள்" என்று கூறிய பின் கிளம்பி சென்றார்கள்.

அவர் மனைவி இவரிடம் விசாரிக்க, இவரோ "வந்தது வெள்ளியங்கிரி சாமி" என்று கூறி நிறுத்திக் கொண்டார்.

சற்று நேரத்தில் வந்த மருத்துவர்கள், இவர் உடல் நிலை நல்லபடியாக இருப்பதை கண்டு, வீட்டுக்கு போகச் சொன்னார்கள்.

உடல் சரியாகிவிட்ட தைரியத்தில், அடுத்த நாளே வெள்ளியங்கிரி ஆண்டவரை காண குடும்பத்துடன் கிளம்பி சென்றார்.

அங்கு சென்று, அம் மண்ணில் கால் வைத்ததும், கால் முழுவதும், தீக்குள் கால் வைத்தது போல் எரிந்தது. சற்று நேரம் பொறுத்திருந்து பார்க்க, படிப்படியாக அந்த எரிச்சல் குறைந்து அடங்கியது. அதன் பின்  நல்லபடியாக சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பொழுது, அவரது மனைவி அங்கிருந்த ஸ்வாமிநாதன் என்கிற பூசாரியிடம் "உங்களுக்கு இன்னின்ன பெயரில் மச்சான் யாராவது இருக்கிறார்களா?" என்று விசாரித்தார்.

"அப்படியெல்லாம் யாருமே எனக்கு மச்சான் இல்லையே!" என்று பூசாரி கூறினார்.

அப்பொழுதும் அடியவர் "நான் தான் வந்தவர் சாமினு சொல்றேனே!" என்றார்.

சமீபத்தில் நாடியில் வந்த அகத்தியப் பெருமான், "யாம் இவனுக்கு பல முறை வந்து உதவியிருக்கிறேன்" என்ற வாக்குரைத்த பொழுதுதான், இவரால், வெள்ளியங்கிரி ஆண்டவருடன் வந்தது அகத்தியப்பெருமான் என்று உணர முடிந்தது. இவருக்கு பல அனுபவங்களை இறைவன் கொடுத்துள்ளார்.

என்னவாயினும் சரி!, உடல் நிலை சரியில்லாத பொழுது இறைவனால்/சித்தரால் விரல் நீவி விடப்பட்டதென்பது, அத்தனை எளிதான அருளல்ல.

தற்போதும் முதுமையினால், உடல் பாதிக்கப்பட்டிருந்தாலும், அகத்தியப்பெருமானிடம் நாடியில் கேட்ட பொழுது, "இப்பொழுதும் நான் தான் வந்து இவனை காப்பாற்ற வேண்டும்" என தெளிவாக கூறினார்.

காப்பாற்ற அகத்தியப்பெருமான் இருக்க, நாமும் நம் பிரார்த்தனையை சமர்ப்பிப்போம்.

ஓம் ஸ்ரீ லோபா முத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. ஓம் அகத்திசாய நம. அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா. சித்தர்களின் ஸ்பரிசத்தினால் நோய் தீர எத்தனை சிரத்தையுடன் வணங்கி இருக்க வேண்டும். மெய் சிலிர்க்கின்ற நிகழ்வு. 🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. Episode 1449ல் , ராமேஸ்வரம் முக்கியத்துவம் பற்றி கூறும் போது,முதலில் தனுஷ்கோடி பிறகு இறை தரிசனம் என்று சொல்லப்பட்டுள்ளது. தர்பணம் எப்பொழுது தரவேண்டும் என்று நினைப்பவர்கள் எப்பொழுது தரவேண்டும். இறை தரிசனம் செய்த பிறகு தரலாமா என்று கூறவும். நன்றி .ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா தாயார் சமேத அகத்தியர் திருவடிகள் போற்றி.

    ReplyDelete
    Replies
    1. ​வணக்கம், முதலில் பித்ரு தர்ப்பணம் கொடுத்துவிட்டு பின்னர் இறைவனை காண செல்லலாம்!

      Delete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete