​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 5 October 2023

சித்தன் அருள் - 1452 - அகத்தியப்பெருமான் உத்தரவில் அடியவர் பெற்ற அனுபவம்!


அகத்தியப்பெருமான் தன் அடியவர்களுக்கு பல வேளைகளில் குறிப்பிட்ட உத்தரவை கொடுப்பார். அவர் உத்தரவை சிரம் ஏந்தி நடத்தி முடிக்க முயற்சி செய்யும் பொழுது பல விதமான தடைகள் வரத்தான் செய்யும். அது அவரவர் கர்மாவை பொறுத்தது. இருப்பினும், மனம் தளராமல் அவரிடம் பிரார்த்திக்க, அவரே ஏதேனும் ஒரு உருவில், ஒரு உதவியை செய்து அதை நடத்தி வைப்பார். அங்ஙனம், ஒரு அடியவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை பார்ப்போம்.

எங்கள் வீட்டில் நான், என் கணவர், 6 வயது குழந்தை ஆகிய மூவர். உறவினர்கள் அனைவரும் தென் தமிழகத்தில். என் கணவருக்கு நாடியில் வரும் வாக்குகளை பின்பற்றுவதில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. ஆனால் நான் அகத்திய பெருமானை வணங்குவதற்கு தடை செய்ய மாட்டார். அவர் காலை 5 மணிக்கு அலுவலகம் கிளம்ப வேண்டும். மாலை வருவதற்கு 3-4 மணி ஆகிவிடும். வீட்டில் அனைத்து வேலைகளையும் நான் தான் செய்ய வேண்டும். குழந்தையும் பார்த்து கொள்ள வேண்டும். மாலை நேரங்களில் கோவிலுக்கு செல்வோம். அதுவும் கூட நானும் குழந்தையும் ஆர்வத்தோடு செல்வோம். என் கணவருக்கு ஆர்வமிருக்காது. ஆனாலும் என் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று கூட வருவார்.

4 மாத குழந்தையாக இருக்கும் போதிலிருந்து குழந்தையை நான்தான் முழுக்க பார்த்து கொள்வேன். மனித ரூபத்தில் உதவிக்கு ஒருவரும் இல்லை. நான் குளிப்பதற்கு செல்லக் கூட விட மாட்டான். இடுப்பில் தூக்கி வைத்து கொண்டு சமைப்பேன். மாலை 4 மணிக்கு என் கணவர் வந்த பிறகு அவர் சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்து பின்னர் குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு தான் நான் குளிக்க செல்வேன். இரவினில் 1.30மணி வரை விளையாடுவான். காலை 10 மணி வரை தூங்குவான். 4 வயது வரை இந்த நிலை. இரவினில் குழந்தை தூங்கிய பின்னர் "சித்தன் அருள்" வலைப்பூவை வாசித்து விட்டு தூங்க செல்வேன். வாசிப்பதோடு சரி. ஒன்றையும் செயல்படுத்த மாட்டேன். என்னுடைய  அன்றாட வேலைகளை செய்வதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. குழந்தையை பள்ளியில் சேர்த்து விட்ட பின்னர் தான், சித்தன் அருள் தொடரில் வரும் அகத்திய பெருமான் வாக்குகளை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் திண்ணமானது.

கடந்த மார்ச் 2023 இல் நாடியில் அகத்திய பெருமான், கோடையில் அனுதினமும் நீர்மோர், மூலிகை பானகம் வழங்க வேண்டும் என்று உரைத்திருந்தார். ஆனாலும் நான் மட்டும் ஆசைப்பட்டால் போதாது. என் கணவரும் மனமொன்றி கருத்தொருமித்து செய்தால் தான் நல்லது என்று நினைத்தேன். தினமும் விளக்கேற்றி அகத்திய பெருமானிடம் வேண்டிக் கொள்வேன், "பெருமானே என் கணவர் சற்று மனம் மாறி என்னோடு சேர்ந்து உங்கள் வாக்குகளை நிறைவேற்ற அருளுங்கள் அப்பா " என்று.

அச்சமயம் தான் என் மாமனார் தவறிவிட்டார். அந்த தருணத்தில் என் கணவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும் தள்ளி போய் கொண்டே இருந்தது. அப்போது அனைவருக்கும்  நீர்மோர் கொடுக்க வேண்டும் என்று வாக்குகளை படித்தேன். என் கணவரிடம் சொன்ன போது அவர், அதெல்லாம் நம்மால் முடியாது. குழந்தையை வைத்து கொண்டு சிரமம் என்று முடித்து விட்டார். எனக்கு ஒரு தவிப்பு. சரி அவரும் மனம் மாறி செய்தால் தான் உத்தமம் என்று அமைதியானேன்.

ஏப்ரல் 14 க்கு மேல் நீர்மோர் கொடுத்த அடியார்களின் அனுபவங்களை சித்தன் அருளில் வெளியிட்டதை படிக்க நேர்ந்தது. குஜராத்தில் கணவனும் மனைவியுமாக  ஒரு தம்பதியர் சிறிய தூக்கினில் நீர்மோர் வழங்கிய புகைப்படங்கள் வெளியிட்டிருந்தீர்கள். அதை பார்த்த  எனக்கு மிகுந்த ஏக்கமாக இருந்தது. என்னால் இதைப் போல் செய்ய முடியவில்லையே என்று ஒரு நாள் சனிக்கிழமை இரவு மிகவும் நொந்து போய் அழுது கொண்டே தூங்கிவிட்டேன். என் வேதனையும் கண்ணீரும் ஒருவருக்கும் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அகத்திய பெருமான் பார்த்து கொண்டு இருக்கிறார் என்று உணரவில்லை.

அடுத்த நாள் ஞாயிறு அன்று நாங்கள் காய்கறிகள் வாங்க சந்தைக்கு சென்றோம். உடல் மட்டும் இயந்திரம் போல் செயல்பட்டது. மனம் முழுக்க என்னால் நீர்மோர் கொடுக்க முடியவில்லை என்ற குற்ற உணர்வு அழுத்திக் கொண்டிருக்க எனக்குள் நானே புலம்பிக் கொண்டே காய் வாங்க சென்றேன். மிக குறுகலான இடத்தில் வரிசை வரிசையாக கடைகள் அமைந்திருக்கும் நெரிசலான இடமது. ஒருவர் சென்று  வரவே அவ்வளவு சிரமாக இருக்கும். பிறர் மீது இடித்து கொண்டு தான் செல்ல வேண்டும். அந்த இடத்தில் நானும் என் கணவரும் சென்று கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஒரு வயதான பாட்டி, கையில் ஒரு தூக்கு வாளியோடு மின்னல் வேகத்தில் என்னை நோக்கி வந்தார். இடித்து விடப் போகிறோம் என்று நான் சற்று விலகி நிற்க அந்த பாட்டியோ சரியாக என்னை சுட்டிக் காட்டி "அம்மா மோர் வாங்கலியோ மோர்" என்று என் கண்களை உற்று நோக்கி கேட்டார். நானோ பெரிய முட்டாள். "இல்லை வேணாம் மா" என்று நகர்ந்து வேறு பக்கம் சென்றேன். 2 நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த பாட்டி நான் சென்ற இடத்திற்கு வந்து மீண்டும் என் கண்களை உற்று நோக்கி கேட்டார். நான் மனதிற்குள், "என்னடா இந்த பாட்டி மொத்த மார்கெட்டிலேயும் நம்மை மட்டுமே துரத்தி துரத்தி மோர் விற்க வருகிறதே" என்று நினைத்து கொண்டு நகர்ந்து விட்டேன். எவ்வளவு பெரிய அடி முட்டாளாக இருந்திருக்கிறேன். ஆனால் ஒரு சில விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. மீண்டும் இரு சக்கர வாகனத்தில் ஏறி வீட்டிற்கு வரும் போது தான் சிந்தித்துப் பார்த்தேன். ஏன் அந்த பாட்டி என்னிடம் மட்டுமே மோர் விற்க வந்தார் போல சுட்டிக் காட்டி கண்களை உற்று நோக்கி கேட்டார். அவரிடம் இருந்து வேறு யாருமே மோர் வாங்கவில்லை. அது மட்டுமல்ல அந்த பாட்டியின் வயதிற்கு அவரின் நடையில் இருந்த வேகம் சற்றே பிரமிக்க வைத்து. மேலும் அந்த மார்க்கெட்டின் நுழைவாயில் வழியாக அந்த பாட்டி வந்திருந்தால் நாங்கள் அவரை முன்னரே கவனித்து இருப்போம். ஆனால் திடீரென சுழல் காற்றைப் போல வானத்தில் இருந்து இறங்கியது போல் அந்த பாட்டி என் எதிரே தோன்றிய காட்சி என் மனக்கண்ணில் தோன்றியது.

வண்டியில் வரும் போதே என் கணவரிடம் வாய்விட்டு புலம்ப தொடங்கினேன். வீட்டிற்கு வந்த உடன் என் கணவரிடம் சித்தன் அருளில் வெளிவந்த நீர்மோர் வழங்கிய தம்பதியரின் படத்தை பார்த்து நான் முன்தினம் இரவு ஏங்கி அழுததையும், அகத்திய பெருமானிடம் முறையிட்டதையும் கூறினேன். வந்தது சாதாரண பாட்டியல்ல. என் மனவேதனை போக்க அகத்திய பெருமான் அனுப்பிய நபர் தான் அந்த பாட்டி. அவர் விற்ற மோர் அனைத்தையும் வாங்கி வெயிலில் வருவோருக்கு கொடுத்திருக்க வேண்டும். அகத்திய பெருமான் எனக்கு உதவி செய்தும் கூட அதை உணர்ந்து பயன்படுத்த தவறி விட்டோம் என்று அழுதேன் கணவரிடம். அன்றைய தினம் அகத்திய பெருமானிடம் ஒரு பிரார்த்தனை சமர்ப்பித்தேன், "அய்யனே,நீங்கள் எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவினாலும், முதலில் அதை நான் விழிப்புணர்வோடு உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை எனக்கருள வேண்டும் அப்பா " என்று.

"ஏப்ரல் மாதம் முடிந்து விட்டது.உங்கள் தந்தையும் தவறிவிட்டார். அவரின் ஆத்ம சாந்திக்காக மே மாதத்திலாவது வாரத்தில் ஒரு நாள் நீர்மோர் பானகம் கொடுப்போம்", என்று நான் சொல்ல என் கணவரும் அரைகுறை மனதோடு சம்மதித்தார். முதல் முறையாக கொடுக்க செல்லும் போது பானகம் செய்வதும், நீர்மோர் கரைப்பதும், சற்று சிரமமாக தோன்றினாலும் பின்னர் வெகு எளிதாக பழகிவிட்டது. ஆனால் வெயிலில் நீர்மோர் அருந்திய அனைவரும் மனமார வாழ்த்தி விட்டு சென்றனர்.வெயிலில் பெருமாளை சேவிக்க வந்த அனைவரும் தாகம் தீர்ந்த போது அவர்கள் முகத்தில் தோன்றிய அந்த திருப்தி என் கணவரிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரும் மே மாதம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஒரு நாள் நம்மால் இயன்ற அளவு நீர்மோர் பானகம் செய்து வழங்குவோம் என்று சம்மதித்தார். எனக்கோ வழி பிறந்தது என்று ஏக மகிழ்ச்சி. மே மாத கடைசி வாரம், என் கணவர் இன்றோடு நீர்மோர் கொடுப்பதை முடித்து கொள்ளலாம் என்று எண்ணி இருந்தார். வழக்கம் போல் அன்றும் கோவிலுக்கு சென்று நீர்மோர் கொடுக்கும் போது தான் சித்தன் அருள் 1345 இல் வெளிவந்த அனுபவம் கிடைக்கப் பெற்றோம். எங்களுக்கு பேரின்பமான ஒரு திருப்பு முனையாக அமைந்தது அந்த அனுபவமே.குறிப்பாக எனக்கு பரம சந்தோஷம். என் கணவர் மனமாற்றம் அடைந்து இன்று என்னோடு ஒத்துழைப்பு தருவது அகத்திய பெருமான் அருளாலே. அதன் பின்னர் மாதம் ஒருமுறை நீர்மோர் பானகம் செய்து வழங்கி வருகிறோம். என் குழந்தைக்கும், "நீ பெரியவனாகி வளர்ந்து வேலைக்கு சென்று சம்பாதித்து இதைப் போல் நீயும் நீர்மோர் பானகம் கொடுக்க வேண்டும்" என்று சொல்லி கொடுத்து வளர்க்கிறோம். இவை அனைத்தும் அகத்தியர் அருளால் மட்டுமே நடந்துள்ளது.

ஒரு குழந்தை எத்தனை முறை தவறு செய்தாலும், தாய் ஒவ்வொரு முறையும் கண்டிப்பாள்.ஆனால் ஒரு போதும் தன் குழந்தை யை வெறுக்க மாட்டாள். ஒவ்வொரு முறையும் அந்த குழந்தை தன் தவறை திருத்திக் கொண்டு முன்னேற தாய் அயராது உதவி செய்து கொண்டே இருப்பதை போல அகத்திய பெருமான் அவரின் குழந்தைகளுக்கு திரும்ப திரும்ப உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றார். அருளாசிகள் கொடுத்து கொண்டே இருக்கின்றார். அதை நாம் தான் விழிப்புணர்வோடு உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு உணர்வதற்கு, நம்முடைய செயல்கள், எண்ணங்கள் என அனைத்தையும் அகத்திய பெருமான் நம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்ற திண்ணமான நம்பிக்கை வேண்டும் என்பதை நாங்கள் மனமார உணர்ந்த தருணம் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள்.

அகத்தியர் அருளால் அவர் தாழ் வணங்கி!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Ohm Agatheesaya Namaha !!! Agathiyar Vazhga 🙏🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete