​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 March 2023

சித்தன் அருள் - 1315 - அகத்தியப்பெருமான் உத்தரவில் கிடைத்த அனுபவம்-2


தொடர்ந்து மடிப்பிட்ச்சை எடுத்து நிற்கும் பொழுது, ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அந்த அய்யாவின் முகத்தில் அத்தனை ஒரு தேஜஸ். நல்ல வசீகரமான, நம் குருநாதர் போன்ற முகம், உருவம். அந்த அய்யா, பாதாள லிங்க சன்னதிக்குள் போகும் போதே வெளியே நின்ற என்னை பார்த்துக் கொண்டே சென்றார்.

தரிசனம் முடித்து அவர்கள் இருவரும் வெளியே வரும் பொழுது, அவர் பையிலிருந்து பணத்தை எடுத்து, அந்த அம்மாவிடம் கொடுத்து "அவளுக்கு போடு!" என்று கொடுத்தார்.

அப்பொழுது, நான் அம்மாவிடம் மடியேந்தி, "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறி வாங்கிக் கொண்டேன். அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, நின்று ஒரு க்ஷணம் என்னை பார்த்துவிட்டு, கீழே இறங்கிப்போய், தன் கண் கண்ணாடியை நகற்றிவிட்டு, கண்ணை துடைத்துக் கொண்டார். ஏதேனும், ஆனந்தத்தால் மனம் நெகிழ்ந்து அவர் கண்களில் கண்ணீரோ என்று தோன்றியது. ஏன் என்றால், அகத்தீசப்பா கூட பல முறை வாக்குகளில் சொல்லியிருக்கிறார், “நீங்கள் மனத்தால் ஒன்றி, உண்மையான அன்போடு ஒரு விஷயத்தை செய்கிற பொழுது, ஆனந்தத்தால், என் கண்களும் கலங்கி விடாதா என்று”. அவர்கள் இருவரையும் கண்ட பொழுது, அகத்தீசப்பாவும், லோபா அம்மாவும்தான் வந்திருந்து மடிப்பிட்ச்சை போடுகிறார்களோ என்று தோன்றியது. சில மணித்துளிகள் கடந்து, அவர்கள் செல்லும் வரை, அந்த ஐய்யாவையே நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அவர் முகத்தில் அத்தனை தெய்வீகம்.

இந்த கைங்கர்யம் முடிய ஒரு அரைமணி நேரம் இருக்கும். நிறையபேர் வந்து மடிப்பிட்ச்சை போட்டுக் கொண்டு இருந்தார்கள். மீண்டும் இன்னொரு வயதான தம்பதியர் என்னை பார்த்துக் கொண்டே ரமணர் கோவிலுக்குள் சென்றனர். அவர்கள் தரிசனம் முடித்து வெளியே வரும் பொழுது, அந்த அய்யா ஒரு 20 ரூபாய் நோட்டை அந்த அம்மாவிடம் கொடுத்து போடச் சொன்னார். அந்த அம்மாவிடம், நான் வணங்கி, "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறி, குனிந்து மடிப்பிட்சை வாங்கும் போதே, அது என்ன உணர்வு என்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கும் பொழுது, என்னையும் அறியாமல், அழுதுவிட்டேன். அது என்னவோ ஒரு பரவசநிலை, ஏதோ என்னை தூக்கிப் போடுவது போல் உணர்ந்தேன். 

நான் அழுவதைக் கண்டு, அந்த அம்மா என்னை கட்டி அணைத்தபடி, தன் தோள்களில் என் தலையை சாய்த்து வைத்துக் கொண்டு "ஏன் அழுகின்றாய்? எதற்காக அழுகிறாய்!" என்று என் தலையை தடவிக் கொடுத்தவாரே கேட்டார்கள்.

நான் என் அழுகையை கட்டுப்படுத்த முடியாதவளாய், அழுதபடியே அவர்களுக்கு பதிலளித்தேன், வார்த்தைகள் வரவில்லை. “அம்மா இந்த கைங்கரியம், நான் எனக்காகவோ அல்லது எந்தவொரு வேண்டுதலுக்காகவோ செய்யவில்லை. என் குருநாதர் அகத்தியப்பெருமானும் - லோபமுத்ரா அம்மாவும். என் குருநாதர் உரைத்த வாக்கிற்காக நான் அவர் திருவடிக்கு இந்த கைங்கரியத்தை செய்கின்றேன். உங்கள் இருவரையும் பார்த்ததும், என்னையும் அறியாமல் நான் அழுது  விட்டேன். ஏனென்று எனக்குத் தெரியவில்லை" என்று நான் அழுதவாறே அவர்களிடம் பேசினேன். 

நீங்கள் என் அருகில் வந்ததும், என் லோபா அம்மாவும், அகத்தீசப்பாவும் வந்ததாக நான் உணர்ந்தேன். அவர்கள் இருவரும் உங்கள் ரூபத்தில் வந்ததாக நினைக்கிறேன்! என்னவோ தெரியலை, உங்களை பார்த்தவுடன், அவர்கள் நினைவில், என்னையும் அறியாமல் அழுகை வந்துவிட்டது!" என சொல்லவும், அடுத்த நொடியில், அந்த அய்யா, என் தலை மேல் கைவைத்து, "உன் குருநாதரே வந்ததாகத் தான் வைத்துக் கொள்ளேன்! அகத்தியப்பெருமானே, நேரடியாக வந்ததாக வைத்துக் கொள்!" என்றார்.

அவ்வளவுதான், அவர் இவ்வாறு கூறியதும் அடுத்த நொடியே, என் நிலை மறந்து, "ஓம் அகத்தீசாய நமஹ! ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறிக்கொண்டே அவர் காலில் விழுந்து  நமஸ்கரித்தேன்.

அந்த பெரியவர், என் தலையில் கைவைத்து "நீ நல்லா இருப்பம்மா! நல்லா இருப்பே!" என்று குருநாதர் எப்பொழுதும் கூறுகிற வாக்குகளான, "உலகம் வாழ வேண்டும்", “நல் உயிர்கள் வாழவேண்டும்”, "உன் குருநாதர் அருள் உனக்கெப்போதும் உண்டு!" என்று மண்டியிட்டு இருந்த என் தலையில் கைவைத்து ஆசிரவாதம் செய்தார். 

எழுந்து நின்ற என்னிடம், அந்த அம்மா, "கண்ணை துடைத்துக் கொள்!" என்று கூற, அந்த அய்யாவோ " விடு, விடு அவள் அழுக்கட்டும் விடு. உண்மையான அன்பு  வெளிப்படும் போது, அங்கு அழுகை மட்டும் தான் வரும். அவளின் அன்பை நிச்சயம் என்னால் புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு இருக்கு!" என்றார்.

படியில் இருந்து இறங்கிய அவர், மீண்டும் என்னை பார்த்து ஆசிர்வாதம் செய்வது போல், தன் வலது கையை உயர்த்தி, "உன் குருநாதர் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு மா!" என்று கூறிவிட்டு, திரும்பி அவர்கள் இருவரும் பெரிய நந்தியை நோக்கிச் சென்றனர். 

இவை அனைத்தும் ஒரு 2-3 நிமிடங்களுக்குள் நடந்திருக்கும். என் மனமும் உடலும் நிச்சயமாய் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. என் அழுகையை நிறுத்திய பாடு இல்லை. நடந்து செல்லும் அவர்களை நினைத்தவாறே, நான் வழக்கம் போல் அம்மை அப்பரிடம், "அகத்தீசப்பா லோபாம்மா, இந்த நாய்க்கு நீங்க தான் வந்து பிச்சை போட்டீங்களா " என்று கேட்டுக் கொண்டேன். 

அதற்கு முன் வரை, எத்தனையோ பேரிடம் கையேந்தி மடிப்பிட்சை வாங்கிய பொழுது, மனம், பூரணமாகவில்லை, அழுகையும் வரவில்லை. ஆனால், இவர்களிடம் மடிப்பிச்சை வாங்கியபின், அந்த பரவசம் என்னுள் பரவி வெகுநேரம் நின்றது. யார் எனக்கு மடிப்பிச்சை தந்திருந்தாலும், என் அகத்தீசப்பாவும், லோபா அம்மாவும் வந்து பிட்சை போட்டது, என் மனம் நிறைந்து போனது. மனதால் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகளை சொல்லிக்கொண்டேன். 

சில நொடிகளே கடந்திருக்கும், அந்த ஐய்யா மட்டும் மீண்டும் என்னை நோக்கி வந்தார். தன் பையிலிருந்து 100 ரூபாயை எடுத்து, "இதுக்கு முன் 20 ரூபாய் போட்டோம் இல்லையா! அது எங்கள் கணக்கு! இந்த 100 ரூபாய் உன் குருநாதர் உனக்கு கொடுக்கறதா நினைச்சுக்கோ! இதை உன்குருநாதர் கணக்கில் வை!" என்றார்.

அவ்வளவுதான்! நான் என் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன்."ஓ!" என கதறி அழுதுவிட்டேன். ஏன் என்றால், அருள் வாக்கில் அகத்தீசப்பா, கூறியிருந்தது இது தான்.

"அண்ணாமலைக்கு சென்று பிச்சை எடுக்கச் சொல், நிச்சயம், யானே வந்து பிச்சை இடுகின்றேன், அங்கு"

மறுபடியும், அவர் காலில் அப்படியே விழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். மனதுள், "அகத்தீசப்பா! கோடி கோடி நன்றி உங்களுக்கு. இந்த நாய்க்கு நீங்களே வந்து கொடுத்துவிட்டீர்கள்" என்று நினைக்க, அவர் மீண்டும், தலையில் கைவைத்து "நீ நல்லா இருப்பம்மா! நீ நினைப்பதெல்லாம் நடக்கும்!" என்று ஆசிர்வதித்துவிட்டு, “உன் குருநாதர் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு!" என்று கூறிவிட்டு, சென்றார். இந்த நிகழ்வு, மிக நிச்சயமாய் குருநாதர் அன்றி வேறு இல்லை என்று நான் நன்கு உணர்ந்தேன். 

மேலும் அரை மணி நேரம் வரை அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவார்களா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குப் பின் அவர்களை அங்கு காண முடியவில்லை.

இந்த மனநிலையில், சரி! மடிப்பிச்சை கிடைத்தது போதும் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். மொத்தம் 2339 ரூபாய் கையிலிருக்க, அதைக் கொண்டு, ஒரு உணவு விடுதியில், 25 மதிய உணவை (சாதம், சாம்பார், ரசம், கூட்டு பொரியல், பாயசம், அப்பளம்) முழு சாதமாக வாங்கினேன். அதனுடன் ஒரு லிட்டர் அளவு கொண்ட, 25 பாட்டில், குடி நீரும்!

குருநாதர் சொல்வது போல், கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும், மிகுந்த வயதானவர்கள், உடலால் பாதிக்கப்பட்டவர்கள், கூன் போட்டு நடப்பவர்கள், வயதான தம்பதிகள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டும் அன்னத்தை கொடுத்தேன்.

அவ்வாறு ஒரு இடத்தில் அன்னம்பாலிப்பு செய்யும் போது, நல்ல உடல் நிலையில் இருக்கும், ஆனால்  மிகுந்த ஏழ்மையான நிலையில் இருந்த ஒரு தம்பதி நின்று கொண்டு இருந்தனர். நான் அங்கு இருந்த வயதானவர்களுக்கும், ஒரு கால் நடக்க இயலாத ஒரு வயதானவருக்கும் அன்னைத்தைக்  கொண்டு கொடுத்தேன். இந்த தம்பதி இருவரும், என்னிடம் உணவு கேட்கவில்லை. இருப்பினும் அவர்கள் நின்ற ஒரு கோலம், ஈசனும் பார்வதியும் நின்ற அமைப்பாய், அந்த அய்யாவின் உடலில் ஒரு பகுதியை மறைத்தவாறு, நான் அவரில் சரி பாதி என்று கூறுவது போல் இருந்தது. அவர்கள் நின்ற விதம் "எங்களுக்கும் கொடுத்துவிட்டு போ!" என்றது போல் இருந்தது. வேறு சிந்தனை இல்லாமல், அவர்கள் இருவருக்கும் உணவையும் நீரையும் கொடுத்து விட்டு, மானசீகமாக, "ரொம்ப நன்றிங்க ஐய்யா" என்று சொல்லிக்கொண்டேன். அந்த ஐய்யா "நல்லா இரும்மா " என்றார்.

என் மனம் வழக்கம் போல் அகத்தீசப்பாவும், லோபா அம்மாவும் வந்து என்னிடம் பெற்றுக் கொண்டதாய் நான் உணர்ந்தேன். ஏன் என்றால், குருநாதர் பல முறை வாக்குகளில் சொல்லி இருக்கிறார், " நானும் வந்து உங்களுடன் உணவு உண்டேன், தேநீர் அருத்தினேன் என்றெல்லாம்". 

இப்படி, திருவண்ணாமலையில் “பிட்ச்சை எடு” என்ற அகத்தீசப்பாவின் உத்தரவை, அவருடைய திருவருளால் நிறைவேற்றி, பின்னர் மதிய உணவருந்தி, மாலையில் பிரதோஷ நேரத்தில் கிரிவலம் செய்து, குருநாதரும் அண்ணாமலையாரும் கொடுத்த இந்த அரும்பெரும் வாய்ப்பை நல் முறையாக பயன்படுத்திக் கொண்டேன்.

குருநாதரின் இந்தக் கருணையை பகிர்வதில் அளவுகடந்த மகிழ்ச்சியும் பரவசமும் அடைகின்றேன். அனைத்தும், நன்றிகளுடன், லோபாஅம்மா அகத்தீசப்பா திருவடிகளில் சமர்ப்பணம்.

"பிச்சை எடு" என்ற உத்தரவு இத்துடன் நிறைவு பெற்றது!

அகத்தியர் அடியவர்களே! குருநாதர் உத்தரவை சிரம் மேற்கொண்டு செய்தால், இப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கச் செய்வார். பற்றறுப்பதும் எளிதாகும்!

மேலும், அகத்தியப் பெருமானின் ஒரு உத்தரவு, மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து, புரிந்து, உணர்ந்து, நடை முறைப் படுத்தவும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

No comments:

Post a Comment