​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 10 March 2023

சித்தன் அருள் - 1298 - பொதுவாக்கு - 1


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

09/03/2023 அன்று திரு ஜானகிராமனை, அகத்தியர் ஜீவ நாடியுடன் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. உங்கள் அனைவரிடமும் சொல்லி வாங்கி வைத்திருந்த நூறுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்கிற வாய்ப்பு கிடைத்தது. காலையில் தொடங்கிய நாடி வாசிப்பு, மாலை வரை தொடர்ந்தது. நிறைய விஷயங்களுக்கான தெளிவு அவரிடமிருந்து கிடைத்தது என்பதுதான் உண்மை. முதல் கேள்வியை கேட்டவுடனேயே குருநாதர் புசுண்டன் உரைப்பான்!" என்று கூறி விலக, ஒரு 15 கேள்வி வரை காகபுசுண்டர் சித்தரே நன்றாக திட்டினார். கேள்வி கேட்டவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சில உத்தரவுகளையும் இட்டார். சுருக்கமாக சொல்வதென்றால், திட்டி வழிகாட்டினார் என்றுதான் கூற வேண்டும். ஆகவே, அடியேனின் எண்ணம் என்னவென்றால், அடுத்த முறை, கேள்வி கேட்க வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவர் வாக்குகள் வாழ்த்துக்களாக மாறிவிடும்படி இன்று முதல் பணி செய்வோம், நம்மை திருத்திக் கொள்வோம்.

இதில் அடியேன் ஆச்சரியப்பட்ட விஷயம் என்ன வென்றால், யார், எங்கிருந்து, என்ன குணமுடையவர், என்ன எண்ணத்துடன், இந்த கேள்வியை கேட்கிறார் என்பதை, கேள்வியிலிருந்து கண்டு பிடித்து (அடியேனுக்கே சந்தேகம், என் ஈமெயில் அக்கௌன்ட்டை HACK பண்ணி படித்தார்களோ என்று) அதற்கேற்றாற்போல் பதிலடியும் கொடுத்தார்கள். அடியேனுக்கும் பல முறை திட்டு கிடைத்தது (இதில் வந்திருந்த என் நண்பர்களுக்கு மிக்க சந்தோசம்; எப்போதுமே சொல்வார்கள், நீங்க மட்டும் தப்பித்து விடுகிறீர்கள் என்று).

சிறு அறிமுக உரையுடன் அகத்தியப்பெருமான் தொடங்கினார்.

ஆதி பரமேஸ்வரனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் வாக்குகள். அப்பனே! நலன்கள்! எமது ஆசிகளும் இருப்பதாலும், அப்பனே! எதை என்று அறிய அப்பனே! பல வழிகளிலும் கூட மக்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்பதே, நிச்சயம் எந்தனுக்கு கூட விருப்பங்கள். அப்பனே! அப்பாதையிலிருந்து விலகித்தான் மனிதன் சென்று கொண்டிருக்கின்றான், அப்பனே! கர்மாவைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றான் அப்பனே! ஆனாலும் உணருங்கள் அப்பனே! கஷ்டங்கள் இல்லாமல், ஒருவரையும் நல் வழிப்படுத்த முடியாது அப்பனே! ஆகவே, ஏதேனும் ஒரு ரூபத்தில் கஷ்டங்கள் இட்டுத்தான், நல்வழிப்படுத்துவேன் என்பது நிச்சயம். இன்னும் வாக்கு!  

அப்பனே! எதை என்று அறிய! அறிய! எதை என்று உணர்ந்து! உணர்ந்து கேள்!

1. அருகில் உள்ள கோவிலில் பூஜாரியாக பணியாற்றி வருகின்றேன். இக்கோவிலில் தீய சக்திகளின் பிரச்சனைகள் உள்ளது. இதை சரி செய்ய ஏதேனும் ஒரு வழி காட்டுங்கள்.

எதை என்று அறிய! புசுண்டன் பேசுகின்றேன்! முட்டாள் மனிதனே! எதை என்று யான் அறிய! இறைவன் இருக்கும் இடத்தில் மாந்திரீகத்துக்கே இடமில்லை. இது மனிதன் இட்ட கணக்கு!

2. கா்மாவை நீக்க/கரைக்க ஒரு வழிமுறை காட்டுங்கள் குருவே!

நிச்சயம் காட்டுகின்றேன்! பல வழிகளையும் கூட பல வாக்குகளிலும் எடுத்து உரைத்துவிட்டேன். ஆனால், ஒன்றாவது, எவன் அறிந்து செய்தானா என்ன? எவை என்று? ஆனாலும், ஒரு பெண் அங்கிருக்கின்றது என்றால், ஓடோடி விடுவான். பின் பணங்கள் அங்கிருக்கின்றது என்றால், ஓடோடி முதலில் வந்து நிற்பான். ஆனால், நிச்சயம் கர்மத்தை நீக்கச்சொன்னால், நிச்சயம் பின் தங்குவான். பின் வாக்குகள் செப்புகின்றேன் விவரமாகவே!

3. திருஞானசம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகத்தில்  "மிக நல்ல வீணை தடவி" என்ற வரியில் நம் உடலை தழுவி என்று பொருள் கொண்டால் தொடு மருத்துவம் மூலம் ஆரோக்கியம் பற்றி உறைகின்றாரா? இல்லை பொதுவான பொருளாக வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு என்று பொருள் கொள்ள வேண்டுமா? என்று விளக்க வேண்டுகின்றோம் குருநாதா!

முட்டாள் மனிதனே, அன்பினால் தழுவிக்கொள் இறைவனை என்பது. இதைக் கூட தெரியாத மனிதனுக்கு பின் இறைவனின் தரிசனங்களா? (புசுண்டன் வாக்கு)

4. குருநாதா! ஒளவைப் பாட்டி ஞானக்குறளில் உள்ளுடம்பு பற்றி 10 பாடல்களில் பாடி உள்ளார். உடம்பு என்பது நம் கண்ணால் காண தெரிகின்றது. ஒளவைப் பாட்டி கூறும்   உள்ளுடம்பு பற்றி கூற வேண்டி பணிகின்றோம். இந்த உள்ளுடம்பை பேணுவதற்கான வழிகளை அறிய தாருங்கள்.

உள் உடம்பு என்பது எண்ணமே! எண்ணமே சிறந்தது. அதனால் தான் சொல்லுகின்றேன், எண்ணத்தை மேம்படுத்துங்கள், எண்ணத்தை மேம்படுத்துங்கள் என்று. உன் எண்ணத்தை மேம்படுத்திவிட்டால், உன் உடம்பு, அதாவது, வெளியே தெரியும் உன் உடம்பு நிச்சயம் அனைத்தும் சாதிக்கும். ஆனால், புத்தி இல்லை, புத்திகளும் இல்லை, அறிவுகளும் இல்லை, வாழ்க்கையும் இல்லை.

5. மகா மந்திரம் என்றால் அது வள்ளல் பெருமான் அருளிய அருட்பெருஞ்சோதி மந்திரம் ஆகும். பல மந்திரங்கள் இருக்க (சிவ மந்திரம் போன்றவை) , மகா மந்திரம் என இம்மந்திரம் கூற காரணமும் , தமிழ் மொழியோடு இயைந்த மகா மந்திர விளக்கம் அறிய வேண்டுகின்றோம்.

முட்டாள் மனிதனே! புசுண்டன் எடுத்துரைக்கின்றேன்! காரியும் துப்புவேன் மனிதனை. இம்மந்திரத்துக்கு அருள் பெற வேண்டுமானால், இவ்வுலகத்தில் மனிதன் ஜோதியாக பின் மாற வேண்டும் என்றால், தன்னைப்போல் பிறரை எண்ண வேண்டும். அன்னத்தை அனைவருக்கும் அளிக்க வேண்டும்! ஆனால், தான் மட்டும் உண்டு தன் உடம்பை பெருக்கிக்கொண்டு இவ் கேள்வியை கேட்கின்றானே, இவந்தனுக்கு, அறியும் அளவுக்கு கூட மூளையே இல்லை.

6. முருகவேள் பன்னிரு திருமுறை ஓத / பாராயணம் செய்ய தங்கள் அருள் வேண்டி பணிந்து நிற்கின்றோம்.

மனித முட்டாளே! புசுண்டன் கேட்கின்றேன்! அறிந்து, அறிந்து! இதை யான் எப்படி சொல்ல? எதை என்று? எங்கிருந்தோ, ஆனாலும் கேட்கின்றான்! இதற்க்கு, முருகனே சொல்வான், இதனால், அறுபடை வீடுகளுக்கும், செல்லச் செல்ல முருகனின் திருவிளையாடல்கள் புரியும், பின் அனைத்தும் கற்பித்துக் கொள்வோம். ஆனால், தன் பிள்ளைகளோ, எதை சென்று அறிந்து, தன் சொந்தக்காரர்களோ, இல்லத்தை தேடி வந்துவிட்டால், உங்களுக்கு, பின் என்ன வேண்டும்? வாருங்கள், ஒரு சுகமான விடுதியில் தங்கி, அனைத்தும், பின் உணவை பரிமாறிக்கொள்வோம் என்று எண்ணுகின்றானே, அவ் ஜென்மம் அடாது, ஆனால் இப்படியெல்லாம் பின் மறைமுகமாக கேள்விகள் கேட்டு, பின் மரியாதையோடு, அதாவது, சித்தர்களை கேட்கின்றானே என்கிற எண்ணமே இல்லையே. ஆனால், இவந்தனுக்கு யங்கள், எப்படித்தான் கர்மாவை மாற்றமுடியும், ஒழிக்கவும் முடியும்?

7. எப்போது பார்த்தாலும் கணினி, அலைபேசி என்று கண்களுக்கு ஓய்வு தருவதில்லை.தினசரி வாழ்வியலில் நேத்ர சுத்தி செய்வதற்கு தாங்கள் வழி காட்ட வேண்டுகின்றோம் குருநாதா!

ஆனால், யான் சொல்வதை நிச்சயம் கேட்க மாட்டான், இவ் மானிடப்பிறவியோன்! புசுண்டன் உரைக்கின்றேன்! அதை, எதை என்று அறிந்து காசிக்கு செல்லச்சொல். அங்கு நீரில் மூழ்கி, மூழ்கி கண்களால் பின் தெளிவாகவே, பின் நீரின் அடியில் காணச்சொல். போதுமானது. ஆனால் முட்டாள் மனிதனோ, அதாவது கர்மம் பிடித்த மனிதனோ, இதை நிச்சயம் செய்ய மாட்டான். ஆனால், பின் கேட்டவை இருக்கிறதென்றால், ஓடோடிவிடுவான், இவந்தனுக்கு. இங்கு இவன்தன் என்றால், யான்தான் கேள்விகள் கேட்பவன்தான் என்று புரிந்து கொள்வான். இவன்தன் என்றால், இறைவனை குறிப்பிட்டேன் இங்கு.

8. பன்னிரு  திருமுறையில் கயிறு சாற்றி படித்தல் என்ற வழக்கம் பற்றி அறிய விழைகின்றோம் குருதேவா!

மனித முட்டாளே! புசுண்டமுனி கேட்கின்றேன்! பின், அதாவது, மனித உறுப்புக்கள் அனைத்தும் கர்மாவை நோக்கி செல்கின்றது. பின் அதாவது, கயிறை இட்டு கட்டிக்கொள் நீயே உந்தனுக்கு.பார்ப்போம், பின் கைகள் வேலை செய்கின்றதா! கால்கள் வேலை செய்கின்றதா? எதை என்று அறிய அறிய, உடம்புக்குள் பாகங்கள் வேலை செய்கின்றதா என்று பார்ப்போம். இதை நிச்சயம் செய்வார்களா என்றால் இல்லை, இதனால்தான் தரித்திர மனிதன். காரியும் துப்பிவிடுவேன், சொல்லிவிடு!

9. இன்ப ஆக்கத்திற்கு திருச்செந்தூர், துன்ப நீக்கத்திற்கு பழனி என்று கூறுகின்றார்கள். இதன் உண்மைப் பொருள் விளக்கத்தை கூற பணிந்து வேண்டுகின்றோம்.

இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்தால்தான் கூட வாழ்க்கை என்பதை கூட யான் பல உரைகளிலும் உரைத்துவிட்டேன். ஆனால், துன்பம் எங்கு சென்றாலும், அப்பனே! நம்மை விட்டு போகாதப்பா. இன்பமும் எங்கு சென்றாலும் நம்மை விட்டு போகாதப்பா. அதனால், அறிந்து அறிந்து, நிச்சயம் படையெடுக்கச்சொல். பின் பார்ப்போம் மலைதனில் கூட.

10. கிருமிகளால் தொற்றும் நோய்களை விட, தொற்றா நோய்களாக பல நோய்கள் பல்கி பெருகி விட்டது. உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சக்கரை போன்றவை. இதனால் நாங்கள் படும் அவஸ்தை சொல்ல முடியவில்லை. இதனை நாங்கள் சமாளிக்க மன பக்குவமும், வழிகாட்டலும் வேண்டுகின்றோம்.

மனித ஜென்மங்களே! புசண்டனே உரைக்கின்றேன். முதலில், யான் மனிதனைத்தான் கிருமி என்று சொல்வேன். நிச்சயம் வழிகாட்டுகின்றேன்! சித்தர்களும் உரைத்துக் கொண்டேதான் இருக்கின்றார்கள். ஆனால், எவை என்று அறிய! எவனாவது சரியாக பின் பற்றினானா என்பதைக் கூட நிச்சயமாக இல்லை. எதை என்று அறிய, அறிய, எப்படி சித்தர்களிடம் வர வேண்டும், பய பக்தியுடன் இருக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை. ஆனால், கர்மம், எங்களால் தான் நீக்க முடியும். அதை அறிந்தும், பயப்படாமல் இருக்கிறானே மனிதன், பெரும் புத்திசாலி. ஆனால், இதை மருவுருவாக எடுத்துக்கொண்டால், அதிமுட்டாள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

No comments:

Post a Comment