வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சித்தன் அருள் - 1301 - பொதுவாக்கு - 4 இல், 38வது கேள்வியின் பதிலில் கூறியது போல் ஒரு அகத்தியர் அடியவர், குருநாதர் சொல்படி ஒருநாள், திருவண்ணாமலையில், பிக்க்ஷை எடுத்து அவர் கூறியதை, குருநாதரின் அருளால் நிறைவேற்றினார். குருநாதர் 10 நாட்கள் பிக்க்ஷை எடுக்குமாறு கூறியிருந்தாலும், அவரின் அருளுடன் ஒரு நாளிலே, மிகுந்த அனுபவங்களுடன் திருப்தியாக, இயலாதவர்களுக்கும், சாதுக்களுக்கும் அன்னம் அளித்து, அன்று பிரதோஷ காலமாக இருந்ததால் கிரிவலமும் சென்று, மிக மனத் திருப்தியுடன் குருவின்-இறைவனின் அருளைப்பெற்றார். அவர் அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் கீழே தரப்பட்டுள்ளது.
கேள்வி:-
38. . ஒரு கட்டத்திற்கு மேல், அனைத்துமே குருநாதர் மட்டுமே என்று நன்கு உணர்ந்த பின்பு, ஆலயம் செல்வது கூட வேண்டாம் என்ற மனநிலை வந்துவிட்டது. இறைவனே குருவாய் இருக்கும்போது, குருநாதர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருப்பார். மனதால் இறைவனை நினைக்கின்றோம். குரு கூடவே இருந்து வழிநடத்துகின்றார். இதன் பொருட்டு அகத்தியர் அடியார்களுக்கு குருநாதர் உணர்த்தும் அறிவுரை ஐய்யா.
குருநாதரின் பதில்:-
எதை என்று அறிய! அறிய! மனதை தொட்டுச்சொல், எதை என்று அறிய! அறிய! ஏதும் தேவை இல்லை என்பது, ஒரு பத்து நாட்கள், அண்ணாமலைக்கு சென்று பிச்சை எடுக்கச் சொல், நிச்சயம், யானே வந்து பிச்சை இடுகின்றேன், அங்கு.
அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளை.அவருக்கு கிடைத்த அனுபவத்தை அவர் சொன்னபடியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
"திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (18.03.23), மாலை புறப்பட்டேன். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சென்றடைந்து, சற்று நேரம் ஓய்வெடுத்து பின் கோவில் திறந்தவுடன் சுவாமியையும், அம்பாளையும் முதலில் தரிசனம் செய்து, அம்மை அப்பரின் அருளைப்பெற்று, பின்பு குருநாதர் அண்ணாமலையில் செய்யச் சொன்ன கைங்கரியத்தைச் செய்து, அன்று பிரதோஷமானதால், மாலை பிரதோஷ காலத்தில் கிரிவலம் போகலாம் என்று தீர்மானித்தேன்.
அம்மை அப்பனிடம், நம் குருநாதர் எப்போதும் தன் அடியவர்களுக்கு சொல்லும் தர்ம காரியமான இயலாதவர்களுக்கும் , உடல் ஊனமுற்றோர்களுக்கும் , வயது முதிர்ந்து கூன் இட்டு நடப்பவர்களுக்கும், தேடிச்சென்று தர்மம் செய்யுங்கள் என்று உரைப்பதை மனதில் கொண்டு, இவர்கள் போன்றவர்களுக்கு “அன்னம் பாலிக்க வேண்டும்" என்ற குருநாதரின் அறிவுரையையும், "அண்ணாமலையில் பிக்க்ஷை எடு" என்ற உத்தரவையும் கூறி விண்ணப்பமிட்டு, மானசீகமாக அருள் வாங்கி, உண்ணாமுலை அம்மையின் சன்னதிக்கு வெளிப் பிரகாரத்தின் முன்பு வந்து நின்றேன்.
அங்கு இருந்த கோவிலில் பணி செய்யும் ஒரு ஊழியரிடம், விஷயத்தைக் கூறி, எதற்கும் அனுமதி பெற்று விடலாம் என்று கேட்க, அவர்களும் " நீங்கள், மடிப்பிச்சை எடுப்பதானால், இங்கு நிற்க வேண்டாம், ராஜ கோபுரத்தின் முன்பு செல்லுங்கள், இங்கு கோவிலுக்குள் நிர்க்கக்கூடாது!” என்று கூறினார்கள்.
திருவண்ணாமலை கோவிலுக்கு அடிக்கடி செல்வதால், எனக்குத் தெரிந்த ஒரு ஐயா அங்கு இருந்தார். அவர் "அம்மா! நீங்கள் வெளியே எல்லாம் போக வேண்டாம், நீங்கள் பெரியநந்திக்கு அருகில் (ஒரு இடத்தைக் குறிப்பிட்டு), இங்கு நில்லுங்கள் என்று கூறினார். நான் அவர் கூறியதை மனதில் கொண்டு, அருணகிரிநாதருக்கு, முருகர் காட்சி கொடுத்த சன்னதிக்கு நேரே, முருகனையும் பார்த்தவாரு, ரமணமகரிஷி அமர்ந்த பாதாள லிங்கத்திற்கு செல்லும் படியில் நின்று கொண்டேன்.
அவர் கூறியபடியே அங்கு நின்று, மடிப்பிச்சை எடுத்தேன். மடிப்பிச்சை எடுக்கும் பொழுது, சற்று பதட்டமாகத்தான் இருந்தது. என்ன? அப்பா (அகத்தியப்பெருமான்) வருவாரா? இந்த அடிநாய்க்கு குருநாதர் நேரில் வந்து பிச்சை இடுவாரா என்று? - என்ற எண்ணம் எல்லாம் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது. பிரார்த்தனையாக, குருநாதரின் மந்திரம் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன்.
இது என்னவோ ஒரு பெரிய திருவிளையாடல் என்றுதான் தோன்றியது. பிச்சை எடு என உத்தரவிட்டது அகத்தீசப்பா என்றாலும், பிச்சையை போட்டது, அண்ணாமலையார்தான் என்று எனக்குத் தோன்றியது. அப்பனின் அனுமதியும் அருளும் இல்லமால், எங்கும் எதுவும் நடக்காது. ஸ்வாமியின் அருளினால், ஏறக்குறைய இரண்டு மணி நேரம் தான் நின்றிருப்பேன். பார்த்தீங்கன்னா, 2339 ரூபாய் பிட்சைதானமாக விழுந்தது. இது மிகப்பெரிய “ஆச்சரியம் மற்றும் அற்புதம்” என்று தான் சொல்லவேண்டும். காரணம், ஒரு க்ஷணத்தில் சுவாமி இவ்வளவு பெரிய தொகையை கொடுத்துவிட்டாரே என்று.
குருநாதர் வாக்குரைத்த அன்றே முடிவு செய்துவிட்டேன். என் விதியின், பயனால், பத்து நாட்கள் முடியாவிட்டாலும், அப்பா சொன்னதை வழிமொழிய, ஒரு நாளாவது பிச்சை எடுக்க வேண்டும் என்று விரும்பி, “அப்பாவிடம் அப்போதே மானசீகமாக கூறிவிட்டேன், ஒரு நாளாவது எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுங்கள்” என்று. இந்த வாய்ப்பை கொடுத்த அருணாச்சலப் பெருமானுக்கும், அபிதகுஜாலாம்பாள் அன்னைக்கும், மிக அற்புதமாய் வழிநடத்திய நம் குருநாதருக்கும், லோபாமுத்ரா தாய்க்கும் கோடான கோடி நன்றிகளையும் நமஸ்க்காரங்களையும் சொல்லிக்கொண்டேன்.
இதற்கு முன் திருச்செந்தூரில் இதே போல பிட்ச்சை எடுத்த போது, அதை காணிக்கையாக முருகன் திருவடியில் கோவில் உண்டியலில் போட்டு விட்டேன். அப்பொழுது, தெரியவில்லை எனக்கு. குருநாதரின் அறிவுரைகளை சித்தன் அருளில், படிக்கத்தொடங்கிய காலம் முதல், எப்பொழுது, இந்த மாதிரி பிட்சை எடுத்தாலும், அன்னம் பாலிப்புக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.
ஆகவே, இந்த முறை இயலாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும், வயது முதிர்ந்து கூன் இட்டு நடப்பவர்களுக்கும், தேடிச்சென்று அன்னம் பாலிக்க வேண்டும் என முன்னரே தீர்மானித்தேன்.
இந்த முறை அகத்தீசப்பா, என்னை அழவைத்து, அவர் திருவடி பிச்சைக்காக காத்திருக்கும் இந்த அடிநாயை, ஆனந்தக் கண்ணீரில் திக்கு முக்காட வைத்துவிட்டார், என்பதுதான் உண்மை. எனக்கு, அப்பொழுது நடந்ததை நினைக்கும் பொழுதே நாடி நரம்புகள் அடங்கிப்போய் ஒருவித பதட்டம் வருகிறது. குருநாதர் நிகழ்த்திய அந்தத் தருணத்தில், நான் என் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன்.
பாதாளலிங்க கோவில் முன் மடிப்பிச்சை ஏந்தி நின்று கொண்டிருந்தேன். உள்ளே செல்பவர்கள், 1,2,5,10,20,50,100,200 என, இரண்டு கைகளையும் ஏந்தியவாறு நீட்டி நின்ற முந்தானை தலைப்பில் காணிக்கை போட்டுவிட்டு சென்றனர்.
தர்ம காரியங்கள் செய்யும் போது, எதையும் எதிர்பார்க்காமல் இருக்கவேண்டும் என்று அகத்தீசப்பா கூறியிருந்தாலும், ஏதோ ஒரு உந்துதலால், பிட்ச்சை போட்ட ஒவ்வொருவரையும் அவர்கள் முகத்தை நோக்கி, இவர் அகத்தீசப்பாவாக இருப்பாரோ? என்று ஆவலில் பார்த்தேன். நான் அவரை பார்க்க முடியாது, அந்த அளவுக்கு எனக்கு ஞானமும் கிடையாது! ஆனால் அவர் என்னை பார்ப்பார் இல்லையா! என்பதற்காக, எதிர் பார்ப்போடு இருந்தேன்.
அப்பொழுது, ஒரு அய்யா வந்தார். கழுத்தில் ருத்ராட்சம் போட்டிருந்தார். ரமணர் கோவிலுக்குள் சென்றார். தரிசனம் முடித்து, திரும்பி வேகமாக வெளியே வந்தவர். தன் மணிபர்ஸை திறந்து, சட்ரென்று, 500 ரூபாய் நோட்டை எடுத்து ஆசிர்வாதம் பண்ணுவது போல் கை உயர்த்தி போட்டுவிட்டு, நிற்காமல் சென்று விட்டார். மேலும் சாமானிய மனிதர்கள் 500 ரூபாய் பிச்சையிடுவது மிக மிக அறிது.
யார் பிட்ச்சை இட்டாலும், "குருநாதர் திருவடி சமர்ப்பணம்! அகத்தீசப்பா திருவடி சமர்ப்பணம்!" என்று கூறி, "ஓம் அகத்தீசாய நமஹ!", "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறி, கீழே குனிந்து வணங்கி பணிந்துதான் அனைவரிடமும் கையேந்தி வாங்கினேன்!
ஆனால், இந்த அய்யாவோ, நான் வணங்குவதை பொருட்படுத்தாமல், ஒரு க்ஷணத்தில் சென்று மறைந்தார். நான் குனிந்து வணங்கி "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று சொல்லிக் கொண்டு, நிமிரும் போதே, அதற்குள் அவர் பெரிய நந்தியைக் கடந்து, விட்டார். நடையில் அத்தனை ஒரு வேகம். கோவிலுக்குள் செல்லும் படிக்கட்டு முன்பு வரை அவரைப் பார்த்தேன். எப்படி இவர் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தார் என்ற வியப்புடன். எங்கு மறைந்தார் என்று யோசிக்க கூட முடியவில்லை. அவர் படியேறி ஆலயத்திற்குள் செல்வதை நான் பார்க்கவில்லை. இவ்வளவு வேகமாக அவர் சென்று விட்டாரா என்று சிந்தித்துக்கொண்டு இருந்தேன். அவர் தெரிகிறாரா! என்று தேடிப் பார்க்க, அவர் இல்லை.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமasர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment