​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 21 January 2025

சித்தன் அருள் - 1783 - அகத்தியப்பெருமானின் விளக்கம்!


அப்பனே! அனைவருக்கும் சொந்தக்காரன் யான் என்பேன். இருப்பவன், இல்லாதவன், பொய் சொல்பவன், பொய் சொல்லாதவன், ஏழை, பணக்காரன், இவ்மதம், அவ்மதம்  என்ற வித்யாசம் எந்தனுக்கு இல்லை அப்பா. அனைத்தும் ஒன்றுதான் என்பேன். தவறு செய்தானாலும் தன் பிள்ளையை ஏற்றுக்கொள்ளும் தாய் போல, அவ்வாறே அகத்தியனும் தான். 

அடியவர்: எங்கோ கேள்விப்பட்டேன், இனி வரும் காலங்களில் சனியவனே, சந்திரனை சார்ந்து தான் வேலை செய்யும் என்று!

அகத்தியர்: அதனால் தான் மனிதன் கூட பைத்தியக்காரன் போல் உளறுவான் என்பேன். அதனால் தான் சந்திரனை நெருங்கி வந்த சனியவனை யான் சற்று தள்ளிவிட்டேன். இது போல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இனி வரும் காலங்களில் மனிதனுக்கு பல புதுமையான விஷயங்களை கற்று கொடுப்பேன். அப்பனே! இவை எல்லாவற்றையும் சுவடிகளில் எழுதி வைத்துள்ளேன். ஆனால், காசுக்காக கைபற்றி வெளிநாட்டவரிடம்.........  விற்றுவிட்டார் அப்பா. அதனை கொண்டு புதுப் புது விஷயங்களை கண்டு பிடித்து விட்டார்கள் அப்பா. அப்பனே! யாங்கள் செய்யாதது இவ்வுலகத்தில் ஏதும் இல்லை அப்பா. 

அப்பனே! மனிதனாக பிறந்து விட்டாலே, குடும்பத்தில் பிரச்சினை வரும், நோய்கள் வரும். இவை எல்லாம் நீங்களே தீர்த்துக் கொள்ளவேண்டும். திருமணம் எப்பொழுது நடக்கிறதோ, அப்பொழுதே பாபம் ஏறிவிட்டது என்று பொருள். ஏதன் மீது நீ ஆசை கொள்கிறாயோ, அதன் வழி பாபத்தை ஏற்படுத்துவான் இறைவன். இப்படியே மனித வாழ்க்கை முடிந்து விடுகின்றது. பின் எங்கப்பா, இறைவனை பற்றி யோசிப்பான்.  ஆகவே, திருமணம் என்பது கர்மா தான்.

மனிதன் கோபப்பட்டால், உடல் வலுவிழந்து போகும். அப்பனே! கோபப்பட்டால் நீ அடைவது என்ன? அப்பனே அழிவுதான் நிச்சயம். முக்கால் பங்கு அழிவு, கோபத்தினால் தான் வருகிறது என்பேன். இதை யாரும் உணர்வதில்லை அப்பா. உண்மையான ஞானி அறிவானப்பா.  பக்தியில் இருந்து கொண்டே கோபபடுபவர் உண்டு. ஆதலால், அவனுக்கே நோய்கள் வரும். 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வேலை இருக்கின்றதப்பா. அதை தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் அப்பா!  

இனி  வரும் காலங்களில்,  கூறப்படுவதை யார் யாரோ எடுத்து செல்வார்களப்பா. புத்தகமாக வெளியிடுவார்களப்பா. 

குடும்பத்தில் இருந்தும், கடமைகளை சரியாக செய்துவிட்டு சென்றால், முக்தி கிட்டும். திருமணம் செய்துவிட்டு, அனைவரையும் தவிக்கவிட்டு, கடமைகளை செய்யாமல் சென்றால், அது தான் மிக கொடிய கர்மாவை ஒருவனுக்கு சேர்க்கும்.   திருமணம் செய்த ஆண் அல்லது பெண்ணுக்கு ஆன்மீக உணர்வே இல்லை என்றால், அப்பொழுது அந்த ஒருவருக்கு தெரியும், இவ்வுலகில் அனைத்தும் பொய் என்று. அப்போது தானாக இறைவனிடம் வந்து தான் ஆகவேண்டும்.

இறைவனை வணங்கினாலும் கர்மாவை அனுபவிக்கத்தான் வேண்டும் என்பதே பல ஞானிகளின் வாழ்க்கை உணர்த்துகிறது. ரமண மஹரிஷியின் வாழ்வு அப்படிப்பட்டதுதான்.

அண்ணாமலையாரிடம் அருகில் இருந்தாலுமா?

அப்பனே! இறைவன் நியாயமானவன். தன் பிள்ளையே தவறு செய்தாலும் தண்டனை கொடுப்பான். உடம்பை எடுத்துவிட்டால், கர்மாதான்.  அதேபோல் தான் மனிதன். தன் பிள்ளை தவறு செய்தால், தண்டித்தால், வெற்றி என்பது அப்பிள்ளைக்கு நிச்சயம் உண்டு.

மனிதனின் கட்டுப்பாடு கிரகங்கள் கையில் உள்ளது. ஆகவே, கிரகங்கள் விலகி வழிவிட்டால் தான் இறைவனிடமே செல்ல முடியும். இறைவனை நெருங்க நெருங்க, கிரகங்கள் தடுக்குமப்பா. அடித்து போடுமப்பா. அப்படியும் இறைவன் தான் வேண்டும் என்று சென்றால், போய் தொலையட்டும் என்று விட்டுவிடும். அப்பொழுதுதான் உண்மையான பக்தி பிறக்கும், உண்மையான ஞானம் பிறக்கும். 

தெய்வத்தின் பெயரை வைத்துக்கொண்டு தவறு செய்கிறவனுக்கு கர்மா வேகமாக ஏறும். அதனால் தான் அப்பா! "நாயினும் கடையேன்" என்று சொல்லிவிட்டான் அப்பா. புரிகின்றதா அப்பா? 

தெய்வத்துக்கும் எனக்கும் பூசை செய்துவிட்டு, புண்ணியத்தை தெடிக் கொள்கிறேன் என்று, யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன், "அகத்தியா எனக்கு இதை அருளேன், இதை கொடேன்!" என்று வேண்டிக் கொள்கின்றனர். இறைவனுக்கும், அகத்தியனுக்கும், எதை  எப்போது கொடுக்க வேண்டும் என தெரியும் என்று உணர்வதே இல்லை.

அப்பனே! அனைத்தையும் உணர்ந்தவர்கள், சித்தர்கள்.

யான் தீபம் ஏற்ற சொன்னதே மற்றவர்களுக்காகத்தான்.
 
அடியவர்: ஜோதிடம் பார்ப்பவனுக்கு கர்மா வந்து சேரும் என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.  இந்த ரகசியத்தை வேறு யாருமே இதுவரை சொன்னதில்லை, நீங்கள்தான் முதலில் சொல்கிறீர்கள். இப்படிப்பட்ட கலையை ஏன் இறைவன் பூமிக்கு கொண்டுவந்தார்? அதுவுமின்றி, சாதாரண மனிதரிடம் ஏன் இதை படிக்க கொடுத்தார்?  

அப்பனே! சொல்கின்றேன். முன்  காலங்களில் ஜாதகன் 48 நாட்கள் விரதமிருந்து பின்னர் தான் சோதிடனிடம் ஜாதகம் பார்க்க போக வேண்டும். அதுமட்டும் அல்லாமல், நவகிரகங்களின் காயத்ரி மந்திரத்தை உருவிட்டபடி, ஏதேனும் ஒரு உயிரினத்துக்கு தினமும் உணவளித்தபின் செல்ல வேண்டும் அப்பா!  அது மட்டும் இல்லாமல்  நன் முறைகளாகவே தாய் தந்தையரையும் மதித்து, குரு சொல்வதையும் கேட்க வேண்டும் அப்பனே! இவை எல்லாம் முன்னரே செய்தபின்தான், ஜாதகத்துடன் செல்வார்கள் அப்பா. இதனால், சொல்பவனுக்கு நிச்சயம் கர்மா இல்லை அப்பா. இப்பொழுது அப்படியா நடக்கின்றது அப்பா? அப்பனே கிரகங்கள் கூட, தர்மத்தை கடைபிடித்தால், அனைத்து நன்மைகளையும் செய்யும் அப்பனே. இப்படித்தான் முன் காலங்களில் சொல்லிக் கொண்டிருந்தார்கள் அப்பனே. இவைகளை எல்லாம் சொல்பவன் ஜாதகனிடம் கூறவேண்டுமப்பா! இல்லாவிடில், அந்த ஜாதக தோஷ பலன், சொல்பவன் முதுகில் ஏறுமப்பா.  இப்பொழுதெல்லாம் காசுக்காக செய்கிறார்கள், சொல்கிறார்கள். போகட்டும் என்று விட்டு விடுகிறேன் நான். 

அகத்தியப் பெருமானுக்கு மிக்க நன்றி! விளக்கம் நிறைவு பெற்றது!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. சித்தர் பெருமக்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏திருமணம் செய்வதே கர்மா என்றால் இதை படித்து அனைவரும் விவாகம் செய்யாருந்தால் இந்த பூமியில் சில காலங்களில் மானிட வர்க்கமே இருக்காதே மேலும் விவாகம் கர்மா என்று உரைக்கும் சித்தர் பெருமக்கள் பெரும்பாலும் துணைவியரை கொண்டே உள்ளனர் இறைவன் மற்றும் அகத்தியர் பெருமான் உள்பட அவ்வாறு இருக்க எவ்வாறு இந்த பதிலை உரைத்தார் என்று தெரியவில்லை ✍️

    ReplyDelete
  3. குருவே சரணம் சரணம் . என் தந்தையே அகத்தீசா சரணம் சரணம்.

    ReplyDelete