​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 12 January 2025

சித்தன் அருள் - 1770 - திரு.ஹனுமந்த தாசன் அய்யா - அயோத்திப் பட்டினம் வாக்கு - 1!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்றைய காலகட்டத்தில் நாடி வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாக, ஒரு சிறந்த குருவாக வாழ்ந்து தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் அவர்கள் அனுபவித்த துன்பங்களுக்கு அகத்தியப்பெருமானின் அருளால் ஆசிகளை வாங்கி வழங்கி எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் திரு,ஹனுமந்த தாசன் அய்யா அவர்கள். அவரின் மறைவுக்குப்பின் இன்று வரை அவருடன் பழகியவர்கள் அனைவருக்கும் தெரியும், அவர் ஒரு மிகச்சிறந்த அகத்தியர் மைந்தன் என்று. நிறைய அகத்தியர் அடியவர்களை, அகத்தியப்பெருமான் உத்தரவிட்ட கோவில்களுக்கு, மலைகளுக்கு  அழைத்து சென்று அங்கு வைத்து அகத்தியப்பெருமான் விவரித்த முன் கால நிகழ்ச்சிகளை, கேட்க்கும்படி செய்துள்ளார்.

அப்படி அவர் அடியவர்களுடன் சென்று அமர்ந்து நாடி வாசித்து, அகத்தியப்பெருமான், ராமபிரானைப் பற்றி ஒரு ஒளி நாடாவில் கூறியதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இது சேலத்துக்கு அருகில் இருக்கும் அயோத்தி பட்டினம் என்கிற ஊரில் ராமர் விரும்பி அமர்ந்த இடத்தில் வைத்து வாசிக்கப்பட்டது. எத்தனையோ உண்மைகள், அகத்தியரின் ஜீவ நாடியிலிருந்து, இப்பொழுதேனும் கிடைத்ததே என்று ஏற்றுக்கொள்வோம்.

இன்னும், இதுபோல் அடியவர்களுக்கு கொடுப்பதற்காக கிடைக்க வேண்டும் என அகத்தியப்பெருமானிடம் வேண்டிக் கொண்டு, பெரியவரின் நாடி வாசிப்பை கேட்ப்போம்.     

"ஒளிமறை பரணி உதித்திட்ட  வேளையில் ஓர் உத்தமன் என் அன்பன் போகன் பிறந்த நாளாம் இந்த நல்ல நாளில் அருமை மிகு இங்கு ராமப் பெருமான் சன்னிதானத்தில் அகத்தியன் யான் வாக்குரைக்க முன் வந்திருக்கிறேன் !!

கொடிமரம் இல்லாத கோவிலடா  இது! இது வேறு எங்கும் காணமுடியாத அதிசியம் கூட! தலை இல்லாத வாழை போல, கொடிமரம் இல்லாத பெரும் கோவில் இது. இதை உதாரணமாக சொல்ல வேண்டும் எனில், அகத்தியன் மைந்தன் கூட சில சமயம், கொடி மரம் இல்லாத கோயில் போல கால் சாயை அணிந்து கொண்டே  அகத்தியன் வாக்கை பலமுறை உரைத்திருக்கின்றான். அகத்தியனுக்கு இதில் பெருதும் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட, அன்றைக்கு சொன்ன ஒரு வார்த்தைகள் எல்லாம் தலை மேற்கொண்டு, ஆங்கோர் வேட்டி தனை கட்டி, அங்கவஸ்திரம் சாற்றி, அருமையாக சொல்ல வந்த பின்பு தான் அகத்தியனுக்கே சற்று மனம் குளிர்ந்தது. எத்தனையோ செய்திகளை சொல்ல வேண்டும் என ஆசைபட்ட போதெல்லாம், இவ் உடைகள் எனக்கு பல வடிவில் பலவீனத்தை தந்ததால் பாதி மறைத்து விட்டதெல்லாம் உண்மை தான்.

ஆகவே கொடி மரம் இல்லாத  கோயில் எப்படியோ, அதுபோல் வேட்டி இல்லாத வாக்கு உரைக்க கூடாது என்பதை ஏற்கனவே வாக்குரைத்தேன். அதன்படி அற்புதமாக இவன் செய்து வந்ததால் அகத்தியன் மனம் மகிழ்ச்சியோடு, இந்த புனிதமிகு கோயிலை பற்றி யாம் சொல்லப்போகிறேன்.

எங்கெங்கோ, யார்யாரோ, எவர் எவரோ எப்படியெல்லாமோ எந்த எந்த கோயிலுக்கோ உள்ள விளக்கம் கூறி கோபுரம் கலசம் கட்டி, தங்க மேலாடை அணிந்து அற்புதமாக வலம் வருகின்ற காலமிது. அதையெல்லாம் தாண்டி, ஆனந்தமாக அமைதியான இந்த கோயிலுக்கு மிக பெரிய வரலாறு உண்டடா. ராவண சம்ஹாரத்தை முடித்து விட்டு  ராமன் உட்பட அத்தனை பேரும் ஏன் இங்கு வர வேண்டும் என்றொரு கேள்வி வரலாம். அவர்கள்  நேரிடையாக இலங்காபுரியில் இருந்து அயோத்திக்கு தானே சென்றிருக்க வேண்டும், இடையில் என்ன இடர்பாடு என்று கேட்கலாம் ? அது மட்டும் அல்ல, இங்கும் ஓர் அதிசியம் ஒன்று நடந்திருக்கிறது. ராமனை வழி அனுப்ப வந்த விபீஷணன் கூடவே அயோத்தியாபுரிக்கு வரும் வழியில், ராமன் இந்த மலையை கண்டு, இங்கு சில காலம் இங்கயே இருந்து விடலாம் என்று எண்ணினான். இங்குள்ள நந்தவனமும், பொய்கை ஊற்றும் சுற்றுப்புற சூழ்நிலை எல்லாம், ராமனுக்கு மிகவும் பிடித்து போயிற்று. ஆகவே சொன்னான் நான் அயோத்தியாபுரி ராமன். எங்கிருந்தாலும் அங்கு அயோத்தி என்றுதானே பெயர். நான் இங்கேயே தங்கி விடுகிறேனே. எனக்கு இதுவே அயோத்தி என்று சொன்னான். ஆகவே அகத்தில் ராமன் வாய் திறந்து ஆசைப்பட்ட இடமிது. அதுமட்டுமல்ல இங்கிருந்து 27 மலைகள் இருக்கிறது. ஓவ்வொரு மலைக்குள்ளும் ராமர் பாதம் பட்டிருக்கிறது. இன்றும் கூட ராமர் பாதம் பட்ட இடத்திலே  அதன் நீரூற்று வந்து கொண்டிருக்கிறது. புனிதமான நீரூற்று மலைக்குள்ளே நிறைய இருக்கிறது.யாரேனும் எவரேனும் இந்த மலையை தாண்டி கொண்டாலோ , மலையை சுற்றி வந்தாலோ ராமர் பாதம் தென்படும். ராமரின் பாதம் பூமியில் அழுத்தப்பட்டிருக்கும், போலியாக செய்யப்பட்டது அல்ல. இந்த இடத்தை எல்லாம் ராமன் தன்னந்தனியே சுற்றி பார்த்தான். சுற்றி பார்த்து ஆனந்தப்பட்டான். ஆகவே இந்த அயோத்தியாபுரியை விட எனக்கு இது தான் அயோத்தியாபுரி என்று வாய் திறந்து மனம் திறந்து ஆசைப்பட்ட இடம் தான் ராமருடைய வாக்கு. ஆகவே போலிகளுக்கே மரியாதையை உள்ள உலகமடா இது. உண்மையான ராமன் இங்கே தான் இருக்கிறான் !

எந்தவித ஆர்ப்பாட்டம் இன்றி, வேறுபாடு ஏதும் இன்றி ராஜ அலங்காரத்தையெல்லாம் கலைத்துவிட்டு,  அதையெல்லாம் தாண்டி கொண்டுதான் இங்கு ராமர் அமர்ந்து கொண்டு இருக்கிறார். அந்த ராமர் கால்மேல் கால்போட்டு அமர்ந்த கோலம் என்றால் ஆனந்தத்தின் உச்சக்கட்டம் என்று அர்த்தம். ஆனந்தத்தின் உச்சக்கட்டம் என்றால், ஒருவன் நன்றாக உணவருந்தி விட்டு, வெற்றிலை தாம்பூலம் தரித்து விட்டு , பேஷ் !!! அப்புறம் என்று சொல்வார்களே, அது போல மனம் திறந்து இருந்த இடமடா !! உண்மையிலே சொல்லப்போனால் இங்குள்ள பலருக்கு எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று எதாவது கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற வழக்கம் உண்டே ?  அதை எல்லாம் விட்டுவிட்டு எங்கோ சுற்றி கொண்டு இருக்கின்றோமே என்றெல்லாம் மனம் அலை பாய்ந்திருக்கிறது. எதாவது கோயிலுக்கு செல்ல வேண்டாமா ? என்று எண்ணியது எல்லாம் , பெரும்பாலும் இவர்களை போன்ற திட்டம் எல்லாம். பல பெரும் முருகர் கோயிலுக்கும் சிவன் கோயிலுக்கும் இருந்ததாக எண்ணிக்கொண்டு , வைகுண்ட ஏகாதசி அன்று வைணவ கோயிலுக்கு செல்ல வேண்டாமா ? என்ற ஏக்கம் மனதுக்குள்ளே அவ்வப்போது உருவேற்றிக் கொண்டதெல்லாம் அகத்தியன் யாம் அறிவேன். அதனை நிறைவேற்றும் பொருட்டு தான் அவர்களையெல்லாம், இங்கு அழைக்க வைத்து ஆனந்தப்படுத்தி, எங்கு உண்மையான ராமன் குடியிருந்தானோ ? சில காலங்கள் இருந்தான் , சில வருஷங்கள் என்று உங்கள் கணக்கு எடுத்து கொள்ளலாம். அவனுக்கு அயோத்தியா செல்லவே ஆசைப்படவில்லை. இங்கயே நிரந்தரமாக தங்கிவிட்டு , ஏராளமான ஆனந்தத்தோடு , பல கணிகைகளோடு, மக்களோடு செல்வாக்கோடு அண்ணன் தம்பிகளோடு ஆனந்தமாக இங்கயே இருந்துவிடலாம் என்று எண்ணி நினைத்தபோது தான் கங்கை அவள் கூட, நீ ஏன் அயோத்தியாபுரிக்கு வருகிறாய் ? நானே உன்னை தேடி வருகிறேன் என்று, கங்கையே ராமனை தேடி அலைந்து கடைசியில் இங்கு வந்து சேர்ந்து, ராமர் பொற்பாதத்தை தன்அற்புத அலைகளால் கழுவியது எல்லாம் உண்மை.

ஆக கங்கையே ராமனை தேடி வந்து தன் பொற்பாதத்தை நனைத்து ராமனை புனிதப்படுத்திய புண்ணியமான இடம் தான் இப்பொழுது நீங்கள் அமர்த்திருக்கின்ற இந்த இடம். இங்கே தான் கங்கையும் அமர்ந்திருந்தாள் , கங்கையோடு மற்ற ஒன்பது நதிகளும் சேர்ந்து அமர்ந்தது.  ஒன்பது நதிகளும் இந்த ராமனை புனித நீராட்டி, ஏறத்தாழ  பட்டாபிஷேகமே நடந்தது தான் உண்மை. ராமனின் பட்டாபிஷேகம் எங்கு நடந்தது என்று கேட்டால் , எல்லோரும் அயோத்திபுரியை தான் சொல்லுவார்கள். அல்ல, ராமருக்கு ஏற்கனவே பட்டாபிஷேகத்துக்கு ஒத்திகை பார்த்த இடம் தான் இந்த இடம். ஆகவே இது தான் முதன் முதலில் நடந்த பட்டாபிஷேக இடம். அந்த பட்டாபிஷேகம் நன்னாளும் கொள்ள, வைகுண்ட ஏகாதசியும் ஒன்றாக சேர்ந்ததால் இந்த இடம் உங்கள் அனைவருக்கும் புனிதத்தை தருகிறதே, உங்கள் கோபத்தை போக்குகிறதே !! இனி ஒன்பது ஆண்டுகாலம் நீங்கள் என்ன பாபம் செய்தாலும், அந்த பாபத்தை வடிகட்டுவதற்காக, அந்த புண்ணியத்தையும் இங்கே ராமர் உங்களுக்கு தந்திருக்கிறார் !! ஏன்னென்றால் ராமரால் எத்தனையோ பேர் கொல்லப்பட்டிருந்தாலும், அத்தனை பேரும் மீண்டும் உயிர்தெழப்பெற்று, அவர்கள் மோட்சத்துக்கு போனது எல்லாம் நிறைய பேருக்கு தெரியாது. ராமன் நிறைய பேரை கொன்றான் என்று தான் பெயர் உண்டு. ராவணன் கொல்லப் படவுமில்லை. ராமன், இராவணன் யாருமே கொல்லப்படவுமில்லை. ராமரும் கொல்லப்பட்டதாக ஒரு சரித்திரம் உண்டடா. ராமர் மரணமுற்று கிடந்த போதெல்லாம் , ராமன் தன்னந்தனியாக மூச்சு விடாமல் திகைத்த போதெல்லாம் , ராமர் இறந்துவிட்டாரென்று சிற்றறிக்கை படுத்தி, ராமரை பலவீனப்படுத்தி, அப்படியொரு அரசியல் அந்த காலத்தில் நடந்தது. ஆகவே அந்த ராமன் இங்கே அமைதியாக, ஆனந்தமாக மோட்சத்துக்கு  சென்று கொண்ட பாதையில் புண்ணியத்தை தந்து கொண்டிருக்கின்றான் எல்லாருக்குமே. யார் யாருக்கெல்லாம் புண்ணியம் தந்தான் என்றால், எவன் எவன் கொடுமை செய்தானோ அவனுக்கெல்லாம் மோட்சம் தந்தவர் ராமன். அந்த புனிதமான கை இங்கே இருக்கிறது , அபயஹஸ்தமாக இருக்கிறது !! அவன் கை எங்கிருந்ததோ ஒரு காலத்தில் , இந்த அகத்தியன் வாக்குரைக்கிற பின்புலத்தில் தான் ஒரு பாறையில் அமர்ந்து கொண்டிருந்தான். அவனது இடது பக்கத்தில் சீதையும், வலது பக்கத்தில் பார்த்தால் எல்லாரும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். யாருமே ராமனை நெருங்க முடியாத ஒரு வேளை. ஏனென்றால் உக்கிரத்தை  முடித்துவிட்டு, ராவணனை சம்ஹரித்த அந்த ஆத்திரம் தீராமல், அமைதியாகவும் சாந்தமாக  இருந்த இடமடா இந்த இடம். ராமர் இலங்கையை அழித்த பிறகு கூட, இங்கே நேராக வந்தபோது அவரது முகத்தில் சலனம் இருந்தது. அநியாயமாக ஒரு பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகிவிட்டோமே, அநியாயமாக ஒரு சிவ மைந்தனை யாம் கொன்று விட்டோமே என்றெல்லாம் கவலைப்பட்டு, நொந்து போய் உட்கார்ந்து  இருந்தான். அவர் இந்த இடத்துக்கு வரும் வரை, இந்த இடத்தில் கால் வைக்கும் வரை ராமன், அவன் ராமனாக இல்லை. அவன் மனதை அலை பாயவிட்டு, சஞ்சலப்பட்டு இன்னும் சொல்லப்போனால் ஒரு சிறு பெண் போல தேம்பி தேம்பி அழுத்த காலம். அந்த தேம்பி தேம்பி அழுத்த காலமெல்லாம் மறைந்து, ராமர் இங்கு கண் திறந்து சந்தோஷப்பட்டு இன்றுமுதல் புதிய ராமனாக உருவெடுத்த இடமும் இதே இடம். ராமனுக்கே மறுமலர்ச்சி குடுத்த இடம். ராமனுக்கு மறுமலர்ச்சி குடுத்த இடம் இரண்டு இடம் உண்டடா. ஒன்று அன்றொரு நாள் போர்க்களத்தில் நிராயுதபாணியாக இருந்த போதெல்லாம், அப்பொழுது அகத்தியன் அவனுக்கு தைரியம் குடுத்த ஆதித்திய ஹ்ருதயத்தை சொன்னேன். அது ஒரு மறுமலர்ச்சி .அதற்கப்புறம் தெம்பு வந்தது, தைரியம் வந்தது வாதத்தை வென்றான். அதற்கப்புறம்  சிவனை கொன்று விட்டோமே, சிவ தூதனை கொன்று விட்டோமே என்றெல்லாம் அவன் கவலை பட்டு ராமன் நிம்மதியாக தூங்கவில்லை.சீதையை கைபிடித்தும்கூட , சீதை எத்தனையோ முறை திரும்பி பார்த்தும் கூட, அவள் முகவாய்கட்டையை திருப்பி திருப்பி அண்ணா ஸ்வாமி என்று கூப்பிட்டால் கூட ராமன் திரும்பி பார்க்கவில்லை.எதற்காக ராமன் தன்னிடம் இவ்வளவு கோபப்படுகிறான் ? சந்தோஷப்படவேண்டிய நேரத்திலே சந்தோஷப்படாமல் ? இப்படி முகத்தை திருப்பி கொள்கிறானே என்று அன்றொருநாள் சீதையே வருத்தப்பட்டு , மைத்துனனா கொழுந்தனிடம், கொழுந்தா கொழுந்தா, ஏன் உன் அண்ணன் இப்படி இருக்கின்றான் என்றெல்லாம் கவலைப்பட்டு அவா கொண்டு, ராமன் இந்த இடத்தில கால் எடுத்து வைக்கும் வரை அந்த நிலை இருந்தது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அகத்தியர் ஐயா கூறிய கோயில்களில் ஒன்று கூட எங்கள் ஊரில் இல்லையே என வருத்தம் அடைந்தேன், அதை போக்கிய அகத்தியர் ஐயாவுக்கும் தொகுத்தருளிய அக்னிலிங்கம் அன்பருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete