​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 2 November 2024

சித்தன் அருள் - 1721 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-7!


ஒரு அடியவர் வந்து அமர்ந்தார், அவர் கேள்வி கேட்கும் முன்னரே,

குருநாதர்: அப்பனே! நீ என் அருகில் இருக்கின்றாய்! ஆதலால், எதுவும் கேட்டுவிடாதே. உன் அப்பனுக்கு, தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும் என்று எமக்கு தெரியும். ஆகவே, பொறுத்திரு!

அடியவர்: என் பக்கத்திலிருந்து, நான் ஏதேனும் திருத்திக் கொள்ள வேண்டுமா?

குருநாதர்: நான் பக்கத்திலேயே இருக்கின்றேன்! ஆகவே, ஏதேனும் தவறு செய்தால், யானே தலையில் குட்டுவேன்!

அடியவர்: இன்னும் ஒரு விஷயம் குருநாதா! மனிதர்கள், நான் அவருடைய சிஷ்யன், அவருடைய தம்பி, அவருடைய எல்லாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு.....

குருநாதர்: அப்பனே! யான் சொல்லவில்லையே அது போல!

அடியவர்: இல்லை, நீங்கள் சொல்லவில்லை ஆனால் அப்படி கூறிக்கொண்டு மனிதர்கள், இந்த காலத்தில், அதர்வண வேதம் .............

குருநாதர்: அப்படி சொன்னாலும், யான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை அப்பனே! அப்பனே! பின்னர் மண்ணை மெல்லுவது போலத்தான் அப்பனே!

அடியவர்: நான் கேட்க வருவது ஒரே ஒரு சின்ன விஷயம் தான். நீங்கள் ஒரு வாக்கு தாருங்கள். எப்படி என்றால், "என் பெயரை சொல்லி யாரேனும் அதர்வணமோ, வசியமோ, இல்லை என்றால் காசு பண்ணுவதோ, அந்த மாதிரி செய்தால் பலிக்காமல் போகட்டும் என்று".........

குருநாதர்: அப்பனே! எதை என்று அறிய அறிய! முதலிலேயே யான் சொல்லிவிட்டேன், அப்பனே!

அடியவர்: என்ன சொன்னீங்க?

குருநாதர்: கடைசி முறையாக யான் எச்சரிக்கிறேன் என்றேன்!

அடியவர்: இந்த எச்சரிக்கை எல்லாம் போதாது. அவர்கள் செய்கிற எதுவுமே பலிக்காமல் போக வேண்டும்! அந்த வாக்கை கொடுங்கள்!

குருநாதர்: அப்பனே! இதற்கும் சரியான வழியிலேயே, பலிக்காது என்பேன் அப்பனே! நிச்சயம் அப்பனே! தன்னைத்தானே அவன் அழித்துக் கொள்கின்றான் என்பேன் அப்பனே!

அடியவர்: அதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு, உங்கள் பெயரில் தானே அன்னதானம் செய்து கொண்டு இருக்கின்றான், அவன்!

குருநாதர்: இப்பொழுது தான் சொன்னேன், அனைத்தும் விரயம் என்று!

அடியவர்: நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால், இங்கிருந்து இன்னொரு கேள்விக்காக வருகின்றேன். அதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு தவறு செய்தவன், தவறு செய்த பின், உங்கள் பெயரில் ஒரு நல்லது செய்தால், அவன் செய்த தவறு இல்லாமல் ஆகிவிடுமா?

குருநாதர்: அப்பனே! இது நியாயமா? தர்மமா? அப்பனே! எவ்வாறப்ப? எப்பொழுதுமே, இதைத்தான் நான் சொல்வேன் அப்பனே! ஒரு தாயானவள், தன் பிள்ளை விளையாடும் பொழுது, நிச்சயமாக சந்தோஷமடைவாள். மீண்டும் ஒரு தவறு செய்தாலும் சந்தோஷமடைந்து, கடைசியில் விட்டுவிடுவாள். ஆகவே சிந்தித்துக் கொள் அப்பனே, புத்திகள் அதற்காகத்தான் கொடுத்திருக்கிறான், இறைவன். மேலும் மேலும் தவறுகள் செய்து போகும் பொழுது, ஒருநாள் அவனும் விழுந்து விடுவான், அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் விழுந்து விடுவார்கள். பின்னர் அப்பனே! சந்ததிகள் பெருகாதப்பா! இதனால் அப்பனே! யார் ஒருவன், மனிதன், மூளையை கசக்கி, நன்றாக செயல் படுகின்றானோ, அவன் உத்தமன். அவன் நீடூழி வாழ்வான், அவன் குடும்பமும் நீடூழி வாழும் அப்பனே!

அடியவர்: அதெல்லாம் சரிதான்! என் கேள்வி வேறு ஒரு விதமாக போன கேள்வி அது! இப்படிப்பட்ட ஒரு மனிதன் கடந்த ஐந்து வருடமா அரசியல்வாதியாக இருந்து கொண்டு அத்தனை கோவில் சொத்தையும் கொள்ளை அடித்து, அத்தனை தப்பையும் பண்ணிவிட்டு, எல்லா மாதமும் கட்டுக்கட்டி சபரிமலைக்குப்போய் ஐயப்பனிடம் கொடுத்துவிட்டு வந்தாகிவிட்டால், அவன் பண்ணிய தவறுகள் காணாமல் போய்விடுகிறது.

குருநாதர்: அப்பனே! கொள்ளை அடித்து வைத்தாலும், அது எங்கு இருக்கின்றது என்று தெரியுமா? அப்பனே!

அடியவர்: மேலும் மேலும் வளர்ந்துண்டேதான் இருக்கிறான் அவன்.

குருநாதர்: அப்பனே! தர்மம் தலை தாழ்ந்து நிற்குமடா!

அடியவர்: இவனை பார்த்து படிக்கிற மனிதர்கள், நன்றாக வளர வேண்டிய மனிதர்கள் தவறான விஷயங்களை தான் கற்றுக் கொள்கிறார்களே தவிர நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதில்லை. 

குருநாதர்: அப்பனே! எவன் ஒருவன் மூளையை கசக்கி, தவறு செய்கிறானோ, அவனவன் செய்கிற தவறு, அவன் அவனையே கொல்லும் என்பேன். அதனால் தான், பாபத்திற்கான தண்டனை கிடைக்க தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் உண்டு அப்பா! முன் ஜென்மமதில் புண்ணியம் செய்தான் அதனால் இவ் ஜென்மத்தில் நன்றாக வாழ்கிறான் என்று சொல்லவில்லை. ஆனால், இதற்கும் சில வழிகள், ரகசியங்கள் உண்டு என்பேன் அப்பனே! கொள்ளையடித்து சொத்து சேர்த்தாலும், அவன் கையிலா இருக்கின்றது, சிந்தித்துக் கொள் அப்பனே! அதை இறைவனுக்காகத்தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றான் என்று. பைத்தியக்காரன் என்று. அதை ஒருநாள், இறைவன் எடுத்துக் கொள்வான் அப்பனே! எங்கு போகப் போகிறது அப்பனே! இன்னும் புரியுமப்பா! கலியுகத்தில், போகப்போக!

அடியவர்: நான் கேட்க வந்தது அது மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளை, உங்கள் பக்தர்களை உருவாக்கி இந்த உலகத்தில் விட்டு விட்டு........

குருநாதர்: என் குழந்தைகள் என்று கூறினாய் அல்லவா! அவர்களுக்கு, எவ் திருத்தலங்களுக்கு செல்லவேண்டும் என்று செப்பி, செப்பி, நன்மைகளை செய்ய வைத்து உயர்ந்தவர்கள் ஆக்குவேன் அப்பனே! ஒரு சித்தன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமப்பா! போகப்போக, உனக்கே அது புரியுமப்பா! பின் சித்தன் வாக்கு பைத்தியம் வாக்கு என்று கூறலாம் அப்பனே! பகல் இரவு, இன்பம் துன்பம் போல ஒரு வேளையில் தாழ்ந்து பின் உயருமப்பா! யார் ஒருவன், நீதி நேர்மையோடு வாழ்கிறானோ, அவன் பக்கத்தில் இறைவன் இருப்பானப்பா!  

அடியவர்: அய்யனே! நான் கேட்க வந்ததை மீண்டும் கேட்கட்டுமா? உங்கள் குழந்தைகளை படைத்து இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, இங்கு நடப்பவைகளை கண்டு படித்து வளருங்கள் என்று கூறி, நியாயம், நீதி, நேர்மை என்றெல்லாம் கூறுகிறீர்களே, அவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிற சூழ்நிலை சரியாக இல்லையே. இந்த மாதிரி அரசியல்வாதி தானே வகுப்பெடுக்கிறான்!

குருநாதர்: அப்பனே! நிச்சயம் அவன் வகுப்புக்கள் எடுத்தாலும், மனிதனுக்கு புத்தி இருக்கின்றதல்லவா? அப்பனே! ஏன் அதை பயன்படுத்தவில்லை அப்பனே! அதாவது, யார் ஒருவன் சரியாக அறிவை பயன் படுத்துகின்றானோ, அவன் உயருகின்றான். சரியாக புத்தியை பயன்படுத்தாதவன், தாழ்ந்தவனாகின்றான். அப்பனே! அவ் அறிவுக்கான தண்டனை நிச்சயம் ஒரு நாள் உண்டு என்பேன் அப்பனே! அனைத்தையும் சேகரித்தபின் தண்டனை எதற்கு என்று! அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, அதை எல்லாம் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அப்பா. பொறுத்திரு! மனிதன் எப்பொழுது தன் அறிவை சரியாக உபயோகிக்கவில்லையோ, அப்பொழுது கலியுகம் முற்றிற்று என்று பொருள். ஆகவே இறைவனுக்கு எல்லாம் தெரியுமப்பா! அவனே அமைதியாக இருக்கிறான் என்றால், நீ உன் வேலையை பார்த்து கொண்டு அமைதியாக இரு.

அடியவர்: அதுவும் ஒரு விதத்தில் சரிதான், ஆனால் என்ன செய்ய! கண் முன்னாடி அநியாயங்கள் நடக்கிற பொழுது சும்மா இருக்க முடியவில்லை. எதுக்கும், இறைவனிடம் கூறி, அவர் ஜாதகத்தை நல்ல ஜோசியனிடம் காட்ட சொல்லுங்கள். அவருக்கே நேரம் சரி இல்லை போல!

குருநாதர்: இறைவனுக்கு ஜாதகம் என்ற ஒன்றே இல்லையப்பா!

அடியவர்: ஏதாவது ஒன்று இருக்குமே, அதை கொடுத்து பார்க்கலாமே! 

குருநாதர்: அப்பனே! அனைத்திலும் உணர்ந்தவன் இறைவனப்பா! அதில் ஒரு தூசி கூட மனிதனுக்கு தெரியாதப்பா!

அடியவர்: அவர் எதிர்பார்த்தபடி விஷயங்கள் முன்னுக்கு போக மாட்டேன் என்கிறதே!

குருநாதர்: அனைத்தும் இறைவன்தான் செய்கின்றான் என்பேன் அப்பனே! இறைவன் இயக்கம் தான் அப்பனே. நிச்சயம் ஒரு நாள் நிறுத்தி விட்டால், மனிதன் என்ன செய்வானப்பா! எங்கே அப்பா, நிலங்கள், எங்கே அப்பா காசுகள், எங்கே அப்பா சொந்தங்கள், இதை உணர்ந்து கொள். அவரவருக்கு விதிக்கப்பட்டதே சரியானதே! அப்பனே, நிச்சயம், தர்மம் தாழ்கின்ற பொழுது, இறைவன், நேரடியாக மனிதனுக்கு காட்சிகள் அளிப்பான் அப்பா! ஆதலால், இறைவன் வரத்தான் போகின்றான், அதற்குள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், வளர்த்துக் கொள்ளுங்கள் என்று யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!  இதைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றாய் அன்பு மகனே!

(இத்துடன் அகத்தியப்பெருமானுடனான கலந்துரையாடல் நிறைவு பெற்றது!)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 1 November 2024

சித்தன் அருள் - 1720 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-6!


அடியவர்: அதன் (வசியம்) பாதிப்பு இன்னமும் பலமாக இருக்கிறது! என்ன செய்ய வேண்டும்?

குருநாதர்: யான் சொன்னதை செய் அப்பனே. இன்னும் இருக்கிறது. பேய் விரட்டி என்னும் இலை, அதை எடுத்து வந்து, சிறிது பச்சை கற்பூரம், சிறிது கிராம்பு சேர்த்து, இல்லத்தில் (மாலை/இரவு) புகைக்கவிட்டால் இந்த பிரச்சினைகள் தீரும். இதை அனைவருமே உணர்ந்து கொள்ள வேண்டும். சிறிது சிறிதாகத்தான் சொல்வேன் அப்பனே. ஏன் என்றால், அனைத்தும் சொல்லிவிட்டாலும், யாரும் செய்வதில்லை என்பேன் அப்பனே. மனிதன் முதலில் பக்குவங்கள் படவேண்டும். யோசிக்கத் தெரியாமல் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கிறானாப்பா! அப்பனே! ஏன் இவ்வாறு உன்னை அலைக்கழிக்கிறேன் என்றால், சித்தன் அலைக்கழித்தால் மனிதனின் பாவங்கள் போகுமப்பா. ஆனால் அப்பனே! கட்டையில் போகிறவனுக்கு, இது நிச்சயம் தெரிய வில்லை அப்பனே. சித்தன் திட்டுகிறான் என்று கூறுகின்றான். அவ்வாறு எங்களிடத்தில் வந்தால், நிச்சயம் துப்புவோம். அதோடு (பிரச்சினை) விலகிவிடுமப்பா! நிச்சயம்! ஆனால், இவ்வுலகத்தில், உண்மையான சித்தன் இல்லை அப்பா! காறி துப்பினால், சித்தன் பொய் என்று (மனிதன்) கூறிவிடுவானப்பா. புரியுதா அப்பா?

அடியவர்: இந்த இடத்தில், முன்னரே கேட்ட கேள்வியையும், வேறு ஒரு கேள்வியையும் தொடர்பு படுத்தி கேட்க்கிறேன். கோவில்களில் இருப்பது கற்சிலைகள் தானே, பஞ்ச லோகம் என்றால் பஞ்சலோக சிலைகள் தானே என்ற பொழுது காக புஜண்டர் சித்தரானவர் வந்து நன்றாக திட்டிவிட்டு போனார். அதோட, நானும் விட்டுவிட்டு போய்விட்டேன். இப்ப சமீபத்துல நடக்கிற கூத்து எல்லாவற்றையும் பார்த்தால், காகபுஜண்டர் சித்தர் வந்தால் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. நீங்க எல்லாம் எங்க போயிட்டீங்கனு கேட்கணும்னு! தமிழ்நாட்டுல......

குருநாதர்: நிச்சயம் வருவானப்பா. அப்பனே! பொறுத்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே. ஆனால் எழுந்து நின்றால் அப்பனே! நிச்சயம்! அதனால், பயந்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே! இன்னும் சில பேர்கள், காகபுஜண்டன் இப்படி பேசுவானா என்று அப்பனே! ஆனால்,  கோபத்தோடு, காகபுஜண்டன் பேசினால், அப்பனே, பாபம் அழியுமப்பா. ஆனால் அது மனிதனுக்கு தெரிவதே இல்லை. புத்திகெட்ட மனிதனப்பா. அதனால் தான் காகபுஜண்டனும் கூட மனிதன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவன் கோபப்பட்டாலே, பல கர்மாக்கள் போகுமப்பா. இது மனிதனுக்கு தெரியாமல் அப்பனே, பிதற்றிக் கொண்டிருக்கிறான் அப்பா!   ஏன் என்றால், சித்தன் நிலைமை யாது என்று புரிந்து கொள்ள முடியாது, புரிந்து கொள்ளவும் ஆளில்லை அப்பா! இங்கு ஒருவன், யானே சித்தன் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றான், அப்பா! அத்தனையும் பொய்களப்பா!

அடியவர்: அய்யா! என் மகனுடைய திருமணம்.......

குருநாதர்: வசியங்கள் செய்து பாபத்தை ஏற்றுக்கொண்டான், அதனுடைய பலன்கள்தான், திருமணம் தடை படுகிறது. இதையும் யான் தான் சரி செய்ய வேண்டும். பொறுத்திருக்க!

அடியவர்: அய்யா! அது பல வருடங்களுக்கு முன் நடந்தது.

குருநாதர்: அப்பா! முன்பெல்லாம் குழந்தை பிறந்தவுடன் அதற்கு, கழுதைப்பால் கொடுப்பார்கள். அதனுடைய வீரியம் பல நாட்களுக்கு இருக்கும். அது போல் தான் இது.

அடியவர்: அதற்குப்பின் எவ்வளவு கோயில்களுக்கு சென்றிருக்கிறேன்! எவ்வளவு பூசைகள் செய்து பிரார்த்தனைகள் செய்திருக்கிறேன்.......

குருநாதர்: அப்பனே! இதுதான் சுயநலம் என்பது. சுயநலம் இல்லாமல் வாழ வேண்டும் அப்பனே! அப்படியானால், நீ கடமைக்காகத்தான் வாழ்கின்றாயா, அப்பனே! அதனால் அப்பனே! பணத்தை பெற்றுக்கொள் அப்பனே! அப்பனே! தானமும், தர்மமும், புண்ணியமும் மெதுவாகத்தான் வந்து சேரும் அப்பனே! அப்பனே! ஆனாலும் கேட்பீர்கள் நீங்கள், பாபம் என்பது! இதை விட மெதுவாகத்தான் வந்து சேரும்! 

அடியவர்: அப்போ பாபத்திலிருந்து தப்பிப்பதற்கு, யாங்கள் என்ன செய்ய வேண்டும்?

குருநாதர்: அப்பனே! எதுவும் செய்ய வேண்டாம்! அமைதியாக உங்கள் வேலையை செய்யுங்கள். யாங்கள் வந்து காத்திடுவோம். பாபம், புண்ணியம், இன்னும் எவைஎவையோ சித்தர்களுக்குத் தெரியும். சித்தனை சாதாரணமாக நினைத்து விட்டார்கள் அப்பா! சித்தனை வைத்து எதை எதையோ செய்யலாம் என்று மனிதர்கள் நினைத்து விட்டார்கள் அப்பா! அப்பனே! முதியவனைக் கூட இளையவனாக்க முடியும், இளையவனை கூட முதியவனாக்க முடியும். உடலில் உயிர் எங்கு உள்ளது என்பது கூட ஒருவனுக்கு ஒருவன் வித்தியாசப்படும். நிச்சயம் புருவ மத்தியில் வைத்துவிட்டால் நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்குமப்பா. ஆனாலும், ஒவ்வொருவனுக்கு ஒவ்வொரு இடத்தில், ஒருவனுக்கு முதுகில், ஒருவனுக்கு வயிற்றில், விரலில் என பல இடங்களில் இருக்கிறதப்பா. அதனால், ஒன்றும் செய்ய முடியாதப்பா! ஒன்று அமைதியாக இருந்து தியானங்கள் செய்ய வேண்டும், இல்லையேல், யாங்கள் தான் மாற்ற வேண்டும். அதை யாங்கள் மாற்றுவதற்கு, நீங்கள் கடமையை செய்ய வேண்டும்! அவ்வளவுதான், ஆசிகள், ஆசிகள்!

அடியவர்: அய்யனே! மிகுந்த நாட்களாக சிரமப்படுகிறேன்! காலையில் கண் விழிக்கும் முன், ஏதோ ஒரு தீய சக்தி வந்து உடலில் உள்ள அத்தனை சக்தியையும் பிடுங்கி கொண்டு செல்வது போல் நிகழ்கிறது. இதை தடுப்பதற்கு என்ன செய்ய?

குருநாதர்: ஏற்கனவே செப்பிவிட்டேன். அதை செய்து வா, அப்பனே! அது மட்டுமல்லாமல், இனிமேல் உறங்குவதற்கு முன்பாகவே பச்சை கற்பூரத்தையும், பின் ஏதாவது ஒரு ஆலயத்திலிருந்து குங்குமத்தையும், துளசி இலையையும், வில்வத்தையும் எடுத்து வந்து, நல் முறையாகவே, நசுக்கி உடம்பில் தேய்த்து, உறங்கி, பின் மறுநாளே! சரியான மூலிகைகள் வைத்து நீராட, சிறிது சிறிதாக போகுமப்பா, அப்பனே. இதை ஒருமுறை கடை பிடித்தால் நிச்சயம் பயன் தராது அப்பனே, தொடர்ந்து செய்துவா அப்பனே! 

அடியவர்: அடுத்த நாள் நீராடும் பொழுது, என்ன மூலிகைகள் உபயோகிக்க வேண்டும்? 

குருநாதர்: அப்பனே! கடலில் நீராடுவதே போதுமானதப்பா! பல புண்ணிய நதிகளில் நீராடுவது போதுமானதப்பா! அனைத்தும் நீங்குமப்பா! நீ எங்கப்பா செல்லப் போகின்றாய்!

அடியவர்: அய்யா! கோவிலுக்கு சென்றால் இறைவன் சன்னதி முன் நிற்கும் பொழுது, ரொம்ப கொட்டாவி வருகின்றது! இது எதனால்?

குருநாதர்: தீய சக்தியின் பாதிப்பு இருக்கும் பொழுது அப்படித்தான் இருக்கும். இதை கூட யாங்கள் தான் சரி செய்ய வேண்டும்! அப்பனே! நிச்சயம் உன்னை கம்பெடுத்துதான் அடிக்க வேண்டும்! அப்பனே, இதுவும் ஒரு தீய சக்தி அப்பா! நீ கொடுத்த காசுகளில், யாருக்காவது உணவை வாங்கி கொடுத்திருந்தால் கூட, புண்ணியமாகியிருக்கும் என்பேன். போய் போய் பின் பாபத்தை செய்பவனுக்கு அந்த காசுகளை கொண்டு கொடுத்தாய் அல்லவா, அவன் செய்த பாபம் உன்னை வந்து அடைந்துவிட்டது. இதை யான்தான் சரி செய்யவேண்டும். பொறுத்திரு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!