​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 2 November 2024

சித்தன் அருள் - 1721 - அகத்தியப்பெருமானுடன் கலந்துரையாடல்-7!


ஒரு அடியவர் வந்து அமர்ந்தார், அவர் கேள்வி கேட்கும் முன்னரே,

குருநாதர்: அப்பனே! நீ என் அருகில் இருக்கின்றாய்! ஆதலால், எதுவும் கேட்டுவிடாதே. உன் அப்பனுக்கு, தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும், எப்பொழுது செய்ய வேண்டும் என்று எமக்கு தெரியும். ஆகவே, பொறுத்திரு!

அடியவர்: என் பக்கத்திலிருந்து, நான் ஏதேனும் திருத்திக் கொள்ள வேண்டுமா?

குருநாதர்: நான் பக்கத்திலேயே இருக்கின்றேன்! ஆகவே, ஏதேனும் தவறு செய்தால், யானே தலையில் குட்டுவேன்!

அடியவர்: இன்னும் ஒரு விஷயம் குருநாதா! மனிதர்கள், நான் அவருடைய சிஷ்யன், அவருடைய தம்பி, அவருடைய எல்லாம் என்றெல்லாம் சொல்லிவிட்டு.....

குருநாதர்: அப்பனே! யான் சொல்லவில்லையே அது போல!

அடியவர்: இல்லை, நீங்கள் சொல்லவில்லை ஆனால் அப்படி கூறிக்கொண்டு மனிதர்கள், இந்த காலத்தில், அதர்வண வேதம் .............

குருநாதர்: அப்படி சொன்னாலும், யான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை அப்பனே! அப்பனே! பின்னர் மண்ணை மெல்லுவது போலத்தான் அப்பனே!

அடியவர்: நான் கேட்க வருவது ஒரே ஒரு சின்ன விஷயம் தான். நீங்கள் ஒரு வாக்கு தாருங்கள். எப்படி என்றால், "என் பெயரை சொல்லி யாரேனும் அதர்வணமோ, வசியமோ, இல்லை என்றால் காசு பண்ணுவதோ, அந்த மாதிரி செய்தால் பலிக்காமல் போகட்டும் என்று".........

குருநாதர்: அப்பனே! எதை என்று அறிய அறிய! முதலிலேயே யான் சொல்லிவிட்டேன், அப்பனே!

அடியவர்: என்ன சொன்னீங்க?

குருநாதர்: கடைசி முறையாக யான் எச்சரிக்கிறேன் என்றேன்!

அடியவர்: இந்த எச்சரிக்கை எல்லாம் போதாது. அவர்கள் செய்கிற எதுவுமே பலிக்காமல் போக வேண்டும்! அந்த வாக்கை கொடுங்கள்!

குருநாதர்: அப்பனே! இதற்கும் சரியான வழியிலேயே, பலிக்காது என்பேன் அப்பனே! நிச்சயம் அப்பனே! தன்னைத்தானே அவன் அழித்துக் கொள்கின்றான் என்பேன் அப்பனே!

அடியவர்: அதில் வரும் பணத்தை வைத்துக் கொண்டு, உங்கள் பெயரில் தானே அன்னதானம் செய்து கொண்டு இருக்கின்றான், அவன்!

குருநாதர்: இப்பொழுது தான் சொன்னேன், அனைத்தும் விரயம் என்று!

அடியவர்: நான் இதை ஏன் கேட்கிறேன் என்றால், இங்கிருந்து இன்னொரு கேள்விக்காக வருகின்றேன். அதை புரிந்து கொள்ளுங்கள். ஒரு தவறு செய்தவன், தவறு செய்த பின், உங்கள் பெயரில் ஒரு நல்லது செய்தால், அவன் செய்த தவறு இல்லாமல் ஆகிவிடுமா?

குருநாதர்: அப்பனே! இது நியாயமா? தர்மமா? அப்பனே! எவ்வாறப்ப? எப்பொழுதுமே, இதைத்தான் நான் சொல்வேன் அப்பனே! ஒரு தாயானவள், தன் பிள்ளை விளையாடும் பொழுது, நிச்சயமாக சந்தோஷமடைவாள். மீண்டும் ஒரு தவறு செய்தாலும் சந்தோஷமடைந்து, கடைசியில் விட்டுவிடுவாள். ஆகவே சிந்தித்துக் கொள் அப்பனே, புத்திகள் அதற்காகத்தான் கொடுத்திருக்கிறான், இறைவன். மேலும் மேலும் தவறுகள் செய்து போகும் பொழுது, ஒருநாள் அவனும் விழுந்து விடுவான், அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் விழுந்து விடுவார்கள். பின்னர் அப்பனே! சந்ததிகள் பெருகாதப்பா! இதனால் அப்பனே! யார் ஒருவன், மனிதன், மூளையை கசக்கி, நன்றாக செயல் படுகின்றானோ, அவன் உத்தமன். அவன் நீடூழி வாழ்வான், அவன் குடும்பமும் நீடூழி வாழும் அப்பனே!

அடியவர்: அதெல்லாம் சரிதான்! என் கேள்வி வேறு ஒரு விதமாக போன கேள்வி அது! இப்படிப்பட்ட ஒரு மனிதன் கடந்த ஐந்து வருடமா அரசியல்வாதியாக இருந்து கொண்டு அத்தனை கோவில் சொத்தையும் கொள்ளை அடித்து, அத்தனை தப்பையும் பண்ணிவிட்டு, எல்லா மாதமும் கட்டுக்கட்டி சபரிமலைக்குப்போய் ஐயப்பனிடம் கொடுத்துவிட்டு வந்தாகிவிட்டால், அவன் பண்ணிய தவறுகள் காணாமல் போய்விடுகிறது.

குருநாதர்: அப்பனே! கொள்ளை அடித்து வைத்தாலும், அது எங்கு இருக்கின்றது என்று தெரியுமா? அப்பனே!

அடியவர்: மேலும் மேலும் வளர்ந்துண்டேதான் இருக்கிறான் அவன்.

குருநாதர்: அப்பனே! தர்மம் தலை தாழ்ந்து நிற்குமடா!

அடியவர்: இவனை பார்த்து படிக்கிற மனிதர்கள், நன்றாக வளர வேண்டிய மனிதர்கள் தவறான விஷயங்களை தான் கற்றுக் கொள்கிறார்களே தவிர நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வதில்லை. 

குருநாதர்: அப்பனே! எவன் ஒருவன் மூளையை கசக்கி, தவறு செய்கிறானோ, அவனவன் செய்கிற தவறு, அவன் அவனையே கொல்லும் என்பேன். அதனால் தான், பாபத்திற்கான தண்டனை கிடைக்க தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் உண்டு அப்பா! முன் ஜென்மமதில் புண்ணியம் செய்தான் அதனால் இவ் ஜென்மத்தில் நன்றாக வாழ்கிறான் என்று சொல்லவில்லை. ஆனால், இதற்கும் சில வழிகள், ரகசியங்கள் உண்டு என்பேன் அப்பனே! கொள்ளையடித்து சொத்து சேர்த்தாலும், அவன் கையிலா இருக்கின்றது, சிந்தித்துக் கொள் அப்பனே! அதை இறைவனுக்காகத்தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றான் என்று. பைத்தியக்காரன் என்று. அதை ஒருநாள், இறைவன் எடுத்துக் கொள்வான் அப்பனே! எங்கு போகப் போகிறது அப்பனே! இன்னும் புரியுமப்பா! கலியுகத்தில், போகப்போக!

அடியவர்: நான் கேட்க வந்தது அது மட்டுமல்ல, உங்கள் குழந்தைகளை, உங்கள் பக்தர்களை உருவாக்கி இந்த உலகத்தில் விட்டு விட்டு........

குருநாதர்: என் குழந்தைகள் என்று கூறினாய் அல்லவா! அவர்களுக்கு, எவ் திருத்தலங்களுக்கு செல்லவேண்டும் என்று செப்பி, செப்பி, நன்மைகளை செய்ய வைத்து உயர்ந்தவர்கள் ஆக்குவேன் அப்பனே! ஒரு சித்தன் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியுமப்பா! போகப்போக, உனக்கே அது புரியுமப்பா! பின் சித்தன் வாக்கு பைத்தியம் வாக்கு என்று கூறலாம் அப்பனே! பகல் இரவு, இன்பம் துன்பம் போல ஒரு வேளையில் தாழ்ந்து பின் உயருமப்பா! யார் ஒருவன், நீதி நேர்மையோடு வாழ்கிறானோ, அவன் பக்கத்தில் இறைவன் இருப்பானப்பா!  

அடியவர்: அய்யனே! நான் கேட்க வந்ததை மீண்டும் கேட்கட்டுமா? உங்கள் குழந்தைகளை படைத்து இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, இங்கு நடப்பவைகளை கண்டு படித்து வளருங்கள் என்று கூறி, நியாயம், நீதி, நேர்மை என்றெல்லாம் கூறுகிறீர்களே, அவர்களுக்கு அமைத்துக் கொடுத்திருக்கிற சூழ்நிலை சரியாக இல்லையே. இந்த மாதிரி அரசியல்வாதி தானே வகுப்பெடுக்கிறான்!

குருநாதர்: அப்பனே! நிச்சயம் அவன் வகுப்புக்கள் எடுத்தாலும், மனிதனுக்கு புத்தி இருக்கின்றதல்லவா? அப்பனே! ஏன் அதை பயன்படுத்தவில்லை அப்பனே! அதாவது, யார் ஒருவன் சரியாக அறிவை பயன் படுத்துகின்றானோ, அவன் உயருகின்றான். சரியாக புத்தியை பயன்படுத்தாதவன், தாழ்ந்தவனாகின்றான். அப்பனே! அவ் அறிவுக்கான தண்டனை நிச்சயம் ஒரு நாள் உண்டு என்பேன் அப்பனே! அனைத்தையும் சேகரித்தபின் தண்டனை எதற்கு என்று! அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு, அதை எல்லாம் கூறினால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் அப்பா. பொறுத்திரு! மனிதன் எப்பொழுது தன் அறிவை சரியாக உபயோகிக்கவில்லையோ, அப்பொழுது கலியுகம் முற்றிற்று என்று பொருள். ஆகவே இறைவனுக்கு எல்லாம் தெரியுமப்பா! அவனே அமைதியாக இருக்கிறான் என்றால், நீ உன் வேலையை பார்த்து கொண்டு அமைதியாக இரு.

அடியவர்: அதுவும் ஒரு விதத்தில் சரிதான், ஆனால் என்ன செய்ய! கண் முன்னாடி அநியாயங்கள் நடக்கிற பொழுது சும்மா இருக்க முடியவில்லை. எதுக்கும், இறைவனிடம் கூறி, அவர் ஜாதகத்தை நல்ல ஜோசியனிடம் காட்ட சொல்லுங்கள். அவருக்கே நேரம் சரி இல்லை போல!

குருநாதர்: இறைவனுக்கு ஜாதகம் என்ற ஒன்றே இல்லையப்பா!

அடியவர்: ஏதாவது ஒன்று இருக்குமே, அதை கொடுத்து பார்க்கலாமே! 

குருநாதர்: அப்பனே! அனைத்திலும் உணர்ந்தவன் இறைவனப்பா! அதில் ஒரு தூசி கூட மனிதனுக்கு தெரியாதப்பா!

அடியவர்: அவர் எதிர்பார்த்தபடி விஷயங்கள் முன்னுக்கு போக மாட்டேன் என்கிறதே!

குருநாதர்: அனைத்தும் இறைவன்தான் செய்கின்றான் என்பேன் அப்பனே! இறைவன் இயக்கம் தான் அப்பனே. நிச்சயம் ஒரு நாள் நிறுத்தி விட்டால், மனிதன் என்ன செய்வானப்பா! எங்கே அப்பா, நிலங்கள், எங்கே அப்பா காசுகள், எங்கே அப்பா சொந்தங்கள், இதை உணர்ந்து கொள். அவரவருக்கு விதிக்கப்பட்டதே சரியானதே! அப்பனே, நிச்சயம், தர்மம் தாழ்கின்ற பொழுது, இறைவன், நேரடியாக மனிதனுக்கு காட்சிகள் அளிப்பான் அப்பா! ஆதலால், இறைவன் வரத்தான் போகின்றான், அதற்குள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், வளர்த்துக் கொள்ளுங்கள் என்று யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!  இதைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றாய் அன்பு மகனே!

(இத்துடன் அகத்தியப்பெருமானுடனான கலந்துரையாடல் நிறைவு பெற்றது!)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete