​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 25 November 2024

சித்தன் அருள் - 1737 - அவதூதருடன் சில அனுபவங்கள் - 1!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

""இவர்" என்கிற தலைப்பில் சித்த மார்கத்தில் அடியேன் சந்தித்த சில பெரியவர்களை பற்றி முன்னரே தெரிவித்திருந்தேன்! அதில் இன்னும் இருவரை பற்றி தொகுக்க வேண்டியுள்ளது. அவர்கள் அனைவரும், மிக மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள்.

இவ்வுலகில், இப்படியும் சிறந்த மனிதர்கள் இருக்கிறார்களா! என்கிற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழலாம். அப்படிப்பட்டவர்களை "அவதூதர்கள்" என்பார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் தெரியாத விஷயங்களே கிடையாது. இவர்கள் ரிஷிகள், மகான்கள், சித்தர்களுடன் கூட இருந்து லோக ஷேமத்திற்காக வேலை பார்ப்பார்கள். எவ் உருவமும், எந்த மொழியும், மனித வாழ்க்கைக்கு உட்பட்ட எந்த விஷயமும், இவர்களால் செய்ய முடியும். பேசுபவர் எந்த மொழியில் பேசினாலும், இவர்களால் அந்த மொழியில் தெளிவாக பேசி பதிலுரைக்க முடியும். 

ஆனால், இவர்கள் மனிதர் முன் தோன்றி கலந்துரையாடல் செய்வது, ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரம். மிகவும் ஆச்சரியப்படுகிற நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும். பேசுகிறவரிடம், நிறைய தகவல்களை, அவருக்கு மட்டும் புரிகிற விதத்தில், பகிர்ந்து கொள்வார்கள்.

அப்படிப்பட்ட ஒரு அரிய முஹூர்த்தம், அடியேனது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் கிடைத்தது. நண்பரை, ஏற்கெனவே சித்தன் அருளில் "யோகா மாஸ்டர்" என அறிமுகப்படுத்தியுள்ளேன். அவர் ஒரு சிறந்த யோகா பயிற்றுவிப்பாளர். மிக அமைதியானவர். எங்கு சென்றாலும் தன் இருப்பை வெளிக்காட்டி கொள்ளமாட்டார். நடந்த விஷயங்களுக்கு வருவோம்.

அன்று மாலை 4 மணிக்கு "ஆன்லைன்" இல் வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பு 6 மணிக்கு தான் என்பதால், அபூர்வமாக ஒரு இரண்டு மணிநேர இடைவெளி கிடைத்தது நண்பருக்கு. ஏதேனும் ஒரு புத்தகம் வாசித்து "பிலாசபி" ஆராய்ச்சியை செய்யலாம் என்று நினைக்கும் பொழுது, அவரது செல் அழைத்தது. யாரது என்று எட்டிப் பார்த்த பொழுது எண் மட்டும், பெயர் இல்லை. அவருக்கு பரிச்சயம் இல்லாத தொடர்பானதால், எடுக்கலாமா வேண்டாமா என்ற கேள்வியில் சில வினாடிகள் செல்ல, யாரோ தலைக்குள் "எடு" என்று கூறுவது போல் தோன்ற செல்லை எடுத்து "ஹலோ" என்றார். மறு முனையிலிருந்து பேசியது ஒரு பெண்ணின் குரல்.

அவர் பேசியது ஹிந்தி போல் இருந்தாலும் அதில் வேறு மொழியின் கலப்பு இருந்தது. இவர் உடன் தனக்கு தெரிந்த மலையாள மொழியில், நீங்கள் யார், என்ன பேசுகிறீர்கள் என தெரியவில்லை, உங்களுக்கு மலையாளம் மொழி தெரியுமா? அதில் கூற வேண்டியதை, பேசுங்கள் என்றார்.

மறுமுனையிலிருந்து ஒரு நொடியில் "ஓ! இதுதான் மலையாள மொழியா! அதிலேயே பேசுகிறேன்!" எனக்கூறி சரளமாக திருவனந்தபுரம் மக்கள் பேசும் மலையாள மொழி வாடையில் பேச தொடங்கினார். இப்படி ஒரு நொடியில் மொழி மாற்றி, சரளமாக மலையாள மொழியில், அதுவும், இந்த ஊர் உச்சரிப்பில் பேசியதை கண்டதும், சற்று அதிர்ந்து போன இவர், இது ஏதேனும் ஏமாற்றுகிற பேர்வழிகளின் அழைப்பாக இருக்கும் என உணர்ந்து, "உங்களுக்கு என்ன வேண்டும்! எனக்கு படிப்பதற்காக அமர வேண்டும்! இப்பொழுது நேரமில்லை!" என்றார்.

இவருக்கு நேரம் காலம் இன்றி பல வேளைகளில் அழைப்பு வரும். யாரென்று பார்த்தால், அத்தனை பேரும் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாக இருப்பர். தனக்கு மூச்சு பயிற்சி எடுக்க முடியுமா? இன்னென்ன பிரச்சினைகள் உள்ளது! எங்கு வந்தால் உங்களை சந்திக்கலாம்? என்ற கேள்விகளாக இருக்கும். எப்படி இவர்களுக்கு இவரின் தொடர்பு எண் கிடைக்கிறது என்பது, இன்று வரை ஒரு புரியாத புதிர்!

பேசிய பெண்மணி "நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? " என்றார்.

"யோகா பயிற்றுவிக்கிறேன்!" என்றார்.

"எனக்கு உங்களைத்தான் சந்திக்க வேண்டும்! இங்கு வர முடியுமா?" என்றார்.

"நீங்க யாருங்க? எங்கிருக்கீங்க? எங்கிருந்து வந்திருக்கீங்க, உங்களுக்கு என்ன தேவை?" என்றார்.

அடுத்த நிமிடம் அவர் கூறிய பதில் நண்பரை அதிரச் செய்தது.

"நான் யார்? எங்கிருந்து வந்தேன், என்ன தேவை என்பதை நீங்கள் நேரடியாக வரும் பொழுது கூறுகிறேன். நான் இப்பொழுது நீங்கள் தினமும் காப்பி சாப்பிடும் "கும்பகோணம் காப்பி" கடை பக்கத்தில் நிற்கிறேன்!" என்றார்.

இந்த பதில் மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. மௌனமாக இருந்தார். அவர் தினமும் காப்பி சாப்பிடுகிற கடை என்னை போன்ற நண்பர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது! அதெப்படி இவருக்கு தெரிந்தது? யார் சொல்லியிருப்பார்கள்? என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது,

" நீங்க தினமும் இங்க தானே காப்பி சாப்பிடுவீங்க. அல்லது இங்கிருந்து நேரே செல்லும் ரோடில் இடது பக்கம் திரும்பி சென்றால் அங்கு வலது பக்கம் திரும்பும் ஒரு ரோடின் வளைவில் இருக்கும் "கணேஷ் காப்பி" கடையில் சில வேளை காப்பி அருந்துவீர்கள். இன்று எங்கு வர வசதி என்று கூறினால், அங்கு நிற்கிறேன்" என்றார்.   

இவருடன் பேசுவது மேலும் மேலும் ஆச்சரியத்தை ஏற்றிக் கொண்டே சென்றதால், இவரை போய் பார்த்தால் என்ன என்ற உணர்வு வரத்தொடங்கியது.

"சரி! வருகிறேன்! ஆனால் நான் வந்து சேர அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். அத்தனை தூரத்தில் என் வீடு உள்ளது. எனவே, நீங்கள் விரும்பினால் ஒன்று கூறுகிறேன். நீங்கள் நிற்கும் இடத்திலிருந்து ஐந்து நிமிட தூரத்தில் தான் பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உள்ளே சென்று ஸ்வாமியை தரிசனம் செய்யலாம்! மேலும் அங்குதான் அகத்திய முனிவரின் சமாதியும் உள்ளது. அவரையும் நீங்கள் தரிசிக்கலாம்! நான் ஒரு 45 நிமிடத்தில் அங்கு வந்து உங்களை சந்திக்கிறேன்!" என்றார்.

"சரி! அப்படியே ஆகட்டும்!" என கூறி அந்த பெண்மணி செல் போனை துண்டித்தார். உடனேயே அந்த எண்ணை சேமித்து வைக்க தேடிய பொழுது அந்த எண் இவர் செல்லில் இருந்து அழிந்து போயிருந்தது. பதினைந்து நிமிடத்திற்கு மேலும் பேசிய அந்த தொடர்பை பற்றிய எந்தவித தடயமும் இவர் போனில் இல்லாமல் போனது.

அதிர்ச்சியில் அமைதியான இவர் சற்று யோசனைக்குப் பின் "சரி போய்தான் பார்ப்போமே. என்ன! ஒரு பாதுகாப்புடன் போக வேண்டும், என்ன நடக்கும் என்று தெரியாது" என உணர்ந்து, தினமும் வகுப்பு எடுக்கும் முன் போட்டுக் கொள்ளும் சக்கர வளயத்தையும் போட்டுக் கொண்டு, தலை உச்சியில் இறைவனுக்கு சாற்றிய வாசனாதி திரவியத்தை மறைத்து பூசிக்கொண்டு, புறப்பட்டார்,

அவர் வாழ்க்கையில் முதல் முறையாக அதிரப்போகும் நிகழ்ச்சிகளை சந்திக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  3. அகத்தீஸ்வர பெருமானே போற்றி

    ReplyDelete
  4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரை தாய் துணை 🙏🙏🙏
    ஓம் கந்தன் கருணை
    ஓம் அம்மை அப்பன் திருவடிகள் போற்றி துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. Can I get yoga master contact no

    ReplyDelete
  6. Can I get yoga master contact no ayya

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete