அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
கலிகாலத்திலே, பூசைகள் கடினம் என்றுதான், தர்மத்தை உபதேசம் செய்கிறோம். இயன்றவர்கள், இயன்றவருக்கு, தக்கதொரு தர்மத்தை இயன்ற அளவுக்கு செய்து கொண்டே வரவேண்டும். ஒருநாள் போய்விட்டால், வாழ்க்கையில் அது நாள் அல்ல. வெட்டும் வாள். எனவே, ஒவ்வொரு தினமும் கழியும் போதும், அன்றைய தினத்தில், நாம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம்? எத்தனை மனிதனுக்கு நம்மால் பயன் ஏற்பட்டது? எத்தனை மனிதனுக்கு நாம் ஆறுதலாயிருந்தோம்? எத்தனை மனிதனுக்கு நாம், உடலால் உபகாரம் செய்தோம்? எத்தனை பேருக்கு வார்த்தைகளால், எண்ணங்களால், பொருட்களால், மருத்துவ உதவி செய்தோம்? எத்தனை பேருக்கு பசி தீர்த்து உதவினோம்? கல்வி கற்க உதவினோம்? என்றெல்லாம் சிந்தித்து, சிந்தித்து, அந்த எண்ணிக்கையை அதிகப்படுத்த, அதிகப்படுத்த, கூடவே, இறையருளும், எமது ஆசியும் தொடரும்.