​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 1 October 2026

சித்தன் அருள் - 2329 - சித்தர் புலம்பல்கள் - 8 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
 
  1. யாகத்தில் ஒருவன் ஆத்மார்த்தமாக கலந்து கொண்டால், கர்மா குறையும், அவனுக்கு எதிர்காலத்தில் இறை தரிசனம் கிட்டும்.
  2. யாகம் முடித்த 15 தினங்களுக்குள் ஒருவன் பிறருக்கு அன்னசேவையும், மருத்துவ உதவிகளையும் செய்ய வேண்டும்.
  3. அது வேண்டும், இது வேண்டும் என்றில்லாமல், இறைவா நீ வேண்டுமென்றிரு.
  4. கர்மத்தால் வருகின்ற துன்பம், தர்மத்தால் தீர வழியுண்டு.
  5. தாமரையை மாலை கட்டிப்போடுவது மிக மிக சிறப்பு.
  6. தாமரைத்தேனை கலைவாணிக்கு அபிஷேகம் செய்திட, முக்காலமும் உணரும் அருள் கிட்டும்.
  7. சித்தர்கள் கூறும் வழிமுறைகளை நூற்றுக்கு நூறு எவன் ஒருவன் கடைபிடிக்கிறானோ, அவனே சிஷ்யன் என்ற அன்புக்கு பாத்திரமாவான்.
  8. கற்களும், முற்களும், ஆணி துண்டுகளும் நிறைந்தது சித்த மார்க பாதை. அது மூர்க்கர்களுக்கும், மூடர்களுக்குமான வழி அல்ல.
  9. ஆலயத்தில், கூட்டத்தில் இடிபட்டு, வேதனைப்பட்டு தரிசனம் செய்வது கூட, சில கர்மக் கழிவுகளை ஏற்படுத்தும்.
  10. இறைவன் ஒரு ஆத்மாவை தேர்ந்தெடுத்து, சித்தர்களுக்கு உத்தரவிடும் பொழுது, ஒருவனுக்கு/ஒருவளுக்கு சித்தர்கள் வழி காட்டுதல் கிடைக்கும்.
  11. எவன் ஒருவன் ஒரு பிறவியில் அதிக அன்ன சேவை செய்திருக்கிறானோ, அதிக அளவு பசுக்களை காக்கும் முயற்சியில் இருந்திருக்கிறானோ, உயிர் கொலை புரியமாட்டேன் என்று இருக்கிறானோ அவர்களுக்கெல்லாம் சித்தர்களின் கருணையும், கடாக்ஷமும் இறை அருளாலோ அல்லது யாங்கள் விரும்பியோ செய்திடுவோம்.
  12. பூமி ஒரு சிறை கூடம். ஒரு கெட்ட கர்மாவும் இல்லாத நிலை உருவாகும் பொழுது பூமி அழிக்கப் படலாம்.
  13. சரியான உச்சரிப்புடன் தமிழை பேசினாலே அது சுவாச பயிற்சிக்கு சமம்.
  14. உள்நோக்கமும் தீய எண்ணங்களும் இல்லாத அனைத்து செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும்.
  15. இறைவனை உள்ளத்தில் தரித்தால், ஒருவேளை சித்தர்கள் சிக்கலாம், தரிசிக்கலாம்.
  16. மனிதன் தானம், தர்மம், பிறருக்கு உதவி செய்து பாபத்தை ஒரு பிறவியிலேயே போக்கி கொள்ளலாம். விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால், விலங்கு தேகத்தையே பெற வேண்டி உள்ளது. அதனால் தான் மனிதப்பிறவி உயர்ந்தது என்கிறார்கள் சித்தர்கள்.
  17. இருப்பதில் கொடு, இது சாதாரண நிலை. இருப்பதையே கொடு, இது உயர்ந்த நிலை.
  18. ஒரு மனிதன் கொடுத்துக் கொண்டே இருந்தால், அதனால் சேர்த்துக்கொள்ளும் புண்ணியத்தை, அவனின் ஆகாத விதி காலத்தில் எடுத்து பயன்படுத்துவார்கள் சித்தர்கள்.
  19. சிவாய நம, நம சிவாய, நமோ நாராயணாய எனப்படும் மந்திர சொற்கள் அகத்திலிருந்து சொல்லச் சொல்ல, சொல் அகமே, ஜோதி அகமாகி, ஜோதி விளக்காக எரியுமப்பா.
  20. எவன் ஒருவன் பிறர் நித்திரையை கலைக்கும் வண்ணம், குலைக்கும் வண்ணம் செயல்பட்டானோ, அவனுக்கு பிறவிதோறும் நித்திரை சுகம் கிட்டாது.
  21. மெய் ஞான தேடல் துவங்கும் பொழுது, ஒரு மனிதன் பாபம் செய்ய அஞ்சுவான்.
  22. நான், எனது என்ற உணர்விருக்கும் வரை தவறுகள் நடந்துகொண்டே இருக்கும்.
  23. பொய் அறிவு விலக, மெய் அறிவு துலங்கும்.
  24. வினை தோன்றும் இடத்தில், வேல் தோன்றும், துயர் தோன்றும் இடத்தில் முருகர் அருள் தோன்றும்.
  25. அம்பலத்தில் ஆடுபவனுக்கு, அமர இடம் கொடு உன் உள்ளத்தில்.
  26. யாரெல்லாம் பொறுப்பில்லாமல் பேசி ஒருவனை ஏளனப்படுத்துகிறார்களோ, அந்த ஒருவனின் பாபம் அவர்களுக்கு செல்வதோடு, அவர்கள் புண்ணியம் இவனுக்கு வந்து சேரும்.
  27. ஜீவ நாடி மௌனம் தெய்வீக சூட்ச்சுமம்.
  28. ஒரு விஷயத்தை நடத்தாமல் தள்ளி வைப்பதும், நடவாது எனக்கூறி நடத்தி கொடுப்பதும் சித்தன் தான்.
  29. மொழி ஏதாயினும், அகரமே முதல் எழுத்து.
  30. குறுக்கு வழியிலே இறைவனை உணரும் ஒரு நிலை வாமாசாரம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. அருமை.. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete