வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கும், ஆண்கள் மனோ தைரியம் இல்லாதிருப்பதும் , ஒன்றை நினைத்து சதாசர்வ காலம் கவலைப்படுவதும், தைரியம் இல்லாமல் இருப்பது போன்றவை விலக, அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்று சப்த கன்னிமார்களுக்கு உயர்வான அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் நலம்.
- அறம், சத்தியம் விடாது கடைபிடித்தல் வேண்டும்.
- எக்காலமும், எக்காரணம் கொண்டும் இறை நம்பிக்கைக்கு எதிரான நம்பிக்கையை வளர்த்தல் கூடாது.
- அனைத்தும் இறையின் படைப்பு, அனைத்திற்கும் இறையே பொறுப்பு.
- எங்கெல்லாம் தர்மம் நடக்கிறதோ, யாருக்கெல்லாம் தர்மத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ, யாருக்கெல்லாம் எத்தனை துன்பத்திலும் தர்மத்தை விடக்கூடாது என்று எண்ணம் வருக்கிறதோ, சத்தியத்தை விடக்கூடாது என்ற நம்பிக்கை இருக்கிறதோ, அவனெல்லாம் அகத்தியரின் சிஷ்யர்கள். அதனையும் தாண்டி அகத்தியரின் சேய்களே!
- உடனடி லாபம், ஆதாயம் பெற தீய வழியில் செல்லக்கூடாது.
- நன்மையை கருதி கூறப்படும் சத்தியத்துக்கு மாறான விஷயங்கள், பாவமாக கருதப்படாது. அது சுயநல நன்மையாக இருக்கக்கூடாது, பொதுநல நன்மையாக இருக்க வேண்டும்.
- மனம் பக்குவம் அடைந்தபின், ஒரு கட்டத்தில் ஒன்றும் இல்லாத வெறுமை வரும். அதனுள் உள்ள ஒரு வெற்றிடம் தான் மகா சக்தி, பூரண சக்தி.
- இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை, தர்ம குணமும் பிறருக்கு உதவும் குணமும் இருந்துவிட்டால் போதும், அவன் இறையை தேட வேண்டியதில்லை, இறை இவனை தேடி வந்து விடும்.
- இறை அருள் இருப்பவனுக்குத்தான் பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் வரும்.
- எவன் ஒருவன் அதிக அளவு தர்மம் செய்கிறானோ, அவனிடம் இறையே கை ஏந்தும்.
- விதி மழையாய் பெய்யும் பொழுது, ஒருவன் நனையாமல் தன்னை காத்துக்கொள்ள சித்தர்கள் காட்டும் வழிபாடு முறைகள், குடையாக அமையும்.
- எல்லா மனிதரிடமும், நல்லன, நல்லன அல்லாதவை போன்ற குணங்கள் இருக்கின்றது. இருந்தாலும், பூர்வீக தோஷங்களை களைந்து, தன் முனைப்பில்லாமல் இறைவனை நோக்கி செல்ல கூறுகிறோம்.
- சித்தர் வாக்கை நாடியில் ஒதுகிறவனுக்கு பராக்கிரமமோ, ஞான நிலையோ, ஓதுவதால், வந்துவிடாது. எமது வாக்குகளை கேட்டு, 100% நடைமுறைப் படுத்துபவனுக்கு ஒரு வேளை சிறிது ஞானம் வரலாம்.
- தான் செய்கிற பூஜைக்கு யாரும் இடையூறு செய்யக்கூடாது என்று எதிர்பார்க்கின்ற ஒருவன் தான் செய்கிற பூஜையும், பிறருக்கு எந்த விதத்திலும் இடையூறாக இருக்க கூடாது, என கவனிக்க வேண்டும்.
- மனம் திடம் பெறத்தான் மந்திரம் உரைக்க சொல்கின்றோம். மனதின் திறம் உயர்த்துவதே மந்திரம் ஆகும்.
- மனதை ஒரு நிலை படுத்தி மந்திரம் உருவேற்றுவதே நலம்.
- அகமும், முகமும் மலர உள்ளே மந்திரம் உருவேற்றப்பட வேண்டும்.
- பரிகாரங்களை விட, மனம் ஒன்றிய பிரார்த்தனைகள் அதிகம் சக்தி வாய்ந்தவை.
- ஆத்மார்த்தமான பக்தி இருக்கும் இடத்தில், புற சடங்குகள் முக்கியமில்லை.
- ஒரு மனிதன் செல்ல வேண்டியது, மிருக-மனித-மாமனித-மா/மா மனித-கந்தர்வன்-தேவன்-மகான் என்ற நிலைகளே!
- மகான்களின் தொடர்பு உள்ளது என்பதால், ஒரு மனிதனுக்கு துன்பங்கள் வராது என்பதற்கில்லை.
- வடிவத்தில் மனதை லயிக்கவிட்டு, பிறகு வடிவமற்ற பூரணத்தை உணர்வதே மெய்ஞ்ஞானமாகும்.
- ஓர் ரூபம், ஓர் வடிவம், ஓர் நாமம் இல்லாதான் பரம்பொருள்.
- பரிபூரண சரணாகதியை, மனம், வாக்கு, காயத்தால் எவன் ஒருவன் பரம்பொருளிடம் சமர்ப்பிக்கிறானோ, அவனுக்கே சாயுச்சம், சாய்ரூபம், சாய்லோகம், சாமீபம் போன்ற நிலைகள் அமையும்.
- இப்பிறவிக்கு தாய் தந்தை தெரிந்திடினும், எப்பிறவிக்கும் தாய் தந்தை இறைவன் தான்.
- ஏமாற்றுபவன் கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்கிறான். இழப்பவன் சுமந்து வந்த கெட்ட கர்மாவை இழக்கிறான்.
- செல்வம் சென்று கொண்டே இருக்கவேண்டும், தான தர்மத்துக்கு.
- செல்வம் வாழ்வதற்கு மட்டுமல்ல, கர்மாவை அழிப்பதற்கும்தான் ஒருவனுக்கு அளிக்கப்படுகிறது. கர்மாவை மேலும் கூட்டிக்கொள்வதா, குறைத்துக் கொள்வதா என்பது அவனவன் தீர்மானம்.
- ஆத்மார்த்தமாக ஒன்றை செய்தால், அதன் தாத்பர்யம் நினைத்து செய்தவரை சென்றடையும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment