​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 1 December 2023

சித்தன் அருள் - 1523 - அன்புடன் அகத்தியர் - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 3


(அடியவர்கள் கவனத்திற்கு :- இந்த பதிவில் உள்ள வாக்குகளை நீங்கள் நாடி வாக்கு படித்த இடத்தில் இருந்து கேட்பதைப்போன்று கற்பனை செய்து உள்வாங்க நன்கு உண்மைகள் புரியும். இந்த வாக்கில் குருநாதர் இரு அடியவர்கள் இடையே ஒரு பணப்பரிவர்த்தனை செய்ய வைத்து அதன் மூலம் கர்மா எப்படி எல்லாம் மனிதனை ஆட்டுவிக்கின்றது என்று மிக எளிமையாக அனைவருக்கும் உரைத்தார்கள். வாருங்கள் அன்பு அடியவர்களே, கருணைக்கடல் குருநாதர் பொதிகை வேந்தரின் ஞான அமுத ரசம் அதனை மகிழ்ச்சியுடன் இனைந்து அருந்துவோம்…. பிறருக்கும்  ஞான அமுதம் அதனைப் பகிர்வோம்…)

குருநாதர்:- அப்பனே தானம் என்றால் என்ன?

அடியவர் 7:- எதையும் எதிர் பார்க்காமல் கொடுப்பது தானம்.

குருநாதர்:- இல்லை அப்பா. யாராவது ஒருத்தரைச் சொல்லச் சொல் அப்பனே.

அடியவர்:- தானம் என்பது ஒருவர் தேவை அறிந்து , அவர் கேட்காமல் நாமே கொடுப்பது.

அடியவர்:- நமது புண்ணிய பலன் அப்படியே இருக்கின்றது. அதனை அடுத்தவர்களுக்குக் கொடுப்பது

குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.

அடியவர் :- வலது கை கொடுப்பது , இடது கைக்குக் கூட தெரியக்கூடாது.

குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.

அடியவர்:- ஐயா கேட்கின்றார். தானம் என்றால் என்ன. சொல்லுங்கள்?

அடியவர் :- கேட்காமல் கொடுப்பது…

குருநாதர்:- அப்பனே எவருக்குமே தெரியாது என்பேன் அப்பனே. இருந்தாலும் கேள். யான் கடைசியில் சொல்லி விடுகிறேன்.

அடியவர்:- பொருள் இல்லாதவர்களுக்குக் கொடுக்கின்றோம். அது ஒரு தானம்.

குருநாதர்:- அப்பனே இறைவன் கொடுக்க மாட்டானா என்ன?  உயிரையே பிச்சையாக கொடுக்கின்றவனுக்கு,  பார்த்துக்கொள்ளத் தெரியாதா என்ன?

அடியவர்:- வேற யாராவது கேளுங்கள்?

அடியவர் :- பசிக்கு அன்னம் தருவது.

குருநாதர்:- அப்பனே படைத்தவனுக்கு தெரியும் அப்பனே.

அடியவர்:- நமக்கு அதிகமாக இருப்பதைக் கொடுப்பதே தானம்.

குருநாதர்:- அப்பனே என்ன படித்திருக்கின்றாய் அப்பனே?

அடியவர் :- 10th.

குருநாதர்:- அப்பனே எத்தனையோ பேர்கள் மேற்படிப்பிற்குச் செல்லாமல் இருக்கிறார்களே அவர்களுக்கு  உதவலாமே?  உன்னால் ஏன் உதவ முடியவில்லை? இதிலிருந்தே தெரிகிறதா அப்பனே? படைத்தவனுக்குத் தெரியும்.

( கருணைக்கடல் , குருநாதர் ஈசன் அகத்தில் வாழும் ஈசன் இதுவரை கலியுகம் அறியாத தானம் என்பதன் உண்மைப்பொருளை விளக்க ஆரம்பித்தார்கள். அடியவர்கள் இதனை மனதில் நன்கு உள் வாங்கவும்… படித்த உடன் உங்கள் மனம் கடும் ஆட்டம் காணுவதை உணருங்கள். )

குருநாதர்:- அப்பனே எனக்கு எதுவுமே தேவையில்லை. இறைவா!!!! என்று இறைவனிடத்தில் அனைத்தும் விட்டு வைத்தால் இறைவனே நிச்சயம் அனைத்தும் ஒருவனுக்குக் கொடுப்பான்.

இறைவா எந்தனுக்கு கொடுத்து விட்டாயே இப் பொருள் எல்லாம் மாயை, அனைவருக்கும் யான் கொடுத்து விடுகின்றேன் என்று நிச்சயம் எவனொருவன் கொடுத்துவிடுகின்றானோ அதுதான் அப்பா தானம். ஆனால் எவருமே செய்வதில்லை இப்படி.

அதனால்தான் பின் மனிதன் என்ன தானங்கள் , தர்மங்கள் செய்தாலும் கீழ் நோக்கியே போய்க் கொண்டிருக்கின்றான்.  அப்பனே இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

அப்பனே புரிகின்றதா? அப்பனே தானம், தர்மம் என்று.  அப்பனே ஆனாலும் அனைவருமே இப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பனே.  தானம் செய்கிறோம். தர்மம் செய்கின்றோம் என்று எல்லாம் அப்பனே. ஆனாலும் நிச்சயம் அப்பனே ஏராளமான  கதைகளும் உண்டு. அவற்றை எல்லாம் வரும் வாக்கில் சொல்கிறேன். அப்போது புரிந்து விடும் அப்பனே.

குருநாதர்:- அப்பனே தர்மம் என்ன செய்யும்?

அடியவர் 7:- தர்மம் தலை காக்கும்.

குருநாதர்:- அப்பனே கொடுத்தாய் அல்லவா? அதற்கு எடுத்துக்காட்டாக அனைவருக்கும் ஒரு பாடத்தை எடு.

( இந்த அடியவர் (7)  கையில் இருந்து cell phoneஐ ஒருவருக்குக் கொடுத்தார் முன்பு என்பதை நினைவில் கொள்க. இந்த அடியவர் மூலம் கருணைக்கடல் ஒரு மகத்தான பாடத்தை உலகோருக்கு எடுத்து உள்ளார். )

cell phone கொடுத்த அடியவர் 7:- தர்மம் செய்யும்போது கொடுத்துவிட்டு உடனே மறந்துவிடுங்கள்.  அதை யாரும் மனதில் வைத்து நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று குருநாதர் சொல்கின்றார்.

குருநாதர்:- அப்பனே இதற்கு யாராவது அப்பனே எதை என்று கூற இவனையே கேட்கலாம்.

( அங்கு உள்ள அனைவரையும் இந்த அடியவரிடம் எதிர் வாதாட அருளினார்கள் குருநாதர்)

அடியவர்-பித்தன்:- குருநாதர் அதுவா சொன்னார்கள்? அதைச் சொல்ல வில்லையே. குருநாதர் தானம் என்று என்ன சொல்கின்றார்? இங்கு இருக்கக் கூடிய பொருட்கள் அனைத்தும் மாயை. மாயை  எனக்கு எதுவுமே வேண்டாம். இறைவா!!!!!நீ ஒருவனே எனக்கு போதும் என்று இருப்பதை அனைத்தும் கொடுக்கின்றானோ அதுவே உண்மையான தானம்.

குருநாதர்:-  அப்பனே பித்தன் போல் சொல்கின்றானே அவனை வரச்சொல்.

( அடியவர் பித்தன் வந்து அமர்ந்தார் நாடியின் முன்னே. குருநாதர் அப்படி அழைத்ததால் இனி நாமும் அடியவர்-பித்தன் என்றே இவரை இங்கு குறிப்பிடுகின்றோம்.  இந்த அடியவர் ஞானம் உயர்ந்த நிலை என்று மனதில் இருத்துக. இதே அடியவர் முன்பு வெளிவந்த மதுரை வாக்கில் பல இடங்களில் பல நல்ல தகவல்களை மக்களுக்குப் புரியும் வகையில் அளித்து இருந்தார் என்பதை அடியவர்கள் இங்கு அறியத் தருகின்றோம். )

அடியவர்-பித்தன் :- குருநாதா!!!!

குருநாதர்:- அப்பனே ஒரு 10 ரூபாயைக் கொடு என்று அவனைக் கேள்?

அடியவர் 7:- 10 ரூபாய் கொடுங்கள்.

அடியவர்-பித்தன்:- ( கேட்ட 10 ரூபாய்க்கு மேல் தன் கையில் உள்ள பணம் அனைத்தையும் கொடுத்தார்)

குருநாதர்:- அப்பனே நீ எவ்வளவு கேட்டாய் அவன்தனை?  அவன் ஏன் அனைத்தும் கொடுத்து விட்டான் என்று கேள்?

அடியவர் 7:- என் உங்களிடம் இருந்த எல்லா பணத்தையும் என்னிடம் கொடுத்தீர்கள்?

அடியவர்-பித்தன்:- ஏன் என்றால் ஐயா அதுதான் சொன்னார். குருநாதர் சொன்ன வாரத்தையுடைய அர்த்தம் அதுதான்.

குருநாதர்:- அப்பனே இவன் தன் ( அடியவர்-பித்தன்) இப்படிக் கொடுத்தான். மற்றவர்களுக்குச் சொல்லி இருந்தால் அப்பனே 10 ரூபாய்தான் நிச்சயம் கொடுத்திருப்பார்கள் அப்பனே.ஏன் கொடுத்தாய் என்பதை நீ (அடியவர் 7) நிச்சயம் கேள்?

அடியவர் 7:- ஏன் (உங்கள் பணம்) மொத்தத்தையும் கொடுத்தீர்கள்?

அடியவர்-பித்தன்:- ஏன் என்றால் தானம், தர்மம் நமக்காகச் செய்ய வில்லை. பிறருக்காகச் செய்கின்றோம். அதில் வரக்கூடிய பலனையும் பிறருக்காக அர்ப்பணம் செய்யும்போது பிற உயிர்களும் , எல்லா ஜீவராசிகளையும் இன்புற்று வாழும்.

குருநாதர்:- ( ரூபாய் அனைத்தையும் வாங்கிய அடியவரைப் பார்த்து ) அப்பனே உன்னிடத்தில் இருக்கும் 10 ரூபாயை அப்பனே மீண்டும் அவனிடத்தில் (அடியவர்-பித்தன்) அப்பனே பின் அதனுடன் சேர்த்துக் கொடு.

அடியவர் 7:- ( அடியவர்-பித்தன் கொடுத்த பணத்துடன் சேர்த்து மீண்டும் அடியவர் 7 வைத்திருந்த அனைத்து பணத்தையும் அடியவர்-பித்தனிடம் கொடுத்தார்)

குருநாதர்:- அப்பனே உன்னை யான் எதைக் கொடுக்கச் சொன்னேன்?

அடியவர் 7:- அவர் கொடுத்த பணத்துடன் பத்து ரூபாயை சேர்த்து கொடுக்கச் சொன்னீர்கள்.

குருநாதர்:- அப்பனே ஏன் (உனது பணம்) அனைத்தையும் கொடுத்தாய்?

அடியவர் 7:- இப்போது தான் சாமி இவர் (அடியவர்-பித்தன்) சொன்னார் தானம் குறித்து. அதனால் நானும் அனைத்தையும் கொடுத்தேன்.

அடியவர்கள் :- (சிரிப்பு)

குருநாதர்:- அப்பனே அவனிடத்தில் இருந்து  10 ரூபாயை வாங்கு.

அடியவர் 7:- ( பித்தன் அடியவரிடம் இருந்து 10 ரூபாயைக் கேட்டு வாங்கினார்)

குருநாதர்:- அப்பனே இதிலிருந்து புரிகின்றதை உன் மனது அப்பனே பணத்தை நோக்கியே இருக்கிறது என்பேன் அப்பனே.

( தானமாக்க் கொடுத்த பணத்தைக் கேட்டுப் பெற்றார். அதையே இங்கு குருநாதர் குறிப்பிடுகின்றார். தானம் கொடுத்த பணத்தை திரும்ப நான் மீண்டும் கேட்டு வாங்க மாட்டேன் என்று சொல்வதற்குப் பதிலாக,  குருநாதர் சொன்னார் என்பதற்காக்க் கேட்டு வாங்கிவிட்டார் இந்த அடியவர். இங்கு இரண்டு விதிகள்
        1.      குரு சொல்லைத் தட்டாதே
        2.      தானமாக்க் கொடுத்த பணத்தை திரும்ப வாங்காதே ( மனதில் கூட).
இந்த இரண்டு விதியில் இரண்டாவது விதியை பின்பற்றாமல் முதல் விதியை பின்பற்றி விட்டார். அதனால் உங்கள் மனது பணத்தை நோக்கியே இருக்கின்றது என்று எடுத்து விளக்கினார்கள்.)

குருநாதர்:- அப்பனே இப்படி இருக்க அப்பனே  இறைவனும் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறான் அப்பனே உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி எண்ணி.  ஆனாலும் அப்பனே  நிச்சயம் (பணம்) வரும் அப்பா.

அடியவர்-பித்தன்:- பணத்தின் பின்னாடி ஓடாதே. குருநாதர் ஐயாவுடைய வாக்கும் அதுதான். பணம் உன்னைத்தேடி வரும்.

( அடியவர்-பித்தனுக்கும் தானாகப் பணம் வரும் என்று உணர்க)

குருநாதர்:- அப்பனே அதில் இருந்து அப்பனே ஒன்றை எடுத்து அவனிடத்தில் கொடு.

( அடியவர்-பித்தனிடம் இருந்து ஏதாவது ஒரு பணத்தை அடியவருக்குக் கொடுக்க வேண்டும். அப்படியே செய்தார் அடியவர்-பித்தன்.)

குருநாதர்:- அப்பனே நிச்சயம் பணங்களும் வரும் அப்பா. அப்பனே நீயும் கொடுப்பாய் அப்பா. ( இருவருக்கும் ஆசி அருளினார்கள் கருணைக்கடல்)

அப்பனே (அடியவர்-பித்தன்) இப்பொழுது அவன் (அடியவர்) இடத்தில் பெற்றுக் கொண்டாயோ அதை அவனிடத்திலே கொடுத்துவிடு.  உன்னிடம் என்ன இருந்ததோ அதை நீயே எடுத்துக்கொள்.

அடியவர் 7:- எனக்கு எவ்வளவு பணம் அவருக்குக் கொடுத்தேன் என்று தெரியாது சாமி.

(அடியவர்கள் சிரிப்பு)

குருநாதர்:- அப்பனே இது போலத்தான் அப்பனே இறைவன் அனைவருக்கும் ( பொருள் பலத்தை அளவுக்கு அதிகமாக ) கொடுத்து விட்டால் அப்பனே மதிமயங்கி (கர்மாவில்) போய்விடுவான் அப்பனே. அதனால்தான் இறைவன் கூட யார் யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எண்ணி,  எதைக் கொடுத்தால் நன்று என்று எண்ணி எண்ணிக் கொடுக்கின்றான் அப்பனே. போதுமா அப்பனே இதன் விளக்கம்?

அடியவர் 7:- போதும் சாமி.

குருநாதர்:- அதனால் அப்பனே இப்படி இருக்கின்றார்களே? அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிவிட்டார்களே , அப்பனே யான் கீழ்தனை நோக்கி இருக்கின்றோமே என்றால்  அப்பனே ( என்று எண்ணுவது) இவை எல்லாம் வீணப்பா. சொல்லிவிட்டேன் அப்பனே.  யார் யாருக்கு என்னென்ன தரவேண்டுமோ இறைவன் நிச்சயம் தருவான். இதன் மூலம் தெரிகின்றதா அப்பனே.  கேள்?

( நாடி அருளாளர் அருமையான விளக்கம் இங்கு அனைவருக்கும் அளித்தார்கள்)

குருநாதர்:- ஆனாலும் அப்பனே அதை வைத்துக் கொண்டு அனைவருக்குமே என்ன செய்யலாம் கூறு?

அடியவர் 7:- எல்லாருக்கும் அன்னதானம் செய்து விடுகின்றேன்.

குருநாதர்:- அப்பனே எப்படி அப்பா செய்ய முடியும்?

நாடி அருளாளர்:- முடியாது என்று சொல்கின்றார் குருநாதர்.

அடியவர் 7:- நீங்களே சொல்லுங்கள் சாமி.

குருநாதர்:- அப்பனே இதுதான் அறிவில்லாதவன் அப்பனே. அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பனே அதே போலத்தான் இறைபலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

அப்பனே யான் (உதவி) செய்வேன் இங்கு இருக்கிறார்களே அவர்களிடத்தில்  வாங்கிக் கொண்டு அவர்களுக்கே செய்கின்றேன் என்று இதே போலத்தான் அப்பனே கர்மம் அவனிடத்தில் இருந்து கொண்டு அவனையே ஆட்டிப்படைக்கிறது. யாருக்கும் தெரியவில்லை அப்பனே.

( தன் பொருளைப் பிறருக்குக் கொடுத்தால் மட்டுமே கர்மம் தொலையும். பிறர் பொருள் சேர்க்கச் சேர்க்க, கர்மம் சேரும். கர்மத்தை குறைக்க ஒரே வழி பொருள் உதவி/தர்மம்)

அடியவர்-பித்தன்:- chanceஏ இல்லை… !!!!!!!!!!!!!!!!!
( கருணைக்கடலின் உயர் ஞான வாக்கைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்!!!)

குருநாதர்:- அப்பனே நீ எதை (கையில்) வைத்திருக்கின்றாய்?

அடியவர்-பித்தன்:- (பணத்தைக் காட்டி) கர்மாவை வைத்திருக்கின்றேன்.

அடியவர் 7:- கர்மாவை

குருநாதர்:- அப்பனே யாராவது சொல்லச்சொல் இது கர்மா என்று?

நாடி அருளாளர்:- உங்கள் கையில் உள்ளது  (பணம் ) கர்மா என்று இங்கு உள்ள யாராவது சொல்லச்சொல்லுங்கள்?

அடியவர் 7 :- (என் கையில் உள்ள பணம்) இது கர்மாவா?

அங்கு உள்ள அனைத்து அடியவர்கள் :- அது கர்மா இல்லை ( ஏன் என்றால் அது வெறும் பணம் )

குருநாதர்:- அப்பனே (பொருள்/பணம்) இதை பலமாக்க் கொடுத்து விட்டால் அப்பனே நீ அனைத்திற்கும் அடிமையாகி விடுவாய் அப்பனே. அதனால் தான் இறைவன்  சிறிதளவே (பொருள்/பணம்) கொடுக்கின்றான் அப்பனே. இது தவறா?

அடியவர் 7:- தவறில்லை.

அடியவர்-பித்தன்:- குருநாதர் சொல்ல வருவது என்னவென்றால். நமக்கு என்ன தேவையோ அவர்களுக்குத் தெரியும். அவற்றை எல்லாம் கொடுக்கின்றார்கள். அதாவது நமது  சிந்தனைகளுக்கு ஏற்ற மாதிரி அனைத்தையும் கொடுக்கின்றார்கள்.  உங்கள்
சிந்தனையை, இறை பலத்தை பெரியதாக்கி விட்டீர்கள் என்றால் அதற்கு ஏற்ற அளவு அவர்கள் கொடுப்பார்கள். நிறைய கொடுப்பார்கள்.

குருநாதர்:- அப்பனே பொருத்திரு. விதியில் கூட பல மாற்றங்கள். ஆனாலும் பொருத்திருந்தால் மாற்றுகின்றேன். அப்பனே எதை எதிர் பார்க்கின்றாய் என்பதை யான் அறிவேன். ( அடியவர் 7- தனிப்பட்ட வாக்குகள் முடித்த பின் மீண்டும் பொது வாக்கு ஆரம்பமானது )

குருநாதர்:- அப்பனே அனைத்தும் எண்ணும்போது எவ்வளவு?

(அடியவர் 7 -  வைத்திருந்த பணத்தை எண்ணச் சொல்லி கருணைக்கடல் உத்தரவு இட்டார்கள்)

நாடி அருளாளர்:- ஐயா , நீங்கள் உங்கள் பணத்தை எண்ணி எவ்வளவு என்று சொல்லுங்கள்.

அடியவர் 7:- 2980 ரூபாய் இருக்கின்றது.

குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் சொல் இதனை.

அடியவர் 7:- (உரத்த குரலில்) 2980 ரூபாய் இருக்கின்றது.

குருநாதர்:- அப்பனே முதலில் ஒன்றை ஒன்றாக வேறுபடுத்து.

அடியவர்-பித்தன்:- 500 ரூபாய் தனியாக, 200 ரூபாய் தனியாக ….அப்புறம் 10 ரூபாயாகப் பிரியுங்கள்

நாடி அருளாளர்:- ஐயா அது இல்லை. ஒவ்வொரு எண்ணாக்க் கூறுங்கள்.

அடியவர் 7 :- 2…..9……8……0

குருநாதர்:- அப்பனே சந்திரனை (2) பலப்படுத்து.

நாடி அருளாளர் :- ஐயா உங்களுக்கு இந்த எண்களை வைத்தே சொல்கின்றார். 2 - சந்திரனை பலப்படுத்து. ஐயா அடுத்து என்ன எண்?

அடியவர் 7 :- 2க்கு அடுத்து 9

குருநாதர்:- (9) தோடங்களப்பா. (தோஷங்கள்) இதனால் அவன் (முருகன்) தலத்திற்கும் சென்று வருதல்.

நாடி அருளாளர்:- அடுத்து …

அடியவர் 7:- 8

குருநாதர்:- அப்பனே இவன்தனும் கஷ்டங்கள் கொடுத்திட்டானப்பா.

அடியவரில் ஒருவன் :- சனி தேவன் (8)

குருநாதர் :- அப்பனே அனைத்தும் அப்பனே கூடுதல்…

நாடி அருளாளர்:- கூடுதல் என்றால் …இந்த பணத்தின் கூட்டுத்தொகை எவ்வளவு?

அடியவர் 7:- 2+9+8+0 = 19

அடியவர்-பித்தன் :- கூட்டினால் 19 வருகிறது. இதை (1+9) இரண்டையும் கூட்டினால் 10 வரும்.

குருநாதர்:- அப்பனே அதனால் (10) தச அவதாரங்கள் எடுத்தவனை வணங்கிக்கொண்டே இரு. பின் பணங்கள் குவியும் என்பேன்.

அடியவர்-பித்தன்:- பெருமாளை வணங்கச்சொல்கின்றார்.  தசாவதாரம் எடுத்தவர் பெருமாள்.

குருநாதர்:- அப்பனே இதற்குத்தான் நீ ஏங்கிக்கொண்டு இருக்கின்றாய் அப்பனே.

நாடி அருளாளர்:- உங்களை வைத்து (உலகோர்) அனைவருக்கும் அருமையான பாடம் எடுத்த பின்பு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு மட்டும் என்ன தேவையோ அதனை மிக அழகாக எடுத்து உரைத்துவிட்டார்கள்.

குருநாதர்:- அப்பனே ஆனால் , உன் விதியில்  _____________ என்று கூட யான்தான் எழுத வேண்டும்.

( அடியவர்கள் கவனிக்கவும் :- கருணைக்கடல் குருநாதரால் விதியை எழுத/உருவாக்க/மாற்ற/அழிக்க இயலும். ஆனாலும் அவர்கள் பிரம்ம தேவன் மூலமாகவே அனைத்தும் செய்து வருகின்றார்கள் என்பதை பல வாக்குகளில் நாம் உணர்ந்த ஒன்றே…குருவே சரணம்!!!)

நாடி அருளாளர்:- ஐயா (அடியவர் 7) சற்று பொறுத்திருங்கள். பிரம்மா இந்த விதியை எழுத மறந்துவிட்டார். குருநாதர் எழுதிய உடன் அனைத்தும் சரியாகும். கவலைப்படாதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

குருநாதர்:- அப்பனே இதைத் தெரியாமல் அப்பனே பரிகாரங்களாம் அப்பனே. அப்பனே விதியில் என்ன உள்ளது என்பதைத் தெரியாமல் அப்பனே பரிகாரம்  செய்பவன் அதை விட முட்டாள் இல்லை. அதனால்தான் இறைவன் கூட சிரிக்கின்றான்.

முட்டாளே அறிந்தும் அறிந்தும் உன் விதியில் என்ன இருக்கின்றது என்று தெரியாமலே சுற்றுகின்றாயே, உந்தனுக்கு எது கொடுத்தாலும் வீண் என்று (இறைவன்) விட்டு விடுகின்றான் அப்பனே. பின்பு யான் பரிகாரங்கள் செய்தேனே, பரிகாரங்கள் செய்தேனே என்று அலைந்து கொண்டிருப்பான் மனிதன். மனிதனுடைய புத்தியே இப்படித்தானப்பா. அதனால் விதியை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அப்பனே புண்ணியங்கள் செய்ய வேண்டும் அப்பனே.

( கருணைக்கடல் அடுத்த ஒரு மிக முக்கிய மகத்தான பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள்)

குருநாதர்:- அப்பனே, புண்ணியம் என்றால் என்ன?

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete