​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 5 December 2023

சித்தன் அருள் - 1528 - அன்புடன் அகத்தியர் - கோயம்பத்தூர் வாக்கு - பகுதி 5 !


குருநாதர்:- அப்பனே ஓடோடி வந்தாய் அப்பனே. எப்பொழுது, எப்பொழுது வாக்குகள் கிட்டும் என்றெல்லாம் ஏங்கிக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இனிமேல் அப்பனே (நாடி வாக்கு கேட்க) வருவாயா வரமாட்டாயா?

அடியவர்கள்:- ( பலத்த சிரிப்புக்கள்)

அடியவர் 7:- வருவேன் சாமி.

குருநாதர்:- அதனால்தான் அப்பனே எதற்காக வருவாய்?

அடியவர் 7:- நல்லபடியாக இருப்பதற்கு.

குருநாதர்:- அப்பனே இது தவறு.

அடியவர் 7:- வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வேன் சாமி.

குருநாதர்:- அப்பனே ஏன் தரிசனம்?

அடியவர் 7:- நல்ல புத்தியுடன் இருக்க வேண்டும்……

குருநாதர்:- அப்பனே இப்பொழுதிலிருந்தே தெரிகின்றது உன்னிடத்தில் புத்தியே இல்லை என்று. அப்பனே யான் புத்தி இல்லாதவன் என்று சொல்லுகிறேன் அப்பனே,  நீ என்ன கூறுகிறாய்?

அடியவர் 7:- சொன்னது சரிதான் சாமி.

குருநாதர்:- அப்படியே எது என்பதை அறிய அறிய புத்தி இல்லாதவனுக்கு அனைத்தும் கொடுத்தாலும் வீணாக கழித்து விடுவாய் என்பேன் அப்பனே. இப்பொழுது புரிகின்றதா?  இறைவன் எதற்கு , எங்கு, எவை என்று கூற அப்பனே ஒவ்வொரு வயதிலும் கூட ஒவ்வொன்றை வைத்திருக்கின்றான் அப்பனே. அப்பொழுதுதான் கொடுப்பான் என்பேன் அப்பனே. ஆராய்ந்து இறைவன் கொடுப்பது சரியா,  தவறா?

அடியவர் 7:- சரிதான்

குருநாதர்:- அப்பனே இறைவனுக்குத் தெரியும் யார் யாருக்கு எப்பொழுது கொடுத்தால் அப்பனே அவன் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கையும் நடத்துவான், பல தர்ம காரியங்களில் ஈடுபடுவான் என்று கூட அப்பனே அதனால் நாம் நினைத்தால் தரும் தானம் செய்ய முடியாது அப்பா. இறைவன் நினைக்க வேண்டும் அப்பனே. அதற்கு இறைவனிடத்தில் நீ என்ன கேட்பாய்?

அடியவர்-பித்தன்:- ( வள்ளலார் பாட்டை எடுத்துக் கூறச் சொன்னார்.)

அடியவர் 7:- படித்த பாட்டைப் படித்துக் கேட்பேன்.

குருநாதர்:- அப்பனே அவன் ( அடியவர்-பித்தன்)  படிப்பது ஒன்று. இது வரைக்கும் அப்பனே நீ என்ன பாடலை ஏதாவது இறைவன் பாடலைப் பாடு.

அடியவர் 7:- ( திருவாசகத்தில் உள்ள முதல் பாடலான சிவபுராணம் அதனைப் பாட ஆரம்பித்தார்)

நமச்சிவாய வாஅழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில்
 நீங்காதான் தாள் வாழ்க!

( ஆதி ஈசனின் அகத்தின் உள் உறையும் ஈசன், அகத்தீசன் முன்பு மகத்தான வாய்ப்பு கிட்டியது இந்த அடியவருக்கு. 100 கோடி பேரில் ஒருவருக்கே கிட்டும் வாய்ப்பு. ஆனால் ஏதோ ஒரு பாடல்தானே என்று 3 வரிகள் மட்டுமே பாடிவிட்டார்.. இந்த நிகழ்வின்  மகத்துவம் புரியாமல்…பக்குவங்கள் இல்லை என்றால் ஈசனே நேரில் வந்தாலும் வரம் வாங்க இயலாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு…தவம் செய்யாமல் எளிதில் வரம் வாங்க வேண்டிய மாபெரும் சரித்திர நிகழ்வைத் தவற விட்டார்…ஆறு , ஏழு பிறவிகள் எடுத்தாலும் கிடைக்காத வாய்ப்பைத் தவற விட்டார்…அதனால்….)

குருநாதர்:- அப்பனே இவ்வளவு தான் அப்பா உன் புத்தி.

அடியவர் 7:- ஏன் சாமி.

குருநாதர்:- அப்பனே இவ்வளவுக்கு அப்பனே ஒரு 10 ரூபாய்தான்  பிச்சை போட முடியும் உனக்கு.அப்பனே இதை வைத்துப் பிழைக்க முடியுமா?

(இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தயங்கினார் அடியவர். அங்கு உள்ள அடியவர்கள் முடியாது என்று சொல்லச்சொன்னார்கள்)

அடியவர் 7:- முடியாது சாமி.

குருநாதர்:- அப்பனே அப்பொழுது என்ன செய்ய வேண்டும்?

அடியவர் 7:- (சிவபுராணம்) முழுவதும் படிக்க வேண்டும் சாமி.

குருநாதர்:- அப்பனே இதையும் நீ ஓத வேண்டும் அப்பனே.( முன்பு உரைத்த வள்ளலார் படலுடன்) சிவபுராணத்தையும் கூட அப்பனே. அனுதினமும் ஓதிக்கொண்டே வா. அப்பனே அறிவுகள் ஏற்படும். அப்பனே உனக்கு என்ன தேவை என்று அப்பனே,  எவை என்று அறிய அறிய என்ன இது நியாயமா அப்பா? அப்பனே பின் ஒழுங்காக ஒன்றாம் வகுப்பிலே முடிக்கவில்லை. அப்பனே பத்தாம் வகுப்பில் இருக்கும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் என்ன லாபம் அப்பா? என்ன நியாயம் அப்பா?

( கருணைக்கடலின் அடுத்த பாடம் - ஆதி ஈசனின் ருத்திராட்சம் )

குருநாதர்:- அப்பனே ருத்ராட்சத்தை அனைவரும் ஏன் கட்டிக் கொள்கிறார்கள் என்று கேள். அப்பனே அப்படித் திரும்பி நில்.

அடியவர் 7:- ( அடியவர்கள் பக்கம் திரும்பி) ருத்திராட்சத்தை அனைவரும் ஏன் கட்டிக் கொள்கிறார்கள்? சொல்லுங்கள்.

அடியவர்:- நல்ல vibration உண்டாகும்.

குருநாதர்:- அப்பனே இதைக் கூடச் சரியாக சொல்லவில்லையே. அப்பனே இன்னும் கேள்.

அடியவர் 7:- ருத்ராட்சத்தின் வேறு என்ன மகிமை இருக்கின்றது என்று சாமி கேட்கின்றார்? சொல்லுங்கள்.

அடியவர்:- ஐயாவுக்கு உகந்த ஒரு சிவ சமர்ப்பணம். ருத்ராட்சம் அதனை நாம் அணியும்போது நல்ல மனப்பான்மை, சரியான பாதையில் வழிநடத்திச் செல்லும்.  அதற்குப் பொறுமை அவசியம்.

குருநாதர்:- அப்பனே இதுவும் தவறு.

அடியவர் 7:- நீங்களே சொல்லுங்க சாமி

குருநாதர்:- அப்பனே அனைத்தும் யான் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே அறிவுகள் மங்கி ஏதுமே கிடைக்காமல் போகும் அப்பா.

அடியவர்-பித்தன்:- ருத்ராட்சம் இறைவனுக்குச் சமர்ப்பிக்கின்றோம். வில்வம் சமர்ப்பிக்கின்றோம். குருநாதருக்கு வெட்டிவேர் சாற்றுகின்றோம். இது  எல்லாம் நாம் எதற்காகச் செய்கின்றோம்?

அவர்களுக்காக இல்லை. நமக்காகச் செய்கின்றோம். அதாவது இந்த பிரபஞ்சம் முழுக்க மின்காந்த அலைகள் பரவி உள்ளது.  அந்த மின்காந்த அலைகளை மானிடர்கள் ஈர்த்து தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

நமது சிரசில் உள்ள அணுக்களுக்கு உணவு என்பதே மின் காந்த அலைகள்தான்.  இந்த மின் காந்த அலைகளை நாம் ஈர்க்கும் பொது நல்ல எண்ணங்கள் வளரும். நல்ல எண்ணங்கள் நல்ல செயல்களாகும். நல்ல எண்ணங்களையும், நல்ல செயல்களையும் மேலும் மேலும் நம் உடலின் உள் அதிகரிக்க இது போல ருத்ராட்சம் அணிதல், இறைவனுக்கு வில்வம் , வெட்டிவேர் , பாடல்கள் பாடுதல், பூக்கள் முதலியவற்றைச் சமர்ப்பிக்கின்றோம். இவை அனைத்தும் பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அந்த நேர்மறை ( positive ) சக்திகளை , மின்காந்த அலைகளை ஈர்ப்பதற்குத்தான் நாம் பயன்படுத்துகின்றோம்.

குருநாதர்:- அப்பனே இவ்வளவு பேசினான் அப்பனே. என்ன லாபம்? ஒன்றே சொல்லிவிட்டு இருந்தால் அப்பனே ஈசன் நம்மிடையே இருக்க வேண்டும். ஈசனாகவே. எதை என்றும் அறியாமல் அப்பனே புரிகின்றதா?

ஈசனேதான் ருத்ராட்சம் என்று யாரும் சொல்லவில்லையே அப்பனே.  அப்பொழுது ஈசன் நம்மிடையே இருக்கின்றான். அனைத்தும் செய்வான் என்று யாருக்குமே புத்தி யாருக்குமே  வரவில்லையே. எப்படியப்பா?

அடியவர்கள்:- ( பலத்த உரையாடல்கள்)

அடியவர் 7:- (ஈசன்) நல்லது செய்வார்.

(கருணைக்கடலின் பாடம் தொடர்கின்றது…)

குருநாதர்:- அப்பனே யான் ஏன் இங்கு இருக்கின்றேன்?

அடியவர் 7:- எல்லோருக்கும் நல்லது செய்வதற்காக..மோட்சத்திற்குச் செல்வதற்காக…

குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால்தான் என்னால் செய்ய முடியுமா என்ன?

அடியவர்:- அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றார் குருநாதர்.

குருநாதர்:- அம்மையே ( அங்கு உள்ள ஓர் அடியவரை) அவனை வரச்சொல்…

அடியவர் 15:- ( அடியவர் கருணைக்கடலின் பாதங்கள் - ஜீவ நாடியின் - முன்பு வந்து வணங்கினார்கள்.)

(பின் வரும் கேள்வி பதில் வாக்குகள் குருநாதரின் மகத்தான புகழை எடுத்து உரைக்கும் உயர் சித்த ஞான ரகசிய வாக்கு.)

குருநாதர்:- அப்பனே அனைவரையும் பார். அப்பனே என்னைப் பற்றி விளக்கு.

அடியவர் 15:- அனைவரிலும்  அகத்திய மஷரிஷி தான் முதன்மையானவர்.

குருநாதர்:- அப்பனே அப்படி என்று யான் சொன்னேனா? அப்பனே இன்னும் சொல்?

அடியவர் 15:- அவர் மூலமாகத்தான் தமிழ் பிரபலமானது. மருத்துவமும் பிரபலமானது. அவர் மூலமாகத்தான் பல சித்தர்கள் வழி வந்துள்ளார்கள். மேலும் இவர் சிவபெருமானின் மறு உருவம். குண்டலியில் இருந்து வந்ததனால் அவர் பெயர் கும்ப முனி என்று பெயர் உண்டு.

குருநாதர்:- அப்பனே ஒரு துரும்பு கூட இல்லையப்பா. ( குருநாதரைப் பற்றி இந்த அடியவர் கூறிய தகவல்கள் ஒரு துரும்பு கூட ஒன்றுமே இல்லை.)

குருநாதர்:- அப்பனே, ( அடியவர்-பித்தன் ) அவனை எழச்சொல்.

அடியவர்-பித்தன்:- குருநாதா!!!!!!!

குருநாதர்:- அப்பொழுது கூட குருநாதா என்று சொல்லி விட்டாய். அப்பனே கூறு?

அடியவர்-பித்தன்:- குருநாதர்தான் ஈசன். ஈசன்தான் குருநாதர். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன உள்ளது?

( இந்த வாக்கின் மூலம் குருநாதரைப் பற்றி உலகத்தில் பலருக்கும் தெரியாத ஒரு மாபெரும் சித்த ரகசியத்தை இந்த அடியவர் இங்கு மிக அழகாக எடுத்து உரைத்தார்கள். அதனைக் கேட்ட கருணைக்கடல் குருநாதர் உரைத்த பின் வரும் மகத்தான  வாக்கு உங்களுக்கு, உலகோர் அனைவருக்கும் என்று உணர்ந்து படிக்கவும். பலமாகும் உங்கள் அகத்தியச் சிந்தனைகள்…. )

குருநாதர்:- அப்பனே புரிகின்றதா?  ஆனாலும் அப்பனே சிலர் அறிந்து கொள்வது இல்லை என்பேன் அப்பனே. ஆனாலும் புரிய வைக்கிறேன் என்பேன் அப்பனே. அப்பனே அனைத்தும் அப்பனே சித்தர்கள் ஏன் எது என்பதை அறிய அறிய மனிதர்களுக்கு எல்லாம் பின் அறிவு இல்லையப்பா , அறிவு இல்லை. அப்பனே அவ் அறிவு இருந்தாலே அனைத்தும் பிழைத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே. அவ் அறிவு இல்லாததால்தான் அப்பனே இப்படி அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே.  அப்பனே அதனால் என்ன லாபம் அப்பனே.

அதனால் முதலில் தன்னை உணருங்கள் என்பேன் அப்பனே. தன்னை உணராவிடில்  அப்பனே,  ஒன்றுமே கிடைக்காது என்பேன் அப்பனே.  தன்னை உணர்ந்து கொண்டால் அப்பனே,  பின் அனைத்தும் அமைதியாக இருந்து விடுவான். தன்னை உணராதவன்தான் அங்கும் இங்கும் பேய்களாக அப்பனே பின் மாறி மாறி சென்றடைவான் அப்பனே. பேய் என்றால் என்ன?

அடியவர்-பித்தன்:- பேய் என்பது நம்மிடம் உள்ள ஆசைதான் பேய்.

குருநாதர்:- அப்பனே அப்பொழுது உன்னிடத்திலேயே அப்பனே வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது அப்பேயை  வைத்துக்கொண்டு நன்றாக வாழ முடியுமா என்ன?

அடியவர்-பித்தன்:- நிச்சயமாக வாழ முடியாது.

குருநாதர்:- அப்போது யார் பொறுப்பு அப்பனே துன்பத்திற்கு.

அடியவர்-பித்தன்:- நாம்தான் பொறுப்பு.

குருநாதர்:- அப்பனே அனைவருக்கும் சொல்.

அடியவர்-பித்தன்:- ஆசை என்ற பேய்  நமக்குள்ளேயே இருக்கின்றது. அந்த பேயை நமக்குள்ளே வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியுமா? இல்லை.

அதுதான் குருநாதர் சொல்கின்றார்கள். ஆசை நமக்குள்ள இருக்கிற வரைக்கும் நாம் நிம்மதியா வாழ முடியாது. இறைவனடி சேர முடியாது.

குருநாதர்:- அப்பனே அப்போது இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்று அனைவருக்கும் தெரிவி அப்பனே.

அடியவர்-பித்தன்:- ஆசையைத் துறக்க வேண்டும். இறைவனே!!! நீயே கதி என்று நாம் சரணாகதம் அடைகின்றபோது, இறைவன் நமக்கு தேவையான எல்லாவற்றையும்,  இறைவனுக்குத் தெரியும். நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும்.  நாம் எதுவும் கேட்க வேண்டாம். மாணிக்கவாசகப் பெருமான் அழகாகப் பாடி இருப்பார்.

( மாணிக்கவாசகப் பெருமான் சொல்லி ஆதி ஈசனே எழுதிய திருவாசகம் பாடல் தொகுப்பில் உள்ள ஒரு பாடல் குழைத்த பத்து என்ற பாடல். அதில் வரும் பின் வரும் பாடலை அடியவர்-பித்தன் இங்கு அனைவருக்கும் எடுத்து உரைத்தார். அந்த பாடல்:

வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள்செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில், அதுவும் உந்தன் விருப்பன்றே!

பாடலின் பொருள்:-

ஆதி ஈசனே, எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும். ஆதி ஈசனே எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும். ஆதி ஈசனே, எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் ஆதி ஈசனாகிய உனது விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகிப் பாடுகிறார்.

இப்பாடல், உண்மையான பக்தியுடையோர் இறைவன் எதைத் தந்தாலும் அதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளும் தெளிவான மன நிலையைக்கொண்டிருப்பர் என்பதை தெளிவுபடுத்துகிறது.

உண்மை பக்தி என்பது இறைவன் சொல்லின்படி நடப்பது. இறைவன் , நாம் வேண்டும் எதையும் முழுதாகத் தரும் கருணை வடிவானவர். இறைவனிடத்தில் உண்மை அடியவர் இறைவன் தரும் எதையும் ஏற்றுக்கொள்வர்.

இறைவன் மாணிக்க வாசகருக்கும், மற்ற நாயன்மாருக்கும் துன்பம் தந்த போதும் அவர்கள் பக்தி என்ற நிலையில் இருந்து மாறவில்லை.

வாருங்கள் மீண்டும் கருணைக்கடல் அருள் வாக்குத் தொடரின் உள் சொல்வோம்…..)

அடியவர்-பித்தன்:- வேண்டதக்கது அறியோய் நீ !  வேண்ட முழுதும் தருவோய் நீ!.

அதாவது நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும். ஆனால் நாம்தான், சிறுபிள்ளைத்தனமாக நம்மை நாம் உணராமல்,  நமக்கு என்ன உண்மையாகத் தேவை என்று உணராமல் இறைவனிடம் எதை எதையோ கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

நாம் எதுவும் கேட்க வேண்டாம். அவர்களுக்குத் தெரியும். நாம் நமது ஆசைகளைத் துறந்து, அவர்கள் பாதங்களில் சரணாகதம் செய்யும்போது , நமக்குத் தேவையானவற்றை அவர்களே கொடுப்பார்கள்.

குருநாதர்:- அப்பனை கேட்கச்சொல் அப்பனே அவர் அவர் கேள்விகளை?

அடியவர்-பித்தன்:- குருநாதரிடம், உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்.

அடியவர்:- ஆசையே வேண்டாம் அய்யா. அதற்கு வழி கூறுங்கள் ஐயா.

குருநாதர்:- அம்மையே ஆசையை எப்படி விட்டொழிப்பது என்று கூறு?

அடியவர்-பித்தன்:- பற்றை அறுக்க வேண்டும். எல்லாம் இறைவா நீ பார்த்துக்கொள்வாய் என்ற சரணாகதம் கொண்டு வர வேண்டும். எல்லோரும் நாம் செய்கின்றோம் என்று நினைக்கின்றோம். அது தவறு. நாம் எந்த செயலையும் செய்யவில்லை. இறைவன்தான் அனைத்தையும் செய்கின்றார். இறைவனிடம் ஒரு முழுமையான சரணாகதம் நமக்குள் வரும்பொழுது , அந்த ஆசையானது நமக்குள் சென்று இறைவன் நமது செயல்களை நிறைவேற்றுவார்.

( நாம் செய்யும் அனைத்து செயல்களுக்குப் பின் இறைவன் நம் உள் இருந்தே இவற்றைச் செய்ய வைக்கின்றார் என்பதே உண்மை.)

குருநாதர்:- அப்பனே, அனைவருக்கும் பலமாகத் தெரிவி இதனை.

அடியவர்-பித்தன்:- புரியுதுங்களா? எல்லாம் நாம் செய்கின்றோம். ஒருவர் ஒரு பொருள் மேல் ஆசைப்படுகின்றார். அதாவது ஒருவருக்கு car வாங்க ஆசை. ஒருவருக்கு bike வாங்க ஆசை. ஒருவர் தன்னுடைய குழந்தைக்குத் திருமணம் நடக்க வேண்டும் என்று ஆசை. ஒருத்தருக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை.

இந்த மாதிரி ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள். ஆனால் அந்த ஆசைகள் அனைத்துமே நியாயமான ஆசைகள் தான். எதுவமே தவறான ஆசைகள்  கிடையாது. ஆனால் அந்த ஆசைகள்  நாம் வேண்டித்தான் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. புரிகின்றதா?

அந்த ஆசைகள் எல்லாம் கர்ம வினைகளால் சில காரணங்களால் அது தாமதமாகவோ , அது மறுக்கப்படுகின்ற சூழ்நிலைகள் உருவாகும் போது, நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அந்த ஆசையை நினைத்துக் கவலைப்படாமல் இறைவா!!!நீயே சரணாகதி. இந்த பொறுப்பை , எனது பிரச்சினையை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன். நீ பார்த்துக்கொள் என்ற ஒரு நம்பிக்கையோடு இறைவனிடம் கொடுத்து வேற எதற்கும் நாம் ஆசை படம் நமது வாழ்க்கையத் தொடர்ந்தோம் எனில், இறைவன் நம் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

குருநாதர்:- அப்பனே கடைசியில் இருக்கும் என்று ஒரு மூதாட்டி பார்.

( அடியவர்கள் பின்னால் இருந்த ஒரு வயதான மூதாட்டியை கருணைக்கடல் அருகில் வரும்படி அழைத்தனர். மற்றும் ஒரு அதிசயம் இங்கு நிகழ உள்ளதை அங்கு உள்ள அடியவர்கள் அறியவில்லை. அந்த மூதாட்டி ஜீவ நீடியின் அருகே வந்து அழகாக வணங்கிய பின்னர் முன்னே அமர்ந்தார்.)

குருநாதர்:- அப்பனே இவ்வளவு வயதாகி இருக்கின்றதே,  ஏன் இவள்தன் (அகத்தியனை / ஜீவ நாடியை) பின் வணங்க வேண்டும்?

அடியவர்-பித்தன்:- நீங்க வயதானவர்கள்.  நீங்க ஏன் இறைவனை வணங்கினீர்கள்? என்ற குருநாதர் கேட்கின்றார்கள். கூறுங்கள் அம்மா.

மூதாட்டி:- அவர் ( குருநாதர்) எல்லோருக்கும் மேலே உள்ளவர்.

( அகத்தின் ஈசனை , இதைவிட மிக எளிமையாக , அருமையாக , மிக அழகாக யாராலும் எடுத்துரைக்க இயலாது. இதுவே இவ் அம்மையின் உயர் பக்குவங்கள் பெற்ற ஞான நிலையை பறை சாற்றும் ஓர் உதாரணம்)

குருநாதர்:- அப்பனே ஆனால் இதுபோல் யான் ஒருவன் ஒருவனை ( ஒவ்வொருவராக என் முன்னே இந்த மூதாட்டியை அழைப்பதற்கு முன்னர் இங்கு )அழைப்பேன். ஆனால் யாருமே (இந்த மூதாட்டியைப்போல் வணக்கம்) செய்திருக்க மாட்டார்கள் என்பேன் அப்பனே. இது அனுபவம். இறைவனைப்பற்றி உணர வேண்டும் என்றால் அப்பனே பல கஷ்டங்களை சந்திக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அடியவர்-பித்தன்:- பல முறை, நிறைய பேர்களை குருநாதர் ஐயா தன் அருகில் (ஜீவ நீடி அருகில் ) கூப்பிட்டு உள்ளார்கள். ஆனால் யாருமே வந்து வணங்கவில்லை.

(ஏன் என்றால் பொருள் மேல் ஆசை இருந்தால் ஈசன் நம் முன் இருந்தாலும் தெரியமாட்டார்)

புரியுதுங்களா? ஆனால் (மூதாட்டி) அம்மா ஒருவர் மட்டுமே இங்கு அருகில் வந்து வணங்கிவிட்டு ஆரம்பித்தார்கள். இவ்வளவு பெரியவர்கள் ஆன இந்த அம்மை மட்டுமே இங்கு வணங்கினார்கள். அதைத்தான் குருநாதர் ஐயா சொல்கின்றார்கள்.

(இப்படி ஒரு நிகழ்வில் இருக்கும் போது வணங்குவதால் இப்படிப்பட்ட மகிமை என்றால், குருநாதரின் ஜீவ நாடியை எப்பொழுதும் தன் சிரசில் தாங்கும் நாடி அருளாளர் பெருமையை என்னவைன்று கூற….குருவே சரணம்!!!…எம்மை ஆட்கொண்ட மாமுனியே சரணம்!!!! ..சிலருக்கு நேரில் ஜீவ நாடியை பார்க்கக்கூட இயலவில்லை என்ற சூழல் இருப்பினும்,  உங்கள் இல்லத்தில் இந்த வாக்கை படிக்கும்பொழுதில் இக்கணமே ஜீவ நாடியை உங்கள் சிரசில் வைத்து, தியானித்து மானசீகமாக வணக்கத்தை தெரிவியுங்கள். உடனே அது இறைவனுக்குத் தெரிந்துவிடும்.)

குருநாதர்:- அதனால்தான் அப்பனே பக்குவங்கள் வர வேண்டும். பக்குவங்கள் வந்தால்தான் அப்பனே எங்களாலும் அனைத்தும் செய்யமுடியும்.  அவ் பக்குவங்கள் இல்லை என்றால் அப்பனே செய்தும் கூட ஒன்றும் லாபம் இல்லையப்பா. புண்ணியம் இல்லையப்பா.

அடியவர்-பித்தன்:- (மூதாட்டி) அம்மாவிற்கு வயது ஏற ஏற அவர்களுக்கு நிறைய பக்குவங்கள் கிடைத்து உள்ளது. அந்த பக்குவங்கள் இருப்பதனால் இறைவனை வணங்கிவிட்டு பின்னர் என்ன என்று கேட்கின்றார்கள். அந்த பக்குவங்கள் நமக்கு இல்லை.

குருநாதர்:- அம்மையே உன் மனதில் இருக்கும் ஈசனைப் பற்றி அனைவருக்கும் எடுத்துக்கூறு?  திரும்பு.

( இங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆதி ஈசனைத்தேடி அலைவோர் கோடி கோடி கோடி கோடி கோடானுகோடி பேர். இதனையே சிவ வாக்கியர் தனது பாடலில் பின் வருமாறு கூறுகின்றார்கள்…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த ஜோதியை…
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்து போய்…
வாடிவாடி வாடிவாடி வாழ்ந்து போன மாந்தர்கள்…
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே…

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

என்னிலே இருந்த உன்றை யான் அறிந்ததிலையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்த ஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்து இருந்து யானும் கண்டுகொண்டேனே

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய…

குருநாதர், ஆனால் அதிசயம் இந்த அம்மை மனதில் ஈசன் குடிகொண்டு உள்ளார் என்ற பரம ரகசியத்தை அதாவது இந்த அம்மையே அறியாத ரகசியத்தை இங்கு அனைவர் முன்னே போட்டு உடைத்தார். அதாவது இந்த கோவை வாக்கு படித்தபோது ஈசனே அங்கு வந்து உள்ளார்கள் இந்த மூதாட்டி வடிவத்தில்…..வாருங்கள் புண்ணியம் செய்த அடியவர்களே. ஆதி ஈசனே மனதில் வசிக்கும் அந்த மூதாட்டி அம்மையின் வாக்குகளை நாமும் கேட்போம்…)

ஆதி ஈசனார் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- எல்லாம் சிவமயம். சிவனைத் தவிர வேறு எதுவும் இல்லை. சிவனில் நினைவில் எப்போதும் இருக்க வேண்டும். ஒரு வாய் தண்ணீர் குடித்தாலும் சிவார்ப்பணம் என்று சொல்ல வேண்டும். எல்லாமே சிவனுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாமல் இருக்கக்கூடாது. ஒரு வாய் தண்ணீர் குடித்தாலும் சிவார்ப்பணம். ஒரு பூ எடுத்துப் போட்டாலும் ( இறைவனுக்குச் சாற்றினாலும் ) சிவார்ப்பணம். கை நிறைய பூ போட்டாலும் எல்லாமே சிவார்ப்பணம். பூப்பறிக்கும்போதே சிவார்ப்பணம். போய் பறித்துவிட்டு வந்த பின்தான் சொல்ல வேண்டும் என்பது இல்லை. கை நிறைய பூ இருக்கா? உடனேயே சொல்லுங்கள் சிவார்ப்பணம். சிவார்ப்பணம் என்று சொல்லிவிட்டால் அது உடனேயே சிவனுக்குப் போய் சேர்ந்துவிடும். எதைச் சாப்பிட்டாலும் சிவார்ப்பணம். ஒரு வாய் தண்ணீர் குடித்தாலும் சிவார்ப்பணம். வாயில் மென்று விழுங்கினாலும் சிவார்ப்பணம். ஆனால் அர்ப்பணம் செய்து விட வேண்டும். அர்ப்பணம் செய்யாமல் எதுவும் நாம் வைத்துக்கொள்ளக் கூடாது. நமக்கு வேண்டும். நாளைக்கு வேண்டும். பிள்ளைக்கு வேண்டும். தல முறைக்கு வேண்டும். எதையும் வைத்துக்கொள்ளக்கூடாது. எல்லாம் சிவார்ப்பணம்,சிவார்ப்பணம், சிவார்ப்பணம் எல்லாம் அர்ப்பணம் செய்துவிட வேண்டும். நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது.

குருநாதர்:- ( இந்த மூதாட்டி கூறியதை) அனைவரும் உணர்ந்தீர்களா?

அடியவர்கள்:- ( ஒருமித்த குரலில் ) நாங்கள் அனைவரும் உணர்ந்து விட்டோம்.

குருநாதர்:- ( மூதாட்டியைப் பார்த்து) அம்மையே இன்னும் கூறு.

அடியவர்-பித்தன்:- அம்மா, உங்களுக்குத் தெரிந்ததை இன்னும் சொல்லுங்கள்.

ஆதி ஈசனாரை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- தினமும் கோவிலுக்குப் போகின்றோம். கோவிலுக்குச் சென்று அது,இது வேண்டும் என்று கேட்கக்கூடாது. நீ நல்லா இருக்கவண்டும் என்று ( ஈசனைப் பார்த்து ) சொல்லவேண்டும். (ஈசன்) நீ நன்றாக இருந்தால் உலகம் நன்றாக இருக்கும். உலகத்தில் உள்ள உயிர்கள் நன்றாக இருக்கும். மழை பொழியும். தாவரங்கள் நன்றாக இருக்கும். அதனால் அது வேண்டும், என் பிள்ளைக்கு இது வேண்டும், படிப்பு வேண்டும், என்று எல்லாம் கேட்கக்கூடாது.

எதுவுமே வேண்டாம். (ஈசன்) நீ நன்றாக இருக்க வேண்டும். நீ நன்றாக இருந்தால் இந்த உலகம் நன்றாக இருக்கும். உயிர்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். எல்லோரும் நன்றாக இருப்பார்கள். அதனுள்ளே நாமும் தானே உள்ளோம். இந்த உலகத்தில் நாமும் ஒரு ஆள்தானே. அப்படி இருக்கும்போது ஈசன் நம்மைத் தனியாக விட்டு விட்டுப் போக மாட்டார். (ஈசனே) நீ நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் போதும். (ஈசன்) அவர் நன்றாக இருப்பார். அப்போது எல்லோரும் நன்றாக இருப்பார்கள்.

நீ நன்றாக இரு என்று ஒருவரை ( ஆள் காட்டி விரலால் ) சொல்லும்போது , மூன்று விரல்கள் நம்மைத்தான் பார்க்கும். இந்த மூன்று விரல்களும் ( இறைவன் முன் நிற்கும்) நம்மைக் காட்டும்போது நமக்குப் பின்னால் உள்ள அனைவரையும் , இந்த உலகத்தையே சுட்டிக்காட்டுகின்றது. அப்போ அவர் நன்றாக இருந்தால்தான் இந்த உலகமே நல்லா இருக்கும் என்ற புரிதல்தான் இந்த ஒரு ஆள் காட்டி விரலைச் சுட்டும்போது இந்த மூன்று விரலும் நம்மைச் சுட்டுக்காட்டுது. நீங்க இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்கவே கூடாது. (ஈசனே) நீ நன்றாக இருக்க வேண்டும். (ஈசனே) நீ நன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக ஆகி விடும். (ஈசனே) நீ நன்றாக இருக்கின்றாயா? இப்படித்தான் வேண்ட வேண்டும். இதை விட்டு விட்டு நான் நன்றாக இருக்கவேண்டும், என் உடம்பு நன்றாக இருக்க வேண்டும், என் பிற்ளைகள் நன்றாக இருக்கவேண்டும், சொத்து வேண்டும், பரம்பரை நன்றாக இருக்க வேண்டும், (ஈசனிடம்) இது போல எதுவுமே கேட்கக்கூடாது. ( ஈசனே ) நீ நன்றாக இரு. இப்படித்தான் வேண்ட வேண்டும்.

( ஆதி ஈசனின் அருள் பரிபூரணமாகப் பெற்ற இந்த அம்மை வாக்கு உரைத்த போது அமைதி அனைவர் மனதில் குடி கொண்டது என்பதை அடியவர்களால் உணர முடிந்தது. இந்த அம்மையை அடுத்து ஒரு மாபெரும் நிகழ்விற்குக் குருநாதர் அழைத்து,  ஓர் உயர் புண்ணியச் செயலை செய்ய அங்கு உள்ள திருமணம் ஆகாத அனைத்து கன்னிப்பெண்களுக்கும் அருளினார்கள். )

குருநாதர்:- அம்மையே கன்னிப் பெண்ணுக்குத் திருமணம் ஆகப்போகிறது.

நாடி அருளாளர்:- யாருக்காவது திருமணம் நடக்க உள்ளதா?

அடியவர்-பித்தன்:- அனைத்து திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது திருமணம் வேண்டுதல் வைத்து யாராவது வந்து உள்ளீர்களா? அவர்கள் அனைவரும் முன்னே வாருங்கள் அம்மா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete