​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 12 December 2023

சித்தன் அருள் - 1536 - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 9


குருநாதர்:- அம்மையே அனைவருக்கும் வாழ்க்கையின் தத்துவத்தைக் கூறு?

ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:- மனிதனாய் பிறந்தோம் என்றால் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சந்தோசமாக இருப்பதற்கு எல்லாரும் ஒற்றுமையா இருப்பதோடு மட்டும் இல்லாமல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யணும்.

நமது ஒரு கை அரித்தது என்றால் மற்றொரு கைதான் போய் சொரிந்து விடும். கண்ணால் கையைச் சொரிய முடியாது. கண் அழத்தான் செய்யும். அந்த சமயத்தில் வேறு எதுவும் கண்ணால் செய்ய முடியாது.

அதுபோல இந்தக்கை அந்தக்கைக்கு உதவி செய்வது போல நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

இந்தக் கையை மடக்காமல் நாம் சாப்பிட வேண்டும் என்றால், அடுத்தவர்களுக்கு நாம் உண்ண உணவு கொடுத்தால், நிச்சயமாக அவர்கள் சாப்பிடுவார்கள். நிச்சயமாக அவர்கள் நமக்கு உண்ணக் கொடுத்து நாம சாப்பிடலாம். கையை மடக்காமல் சாப்பிட வேண்டும் என்றால் இதுவே வழி.  நீங்க அவங்களுக்கு கொடுக்கனும். அவங்க உங்களுக்கு கொடுக்கனும். ஆக மொத்தம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். சந்தோசமாக எல்லோரும் இருக்கலாம். என் என்றால் நீங்கள் சாப்பிடலாம். நானும் சாப்பிடலாம். எல்லாரும் சந்தோசமாக இருக்கலாம்.

அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். நல்ல எண்ணங்கள் உடன் இருக்கவேண்டும். தூங்கி எழுந்தவுடன் இறை வழிபாடு,  சிந்தனையோடு எழுந்திருக்க வேண்டும். இன்றைக்கு என்ன என்ன நல்லது செய்யலாம் என்று திட்டம் போட்டு எந்திருச்சு செய்ய வேண்டும். கடவுள் வழிபாடு எப்பொழுதும் மனசுக்குள்ள இருக்கணும்.  வெளியிலே தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. சாதா சர்வ காலமும், சிவ சிவ சிவ சிவ என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். பூப்போட்டுத்தான் இறைவனை வேண்ட வேண்டும் என்பதில்லை. மனசால வெறும் கையால செய்தாலே போதும் அதுவே பூ தான்.

மனதில் எப்போதும் சிவ சிந்தனையோடு இருக்க வேண்டும். மனதில் எந்நேரமும் சிவ வழிபாட்டில் இருக்க வேண்டும். ஒரு காலடி எடுத்து வைத்தாலும் சிவ சிவ சிவ சிவ சிவ என்று சொல்ல வேண்டும். காலடி எடுத்து வைக்கும் போது சிவாயநம சிவாயநம என்று சொல்லிக்கொண்டே போக வேண்டும். எல்லா வேளையும் சிவாயநம என்று சொல்வதை விடவே கூடாது. தூங்கும் போதும், எழுந்திருக்கும் போதும், சாப்பிடும் போதும், நடக்கும் போதும், எல்லா நேரமும் சிவ சிந்தனையோடு எழுந்தோம் என்றால் நமக்கு எந்த துன்பமும் வராது. நல்ல எண்ணங்களோடு எப்போதும் இருக்க வேண்டும்.

இன்று நாம் தூங்கி எழுந்துவிட்டால், இன்று யாருக்கு நன்மை செய்யப் போகின்றோம்? எதாவது நல்லது பேச வேண்டும். தவறு செய்யக் கூடாது. தீயவை வரக்கூடாது. தீய எண்ணங்கள் வரக்கூடாது. கோபம் வரக்கூடாது. சந்தோசமாகப் பேசவேண்டும். இனிமையாகப் பேசவேண்டும் என்ற சங்கல்பத்துடன் காலையில் எழுந்திருக்க வேண்டும். எழுந்திருக்கும்போதே அந்த சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். இன்று நல்லது செய்ய வேண்டும். நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். இன்பமாக இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா ஜீவராசிகளுக்கும் உதவி செய்ய வேண்டும். என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இதுபோல சங்கல்பம் செய்து கொண்டு எழுந்திருக்க வேண்டும். தூங்கி எழுந்த உடன் இங்க போகலாமா, அங்க போகலாமா என்று பல சிந்தனையுடன் எழுந்திருக்கக் கூடாது.

படுக்கையில் இருந்து எழுந்த உடன் , சிவ சிவா என்று நல்ல சிந்தனையுடன் எழுந்திருக்க வேண்டும். நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணங்களுடன் எழுந்திருக்க வேண்டும். இன்றைய பொழுது நல்லபடியாக ஆக வேண்டும் என்ற எண்ணங்களோடு எழுந்தோம் என்றால் நமக்கு எந்தத் துன்பமும் வருவதில்லை.

நாம் அனைவரும் சந்தோசமாக இருக்கலாம். தீமை செய்தால் மட்டுமே தீமை நமக்கு வரும். என்ன விதை விதைக்கின்றோமோ , நாம் என்ன செய்கின்றோமோ அதுவே நமக்கு வரும்.

நெல் விதைத்தால், நெல் தான் அறுவடைக்கு வரும். தினையை அறுவடை செய்ய முடியாது. தினை விதைத்தால் தினையை அறுவடை செய்ய முடியும். அப்பொழுது நெல் அறுவடை செய்ய இயலாது. என்ன நாம் விதைக்கின்றோமோ அதுவே நமக்குக் கிடைக்கும். நல்லது விதைத்தால் நல்லது கிடைக்கும். தீயது விதைத்தால் தீமைதான் கிடைக்கும். என்ன விதை விதைக்கின்றோமோ அதுவே நமக்கு முளைக்கும். அதனால் காலையில் எழுந்திருக்கும் போது நல்ல சிந்தனையுடன் , நல்ல செய்ய வேண்டும் என்று நல்லது சொல்ல வேண்டும் என்று எழுந்தால், அதுவே நமக்கு இரவு தூங்குவதற்குள் நமக்குத் திரும்பி வரும். நல்லதே விதைக்க வேண்டும் என்றால் நல்ல எண்ணங்களோடு இருந்தால்தான் செய்ய முடியும். எண்ணங்களில் இருந்து வாரத்தை வருகின்றது. உள்ளத்தில் என்ன இருக்கின்றதோ அது நமது வார்த்தையாக வருகின்றது.

மனதில் நல்லதாக நினைத்தால் நல்ல வார்த்தைகள் வரும். அப்பொழுது நமக்கு எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். சொல் தூய்மையாக இருக்க வேண்டும். செயல் தூய்மையாக இருக்க வேண்டும். எல்லாம் தூய்மையாக இருக்க வேண்டும். உடல் மட்டும் தூய்மையாக இருந்தால் மட்டும் போதாது. உடலில் பல சோப் போட்டுக் குளித்து , வாசனைத் திரவியங்கள் தடவி, பவுடர் போட்டு, தலையை அழகாக வகிடு எடுத்து, நல்ல தூய்மையான அழகான உடை அணிந்தால் மட்டும் போதாது. இது எல்லாம் தேவையே இல்லை.

மனசு சுத்தமாக இருக்க வேண்டும். மனசு சுத்தமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? சதா சர்வகாலமும் சிவ சிந்தனையில் இருக்க வேண்டும். சிவ சிந்தனையில் இருந்தால் அவர் எந்த இடத்திற்கும் நம்மை விட மாட்டார். அவர் (ஈசன்) நம்மை இறுக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பார்.

அவரை விட்டு விட்டோம் என்றால், தறிகெட்டுப் போய்விடுவோம். சிவ சிந்தனையிலேயே இருந்தோம் என்றால் , அவரை நம் மனதில் இறுக்கிப் பிடித்துக்கொண்டு நல்லது செய்ய வேண்டும் என்று உள் இருந்து கொண்டு உணர்த்துவார். நமக்கு அனைத்தும் சொல்லிக் கொடுப்பார். நல் எண்ணம் தோன்றத் துணையாக இருப்பார்.

சிவன் நம் எல்லோருக்கும் தோன்றாத் துணையாக இருப்பார். அப்படி சிவன் தோன்றாத் துணையாக இருப்பதால்தான் நாம் இங்கு வந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாடி வாக்கு கேட்கின்றோம். நாடி கேட்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தது (சிவன்) அவர்தான். வரச்சொன்னதும் (சிவன்) அவர்தான்.

நம்மைக் கேள்வி கேட்கச் சொன்னதும் (சிவன்) அவர்தான். நம்மைப் பேசச் சென்னதும் (சிவன்) அவர்தான். சதா,சதா, சதா சர்வ காலமும் சிவ சிந்தனையிலேயே இருக்க வேண்டும். நல்ல வார்த்தைகளையே பேச வேண்டும். நல்ல எண்ணங்களே இருக்க வேண்டும். நல்ல செயலே செய்ய வேண்டும். யாருக்காவது உதவி செய்ய வேண்டும். இன்றைக்கு என்ன என்ன உதவி செய்தோம் என்று கணக்கு எடுக்கக் கூடாது. தூங்கப்போகும் முன் யாருக்கு உதவி செய்தோம், யாருக்குப் பணம் கொடுத்தோம், யாருக்கு என்னென்ன செய்தோம் என்று கணக்கு போட்டு எழுதக்கூடாது. அதை எல்லாம் அப்பொழுதே மறந்து விடவேண்டும்.

நல்லது செய்தால் உடனே மறந்து விடவேண்டும். யாராவது நமக்குத் தீமை செய்தால் , அவர்களை ஏதாவது செய்ய வேண்டும். பழிக்குப் பழி வாங்க வேண்டும். எனக்கு இரண்டு கண் போனாலும் பரவா இல்லை, எனக்குத் தீமை செய்த அவர்களுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும் என்று நினைக்கக் கூடாது. நல்லதையே நினைக்க வேண்டும்.

அவர்கள் தீமை செய்தார்களா, பரவாயில்லை என்று சிவார்ப்பணம் செய்து விட வேண்டும். யாராவது நமக்குத் தீமை செய்தால் சிவார்ப்பணம் உடனே சொல்லிவிட வேண்டும். எல்லாம் சிவனுக்கு அர்ப்பணம் ஆகிவிடும். சிவன் அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.

உங்களை யாராவது அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று அவசியமில்லை. நாய் சத்தம் போடுகின்றதை, கடிக்க வருகின்றது என்றால் திருப்பி நாம் கடிக்க வேண்டாம். பயந்து விட்டுப் போய் விடுவோம். அதுபோல் நமக்கு யாராவது தீமை செய்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் சிவார்ப்பணம், சிவார்ப்பணம் என்று சொல்லிக்கொண்டு போய்க்கொண்டே இருக்க வேண்டும்.

அதனை விடுத்துத் திருப்பி நான் ஒரு அடியாவது அடிக்க வேண்டும் என்று பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்றால் திருப்பி 4 அடி நாம் திருப்பி வாங்க வேண்டும். நாம் யாரையாவது அடித்து வீட்டுக்குப் போய்விட்டால், நாம் கீழே விழுந்து நமக்கு கை, கால் உடைந்து விடும். அதனால் யாராவது அடித்தாலும் சரி, திட்டினாலும் சரி , தூற்றினாலும் சரி, எம்மை என்ன செய்தாலும் சரி சிவார்ப்பணம், சிவார்ப்பணம் என்று சொல்லிக்கொண்டு நம் வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும்.

பழிக்குப்பழி வாங்கும் எண்ணமே இருக்கக் கூடாது.

நல்லது நினைக்க வேண்டும் நல்லது செய்ய வேண்டும் என்று இருந்தால் நமக்கு எந்தத் துன்பமும் வராது. மனதில் தூய்மை இருக்க வேண்டும். எண்ணங்களில் தூய்மை இருக்க வேண்டும். செயலில் தூய்மை இருக்க வேண்டும். வாக்கு, மனம், மெய் ,மொழி எல்லாம் தூய்மையாக இருந்தால் தூய்மை நம்மிடையே இருக்கும். உலகம் முழுவதும் தூய்மை இருக்கும். எல்லோரிடமும் தூய்மை இருக்கும். உலகம் முழுவதும் சொர்க்கமாக இருக்கும். எல்லாமே இன்பமாக இருக்கும். எல்லா ஜீவராசிகளும் இன்பமாக இருக்கும்.

( வணக்கம் அடியவர்களே, ஆதி ஈசனை மனதில் ஆலயம் கொண்ட மகத்தான இவ் மூதாட்டி, இவ் சத்திய வாக்குகளை உரைத்த போது, “எல்லா ஜீவராசிகளும் இன்பமாக இருக்கும்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது அங்கு பல்லி ஒன்று மகிழ்ந்து பலத்த நீண்ட சத்தம் இட்டது. )

ஜீவராசிகளைப் பார்க்கும் போது அதற்கு உதவி செய்தால், அதற்குச் சாப்பாடு, தண்ணீர் கொடுக்கின்றோம் என்றால் அது சந்தோசப்படும். அது சந்தோசப்படுவதைப் பாரத்து நாமும் சந்தோசப்படுவோம். இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் போது அவர்கள் சந்தோசமடையும் போது நாமும் சந்தோசமடைவோம்.

இறைவன் சந்தோசப்பட வேண்டும் என்றால் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஏழைக்குக் கொடுக்கும்போது அவர்கள் முகத்தில் சந்தோசம் மலரும் , அதைப் பாரத்து நாமும் சந்தோசப்படுவோம். அவர்கள் நம்மிடம் இருந்து வாங்கிவிட்டுப் போன பின்பு வருத்தப்பட மாட்டான். அவன் முகம் மலரும்போது , குழந்தைக்கு ஒரு இனிப்பு கொடுத்தால் அது எவ்வளவு சந்தோசப்படும்? அதைப்பார்த்து நீங்களும் சந்தோசப்படுவீர்கள்.

அதுபோல இயலாதவர்களுக்கு நாம் கொடுக்கும் போது , அவர்கள் அடையும் சந்தோசத்தையும், முகமலர்ச்சியையும் பார்க்கும் போது நாமும் சந்தோசம் அடைவோம். அதுவே இறைவன் நம் அருகில் வருகின்றார் என்று அர்த்தம் ஆகும்.

இறைச் சிந்தனையோடு இருப்பது மட்டும் இல்லாமல் நாம் அடுத்தவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தோம்  என்றால், நம்மிடம் உள்ள பொருளைக் கொடுக்கின்றோம். அடுத்தவர்களிடம் இருந்து எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நாம் கொடுக்க வேண்டும். அவர்கள் சந்தோசப்பட வேண்டும். அதைப் பாரத்து நாம் சந்தோசப்படுவோம். நாம் சந்தோசப்படுவதைப் பார்த்து நம் உள் இருக்கும் இறைவன் சந்தோசப்படுவார். எல்லாம் மனதிலும் இறைவன் இருக்கின்றார்.

சிவன் அவர் எங்கேயும் கோவிலில் எல்லாம் இருப்பதில்லை. கோவிலில் சாமி இருக்கின்றார் என்று போய்ப் பார்க்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. நம் மனசுக்குள்ளேயே இறைவன் இருக்கின்றார். அவர் நல்ல எண்ணங்கள் இருந்தால்தான் வருவார். தூய்மையான எண்ணங்கள் இருந்தால்தான் வருவார். நல்ல செயல்பாடு இருந்தால்தான் வருவார். அதுபோல் நாம் இருந்தோம் என்றால் இறைவன் நம்மிடையே இருப்பார். நம்மைவிட்டு எங்கும் போக மாட்டார்.

இங்கு உள்ள எல்லோரும் (இதனை வாசிக்கும் நீங்களும், அடியவர்களும்)  , எல்லோருக்கும் இதனை எடுத்துச் சொல்லுங்கள். நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும். நல்ல எண்ணங்களுடன் இருக்க வேண்டும். தூய சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் சொல்லுங்கள். ( அடியவர்களே, இது உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும் என்று உணர்க. )

பழிக்குப் பழி வாங்கும் எண்ணமே இருக்கக்கூடாது. எல்லோரும் திட்டினார்கள் என்றால் ஒதுங்கிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும் என்று அடுத்தவர்களுக்குச் சொல்லுங்கள்.

ஒரு முனிவரைக் கோபப்படுத்த வேண்டும் என்று ஒருவர் நினைக்கின்றார். ஒரு குரு அவருக்குக் கோபமே வராது. அவரது சிஷ்யன் எப்படியாவது குருவிற்குக் கோபத்தை உண்டாக்க வேண்டும் என்று எண்ணுகின்றார். குரு ஆற்றிற்குக் குளிக்கச் செல்கின்றார். இந்த சிஷ்யன் வாய் நிறைய வெற்றிலையைப் போட்டுக்கொண்டு கரையில் உட்கார்ந்து இருக்கின்றான். கங்கையில் குளித்து விட்டு வந்த குருவின்மேல் வெற்றிலையைத் துப்புகின்றான். அவர் இதனைப் பார்த்து விட்டு ஆற்றில் மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். மறுபடியும் சிஷ்யன் துப்புகின்றான். குரு ஆற்றில் மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். இப்படியே பல முறை குரு ஆற்றில் மறுபடியும், மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். சிஷ்யன் வசம் உள்ள வெற்றிலை தீர்ந்து போய் விட்டது. அலுத்துப்போய் விட்டான். குரு ஆற்றில் மறுபடியும் குளித்து விட்டு வருகின்றார். நடக்க ஆரம்பிக்கின்றார். சிஷ்யன் அவர் பின்னால் ஓடுகின்றான். குருவே, குருவே தப்பு செய்து விட்டேன் என்று காலில் விழுகின்றான். உங்களுக்குக் கோபமே வராதா? இவ்வளவு தப்பு செய்தேனே என்று கேட்கின்றான். குரு உடனே, சிஷ்யனைப் பாரத்து உனக்கு நன்றி சொல்லவேண்டும் அப்பா, நன்றி சொல்ல வேண்டும் என்று சிஷ்யனிடம் கூறினார் சிஷ்யன் உடனே ஏன் சாமி எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்? நான் தவறு செய்தவன்தானே? என்று கேட்டுவிட்டான். 108 முறை என்னைக் கங்கையில் குளிக்க வைத்தாய் அல்லவா, அதற்கே உனக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார். பொதுவாக ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளித்து விடுவேன். மறுபடி நாளைதான் குளிக்க வருவேன் இங்கு. ஆனால் இன்று நீ மறுபடி, மறுபடி என்னை வெற்றிலை எச்சிலை என்மேல் துப்பி என்னை அசிங்கப் படுத்தியதால் 108 முறை உன்னால் குளித்தேன். எனக்கு மிக்க சந்தோசமே. நீ நன்றாக இரு என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

எனவே தீமை செய்தவர்களுக்கும் நாம் நல்லதே செய்ய வேண்டும் என்று அந்த மகத்தான மண்ணுக்கும் குரு சொல்கின்றார். நாம் மேலும் மேலும் தீமை செய்து அடுத்தவர்களைக் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது. சிஷ்யன் அவனாகவே தானே திருந்திவிட்டான். நாம் தவறு செய்துதான் அடுத்தவர்களைத் திருத்த வேண்டும் என்று அவசியம் கிடையாது. தப்பு செய்யாமலேயே எப்பொழுதும் இறைச் சிந்தனையில் இருந்தால் தவறு செய்ய வாய்ப்பே உண்டாகாது. இறை சிந்தனையுடன் எப்பொழுதும் இருந்து நன்றாக வாழ்ந்தால் ஒற்றுமையாக வாழலாம்.

வாழ்க வளமுடன்!!!!!

அடியவர்கள் :- ( ஒருமித்த குரலில் ) வாழ்க வளமுடன்! சிவாய நம!

குருநாதர்:- கயிலாய மலையைப் பற்றி் ( ஈசனை ) உணர்ந்து விட்டீர்களா? அதனால் கயிலாய மலைக்குச் சென்றவர்கள் யார்?

நாடி அருளாளர்:- கயிலாய மலைக்குச் சென்றவர்கள் இங்கு யாரும் இருக்கின்றீர்களா?

அடியவர்கள்:- ( கயிலை மலைச் சென்று வந்த சில அடியவர்கள் எழுந்தனர்)

குருநாதர்:- அறிந்தும் கூட இதனால் இன்றைய அளவில் பின் கயிலாய மலையைத் தரிசிப்பதே உங்களுக்கே கஷ்டங்கள். ஆனாலும் எதை என்று தெரியாமல் சென்றிருந்து, செல்ல முடியவில்லையே என்றாலும் ஈசனும் பார்வதி தேவியும் அழகாக இவள்தன் ( இவ் மூதாட்டி ) பின் முடியாமல் இருக்கின்ற போது நிச்சயம் ஈசனும்,  பார்வதி தேவியும் இவள்தனை தன் மடியில் நிச்சயம் படுக்கச் சொன்னார்கள். (இவ் மூதாட்டியை) எதை என்று கூற தாலாட்டினார்கள். இதனால் நிச்சயம் அனைவருக்குமே அவள்தன் ( இவ் மூதாட்டி )  பின் ஈசன் பார்வதி எவை என்றும் புரிந்திருந்தும் நிச்சயம் பின் நல்விதமாக மடியில் படுத்திருந்தும் நீங்கள் அனைவருமே ( இவ் மூதாட்டியிடம் ) ஆசிகள் பெற்றுச் செல்லுங்கள். அனைவருக்குமே சில கர்மாக்கள் தொலையும். அம்மையே யான் உத்தரவு இடுகின்றேன். அனைவருக்கும் பின் ஆசிகள் கொடுத்து சில கர்மாக்கள் தொலையட்டும். மீண்டும் வந்து பின் வாக்குகள். ஆனாலும் அப்பனே பின் இங்கு இதை  (ஜீவநாடியை) ஓர் முறை போகனிடம் எடுத்துச்சென்று வரச்சொல் மீண்டும் இதனைப் பற்றித் தெரிவிக்கின்றேன்.

நாடி அருளாளர்:- அய்யா, இங்கு உள்ள அனைவரும் இவ் அம்மையிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆதி ஈசனை தன் மனதில் குடிகொண்டு அருளும் மூதாட்டி வாக்கு:-

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
வாழ்க வளமுடன்!!!!
வாழ்க வளமுடன்!!!!!

அடியவர்கள்:- ( இதனை அடுத்து அனைத்து அடியவர்களும் இவ் அம்மையிடம் ஒவ்வொருவராக திருநீற்று ஆசி பெற்றார்கள்.)

இத்துடன் கோயம்பத்தூரில் குருநாதர் வாக்கு நிறைவு பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. கும்பமுனி குருவே சரணம் சரணம்

    ReplyDelete
  4. கும்பமுனி குருவே சரணம் சரணம்

    ReplyDelete